கேசு ஈ வீடிண்ட நாதன்
மீண்டும் ஒருமுறை நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்க மலையாளத்திலிருந்து நேரடியாக ‘ஹாட்ஸ்டாரி’ல் வெளியாகியிருக்கிறது ‘கேசு ஈ வீடிண்ட நாதன்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. அறுபது வயதைத் தாண்டியவர் கேசவன். டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார். தனது மூன்று தங்கைகளுக்கும் அவர்தான் செலவு செய்து திருமணம் செய்து வைத்தார். ரொம்பவே கஷ்டப்பட்டதால் பணத்தைப் பக்குவமாகத்தான் செலவு செய்வார். அதனால் சுற்றியிருப்பவர்கள் அவரை கஞ்சன் என்று கேலி செய்கின்றனர்.
 அதுபோக சாலையோரத்தில் அவருக்கு நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை ஆட்டை போட அவரது தங்கைகளின் கணவர்கள் திட்டமிட்டு கேசவனையே சுற்றி வருகின்றனர். தனது அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்க வேண்டும் என்பது இறந்துபோன கேசவனுடைய தந்தையின் ஆசை. தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் செல்கிறார் கேசவன். அவருடன் மற்ற சொந்தபந்தங்களும் இணைந்துகொள்கின்றனர்.
பயணத்தின்போது, கேசவன் எடுத்திருந்த லாட்டரிக்கு 12 கோடி பரிசு விழுந்திருப்பதாக போனில் தகவல் வருகிறது. இந்தப் பரிசுத்தகவல் கேசவனுடைய வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதே திரைக்கதை. குடும்பத்தின் முக்கியத்துவத்தை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறது இந்தப் படம். கேசவனாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் திலீப். படத்தின் இயக்குனர் நதீர்ஷா.
|