தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருக்கின்றன! சும்மா தெரிஞ்சுக்குங்க!



ஆம். அரசாங்கத்தின் கணக்குப்படி தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருக்கின்றன. அவற்றில் 100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்டவை 18,789. இவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 100 ஏக்கருக்கும் குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவை தவிர ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம் கோயில் குளங்கள், ஊருணிகள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 390 டி.எம்.சி. இது சாதாரண அளவு அல்ல; ஒரு டி.எம்.சி. தண்ணீர் என்பது 100 கோடி கனஅடி தண்ணீர்.

எவ்வளவு பிரமாண்டமான தொரு நீர்சேமிப்பு! இது தமிழகத்தின் மொத்த அணைக்கட்டுகளின் நீர் கொள்ளளவான 243 டி.எம்.சியை விட அதிகம்! ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் (இன்றைய காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்கள்) 3700 ஏரிகள் இருந்தன. பாலாறு, கூவம் ஆறு, குசஸ்தலை (குறத்தி அல்லது கொற்றலை) ஆறு, ஆரணி ஆறு என்று இந்த மாவட்டங்களிலும் சென்னையிலும் பாயும் ஆறுகள் இந்த 3700 ஏரிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் 912 ஏரிகளும்; ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 1,083 ஏரிகளும் உள்ளன. இதில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக மதுராந்தகம், தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, திருபெருமந்தூர் ஏரி, பிள்ளைபாக்கம் ஏரி, சோமங்கலம் ஏரி, மதுரமங்கலம் ஏரி மற்றும் கொளவாய் ஏரிகள் உள்ளன.

மாவட்டத்தின் மையப்பகுதியில் செல்லும் பாலாறு நதி காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாகக் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தில் கடலில் கலக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய வட்டங்களில் உள்ள ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர், தென்னேரியில் கலந்து அங்கிருந்து செங்கல்பட்டு நகரையொட்டி செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாயில் பயணித்துப் பழவேலி கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது.

திருப்போரூர் வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர், கொளவாய் ஏரிக்குச் சென்று, புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள கலங்கல் வழியாக நீஞ்சல் மடுவில் கலக்கிறது. பெருங்களத்தூர், நந்திவரம், மண்ணிவாக்கம், ஆதனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீர் மணிமங்கலம் வழியாக அடையாற்றில் கலக்கிறது.

உத்திரமேரூர் ஏரியின் உபரி நீர் இரண்டு பகுதிகளாக வெளியேறுகின்றன. இதில் ஒரு பகுதி தண்ணீர் சங்கிலித் தொடராக அப்பகுதியில் உள்ள கிராம ஏரிகளை அடைந்து கரிக்கிலி, வெள்ளப்புத்தூர், கட்டியம்பந்தல், வேடந்தாங்கல் ஏரிகளை நிரப்பி கிளியாறு மூலம் மதுராந்தகம் ஏரியை அடைகிறது.

மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தும் மீண்டும் கிளியாற்றில் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் தண்ணீர், கடப்பேரி, விழுதமங்கலம் உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு நடுவே பயணித்து ஈசூர் கிராமத்தில் பாலாற்றில் கலந்து கடலுக்குச் செல்கிறது.இவை தவிர திருப்போரூர் வட்டத்தில் உள்ள 17 ஏரிகள், சென்னைப் புறநகர் பகுதிகளாகக் கருதப்படும் கேளம்பாக்கம், தையூர், கோவளம் வழியாக பக்கிங்காம் கால்வாயில் கலக்கின்றன.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் 587 ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 649 ஏரிகள் என 1,236 ஏரிகள் உள்ளன. மாவட்ட பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஏரிகளில் 337 ஏரிகள் கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ளன. ஆரணி ஆற்றின் வடிநில உப கோட்டத்தின் கீழ் 250 ஏரிகள் உள்ளன. சென்னைக்குக் குடிநீர் தரும் பூண்டி, சோழவரம், புழல் ஆகிய 3 ஏரிகள் தவிர மற்ற ஏரிகள், மழைக்காலத்தில் சங்கிலித் தொடர் ஏரிகளாக நிரம்பி உபரி நீர் கூவம், கொசஸ்தலை, ஆரணி, நந்தியாறு நதிகள் மூலம் எண்ணூர், நேப்பியர் பாலம், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடலில் கலக்கின்றன.

செம்பரம்பாக்கம் ஏரி, பூந்தமல்லி, குன்றத்தூர் அருகில் உள்ள பழம்பெரும் ஏரி.  பாலாறு, கூவம், ஆரணி, கொற்றலை ஆறுகளும்; காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களின் 3700 ஏரிகளும்; இறுதியில் நேமம் ஏரி, திருபெருமந்தூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளுடன் அனைத்து திசைகளிலும் வலைப்பின்னல்களாக இணைக்கப்பட்டு, பின் அங்கிருந்து - அதாவது திருபெருமந்தூர் ஏரி, நேமம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளின் உபரி நீரானது முறையே 1.சவுத்திரி கால்வாய், 2. புதிய பங்காரு கால்வாய், 3.கம்ப கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஜான்சி