அரண்மனை குடும்பம்-5



டாக்டர் வெங்கட்ராவ் அந்த சாமியார் முன் நின்று கொண்டிருந்த விதமும் தோற்றமும் கணேசனுக்குள் ஒரு பெரும் அதிர்வையே உருவாக்கிவிட்டிருந்தது.
டாக்டர் வெங்கட் ராவோடு அந்த சாமியார் நல்ல ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார். கணேசன் ரத்தி, தியாவுடன் வரவும் அவன் வரவை கவனித்தவராக, “வாங்க மிஸ்டர் கணேசன்... வெல்கம்...” என்றார். ரத்தி அங்கே திரும்ப அவரைப் பார்க்கவும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி கணேசன் இருப்பதைக் கூட பொருட்படுத்தாமல்  வேகமாக நடந்து சென்று அவர் காலில் விழுந்து வணங்கினாள்.

அப்போது தியாவை கீழ் இறக்கி விட்டதில் அவள் விளையாட்டாக ஓடத் தொடங்கி விட்டாள். டாக்டரின் மனைவி சாந்தாவும் அங்கு டாக்டரோடு இருந்தாள்.
கணேசன் நின்றுகொண்டேயிருந்தான். அவரை வணங்குவதில் ஒரு தடுமாற்றமும் குழப்பமும் அவனுள் இருந்தபடியே இருந்தது.

அந்த சாமியார் ரத்தியிடம் தியா பற்றி பேசத் தொடங்கி விட்டார். அதுவும் ஹந்தியில்...

‘‘இப்ப எப்படிம்மா இருக்கா குழந்தை..?’’
‘‘உங்களைப் பார்த்துட்டு வந்ததுல இருந்தே நல்லா இருக்கா குருஜி...”
“அவ இனி எப்பவும் நல்லா இருப்பா... கவலைப்படாதே. அதே சமயம் நீயும் உன் குழந்தையும் எச்சரிக்கையா இருக்கணும். உங்க ரெண்டு பேருக்கும் இப்ப நேரம் சரியில்லை...”
“ஆமாம் குருஜி... என் புகுந்த வீட்ல என்னை யாருமே மதிக்க மாட்டேங்கறாங்க... நான் இவரை காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டது அவங்களுக்கு பிடிக்கல. அவங்க பெரிய அரண்மனைக் குடும்பம்... நானோ சாதாரண நாகவம்ச குடும்பம்...”

“சாதாரண நாகவம்ச குடும்பம்னு உன்னை நீயே தாழ்த்தி எடைபோட்டுக்காதே... நாக வம்சத்துல பிறக்கறது ஒரு பாக்யம். ஒரு மனுஷன் ரொம்ப கஷ்டப்பட்டு அடையற பல அமானுஷ்ய சக்திகளை நாக வம்வத்தவர்கள் ரொம்ப சுலபமா அடைஞ்சுடுவாங்க.

இப்ப கூட நீ ஒருத்தர பார்த்து சாதாரணமா சபிச்சாலே போதும்... நீ சபிச்சபடியே
நடந்துடும். அதேபோலதான் உன் வாழ்த்துக்கும் ஒரு சக்தி இருக்கு...”
சாமியார் ரத்தியை தேற்றுவது போல பேசியது கணேசனுக்கும் புரிந்தது. அவனுக்கு ஹிந்தி நன்றாகப் பேச வரும். அவர் சொன்னதன் பொருள் அவன் முகத்தில் ஒரு கேலிச்சிரிப்பை உருவாக்கியிருந்தது. அதை அவரும் கவனித்தார்.

“உன் புருஷனுக்கு என்பேச்சு கேலியா படுது போல... ஒரு மாதிரி சிரிக்கிறாரு...” என்றார். அதற்கு ரத்தி பதில் சொல்வதற்கு முன் கணேசனே வாய்திறந்தான். ஹிந்தியிலேயே அவரோடு பேசினான்.“ஆமாம் சாமியாரே... நீங்க சொன்னது ரொம்ப சரி. எனக்கு உங்கள மாதிரி சாமியார்கள்னாலே அலர்ஜி.

கடவுள் விஷயத்திலயே எனக்கு விடை தெரியாத பல கேள்விகள் இருக்கு. உங்கள மாதிரி சாமியார்கள் விஷயத்துல கேட்கவே தேவையில்லை... போகட்டும். நான் இங்க டாக்டரைப் பார்க்கத்தான் வந்திருக்கேன். உங்களைப் பாக்கவோ உங்களோட விவாதம் பண்ணவோ வரலை... எனக்கு அதுக்கு நேரமும் இல்லை... நீங்க உங்க வேலைய பாருங்க... நான் வந்த வேலையைப் பாக்கறேன்...”சோளம் எந்திரத்தில் பொரிந்து வெடிப்பது போல் இருந்தது அவன் பேச்சு.

