புட்டு ஐஸ்கிரீம்!
கேரளாவின் முக்கிய காலை உணவு புட்டும், கடலைக்கறியும். சிலர் இனிப்பு சேர்த்தும் சாப்பிடுவார்கள். சிகப்பு அரிசி மற்றும் ராகியில் தயாராகும் புட்டுக்கு தமிழ்நாட்டிலும் செம மவுசு. கடந்த சில வருடங்களாக கார்ன் ஃப்ளேக்ஸ், நூடுல்ஸ், சாக்கோ சிப்ஸ் போன்ற வெளிநாட்டு உணவுகளின் வருகையால் கேரளாவின் இன்றைய தலைமுறை புட்டையே மறந்து வருகிறது. கேரளாவின் பாரம்பரிய உணவான புட்டை ஜென் இஸட் தலைமுறையினரிடம் சேர்ப்பதற்காக பல உத்திகளை வகுத்து செயல்பட்டு வருகிறது எர்ணாகுளத்தில் உள்ள ஓர் உணவகம். அதன் சமீபத்திய தயாரிப்புதான் புட்டு ஐஸ்கிரீம்.
 அதாவது இரண்டு அடுக்குகளாக இருக்கும் புட்டுவின் நடுவில் ஐஸ்கிரீமை வைத்துத் தருகிறார்கள். இந்தப் புட்டு ஐஸ்கிரீமிற்கு நல்ல வரவேற்பு. இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாக, கேரளாவில் உள்ள முக்கிய உணவகங்களிலும், கஃபேக்களிலும் புட்டு ஐஸ்கிரீம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அத்துடன் வீட்டிலும் இதை சமைக்க ஆரம்பித்துள்ளனர். தவிர, பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து புட்டு ஐஸ்கிரீமைச் சாப்பிடுவதற்காக எர்ணகுளத்திலுள்ள உணவகத்தைத் தேடி பலர் வருவது குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|