திங்களச்ச நிச்சயம்
சிறந்த கதை, இரண்டாவது சிறந்த படம் என இரண்டு கேரள மாநில திரைப்பட விருதுகளை அள்ளிய மலையாளப்படம், ‘திங்களச்ச நிச்சயம்’. ‘சோனி லிவ்’வில் பார்க்கலாம். கேரளாவில் உள்ள ஓர் எளிமையான ஊர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த விஜயனுக்கு இரண்டு மகள்கள்; ஒரு மகன். அப்பாவின் பேச்சைக் கேட்காமல் தனக்கு விருப்பமான ஒருவரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் மூத்த மகள். அதனால் மாப்பிள்ளையுடன் விஜயன் பேசுவதே இல்லை.
இரண்டாவது மகளாவது, தான் சொல்கிற ஆளைக் கல்யாணம் செய்வாள் என்ற நம்பிக்கையுடன் ஒரு மாப்பிள்ளையைப் பார்க்கிறார் விஜயன். திங்கட்கிழமையன்று நிச்சயத்தை வைக்கிறார்.
இந்நிலையில் இரண்டாவது மகளும் தன் காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிப்போகிறாள். அவமானத்தில் நிலைகுலைந்துபோகிறார் விஜயன். அப்போது விஜயனின் வீட்டுக்கு அவரது மகனின் காதலி வந்து சேர்கிறாள். விஜயன் என்ன முடிவு எடுக்கிறார் என்பதே திரைக்கதை.
கேரளாவின் நடுத்தரக் குடும்பங்களில் நிச்சயம் எப்படி நடக்கும் என்பதை அருகிலிருந்து பார்ப்பது போல கதை அமைத்திருப்பது சிறப்பு. தங்களுக்கு விருப்பமான துணையைக் குழந்தைகள் தேர்ந்தெடுக்கும்போது அதில் பெற்றோர்களின் தலையீடு அவசியமற்றது என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறது இப்படம். படத்தின் இயக்குநர் சென்னா ஹெக்டே.
|