வீடு திரும்பிய மகாராஜா!
சமீபத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை இந்தியாவின் மிகப் பெரிய தனவந்தர் குடும்பங்களில் பிரதானமானவர்களான டாடா குழுமத்தினர் பதினெட்டாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். இது மிகப் பெரிய சாதனை. ‘‘எங்களின் அறுபத்தெட்டு ஆண்டு கால கனவு...’’ என்று பெருமிதப்படுகிறார்கள் டாடா குழுமத்தினர்.
ஆம், அவர்கள் சொல்வது உண்மைதான். இது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கதை. அப்படித்தான் சொல்ல வேண்டும்.
 அது 1929ம் ஆண்டு. சரியாக தொண்ணூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லூயி ப்ளேரியாட் என்ற ஆங்கிலேயர், ஆங்கிலக் கால்வாயை, தானே வடிவமைத்த ஒரு குட்டி விமானத்தின் மூலம் கடந்தார். ஜே.ஆர்.டி.டாடா அப்போது இளைஞர். தன் தந்தையின் நண்பரான ப்ளேரியாட்டின் அந்த சாகசம் இளம் தொழிலதிபரான டாடாவின் மூளையில் ஒரு மிகப் பெரிய வணிக வாய்ப்பாக ஒளிர்ந்தது.
 ‘நாம் ஏன் ஒரு விமானத்தை வடிவமைக்கக்கூடாது’ என்று நினைத்தார். செயலில் இறங்கினார். மூன்றே ஆண்டுகளில் ஒரு விமானத்தை வடிவமைத்தார். 1932ம் ஆண்டில் ‘டாடா ஏர்லைன்ஸ்’ உதயமானது. இந்தியாவின் விமான சேவையை இயக்குவதற்கான முதல் உரிமத்தை வெள்ளையர் காலத்திலேயே டாடா பெற்றிருந்தார். அதனால்தான் அவரை இந்தியாவின் சிவில் விமானப் பயணத்தின் தந்தை என்று அழைக்கிறார்கள்.
 வெள்ளையர்களும், ராணுவத் தளபதிகளும் விமானப்படை வீரர்களும் மட்டுமல்ல, சராசரி இந்தியர்களும் வானத்தில் பறக்க வேண்டும் என்று முதலில் கற்பனை செய்தவர் ஜே.ஆர்.டி டாடாதான். அதன் விளைவுதான் ‘டாடா ஏர்லைன்ஸ்’.1946ம் ஆண்டில் தன்னுடைய நிறுவனத்தை ஒரு பொது நிறுவனமாக மாற்றவேண்டும் என்று விரும்பி, ‘ஏர் இந்தியா லிமிட்டெட்’ என பொது வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனமாக மாற்றினார். அடுத்த ஆண்டே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
இந்திய விடுதலைக்குப் பிறகு 1948ம் ஆண்டு இந்திய அரசு தனக்கென ஒரு விமான சேவை தேவை என்று உணர்ந்தபோது, ஏற்கெனவே வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருந்த ஏர் இந்தியாவின் நாற்பத்தொன்பது சதவீத பங்குகளை வாங்கியது. தொடர்ந்து, இந்திய அரசு 1953ம் ஆண்டு ஏர் இந்தியாவை நாட்டுடமையாக்கியது.
எல்லா அரசு நிறுவனங்கள் போலவே ஏர் இந்தியாவிலும் லஞ்சம் ஊழல் எல்லாம் பெருகத் தொடங்கியது. நிர்வாகம் தடுமாறத் தொடங்கியது. குறிப்பாக, 1993ம் ஆண்டுக்குப் பிறகு உலகமயமாக்களின் உப விளைவாக விமான சேவையில் தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானபோது, தனியார் நிறுவனங்களின் கடுமையான போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர் இந்தியா தள்ளாடத் தொடங்கியது. இரண்டாயிரம் ஆண்டே வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு இதன் நாற்பது சதவீதப் பங்குகளை தனியாருக்கு விற்றுவிட முயன்றது. ஆனால், அப்போது இயலவில்லை. தொடர்ந்து, 2007ம் ஆண்டு ஏர் இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்ஸும் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டன. இதன் மூலமாவது ஏர் இந்தியாவின் நஷ்டம் ஈடுகட்ட முடியும் என்று நினைத்தார்கள்.
ஆனால் குதிரை, வண்டிக்காரனையும் சேர்த்து கீழே இழுத்துத் தள்ளியதைப் போலத்தான் நிலைமை ஆனது.2018ம் ஆண்டு முதலே மோடி அரசு ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு ஒப்படைப்பது என்ற முடிவை எடுத்தது. ஆனால், எழுபத்தெட்டு சதவீதப் பங்குகளை மட்டுமே தருவதென அரசு முன்வந்தபோது ஒருவரும் அதனை வாங்க முன் வரவில்லை.
பிறகு, கடந்த ஆண்டு ஜனவரியில் நூறு சதவீத பங்குகளையும் தருகிறோம் வாருங்கள் என்று பட்டுக் கம்பளம் விரித்தபோது, முதல் ஆளாகப் பறந்து வந்தது டாடா குழுமம்தான்.
