அண்ணல் தங்கோவின் அருள்செல்வன் கலைஞர்தான்!



தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய பாடலாசிரியர்கள் உருவாகி வருகின்றனர். ஆனாலும், மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்றோரின் தனிப்பாடல்களை இன்றும் திரைப்படங்களில் பாடல்களாக பயன்படுத்தும் இயக்குநர்களும் இருக்கின்றனர்.
ஒரு காலத்தில் செவ்வியல் தன்மையுடன் ஒலித்த இவர்களின் பாடல்கள், பின் வந்த இசையமைப்பாளர்களால் அனைத்து தரப்பு மக்களும் கேட்கும் வகையில் மாற்றம் கண்டன.இவர்களைப் போல விடுதலைப் போராட்ட வீரரும், தனித்தமிழ் அறிஞருமான ஒருவரின் தனிப்பாடல்களும் திரைப்படங்களில் பாடல்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல் முதலாக 1927ம் ஆண்டு புரோகிதம் தவிர்த்து திருக்குறள் நெறியில் தமிழ் திருமணத்தை நடத்திய பேரறிஞர்தான் அவர்.

தனது திருமணத்தை மட்டுமல்ல; நூற்றுக்கணக்கான திருக்குறள் நெறி தமிழ் திருமணங்களை நடத்தியதால் இன்றுவரை  நினைவில் நிற்பவர்.வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் 1904ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி பிறந்த அவரின் பெயர் சுவாமிநாதன். ஆனால், அந்தப் பெயரை அழகு தமிழில் அண்ணல் தங்கோ என அவரே மாற்றிக்கொண்டார். தொடக்கக் கல்வி மட்டுமே கற்ற அவர், தனது கடும் முயற்சியால் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றார்.

மறைமலையடிகளார் தொடங்கிய தனித் தமிழ் இயக்கத்துடன் இணைந்து பணியாற்றிய அண்ணல் தங்கோ, பின்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

1923ம் ஆண்டு மதுரையில் வைத்தியநாத அய்யருடன் இணைந்து கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை தலைமை தாங்கி  நடத்தியவரும் அவர்தான்.

குடியாத்தத்தில் மகாத்மா காந்தியடிகளை அழைத்து கூட்டம் நடத்தியவரும் அவர்தான்.‘அலகாபாத்தின் கசாப்புக்காரன்’ என்று அழைக்கப்பட்ட சிப்பாய்க் கலகத்தை ஒடுக்கிய கர்னல் ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம் அண்ணல் தங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கர்மவீரர் காமராஜர் ஒரு தொண்டராகக் கலந்துகொண்டார் என்பது
வரலாறு. இப்போராட்டத்தில் பங்கேற்ற அண்ணல் தங்கோ கைது செய்யப்பட்டு கண்ணனூர் சிறையில் ஓராண்டு அடைக்கப்பட்டார்.

சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டம், உப்பு சத்தியாக்கிரகம், அந்நியத் துணி எரிப்பு போராட்டம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டு ஐந்தரை ஆண்டுக் காலம் சிறையில் இருந்த விடுதலைப் போராட்ட வீரரான அண்ணல் தங்கோ, ராஜாஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1936ம் ஆண்டு காங்கிரசை விட்டு விலகி நீதிக்கட்சியில் இணைந்தார்.

1924ம் ஆண்டு தந்தை பெரியாரின் ‘குடியரசு’ ஏட்டில் துணைஆசிரியராகப் பணியாற்றினார். தந்தை பெரியார், மறைமலை அடிகள், அறிஞர் அண்ணா, பாரதிதாசன் ஆகியோருடன்  நெருங்கிப் பழகிய அண்ணல் தங்கோ  ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். உணர்ச்சியூட்டும் கவிதைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.

1937ம் ஆண்டு வேலூரில் உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையைத் தொடங்கிய அண்ணல் தங்கோ, அந்தக் காலத்திலேயே தமிழர் உரிமை மாநாடுகளை நடத்தினார். வடமொழி தவிர்த்து எங்கும் தூயதமிழ் என்ற முழக்கத்துடன் செயல்பட்ட அண்ணல் தங்கோ, பலருக்கு அற்புதமான தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். அவர் சூட்டிய பெயர்களே பலருக்கு வரலாற்றில் நிலைத்துப் போயின.

சி.பி. சின்னராஜ் என்ற பெயரை சி.பி. சிற்றரசு என்றும், நாராயணசாமியை நெடுஞ்செழியன் என்றும், அரங்கசாமியை அரங்கண்ணல் என்றும் பெயர் மாற்றியவர் அண்ணல் தங்கோதான். கலைஞர் கருணாநிதியின் பெயரை அருள்செல்வன் என்று மாற்றினார்.