ஆனால், அவரிடம் பதிலுக்கு எந்த வருத்தமும் இல்லை. தியா அப்போது அவர்களைவிட்டு விலகி வாயிற்புறம் போய்விட்டிருந்தாள்.“காரணமில்லாம ஒரு காரியம் கூட இந்த உலகத்துல நடக்கறதில்லை மகனே... நான் இங்க வர ஒரு காரணம் இருக்கு. நீ இப்படி பேசவும் ஒரு காரணம் இருக்கு. ஆனா, தொடர்ந்து நீ இப்படியே இருக்க மாட்டே. நீ நிறைய மாறுவே. உங்க வாழ்க்கைல இனிமேல்தான் ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைய நடக்கப்போகுது.

உங்க குழந்தை சாதாரண குழந்தை இல்லை. நாக பஞ்சமி அன்னிக்கு பிறந்த அசாதாரணமான ஒரு குழந்தை அவ! அவளோட சக்தியை நீ போகப்போக பார்ப்பே. அப்ப உனக்கு பல உண்மைகள் புரியும். நானும் எங்கேயும் போயிடப் போறதில்லை. என்னோட இந்த உடம்புக்கு இன்னும் பல வருஷங்கள் இந்த மண்வாசம்னு இருக்கு.

அது கழியறவரை நான் இங்கே அங்கேன்னு சுத்திகிட்டேதான் இருப்பேன். ஒரு நாள் நீ என்னைத் தேடி வருவே! அப்ப நாம நிறையவே பேசப்போறோம். இப்ப நானும் புறப்படறேன்...”
என்று பேசியவர் அமர்ந்த நிலையில் இருந்து எழுந்து கொண்டவராய் வெளியேறத் தொடங்கினார். வெளியே அவருக்கான கார் காத்திருந்தது.

டாக்டர் வெங்கட்ராவிற்கு  அவர்கள் ஹிந்தியில் பேசிக் கொண்டது எதுவும் புரியவில்லை. ஆனால், காரசாரமான ஒரு பேச்சு என்பது மட்டும் நன்குபுரிந்தது. அவர் கிளம்பவும் சற்று பதற்றப்படத் தொடங்கினார்.

“சாமி... என்ன சாமி கிளம்பிட்டீங்க..?”
“உன்ன பாக்க ஒரு பேஷண்ட் வந்திருக்கும்போது நான் எதுக்குப்பா இடைஞ்சலா?”
“ஐயோ சாமி... இது ஒண்ணும் என் ஆஸ்பத்திரியில்ல... நான் வந்ததே உங்கள பாக்கத்தான்...’’
‘‘அதனால என்ன... நான் அப்புறமா கூட வரேன்... இல்ல நீ என்னை பாக்க வா... இப்ப நீ இவங்களைக் கவனி. நான் வரேன்...’’
பேசிக் கொண்டே வாசலைத் தாண்டி விட்டார் அந்த சாமியார். டாக்டர் வெங்கட்ராவ் சற்று சலனத்தோடு கணேசன் பக்கம் திரும்பினார்.
 
கணேசனுக்கும் அவர் சலனம் புரிந்தது.“டாக்டர்...”“அப்படி என்ன பேசினீங்க கணேசன்... சாமி உடனேயே கிளம்பிட்டாரே..? முன்னாலயே சாமியோட பழக்கமுண்டா?”
“இல்ல டாக்டர். இவதான் இன்னிக்கு காலைல சேட் எஸ்டேட்டுக்கு போய் பாத்துட்டு வந்தா...”“பாத்துட்டுன்னு சொல்லாதீங்க. தரிசிச்சிட்டுன்னு சொல்லுங்க...”‘‘என்ன டாக்டர்... நீங்க  எவ்வளவு பெரிய ஸ்காலர். நீங்கல்லாம் இப்படி சாமியார்களக் கண்டு மடங்கிப் போறத நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு...”
“போதும் கணேசன்... நீங்க என்ன லெஃப்ட்டிஸ்ட்டா?”

