சீன யூடியூபர்ஸ- ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்!



யூடியூப் தடை செய்யப்பட்ட ஒரு தேசம், சீனா. அங்கே யூடியூபிற்கு பதிலாக ஏராளமான வீடியோ பகிர்தல் appகள் கொட்டிக்கிடக்கின்றன. இருந்தாலும் ரகசியமாக யூடியூப் சேனலைத் தொடங்கி, வெளிநாட்டிலிருந்து பதிவேற்றம் செய்யும் ஆர்வலர்களும் அங்கே இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் சீனாவின் டாப் யூடியூபர்கள் எல்லோருமே பெண்கள் என்பது ஆச்சர்யம். அவர்களைப் பற்றிய விவரங்கள் இதோ...

லிஸிக்கி (Liziqi)

‘அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சீன மொழி யூடியூப் சேனல்’ - என்ற கின்னஸ் சாதனை படைத்த சேனல், ‘லிஸிக்கி’. இந்தச் சேனல் லீ என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு பெண்ணால் நடத்தப்படுகிறது. சீனாவில் உள்ள பிங்வூ எனும் குக்கிராமத்தில் பிறந்த லீயின் இயற்பெயர் லீ ஜியாஜியா. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையாக்கப்பட்ட லீ, ஒரு வளர்ப்புத் தாயிடம் தஞ்சமடைந்தார். அந்த வளர்ப்புத்தாய் லீயை மோசமாக நடத்த, தனது தாத்தா - பாட்டியிடம் லீ அடைக்கலமானார்.

அவரது 14 வயதில் தாத்தா இறந்துவிட, பாட்டியால் கல்விக்கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. அதனால் படிப்பை நிறுத்திவிட்டு பல்வேறு வேலைகளைப் பார்த்து, பாட்டியையும் கவனித்துக்கொண்டார் லீ. 2015ம் வருடத்தில் லீயின் நண்பர்கள் சிலர் ஸ்மார்ட்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். இதைக் கவனித்த லீயும் கண்ணில் பட்டதை எல்லாம் வீடியோ எடுத்து ‘மெய்பய்’ எனும் ஆப்பில் பதிவிட்டார். வீடியோ எடுப்பதோடு அவரே எடிட்டிங்கும் செய்தார்.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக வரவில்லை. சுயமாக வீடியோ எடுத்து, எடிட்டிங் செய்வதைக் கற்றுக்கொண்ட லீ, ஆகஸ்ட் 22, 2017ல் ‘லிஸிக்கி’ எனும் யூடியூப் சேனலைத் தொடங்கினார். திராட்சைத் தோலில் துணி தயாரிக்கும் செயல்முறையை முதல் வீடியோவாகப் பதிவு செய்தார். சீனாவின் பராம்பரிய உணவுகளைச் சமைக்கும் முறை, கலை மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு குறித்து அதிக வீடியோக்களை வெளியிட்டார் லீ.

சமையல்கட்டில் சமைப்பதை அப்படியே வீடியோவாக்காமல் அதில் ஒரு வித்தியாசத்தைக் காட்டினார். உதாரணத்துக்காக, சோயாபீன் பாலைத் தயார் செய்வதற்காக சோயாபீன் விளையும் நிலத்துக்குச் சென்று, சோயாபீன்களைக் கொண்டு வருவார். கலைப் பொருட்களிலும் அவர் காட்டிய வித்தியாசம் பார்வைகளை அள்ளியது. ஆம்; ஆயிரம் வருடங்கள் பழமையான சீன எம்பிராய்டரிங் முறையைக் கோடிக்கணக்கானவர்களுக்குத் தன் சேனலின் வழியாக அறிமுகம் செய்து வைத்தார் லீ. இப்போது 1.66 கோடி சப்ஸ்கிரைபர்கள், 265 கோடிக்கும் அதிகமான பார்வைகளுடன் நம்பர் ஒன் சீன யூடியூப் சேனலாக மிளிர்கிறது ‘லிஸிக்கி’.