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசிடம் பறிகொடுத்த தங்கள் வீட்டுப் பிள்ளையை மீட்டு எடுக்கும் நோக்கோடு டாடா குழுமம் விரைந்து செயலில் இறங்கியது. கடந்த செம்படம்பரில் டாடா குழுமத்தோடு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அஜய் சிங்கும் களத்தில் குதித்தார். இப்போது பதினெட்டாயிரம் கோடி ரூபாயை சுளையாகச் செலுத்தி டாடா க்ரூப் நிறுவனம் ஏர் இந்தியாவை தன் வீட்டுக்கு ஓட்டிச் சென்றுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாலேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்தான் இப்போது ஏர் இந்தியாவை வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ஏர் இந்தியாவின் நூறு சதவீத பங்குகளும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் நூறு சதவீத சிறிய விமானங்களும், ஏர் இந்தியா சாட்ஸ் நிறுவனத்துடன் அதன் ஐம்பது சதவீத நிலப் பயன்பாட்டுக்கு உரிய கூட்டு செயல்பாட்டு உரிமையும் டாடாவுக்குச் சொந்தமாகிவிட்டது. மேலும், 173 வழித்தடங்களில் பயணிக்கும் 141 விமானங்களும் டாடாவுக்கே இனி சொந்தம். இதில், 55 விமானங்கள் சர்வதேச நாடுகளுக்குப் பறப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸின் புகழ்பெற்ற லோகோவான மகாராஜாவும் இனி டாடாவுக்கே சொந்தம். ஆமாம், பணிவாகக் குனிந்து வணக்கம் வைக்கும் ஏர் இந்தியா மகாராஜாவும் இந்திய அரசுக்கு டாட்டா காட்டிவிட்டு டாடா வீட்டுக்குப் போய்விட்டார்.ஏற்கெனவே ஏர் ஆசியாவில் எண்பத்தி நான்கு சதவீத பங்குகளை டாடா சன்ஸ் நிறுவனம்தான் வைத்திருக்கிறது.
இது இந்தியாவின் மொத்த விமான சேவை வருவாயில் ஐந்து சதவீதத்துக்கு மேல். மேலும் விஸ்தாராவில் ஐம்பத்தொரு சதவீதமும் டாடா குழுமத்திடம்தான் உள்ளது. இதன் சந்தைப் பங்களிப்பு எட்டு சதவீதத்துக்கும் மேல். இப்போது 13.2% சந்தைப் பங்களிப்பு உள்ள ஏர் இந்தியாவை வாங்கியதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த விமான சேவை சந்தையில் 26.7% டாடா குழுமத்திடம் ஐக்கியமாகியுள்ளது. இந்த ஏலத்தின் முன் ஒதுக்கப்பட்ட குறைந்தபட்ச விலையாக இந்திய அரசு குறிப்பிட்டிருந்தது பனிரெண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஆறு கோடி ரூபாய். போட்டியாளரான ஸ்பைஸ் பதினைந்தாயிரத்து நூறு கோடி ரூபாய் தரத் தயராக இருந்தார்கள். டாடாவின் ஒப்பந்தப் புள்ளித் தொகை அதிகமாக இருந்ததால் அதற்கு நிறுவனம் கைமாற்றப்பட்டுவிட்டது.ஏர் இந்தியா இப்படி தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது தொடர்பாக நிறைய விமர்சனங்களும் இருந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தொடர்ச்சியான நஷ்டம். பராமரிக்க இயலாத அளவுக்கான செலவுகள் என்பதால்தான் விற்கிறோம் என்கிறது அரசுத் தரப்பு.
அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடினால் அதன் நிர்வாகத் தரப்பில் உள்ள ஓட்டைகளை அடைப்பது, நிர்வாகத்தைச் சீராக்குவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியுமே தவிர இப்படி நிறுவனத்தையே தனியாருக்குத் தாரைவார்ப்பது நல்லதல்ல என்று சமூக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இப்போது ஏர் இந்தியாவில் பணியாற்றிய ஊழியர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது. ஒப்பந்தப்படி அதே பணியாளர்களோடு நிறுவனம் ஓர் ஆண்டு இயங்கலாம். இரண்டாவது, ஒருவர் வேலையை இழந்தால் வி.ஆர்.எஸ் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அவருக்கான பி.எஃப்., கிராஜுவிட்டி, உள்ளிட்ட பணிக்கொடைகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் டாடாவின் நடவடிக்கைகள் எவ்வளவு கடுமையாக இருக்கும்... எத்தனை பணியாளர்கள் வேலையில் நீடிப்பார்கள் என்பது தெரியவில்லை.
டாடா போன்ற ஒரு நிறுவனம் ஏர் இந்தியாவை எப்படிச் சீரமைக்கப்போகிறது என்பது இன்னொரு சுவாரஸ்யமான கேள்வி. கிட்டத்தட்ட ஓர் இணை அரசு போல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் டாடாவின் அரசாங்கத்திலேயே ஏகப்பட்ட சிக்கல்கள். ஏர் இந்தியா போன்ற ஒரு நிறுவனத்தை இவர்கள் எப்படி ஒழுங்கமைக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.
இளங்கோ கிருஷ்ணன்
|