வெள்ளத்தில் சிக்கிய இந்துப் பெண்ணைக் காப்பாற்றிய இஸ்லாமிய இளைஞர்!



கடந்த மாதம் ஆத்தூருக்கு அருகே உள்ள ஆனைவாரி  முட்டல் நீர்வீழ்ச்சியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்தச் சம்பவ வீடியோவைப் பார்த்தவர்கள் எல்லோரும் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து  வைரலாக்கினார்கள்.முட்டல் நீர்வீழ்ச்சியில்  திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் கைக்குழந்தையுடன், ஒரு பெண் சிக்கிக்கொண்டார். அப்போது தன்னலமற்ற இரண்டு இளைஞர்கள் வெள்ளத்தில் குதித்து குழந்தையையும், அந்தப் பெண்ணையும் காப்பாற்றியதுதான் அந்தச் சம்பவம். இளைஞர்களின் மனிதாபிமான செயலைப் பலரும் பாராட்டினார்கள்.

‘‘தாயையும், சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது. அவர்கள் அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர்காக்கத் துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயம் ஒளிர்கிறது...” என்று நம் முதல்வர் கூட ட்வீட் செய்தார். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றிய இளைஞர்களில் ஒருவரான அப்துல் ரகுமானிடமும், வெள்ளத்தில் சிக்கிய பெண் சிவரஞ்சனியிடமும் பேசினோம்.

‘‘சொந்த ஊர் ஆத்தூர் பக்கம் கொள்ளம்பட்டறை. அங்கே மெடிக்கல் கடை வச்சிருக்கேன். முட்டல் அருவியில திடீரென வெள்ளம் வந்துடுச்சு. வெள்ளத்துக்கு நடுவுல கைக்
குழந்தையோட ஒரு பொண்ணு நின்னுக்கிட்டிருக்காங்க. ஆபத்துல மாட்டிக்கிட்ட அந்தப் பொண்ணையும், குழந்தையையும் யாருமே காப்பாத்த முயற்சி செய்யலை. மாறாக அவங்களை வீடியோ எடுத்துக்கிட்டிருந்தாங்க. ரொம்ப கோவம் வந்துச்சு. அவங்களை எப்படியாவது காப்பாத்திடணும்னு நினைச்சேன். என் உயிரைப் பத்தி கவலைப்படாம உடனே வெள்ளத்துல குதிச்சேன்.

ஆனால், எனக்கு முன்னாடியே லட்சுமணன்னு ஒருத்தர் வெள்ளத்துல குதிச்சு, அவங்களைக் காப்பாத்த  போயிட்டிருந்தாரு...’’ என்று உணர்ச்சி ததும்ப பேச ஆரம்பித்தார் அப்துல் ரகுமான்.  
‘‘அவர் எதையும் எடுத்துக்கிட்டுப் போகலை. அதனால் இங்கிருந்த ரெண்டுபேரோட சுடிதார் ஷாலையும், ரெண்டு துண்டையும் வாங்கிக்கிட்டு வெள்ளத்துல இறங்கினேன். வெள்ளத்தோட அசுர வேகத்துக்கு ஈடுகொடுக்கறது ரொம்ப சிரமமா இருந்துச்சு. எப்படியோ போராடி அவங்க நிக்குற பக்கம் போயிட்டேன்.

எங்களுக்கு முன்னாடியே அந்தக் குழந்தையோட அப்பாவும் அங்க போயிட்டாரு. ஷால், துண்டையெல்லாம் ஒண்ணா முடிச்சுப்போட்டு மரத்துல கட்டச் சொன்னோம். மெல்ல அவங்க ரெண்டு பேரையும் பத்திரமா கரைக்கு அனுப்பிட்டு, நாங்க மேல ஏற முயற்சி பண்ணினோம். அப்போ அந்த ஷாலும், துண்டும் கிழிஞ்சுட்டதால நானும் , லட்சுமணனும் வெள்ளத்துல விழுந்துட்டோம். ஆனால், கொஞ்ச தூரத்துலேயே நாங்க ரெண்டு பேரும் நீச்சலடித்து தப்பிச்சிட்டோம். நல்ல வேளை கல்லுல எதுலயும் மோதாம கரை சேர்ந்தோம்...’’ என்று அப்துல் ரகுமான் முடிக்க, சிவரஞ்சனி தொடர்ந்தார்.