இதுகுறித்து ‘முரசொலி’ ஏட்டில் கலைஞர் இப்படி எழுதினார்... ‘‘கருணாநிதி என்ற பெயர் வடமொழிப் பெயராகும். அன்றைக்கு குடியாத்தத்தில் வடமொழிப் பெயர்களை எல்லாம் துறந்து தூய தமிழ்ப் பெயர்களை நாமெல்லாம் சூட்டிக்கொள்ளவேண்டும் என ஒரு தனி இயக்கத்தையே நடத்தியவர் அண்ணல் தங்கோ.

அவர் எனக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் அருள்செல்வன் அவர்களுக்கு என்றே குறிப்பிட்டு எழுதுவார். நான் அப்போது அறிஞர் அண்ணாவிடம் ‘அண்ணல் தங்கோ என் பெயரை அருள்செல்வன் என மாற்றியுள்ளாரே, அப்பெயரோடு தொடரலாமா...’ என ஆலோசனை கேட்டபோது அண்ணா, ‘திரைத்துறை, அரசியல்துறை என அனைத்துத் துறைகளிலும் உன் பெயர் பரவி விட்டது. இப்போது திடீரென நீ உன் பெயரை மாற்றிக்கொண்டால், குழப்பம் ஏற்படலாம்...’ என என்னிடம் கேட்டுக்கொண்டதால்தான் நான் கருணாநிதியாக இன்று உங்களிடம் இருக்கிறேன். இல்லாவிட்டால் அண்ணல் தங்கோவின் அருள்செல்வனாகத்தான் தமிழகத்தில் வலம் வந்திருப்பேன்...” என்று நெகிழ்ந்து போய் எழுதியிருந்தார்.

இப்படி  தமிழ் மீது காதல் கொண்ட அண்ணல் தங்கோ, கிருபானந்தவாரியாருக்கு அருளின்பக்கடலார், காமராஜருக்கு காரழகனார், இளமுருகு தனபாக்கியத்திற்கு இளமுருகு பொற்செல்வி, டார்பிடோ ஜனார்த் தனத்திற்கு மன்பதைக்கன்பன், மே.வீ.வேணுகோபாலப்பிள்ளைக்கு மே.வீ.குழற்கோமான், காந்திமதிக்கு மணியம்மை, ஜீவானந்தத்திற்கு உயிரின்பன்... என அழகுதமிழில் பெயரிட்டு அகமகிழ்ந்தார்.

தமிழ் மொழி, தமிழர் நலம் என்ற முழக்கத்துடன் செயல்பட்ட அண்ணல் தங்கோ ‘தமிழ்நிலம்’ என்ற இதழைத் தொடங்கி அதில் பாரதிதாசன், கி.ஆ.பெ.விஸ்வநாதன், பாவாணர், திருக்குறள் முனுசாமி, கீ.ராமலிங்கனார், வெள்ளை வாரணனார், சி.பி.சிற்றரசு, மே.வீ.வேணுகோபாலப்பிள்ளை, அ.கி.பரந்தாமனார் ஆகியோரின் உணர்ச்சி யூட்டும் எழுத்துக்களை பிரசுரம் செய்தார்.

அண்ணல் தங்கோ எழுதிய பொதுவுடைமையை வலியுறுத்தும் தனிப்பாடல், முதல் முதலாக 1952ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய ‘பராசக்தி’ படத்தில் பயன்படுத்தப்பட்டது.

எல்லோரும் வாழ
வேண்டும்
உயிர்கள்
இன்புற்றிருக்க
வேண்டும்
நல்லோர்கள்
எண்ணமிதே முத்தம்மா
நல்லற வாழ்வும் இதே...

சுதர்சனம் இசையில் டி.எஸ்.பகவதி, எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய இப்பாடலில், சாந்தநாயகி அநாதை விடுதி திறப்பு விழா போன்று காட்சியமைக்கப்பட்டிருக்கும். இதில் பேரறிஞர் அண்ணா, அன்றைய முதல்வர் பக்தவத்சலம் , மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், கலைஞர் கருணாநிதி ஆகியோர் இடம் பெறுவது போல காட்டப்பட்டது. அண்ணல் தங்கோ எழுதிய இந்தப் பாடல் அவரின் புகழுக்கு மேலும் அழகு சேர்த்தது.

1952ம் ஆண்டு மோகன்ராவ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் ‘விசப்பிண்டே விளி’. அதுவரை அப்துல்காதர் என்ற பெயரில் நடித்துக் கொண்டிருந்தவர் இப்படத்தின் மூலம்தான் பிரேம் நசீர் என அறியப்பட்டார். திக்குரிச்சி சுகுமாரன் நாயர், குமாரி தங்கம், பங்கஜவல்லி, நாணுகுட்டன், மாதப்பன், எஸ்.பி.பிள்ளை, பேபி கிரிஜா உள்ளிட்டோர் நடித்த இப்படம் தமிழில்  ‘பசியின் கொடுமை’ என்ற பெயரில் வெளியானது.