வெங்கீ (Wengie)

பாப் பாடகி, வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட், யூடியூபர் என பன்முகங்களுக்குச் சொந்தக்காரரான வெண்டி ஜீ ஹுவாங்கின் சேனல் இது. வெங்கீ, ராயா என்று ரசிகர்கள் வெண்டியை அன்புடன் அழைக்கின்றனர். சீனாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இவரது சேனல் இரண்டு நாடுகளிலும் வெகு பிரபலம். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் டாப் பெண் யூடியூபர் இவரேதான். ஆனாலும் தன்னை ஒரு சீன தேசத்துப் பெண்ணாக உணர்வதாகத்தான் சொல்கிறார். சேனலின் பெயர் கூட அவருடைய சீனப்பெயரிலிருந்து உருவானதுதான்.

அழகுக் குறிப்புகள், ஃபேஷன், பிராங்க், டிஐஒய் (Do It Yourself), லைஃப் ஸ்டைல் விஷயங்களில் இவரது வீடியோக்கள் கவனத்தைச் செலுத்துகின்றன. அவ்வப்போது டயட் மற்றும் ஃபிட்னஸ் டிப்ஸ்களையும் வழங்குகிறார். வாரம் ஒரு வீடியோவாவது பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில்  ‘கூகுளின் பிக்ஸல் 6 ப்ரோ’ என்கிற ஸ்மார்ட்போனைக் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் வெங்கீ.

இந்த வீடியோவுக்கு ‘கூகுள்’ நிறுவனமே ஸ்பான்சர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 9, 2010ல் தொடங்கிய இந்தச் சேனலை 1.38 கோடிப்பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இந்தச் சேனலில் உள்ள வீடியோக்களை 187 கோடிப்பேர் பார்வையிட்டு வெங்கீக்கு வருமானத்தை அள்ளித்தந்துள்ளனர்.

மிஸ் யா (Ms  Yeah)

இதுவும் ஒரு சமையல் சேனல்தான் என்று கடந்துபோக முடியாத ஒரு யூடியூப் சேனல் இது. சீனாவின் செங்டூ நகரில் பிறந்த சூ சியாஹூவால், பிப்ரவரி 15, 2017ல் ஆரம்பிக்கப்பட்டது இந்தச் சேனல். சூவின் தந்தை ஒரு ஹோட்டலை நடத்தி வந்தார். அவரிடமிருந்து சமையல் கலையைக் கற்றுக்கொண்டார் சூ.

விஷயம் இதுவல்ல. ஒரு கிரியேட்டிவ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் சூ. அலுவலகத்தில் உள்ள பொருட்களையே சமையல் பாத்திரங்களாகவும், அடுப்பாகவும் மாற்றி சீன உணவுகளைச் சமைக்கிறார். இதற்கு அவரது அலுவலக நண்பர்கள் உதவியாக இருக்கின்றனர். தவிர, சூவுக்கு அலுவலகமும் முழுச்சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது.
உதாரணத்துக்காக, மேசையின் ஓரத்தில் இருக்கும் தகடுகளைப் பிரித்து ஓர் அடுப்பு போல வடிவமைக்கிறார் சூ. அடுப்பின் வடிவம் வந்தவுடன் அதை சூடாக்க மின்சாரத்தில் இணைக்கிறார். இப்போது அடுப்பு தயார்.

அடுத்து ஒரு பாத்திரத்தை உருவாக்கி, அதில் எண்ணெயை ஊற்றி தயாராக இருக்கும் அடுப்பின் மீது வைத்து கொதிக்கவைக்கிறார். எண்ணெய் கொதித்தபிறகு மீன் துண்டுகளைப் பொரிக்கிறார். இறுதியில் கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருக்கும் அலுவலக மேசைகளை ஒன்றிணைத்து, உணவு மேசையாக மாற்றி அனைவரும் சாப்பிடுகின்றனர். இதை அலுவலக நண்பர் வீடியோவாக்குகிறார். இப்படித்தான் ஒவ்வொரு வீடியோவும் ‘மிஸ் யா’ சேனலை அலங்கரிக்கிறது.