‘‘கொரோனாவால ரெண்டு வருஷம் வீட்டைவிட்டு எங்கேயும்  போக முடியலை. அதனால போன மாசம் குடும்பத்தோட பக்கத்துல இருக்கற ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சிக்குப்
போனோம். என் கூட வந்த எல்லாரும் அருவியில குளிச்சிட்டு இருந்ததாலே அண்ணனோட எட்டு மாதக் கைக்குழந்தை சுஜினாஸ்ரீயை நான்தான்வெச்சுக்கிட்டிருந்தேன். பாப்பா அழுததால தண்ணியில மிதந்துவந்த மீன்களைக் குழந்தைக்குக் காட்டிக்கிட்டே அந்தப் பக்கம் போனேன்...’’ என்ற சிவரஞ்சனி சிறு மவுனத்துக்குப் பின் பேசினார்‘‘அப்போ கணுக்கால் வரைக்கும்தான் தண்ணி இருந்துச்சு. வெள்ளையா இருந்த தண்ணி செம்மண் கலர்ல மாற ஆரம்பிச்சுச்சு. அடுத்து தண்ணியோட அளவும் அதிகமாகி முழங்காலைத் தொட்டுச்சு.

தண்ணி வேகமா வர, மெல்லமா பாறைகள் மேல ஏறிக்கிட்டே இருந்தேன். ஒருகட்டத்துல நான் நின்னுக்கிட்டிருந்த பாறை தண்ணிக்குள்ள மூழ்கிடுச்சு. கையில் குழந்தையிருந்ததால மனசுக்குள்ள தைரியத்தை வரவழைச்சிட்டு, கொஞ்சம் மேலே ஏற முயற்சி பண்ணினேன். ஆனால், கையும் காலும் வழுக்குனதால சுலபமா என்னால மேல போக முடியலை. அப்போ, ‘பயப்படாதீங்க. பத்து நிமிஷத்துல வெள்ளம் நின்னுடும். உங்களைக் காப்பாத்திடுவோம்னு’ எல்லாரும் கத்துனாங்க. ஆனால், தண்ணியோட வேகம் கொஞ்சம்கூட குறையவே இல்லை.

அப்போதான் நாம வெள்ளத்துல மாட்டிக்கிட்டோம், பிழைக்கறதே கஷ்டம்னு புரிஞ்சுது...’’ என்ற சிவரஞ்சனி வெள்ளத்திலிருந்து மீண்ட கதையையும் பகிர்ந்தார் ‘‘நமக்காக இல்லைன்னாலும் குழந்தைக்காகத் தப்பிக்கணும்னு முடிவெடுத்து, இன்னும் கொஞ்சம் மேலே ஏறி ஒரு பாறையைக் கெட்டியா புடிச்சுக்கிட்டேன். அப்போ அந்தப் பக்கம் இருந்த எங்க அண்ணன் வெள்ளத்துல குதிச்சு இந்தப் பக்கம் வந்தாரு.

அதுக்குள்ள  யாரோ ரெண்டு பேர் உயிரைப் பொருட்படுத்தாம வெள்ளத்துல குதிச்சு, என்னையும், குழந்தையையும் மீட்டு மேல அனுப்புனாங்க. அங்கே இருந்த அண்ணன் எங்களை பத்திரமா கரைக்குக் கூட்டிக்கிட்டு போயிட்டாரு.நாங்க பாதுகாப்பா கரைக்கு வந்துட்டோம். ஆனால், அடுத்த நொடியே எங்களைக் காப்பாத்துன ரெண்டு பேரும் தண்ணியில விழுந்துட்டாங்க. அவங்க வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போனதைப் பார்த்ததும் எனக்கு மயக்கமே வந்துடுச்சு.

அவங்களுக்கு ஒண்ணும் ஆகலைன்னு தெரிஞ்சபிறகுதான் நிம்மதியா ஆச்சு. அப்புறம்தான் அவங்க பேரு அப்துல் ரகுமான், லட்சுமணன்னு தெரிய வந்துச்சு. முன்ன பின்ன தெரியாதவங்களுக்காகத் தங்களோட உயிரைப் பணயம்வெச்ச அவங்கதான் சார் கடவுள்...’’ என்றார் சிவரஞ்சனி கண்கள் கலங்கியபடி.  

செய்தி:  திலீபன் புகழ்

படங்கள்: சேகர்