டெரரிசம் பத்தி அழுத்தமா பேசற படம் இது!
‘ராட்சசன்’ படத்துக்காக விஷ்ணு விஷாலை இன்றளவும் போற்றிப் புகழ்கிறது சினிமா உலகம். கடந்த ஓரிரு வருடங்களாக இவர் நடித்த எந்த படமும் வெளியாகாத நிலையில் ‘எஃப்.ஐ.ஆர்’ வெளியாகவுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. புரொமோஷன் பிஸியில் இருந்தவர் நமக்காக நேரம் ஒதுக்கி பேசினார். உதயநிதி என்ன சொன்னார்?
 கொஞ்ச நாளைக்கு முன்னாடி உதய் சார் படம் பார்த்தார். என் படங்களை ரெட் ஜெயண்ட் வெளியிடுவது இது முதல் முறை அல்ல. ‘குள்ளநரிக்கூட்டம்‘, ‘நீர்ப் பறவை’ என்று என் படங்களின் வெளியீட்டில் உதய் சார் இருந்திருக்கிறார். எனக்கும் உதய் சாருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் இருந்தாலும் அவருக்கு கன்டென்ட் பிடிச்சிருக்கணும். ‘எஃப்.ஐ.ஆர்’ பார்த்ததும் ‘நான் பண்ணித் தர்றேன்’னு சொல்லிட்டார்.
 மூன்று வருடங்கள் கடந்து உங்கள் படம் தியேட்டருக்கு வருகிறதே?
எமோஷனலா இருக்கு. ரொம்ப கடின உழைப்பு போட்டிருக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கைல என்ன நடந்ததுனு தெரியும். நடுவுல அடிபட்டது, சூரி மேட்டர்னு நிறைய கசப்பான விஷயங்கள் நடந்துடுச்சு. பெயின்ஃபுல் வாழ்க்கை. ஆனாலும் ஒரு விஷயத்தை மட்டும் விட்டுக் கொடுக்கலை. எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே பதில் சக்ஸஸ் மட்டுமே. அதை நோக்கி ஓட ஆரம்பிச்சேன். என்னோட கவனம் முழுவதும் அது மட்டும்தான்.
 ஒரு நாள் டவுனாயிருப்பேன். அடுத்த நாள் எழுந்து ஓடணும்னு முடிவெடுத்து ஓடுவேன். உடம்பை ரெடி பண்ணினேன். லாக்டவுன் வந்துச்சு. வாழ்க்கைல பிரச்னைகள் வரத்தான் செய்யும். எப்படி அதை ஃபேஸ் பண்ணப் போறோம் என்ற புரிதலில்தான் எல்லாமே இருக்கிறது. வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு ‘அவருக்கு என்ன கஷ்டம் இருக்கு’னு சொல்லத்தோணும். என் லைஃப்ல என்ன கஷ்டங்கள்னு எனக்குத்தான் தெரியும். வெளிப்படையா நான் சொல்லலைன்னாலும் உள்ளுக்குள் அவஸ்தைதான்.
லாக்டவுன்ல நிறைய விஷயங்கள் நடந்தது. அதைப் பார்த்து நான் பயந்திருந்தா வேற மாதிரி முடிவு எடுத்திருப்பேன். கஷ்டங்கள் பொதுவானது. அதை நாம் எப்படி பாசிடிவ்வா எடுக்கிறோம்... கூட இருக்கிறவங்களும் நல்லா இருக்க என்ன முயற்சி எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். ‘ராட்சசன்’க்குப் பிறகு எனக்கு 9 படங்கள் டிராப்பாகிடுச்சு. சில படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியிருப்பேன். சில படங்கள் நல்ல இயக்குநருடையதாக இருக்கும். ஆனா, டேக் ஆஃப் ஆகாது. போறாத காலம். அவ்வளவுதான்.
இந்த சூழல்லதான் ‘எஃப்.ஐ.ஆர்’ல கமிட் ஆனேன். இந்தப் படத்துக்கும் சிக்கல் வந்தப்பதான் நானே தயாரிப்பாளராகவும் மாறினேன். தியேட்டர் ரிலீஸுக்காகக் காத்திருந்தேன். இன்னொரு ஸ்பெஷல்-தெலுங்கில் வெளியாகும் என் முதல் படம் இது. தெலுங்குல ரவிதேஜா ரிலீஸ் பண்றார். மலையாளத்திலும் பெரிய நிறுவனம் வெளியிடுது. யார்கிட்டயும் சொல்லாத நியூஸ் இது. முதன்முறையா என்னுடைய கேரியர்ல பெரிய பிசினஸ் பண்ணிய படம் ‘எஃப்.ஐ.ஆர்’.
படம் பார்த்த 90 சதவீதம் பேர் பாசிடிவ்வா சொன்னாங்க. மக்கள் ஏன் தியேட்டருக்கு வரணும் என்ற கேள்வி இருக்கு. அந்தக் கேள்வியை இந்தப் படம் பூர்த்தி செய்யும். ஏன்னா, இந்தப் படத்தை தியேட்டரில்தான் பார்க்கணும்னு படம் பார்க்கும் ஒவ்வொருவரும் நினைப்பாங்க. முதன் முறையா ஆக்ஷன் பண்ணிருக்கேன். இது ஆக்டரா எனக்கே புதுசு. என் படங்களில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தா ஆடியன்ஸுக்கு பிடிக்கும். அதுவும் இதுல இருக்கு.
