Blink...Swing...Hing..!
‘என்ன ஃபீலிங்..?’
‘எனக்குதான்டா ஃபீலிங்கு...’இப்படி ஆளாளுக்கு ஒரு காலத்தில் காதல் வயப்பட்டு காலச்சக்கரத்தில் சுழன்று திரிந்த காலங்கள் இப்போதெல்லாம் கிடையாது.இருக்கிற அவசர வாழ்க்கையில் ‘எனக்கே நேரம் இல்ல, இதிலே இன்னொருத்தர் எதுக்கு என்னை கண்ட்ரோல் பண்ணணும்...’ என முடிவெடுத்து இப்போதைய இளைஞர்கள் காதலைக் கூட கனகச்சிதமாக அவரவருக்கு ஏற்றவாறு திட்டமிட்டு லவ்வத் தொடங்கிவிட்டனர்! இப்படி இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் ரிலேஷன்ஷிப் முறைகள் இந்த பத்து வருடங்களில் மட்டும் கணக்கற்றவை.
 அதில் தற்சமயம் 2கே இளசுகளால் அதிகம் ஃபாலோ செய்யப்படும் மூன்றுதான் பிளிங்க் (Blink), ஸ்விங் (Swing), ஃபிளிங் (Fling)! வாட் இஸ் பிளிங்க் (Blink)?
 ஒருத்தர புடிச்சிருக்குதா... அப்ப கசகசன்னு சுத்தாம சட்டுபுட்டுன்னு உன் காதலை சொல்லிட்டு கிளம்பு!இதுதான் பிளிங்க். 70 - 80களில் மட்டுமல்ல, அதற்கு முந்தைய காலங்களில்கூட ஒரு பெண்ணைப் பார்ப்பதே அரிது என்னும் நிலையில் எங்கே இருந்து காதலைச் சொல்வது..? ஆனால், இப்போது நிலைமையே வேறு. பாவம்... இதன் ஆரம்ப நிலையில் இருந்த 90ஸ் கிட்ஸ்களுக்குத்தான் இதை எப்படி பக்குவமாக பயன்படுத்த வேண்டும் என்பது புரியாமல் பலரும் எக்ஸ்பைரியாகிவிட்டனர்.
 ஆனால், 2கே கிட்ஸ் அப்படியல்ல. இதற்கென இருக்கும் ஏகப்பட்ட டேட்டிங் ஆப்ஸ், சோஷியல் மீடியாக்கள்... அதிலிருக்கும் இன்பாக்ஸ்... என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்குமோ அங்கெல்லாம் ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்னும் போக்கில் தங்களுக்குப் பிடித்தவருக்கு கண் ஜாடை காட்டி கன கச்சிதமாக காதலைச் சொல்லி விடுகின்றனர்.
 அதாவது அடுத்த லைன் தெரியலைன்னா அப்ரப்டா கட் பண்ணு... அங்கேயே சுத்தாத... என்பதுதான் பிளிங்க்.
ஸ்விங் (Swing) என்றால் என்ன..?
ஸ்விங்கர்கள் என இந்த உறவில் இருப்போரைச் சொல்வதுண்டு. இந்த ஸ்விங் ரிலேஷன்ஷிப்தான் இன்னமும் இந்தியா மாதிரியான நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. அதாகப்பட்டது ஓபன் ரிலேஷன்ஷிப்! தம்பதியர் தங்களுக்கு தேவையான வாழ்க்கையை தாங்களே அமைத்துக் கொள்ளலாம்.