“லெஃப்ட்டிஸ்ட்டுன்னா... புரியல டாக்டர்...”
“இடதுசாரியா... அவங்கதான் இந்த உலகம் நம்பற எல்லாத்துக்கும் எதிர்க் கருத்து
வெச்சிருப்பாங்க. நம்ப வேண்டியவைகளை நம்பவும் மாட்டாங்க...”
“நீங்க சொல்றபடி பார்த்தா நான் வலதுசாரியுமில்ல, இடது சாரியுமில்ல... நடுவுல இருக்கறவன்!”

“நடவுல எல்லாம் ஒருத்தரால் இருக்கமுடியாது கணேசன். நடுநிலைங்கறதே ஒரு வகை ஃபோபியா...”“சாரி டாக்டர்... நான் உங்க கிட்ட விவாதம் பண்ண வரலை. என் டாட்டரை காட்டத்தான் வந்தேன்... சேலம் டிஸ்பென்சரில கூட மனம் விட்டு பேச முடியாதுன்னுதான் இங்க வந்துருக்கேன்.

வந்த இடத்துல நாம ட்ராக் மாறிப் போறமாதிரி தெரியுது. ப்ளீஸ் டாக்டர் என் குழந்தையை கொஞ்சம் பாருங்க...”கணேசன் அவரைப் பக்குவமாய் தியா விஷயமாக திருப்பியபோது, தியா டாக்டர் வீட்டுத் தோட்டத்தில் வந்தமரும் புறா ஒன்றை கையில் பிடித்து வருடியபடியே உள்வந்து கொண்டிருந்தாள்.

டாக்டரின் நெற்றியில் ஆச்சரியச் சுருக்கங்கள்!“ஏய் தியா... இதை எப்படிப் பிடிச்சே?” என்று கணேசன் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டே அவளை நெருங்க... அவள் அதைப் பறக்க விட்டவளாக “அதை கூப்பிட்டேன்... வந்து விளையாடிச்சு டாடி...” என்றாள். “நான்லாம் கிட்டப் போனாலே எட்டிப் பறக்கும். ஆனா, குழந்தை கைலயே வந்து உக்காந்துருக்கே... ரியலி மிராக்கிள்... ஆமா இந்தக் குழந்தை தானே பேஷண்ட்?”“யெஸ் டாக்டர்...”“ஷி ஈஸ் வெரி பிரிஸ்க்! ஒரு பேஷண்ட் லுக்கே துளிகூட இல்லையே..?”

டாக்டர் பேசியபடியே சற்று விலகிச் சென்று ஒரு டேபிள் மேலிருந்த அவர் பிரீஃப் கேஸைக் கொண்டு வந்து ஹாலின் மையத்து தேக்கு மோடா  மேல் வைத்து திறந்தார்.
உள்ளே ஸ்டெதாஸ்கோப், ரப்பர் கிளவுஸ், பிபி கிட் உள்ளிட்ட எட்ஸெக்ட்ராக்கள். அதில் ஸ்டெதாஸ்கோப்பை எடுத்து காதில் மாட்டியவர், கணேசனின் பிடியிலிருந்த தியாவின் அருகில் சென்று குனிந்து மார்பில் வைத்து ஹார்ட் பீட்டை சோதித்தார்.முகத்தில் ஆச்சரிய ரேகைகள்.ரத்தி அவரையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.டாக்டரோடு வந்திருந்த அவர் மனைவி சாந்தா ஒரு மூலையில் நின்று நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

சாமியாரோடு நிறைய பேச எண்ணியிருந்தாள் அவள். கணேசன் வந்ததால் எல்லாம் கெட்டுவிட்டதுபோல் ஒரு எண்ணம் அவளுக்குள்...டாக்டர் ஒரு கட்டத்தில் நிமிர்ந்து அவளைப் பார்த்து “டியர்... நீ போய் ரெஸ்ட் எடு.