தமிழ் சினிமாவுல டெரரிஸம் பத்தி இவ்வளவு டீடெயிலா படம் வந்திருக்குமானு தெரியல. திருவல்லிக்கேணில இருக்கும் ஒரு முஸ்லீம் பையனோட கதை இது. கேரக்டர் பேர் இர்ஃபான் அகமது. கெமிக்கல் என்ஜினியர் படிச்ச மிடில் கிளாஸ் இளைஞன். சையத் முகமதுனு எனக்கு ஒரு பெஸ்ட் ஃபிரெண்ட் இருக்கான். அவன்கிட்ட முஸ்லீம் லைஃப் ஸ்டைலை முழுசா கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்.
இயக்குநர் மனு ஆனந்துக்கு தேங்க்ஸ் சொல்லணும். அவர்தான் என்னை பெரிசா யோசிக்க வெச்சு, ‘உங்க படத்துல அண்டர் ப்ளேதான் பண்றீங்க. அதுல இருந்து வெளியே வாங்க’ என்றார்.
இந்தப் படம் ஆரம்பிக்கும்போது ஒரு பட்ஜெட் ப்ளான் பண்ணி வைத்திருந்தோம். ஆனா, கொஞ்ச நாள் ஷூட் பண்ணியதும் படம் பெரிசா தெரிஞ்சது. அதனால் முடிஞ்சளவுக்கு பட்ஜெட்டை பெரிசாக்கி தயாரிச்சோம். ஓடுற குதிரை மீதுதான் பணம் கட்டுவாங்க. அதே மாதிரிதான் சினிமாவுல. என் லிமிட் தாண்டி செலவு பண்ணி படம் ஓடலைன்னா ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சிடுவாங்க. இயக்குநர் மனுஆனந்த்தான் ‘உங்களை ப்ளீவ் பண்ணுங்க’ என்றார். அந்த ப்ளீவ்தான் பெரிய பிசினஸா மாறியிருக்கு.
கெளதம் வாசுதேவ், மஞ்சிமா, ரெபா, ரைசா பற்றி..?
என்னுடைய படங்களில் கேரக்டர் ரோல் பண்றவங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இதுல அது மாதிரி எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஹீரோவால மட்டும் ஒரு கதையை கொண்டு போக முடியாது என்பதில் உறுதியா இருக்கேன். கெளதம்மேனன் சார் ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பரா இருக்கும். ஃபைனல் காப்பி பார்த்துட்டு ‘ஒரு ஆக்டரா எனக்கே என்னை முதன் முறையா பிடிச்சிருக்கு’ என்றார்.
அவரோட பெரிய ஃபேன் நான். அவர் ‘உன்னுடய பெஸ்ட் ஃபிலிம்’னு வாழ்த்தினார். மஞ்சிமா, ரைசா, ரெபாவுக்கு வித்தியாசமான ரோல். டிபிக்கல் ரோல் கிடையாது. மூணு பேருமே யாருக்கு பெரிய ரோல்னு யோசிக்காம தங்களோட கேரக்டர்ல வெளுத்து வாங்கியிருக்காங்க. தொடர்ந்து சொந்தத் தயாரிப்பில் நடிக்கிறீங்க... வெளி தயாரிப்பில் ஏன் நடிப்பதில்லை?
ரொம்ப காயப்பட்டதுதான். இவ்வளவுக்கும் நான் நல்ல படம் கொடுத்த ஹீரோ. ‘ராட்சசன்’ படம் இந்திய அளவில் பாராட்டப்பட்டிருக்கு. வட இந்தியாவுல அந்தளவுக்கு படம் ரீச் ஆகியிருக்கு. ஆனா, அதுக்கு அப்புறம் என்னுடைய ஒன்பது படங்கள் டிராப் ஆகிடுச்சு. காரணம், ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’.
அந்தப் படம் 7 படங்களுடன் வெளியானது. அந்தப் படம் ‘ராட்சசன்’ அளவுக்கு கலெக்ட் ஆகல. அந்த கலெக்ஷனை வெச்சி விஷ்ணுவுக்கு இவ்வளவுதான் மார்க்கெட்னு சொல்லி இந்த பட்ஜெட்டுக்குள்தான் படம் பண்ணணும்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க. அது எனக்கு பெரிய வலி. அதனாலதான் என்னை நிரூபிக்க சொந்தமா படம் தயாரிக்கறேன். விஷ்ணு - சூரி காம்போ பெரிய ஹிட். அதை மிஸ் பண்ணியதாக நினைக்கிறீர்களா?
உலகத்துல ஃப்ரெண்ட்ஷிப் இல்லாதவங்க யாருமே இல்லை. அந்த ஃப்ரெண்ட்ஷிப் உடையுமளவுக்கு ஒருத்தர் தப்பா பேசும்போது வலி ஏற்படும். அவர் எனக்கு கொடுத்த வலியை விட சினிமா வெற்றி எனக்கு முக்கியமில்லை. எனக்கு தன்மானம் முக்கியம். நான் தவறுகளை மன்னிப்பவன். ஆனா, அவர் சொன்ன விஷயத்துக்கு என்னால் மன்னிக்க முடியாது. ‘நீங்கதான் என் கடவுள்’னு எங்கப்பாவைப் பார்த்து சொன்னவர் தவறா பேசிட்டார். அந்த காயம் காலம் முழுவதும் இருக்கும். ‘நான் தப்புபண்ணிட்டேன்’னு சபை நடுவே சொன்னாதான் சேர்ந்து படம் பண்ணுவதுபற்றி யோசிப்பேன்.
இரண்டு ஹீரோ படங்கள் அதிகம் பண்ணியவர் நீங்கள். அடுத்து யாருடன் இணைந்து பண்ண விருப்பம்?
அப்படி எந்த பிளானும் இல்லை. கதை என்ன கேட்குமோ அதன்படிதான் பண்றேன். அடுத்த படமான ‘மோகன்தாஸ்’ல மலையாள ஹீரோ இந்திரஜித் இருக்கிறார்.
எஸ்.ராஜா
|