‘உன் வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன், என் வாழ்க்கையில் நீ தலையிடாதே... உனக்கு பிடித்த யாருடனும் நீ உறவு வைத்துக் கொள்ளலாம்... ஆனால், ‘நீயும் நானும் ஒண்ணு. இது காந்தி பிறந்த மண்ணு’ என்னும் வாழ்க்கை மட்டும் எந்த இடையூறும் இல்லாமல் செல்லும். ஓகேவா?’ என்பதுதான் ஸ்விங். ஒருவேளை திருமணமானவர்கள் எனில் ஃபைனான்ஸ், குழந்தைகள் வளர்ப்பு, அவர்கள் படிப்பு, குடும்பப் பொறுப்பு, சாம்பாருக்கு பருப்பு என அத்தனையும் நம் இருவரின் கட்டுப்பாட்டில் இயங்கும். ஆனால், காதலும் காமமும் என் வழி தனி வழி, உன் வழி தனி வழி... இதுதான் இவர்களின் ஒரே ரூல்!
அடுத்து... அதென்ன ஃபிளிங் (Fling)..?
மற்ற இரண்டுக்கும் ரூல்ஸ், கோட்பாடுகள் என எதுவும் கிடையாது. ஆனால், ஃபிளிங் உறவில் ஏகப்பட்ட ரூல்ஸ், கோட்பாடுகள், சிறப்பம்சங்கள்... என அத்தனையும் உண்டு.
1. நீங்கள் யார்... உங்களுடைய முழு நோக்கம் என்ன... என்பதை உங்களுடைய பார்ட்னருக்கு நேர்மையாக சொல்லிவிட வேண்டும்.
2. Fling என்றாலே தற்காலிகமான என்று பொருள். எனில் இந்த பந்தமும் அப்படித்தான். எப்போது வேண்டுமானாலும் புட்டுக்கொள்ளலாம். அதற்கு தயாராகவே இருக்க வேண்டும்.
3. எக்காரணம் கொண்டும் குடும்பத்தையும் குடும்ப மரியாதையையும் இதற்குள் கொண்டு வரவே கூடாது. இந்த உறவால் குடும்பத்துக்குள்ளும் பிரச்னை வரக்கூடாது. குறிப்பாக குடும்பத்துக்குத் தெரியவே கூடாது.
4. பாதுகாப்பு சார்ந்த விஷயங்கள் அத்தனையும் உங்களுடையது மட்டுமே. உங்கள் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கான பொறுப்பை நீங்களே ஏற்க வேண்டும்.
5. இந்தத் தேவையில்லாத ஃபீலிங்கிற்கு எல்லாம் இடமே கிடையாது. குறிப்பாக உங்களது ஜோடி இன்னொரு பெண் / ஆண் மீது ஆர்வம் காட்டினால் துளியளவும் பொறாமை கொள்ளக்கூடாது.
6. ஏதேனும் பஞ்சாயத்து எனில் யோசிக்காமல் பிரிந்துவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் பிளாக்மெயில் செய்வதோ அல்லது இதைக் காரணம் காட்டி பிரச்னைகள் செய்வதோ கூடவே கூடாது.
7. எப்படிப் பிரிய வேண்டும் என்பதையும் ஆரம்பத்திலேயே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஃபிளிங் உறவைப் பொறுத்தவரை ஹேப்பி எண்டிங் மட்டுமே.
8. ஏன்... எதற்கு... என கேட்காத ஒரு உறவு. எனில் ஏன் லேட் தொடங்கி ஏன் பிரிகிறாய் வரை எதுவும் கேட்க முடியாது; கூடாது.
இப்படி என் உலகம் என் உரிமை என்போர் இந்த ஃபிளிங் சொல்லும் எட்டு அம்சக் கோட்பாட்டுடன் காதல் உறவில் கப்ளிங் ஆடலாம்.
என்னதான் ஏகப்பட்ட பெயர்கள் கொண்டு காதலை இப்படி அப்படி என பிரித்தாலும் எக்காலத்திலும் காதல் காதல்தான். ஒருமுறை ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால் அதில் எந்தக் கோட்பாடும் எதுவும் செய்ய முடியாது என்பதை மட்டும் எக்காலத்திலும் மறுக்கவே முடியாது.
ஷாலினி நியூட்டன்
|