மைண்ட் ரீடர் பற்றிய படம் இது!



‘‘எங்களை மாதிரி பட்ஜெட்ல படம் எடுக்கிறவங்களை ஓடிடி தளங்கள் சீண்டுவதில்லை. வெளியீட்டு நிறுவனங்களும் கண்டுகொள்வதில்லை. எனவே எங்களுக்கு இருக்கும் ஒரே வழியான தியேட்டரில் தைரியமாக ரிலீஸ் பண்ணப்போறோம்.

படம் வெளியானதும் கண்டிப்பாக இண்டஸ்ட்ரி எங்களை திரும்பிப் பார்க்கும். அதற்கு முன்னோட்டமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு...’’ நம்பிக்கையோடு சொல்கிறார் ‘கூர்மன்’ படத்தின் இயக்குநரான பிரயான் பி.ஜார்ஜ்.

அது என்ன ‘கூர்மன்’?

இது மெண்டலிஸ்ட் பற்றிய கதை. மைண்ட் ரீடர் என்று கூட சொல்லலாம். எதிரில் இருப்பவரிடம் பேசிப் பேசியே அவர்களின் உள்மனதில் இருக்கும் ரகசியங்களை வாங்கிவிடக் கூடியவர்கள்தான் மைண்ட் ரீடர். இந்த மாதிரி மனிதர்கள் எதிரில் இருப்பவர்களின் முக அசைவை வைத்தே அவர்களின் மனதில் உள்ளதைப் படித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட அசாத்தியமான திறமைசாலிகளைத்தான் மெண்டலிஸ்ட் என்று சொல்கிறோம்.

என்னுடைய நாயகன் கூர்மையா கவனிக்கிறவன், கூர்மையா செயலாற்றுபவன் என்பதால் ‘கூர்மன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறோம். புத்திக்கூர்மையுள்ள நாயகனின் திறமையை காவல்துறை பயன்படுத்திக் கொள்கிறது.
அதன் பின்னணி என்ன என்பதை க்ரைம் த்ரில்லர் ஜானரில் சொல்லியிருக்கிறேன். திருக்குறளில் ‘குறிப்பறிதல்’ அதிகாரத்தில் 701வது குறளில் ‘கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி’ என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். வள்ளுவர் வாக்குப்படி இதுபோன்ற திறமையானவர்கள் உலகத்துகே அழகு சேர்ப்பவர்கள். இந்த குறளுக்கும் கதைக்கும் கூட தொடர்பிருக்கிறது.

ஹீரோ?

‘மூடர் கூடம்’, ‘எங்கிட்ட மோதாதே’ படங்களில் ஹீரோவாக நடித்த ராஜாஜி நடிக்கிறார். நல்ல நடிகர். கதைப்படி ஹீரோ இளைஞராகவும் அதேநேரம் மெச்சூரிட்டியாகவும் இருக்க வேண்டும். ராஜாஜி இதற்கு பொருத்தமாக இருந்தார். ஃப்ளாஷ்பேக்கில் போலீசாக வரும் அவர், இன்னொரு போர்ஷனில் வயதானவராக வருவார். ஒரு காட்சியில் தலைகீழாக நிற்க வேண்டும். பயிற்சி எடுத்து டூப் இல்லாமல் அவரே ஸ்பாட்டில் நின்றார்! எப்போது எப்படி பயிற்சி எடுத்தார் என்றே தெரியவில்லை... ஏனெனில் தினமும் படப்பிடிப்பு நடந்தது. இதுதான் ராஜாஜியின் டெடிகேஷன்.  

ஜனனிக்கு என்ன கேரக்டர்?

இல்லூஷனா வர்றாங்க. ஸ்டெல்லா என்ற டாக்டர் வேடம். அனுபவமிக்க, அதுவும் தமிழ் பேசத் தெரிந்த நடிகையாக தேடியபோது ஜனனிதான் எங்கள் நினைவுக்கு வந்தார்.
பாலா சாரிடமிருந்து தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பதால் பர்ஃபார்மென்ஸில் கலக்கியிருக்கிறார்.

இதற்கு முன் ஜனனி பெரிய படங்களில் பெரிய இயக்குநர்களிடம் வேலை பார்த்திருக்கிறார். எனக்கு இது முதல் படம். ஆனாலும் இயக்குநரின் நடிகையாகவே நடந்து கொண்டார். ஒன்று தெரியுமா..? அவர் நடித்த ‘தெகிடி’யில் நான் அசோசியேட். அன்று கொடுத்த மரியாதை இம்மியளவும் குறையவில்லை. எனக்கு மட்டுமல்ல, என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் அதேமரியாதைதான்.