இந்த சமையல் செய்முறையின்போது உரையாடல்களோ, விவரிப்புகளோ, விளக்கங்களோ எதுவும் இல்லை. ஒவ்வொரு வீடியோவும் ஒரு மௌனப்படம் பார்ப்பதைப் போல இருக்கிறது. அதனால் உலகமெங்கும் உள்ள பார்வையாளர்களைச் சுலபமாகச் சென்றடைகிறது சூவின் வீடியோ. இப்போது ‘மிஸ் யா’ சேனலுக்கு 1.1 கோடிப்பேர் சப்ஸ்கிரைபர்களாக உள்ளனர். இதுவரை 295 கோடிக்கும் மேலான பார்வைகளை அள்ளியிருக்கிறது இந்தச் சேனல்.

விவேகாட் (vivekatt)

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பிறந்து, ஸ்வீடனில் வசித்து வருபவர் விவி. விதவிதமான மேக்அப்களில் அசத்துபவர் விவி. அவரது நிஜ முகத்தைக் கண்டுபிடிப்பது கடினம்.
இன்ஸ்டாகிராமின் ஆரம்ப நாட்களில் மேக் அப் புகைப்படங்களை வெளியிட்டு ஆயிரக்கணக்கான ரசிகர்களைத் தன்வசமாக்கினார். அந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘விவேகாட்’ சேனலைத் தொடங்கினார்.

ஜப்பானிய நடிகை, அனிமேஷன் கதாபாத்திரம், ஜாம்பி, ஹாலோவீன்… போன்று விதவித கெட்அப்களில் வீடியோக்களைப் பகிர்ந்து அசத்துகிறார். இந்த கெட் அப்களுக்குப் பின்னணியில் இருக்கும் மேக்-அப் தந்திரங்களை அவரது வீடியோக்கள் விவரிக்கின்றன.  

புதிது புதிதான மேக்-அப் டிப்ஸ்களையும் வழங்குவதால் பார்வைகள் அள்ளுகின்றன. ஆகஸ்ட் 31, 2014ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலை 3.65 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதில் பதிவிடப்பட்ட வீடியோக்களை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.  

டிங்டிங் ஏஎஸ்எம்ஆர் (tingting asmr)

நம்மை ஆசுவாசப்படுத்தவும், தூங்க வைக்கவும் ஏஎஸ்எம்ஆர் (Autonomous Sensory Meridian Response (ASMR) ) வகைமையைச் சேர்ந்த கோடிக்கணக்கான வீடியோக்களும், ஆயிரக்கணக்கான சேனல்களும் யூடியூபில் கொட்டிக்கிடக்கின்றன. இதில் முதன்மையான சீன சேனல், ‘டிங்டிங் ஏஎஸ்எம்ஆர்’. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் பிறந்த டிங்டிங்கின் சேனல் இது. அவரது நிஜப்பெயரை எங்கேயும் வெளிப்படுத்தவில்லை. ‘’ இந்த உலகம் முழுவதும் மன அழுத்தம் நிறைந்து கிடக்கிறது.

அதில் சில சதவீதங்களைக் குறைக்க என் வீடியோக்கள் உதவும்…’’ என்கிறார் டிங்டிங். அவர் எப்படி நம்முடைய மன அழுத்தங்களைக் குறைக்கிறார் என்பதை அறிந்துகொள்ள ஒருமுறை அவரது சேனலுக்கு விசிட் அடித்துப் பாருங்கள். அது வார்த்தைகளால் விளக்க முடியாத அற்புதம்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன், ஞாயிறுகளில் புதிய வீடியோவை சேனலில் களமிறக்குகிறார் டிங்டிங். ஏப்ரல் 26, 2017ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேனலில் 21.1 லட்சம் பேர் சப்ஸ்கிரைபர்களாக இணைந்துள்ளனர். இதில் பதிவான வீடியோக்களை 50 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

த.சக்திவேல்