இப்படத்தில் அண்ணல் தங்கோ எழுதிய பாடல் ஒலித்தது. பி.லீலா பாடிய அந்தப் பாடல் -

நானே கலையில்
தேறினேன்  
நயமாய் கலைகள்
பலவும் உணர்ந்தேன்
நானே கலையில்
தேறினேன்  
வாழ்க்கை தரும்
போர்தனிலே
வெற்றி எனக்கே...
- என்ற மகிழ்ச்சி பொங்கும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் பி.எஸ்.திவாகர்.

1955ம் ஆண்டு ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமதியின் காதலன்’. டிஆர்ஆர் புரொடக்ஷன்ஸ்  என்ற பேனரில் நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன் தயாரித்த இப்படத்தின் கதை, தேவன் எழுதியது. டி.ஆர்.ராமச்சந்திரன், சாவித்திரி, டி.பி.முத்துலட்சுமி, கே.சாரங்கபாணி, கே.ஏ.தங்கவேலு, பிரண்ட் ராமசாமி, எஸ்.எஸ்.சிவசூரியன், பி.எஸ்.ஞானம் உள்பட பலர் நடித்த இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசையமைத்தார். திரைக்கதை, வசனம் எழுதி ப.நீலகண்டன் இயக்கினார்.

இப்படத்தின் டைட்டில் பாடலை அண்ணல் தங்கோ எழுதினார். சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அந்தப் பாடல் -

தெள்ளித்தரும்
தினைமா - முத்தம்மா
தித்திக்கும் நன்
மலைத்தேன்
அள்ளித்தரும்
சர்க்கரை - கற்கண்டும்
அன்புத் தமிழாமோ?
சொல்லினிக் கீரன்
என்றும் - முத்தம்மா
வில்லினிற் சேரன் என்றும்
சொல்லித்
திரிவதல்லால் - முத்தம்மா
தொண்டென்ன செய்தோமடி
முத்தெடுத்த தமிழர் முத்தம்மா
மூடர்களாவாரோ?
முத்தளித்த கடலை - பகைவர்
முற்றுகை போடுவதோ?

கேட்க கேட்க சுவைக்கும் வகையில் அண்ணல் தங்கோ எழுதிய வரிகளை சீர்காழி கோவிந்தராஜன் உச்சரிக்கும் போது மேலும் அழகானது.1953ம் ஆண்டு நடிகர் திலகம் நடித்த ‘பெம்புடு கொடுக்கு’ என்ற தெலுங்குப் படம் வெளியானது. இப்படத்தில்தான் சாவித்திரி, சிவாஜிகணேசனுடன் முதல் முதலாக இணைந்து நடித்தார். நடிகர் ஜெமினி கணேசனின் மனைவி புஷ்பவல்லி, ரங்காராவ், எல்.வி.பிரசாத் ஆகியோர் நடித்த இப்படம் தமிழில் ‘பெற்ற மனம்’ என்ற பெயரில் 1960ம் ஆணடு வெளியானது.

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் தயாரித்த இப்படத்தின் கதை மு.வரதராசனார். திருவாரூர் தியாகராஜன் வசனம் எழுதினார். எஸ்.ராஜேஸ்வரராவ் இசையில் பிரசாத் இயக்கிய இப்படத்தில் அண்ணல் தங்கோவின் பாடல் ஒலித்தது. சிவாஜி பாடுவது போல அமைக்கப்பட்ட -

அன்புத் தோழா
ஓடிவா
ஆசைத்தோழி
ஓடிவா
பண்பில் ஓங்கி
வாழவே
பாடி ஆடி ஓடிவா...
என்ற அந்தப் பாடலையும் இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் பாடினார்.

‘அறிவிப்பா’, ‘தமிழ்மகள் தந்த செய்தி’, ‘அண்ணல் முத்தம்மாள் பாட்டு’, ‘மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா’, ‘தேர்தல் போர்முரசுப் பாடல்கள்’, ‘முருகன் தந்த தேன் கனிகள்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இன உணர்வு, மொழி உணர்வுடன் பகுத்தறிவுக் கொள்கையிலிருந்து வழுவாமல், வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறியையும், தமிழையும் பரப்பிய அண்ணல் தங்கோ 1974ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி காலமானார். அவரது நூல்களை கலைஞர் கருணாநிதி தனது ஆட்சியின் போது நாட்டுடைமையாக்கினார்.

ப.கவிதா குமார்