அப்புறம் பாலசரவணன் இருக்கிறார். அவரை ஒரு காமெடி நடிகராகத்தான் பார்த்திருக்கிறோம். இதில் குணச்சித்திர வேடத்தில் முத்திரை பதித்திருக்கிறார். ‘ஆடுகளம்’ நரேன் உளவுத்துறை அதிகாரியா வர்றார். ‘சூப்பர்குட்’ சுப்ரமணி குஸ்தி வாத்தியாரா வர்றார். ‘சூப்பர் ஜி’ முருகானந்தம், ‘டிரிப்’ பிரவீன் ஆகியோருக்கும் நல்ல வேடங்கள். இவர்களுடன் ஒரு நாயும் படத்தில் நடித்திருக்கிறது!

டெக்னிக்கல் டீம்..?

சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு பண்றார். ‘தெறி’, ‘கத்தி’ போன்ற படங்கள் செய்த ஜார்ஜ் வில்லியம்ஸிடம் தொழில் கற்றவர். சக்திக்கு இதுதான் முதல் படம். பட்ஜெட் படமாகத் தெரியாதளவுக்கு கிராண்டியராக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.டோனி பிரிட்டோ மியூசிக். சந்தோஷ் நாராயணன் ஸ்கூல். பத்து வருடங்கள் அவருடன் டிராவல் பண்ணியவர். ‘காலா’ படத்தில் நாணா படேகர் வரும் போர்ஷனுக்கு இவர்தான் பின்னணி இசை செய்தார் என இண்ட் டைட்டிலில் குறிப்பிட்டிருப்பார்கள்.

‘கூர்மன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரபூர்வமாக விஜய் சேதுபதி வெளியிட்டார். டோனிதான் படத்துக்கு மியூசிக் என்று தெரிந்ததும் சந்தோஷ் நாராயணன் சார் அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தன் சிஷ்யனை குஷிப்படுத்தினார். படத்தில் மொத்தம் 3 பாடல்கள். உமாதேவி 2 பாடல்கள் எழுதியிருக்கிறார்.

அதில் ஆணின் தனிமையை பிரதிபலிக்கும் பாடலும் அடக்கம். இன்னொரு பாடலை நானே எழுதியிருக்கிறேன். ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ பண்ணிய தேவராஜ் எடிட்டிங். எம்.கே.எண்டர்டெயின்மெண்ட் சார்பாக எம்.கே தயாரித்திருக்கிறார். சினிமா ஆர்வமுள்ள தயாரிப்பாளர்.

சினிமாவை யாரிடம் கத்துக்கிட்டீங்க?

பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில். பச்சையப்பாஸ்ல படிச்சேன். காலேஜ் படிக்கும்போதுதான் சினிமாவுக்கு டிரை பண்ணலாமேனு தோணுச்சு. அப்பதான் சண்முக ராஜா என்ற கோ டைரக்டரோட அறிமுகம் கிடைத்தது. அந்த சமயத்துல அவர் தனியா படம் பண்ண முயற்சித்துக் கொண்டிருந்தார்.

சினிமாவுல எனக்கு எதுவும் தெரியாது. அவர்தான் ஒரு படத்துக்கு கதை எப்படி வடிவமைக்கணும், திரைக்கதை எப்படி எழுதணும், காட்சிகளை எப்படி பிரிக்கணும், நடிகர்களிடம் எப்படி வேலை வாங்கணும், எந்த மாதிரி படங்கள் பார்க்கணும், எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கணும் என்று ஒரு படைப்பாளிக்குள் இருக்க வேண்டிய அத்தனை திறமைகளையும் எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்.

ஒரு வருடம் அவருடன் இருந்திருப்பேன். அவருக்கு படம் அமையவில்லை. அந்த சூழ்நிலையில் நானும் சர்வைவல் காரணமா அவரிடமிருந்து வெளியே வந்து டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் பண்ண ஆரம்பித்தேன். பிறகு ‘தெகிடி’, சி.வி.குமார் சாருடன் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’, ‘மாயவன்’  உட்பட ஏராளமான படங்களில் வேலை பார்த்தேன்.

எனக்கு சினிமாவைப்பற்றி சகலமும் சொல்லிக்கொடுத்த சண்முகராஜா சில வருடங்களில் பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அவர்தான் மிஷ்கின்! அந்த வகையில் நான் சண்முகராஜா என்கிற மிஷ்கின் சாரின் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்! தேங்க்யூ மிஷ்கின் சார்!

எஸ்.ராஜா