 நான் வந்துட்றேன்...” என்றார். அவளும் அசமந்தமாக அந்த பங்களாவின் வளைவான மாடிப்படிகளின் மேல் ஏறிச் செல்ல ஆரம்பித்தாள். ரத்தியும் அவள் போவதைப் பார்த்துவிட்டு குழந்தை தியா பக்கம் திரும்பினாள்.டாக்டரோ ஹார்ட் பீட், நாடித்துடிப்பு என்று பார்த்து முடித்தவர், கணேசன் கொண்டு வந்திருந்த ‘ஸ்கேன் ரிப்போர்ட்டையும்’ பார்த்துவிட்டு சற்று பெருமூச்சோடு நிமிர்ந்தார். கணேசன் கூர்மையாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“எவ்ரிதிங் வெரி நார்மல் மிஸ்டர் கணேசன்! லிவரும் நார்மலாதான் இருக்கு. குடல்ல அல்சர் ஏற்பட்டு அதனால் ரத்தக் கசிவு உண்டாகி அதுதான் வாந்தியா வெளிப்பட்டிருக்கணும். ஆனா, இப்ப எந்த சிம்ப்டம்சும் இல்லை. இன்ஃபாக்ட் ஏதாவது இருந்தா குழந்தை இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கமாட்டா... ஆமா எத்தன தடவை ரத்த வாந்தி எடுத்திருப்பா..?”
“அது இருக்கும் டாக்டர் பலதடவை...”
“பல தடவைன்னா... எவ்வளவு நாளா?”
“நாளா... இல்ல டாக்டர்... மாசங்களா...”

வாட்... மாசக்கணக்காவா? நீங்க இப்பதானே என்கிட்ட வந்துருக்கீங்க?”‘‘உங்ககிட்ட இப்பதான் வந்திருக்கோம். இதுக்கு முந்தி எங்க ஃபேமிலி டாக்டர் சங்கரநாராயணந்தான் ட்ரீட்
பண்ணினார்...’’“யாரு... காந்திரோடு மித்ரா ஹாஸ்பிடல் சங்கர நாராயனனா?”“ஆமாம் டாக்டர்...”“சங்கரநாராயணன் ட்ரீட் பண்ணியுமா கேக்கல?”“அவர் கொடுத்த மாத்திரை மருந்த சாப்பிட்டா தற்காலிகமா சரியாகும். ஆனா, மருந்த நிறுத்தினா திரும்ப ரிபீட் ஆயிடும். இன்னிக்கு காலைல கூட கார்ல வரும்போது வாந்தி எடுத்தா டாக்டர்...”
“இது என்ன பெரிய புதிரா இருக்கே... எண்டோஸ்கோபி பண்ணீங்களா?”

“பண்ணார் டாக்டர். போட்டோஸ்லாமும் இருக்கு...”
“இருக்கட்டும்... பிளட் டெஸ்ட் பண்ணீங்களா?”
“பலதடவை பண்ணியாச்சு...”
“எங்க?”

“சேலம் பாரத் லேப்ல...”
“சரி... நாளைக்கு இங்க ஏற்காட்ல ஜான்சன் லேப்ல ஒரு டெஸ்ட் எடுத்துடுவோம். இப்ப குழந்தை நல்லா இருக்கா. அடுத்து எப்ப வாந்தி எடுத்தாலும் உடனே கூட்டிகிட்டு வாங்க. என்னன்னு பாத்துட்றேன்...”டாக்டர் சொல்லி முடிக்கவும், ரத்தி அவரிடம் ஏதோ சொல்ல விரும்பியவள் போல அவரைப் பார்த்தாள்.“என்னம்மா?”“தியாவுக்கு சுவாமிஜி காலைல ஒரு மருந்து கொடுத்தார் டாக்டர்...

அதுல இருந்துதான் அவ இப்படி இருக்கா...”“அப்படியா... இதை ஏன் முன்னாடியே சொல்லலை? அப்புறம் என்ன... இனி குழந்தை பூரணமாக குணமாயிடுவா...” டாக்டரின் பதில் கணேசனுக்குள் அரட்டிற்று.‘‘டாக்டர்... என்ன சொல்றீங்க..? அவர் ஏதோ தேன்ல குழைச்சுக் கொடுத்தார்னு சொன்னா... அதை எல்லாம் எப்படி டாக்டர் ஏத்துக்க முடியும்?”“உங்களை யார் ஏத்துக்க சொன்னது? குழந்தை உடம்பு ஏத்துகிச்சே..!”“டாக்டர்...”

“யு நோ... அந்த சுவாமிஜி நீங்க நினைக்கற மாதிரி சோத்துக்கு விதியத்துப் போய் சன்யாசம் வாங்கிகிட்டவர் இல்லை. அவர் ஒரு மிலிட்டரி டாக்டர்! சர்வீஸ் முடிஞ்சு சன்யாசம் வாங்கிகிட்டவர். மருந்து அவர்கிட்ட கால்தான். அவர்கிட்ட ஒரு பாசிடிவ் எனர்ஜி இருக்கு... அது முக்கால்!

அந்த எனர்ஜியும் மருந்தும் ஒண்ணு சேரும்போது எந்த வியாதியா இருந்தாலும் சரியாயிடும்...”“அப்ப அவர் ஒரு சாகக்கிடக்கற கேன்சர் பேஷண்டை பிழைக்க வைப்பாரா டாக்டர்?” கணேசனின் கேள்வி டாக்டரை முதலில் சிரிச்ச வைத்தது. பின்தான் பேசினார்.“அவர் இவரை நம்பி இவர்கிட்ட வந்து என்னை குணப்படுத்துங்கன்னு நின்னா... நிச்சயம் பிழைக்க வெச்சுடுவார் கணேசன்...” என்றார்.
கணேசனுக்கு அடுத்து என்ன பேசுவது என்பதில் ஒரு தடுமாற்றம்.

“என்வரைல இனி குழந்தைக்கு எதுவும் வராது. தைரியமா இருங்க. குழந்தையும் என் கண்ணுக்கு ஒரு சராசரி நோயாளி குழந்தையா தெரியல... பறவைகளே தேடி வரும் ஒரு தேவதையாதான் தெரியறா!”என்று டாக்டர் அழுத்தமாய் சொல்லவும் கணேசனிடம் மேலும் திகைப்பு!

(தொடரும்)

“சர்ப்ப இனம் மனித வாழ்வை ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்துகிறது என்கிற ஒரு கருத்து திரு அசோகமித்திரனுக்குள் மெல்ல ஏற்படத் தொடங்கியது. இந்த மண்ணைச்சார்ந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்தும், தெரியாமலும் நாகங்களை வழிபடுகிறவர்களாக இருப்பதையும் அசோகமித்திரன் உணர்ந்தார். சனாதன இந்து மதம் முதலில் தனக்கென ஒரு பெயரின்றியே இருந்தது. பின்னர் பிற மதங்கள் தோன்றவும் அதற்கொரு பெயர் தேவைப்பட்டது.

அந்த வகையில் வெள்ளையர்கள் காலத்தில் அவர்களால் ஹிந்து என்கிற ஒரு சொலவடை தோன்றி காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையிலான சனாதனத்தவர்களை ஹிந்து என்றழைக்கும் ஒரு பழக்கம் காலத்தால் தோன்றியது.அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆதிசங்கரர், தான் வாழ்ந்த காலத்தில் இந்த சனாதன மதத்தை ஆறு வழிப்பாதை கொண்டதாக வடிவமைத்திருந்தார். ‘வைணவம், சைவம், சாக்தம், காணாபத்யம், கௌமாரம், சௌரம்’ என்பதே அந்த ஆறு வழிப்பாதைகளாகும்.

இந்த ஆறு வழிகளில்தான் ஆழ்வார்கள், நாயன்மார்கள், அபிராமிபட்டர், அவ்வை, அருணகிரிநாதர் உள்ளிட்டோர் தோன்றி பக்தி செய்து வழிகாட்டவும் செய்தனர். இந்த ஆறுவழிகளுக்கான தெய்வங்களாக திருமால், சிவபெருமான், பராசக்தி, கணபதி, முருகன், சூரியன் தலைப் பொருளாக இருந்தனர்.

இவர்கள் அவ்வளவு பேர்களுடனும் சர்ப்பம் ஏதோ ஒருவகையில் சம்பந்தம் கொண்டிருந்தது. திருமால் வரையில் படுக்கையாக, சிவபெருமான் வரையில் கண்டாபரணமாக, கணபதி வரையில் ஒட்டியாணமாக, முருகன் வரையில் பாதசேவிதமாக, பராசக்தி வரையில் குடையாபரணமாக, கங்கணமாக... என்று சகல தெய்வ சான்னிக்யங்களோடு நாகங்கள் சம்பந்தம் கொண்டிருக்கின்றன.

இந்த தெய்வங்களை வணங்குகையில் அறிந்தோ, அறியாமலோ நாகத்தையும் சேர்த்தே வணங்குகிறோம். இவ்வாறு வணங்காவிட்டாலும் பரவாயில்லை... நாகங்களை ஒரு விஷப்பூச்சியாக மட்டுமே கருதி அவைகளை அழிக்கவோ ஒழிக்கவோ முற்படும்போது மற்ற  உயிரினங்கள் காட்டாத ஒரு எதிர்ப்பையும் தீர்க்கத்தையும் நாகங்கள் காட்டுவதையே ‘சர்ப்பசாபம்’ என்கிற ஒரு விஷயம் கொண்டிருப்பதை அசோகமித்திரன் அடிக்கோடிட்டு குறித்துக் கொண்டார்.

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி