அடுப்பும் எண்ணெயும் இல்லாத உணவகம்!



உணவே மருந்து என்று வாழ்ந்தவர்கள் நாம். ஆனால், இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவே பல வகையான நோய்களை அள்ளிக்கொண்டு வருகிறது. இதற்கு மாற்றாக ஆங்காங்கே இயற்கை உணவகங்கள் திறக்கப்பட்டு கவனம் ஈர்க்கின்றன.
இந்நிலையில் அடுப்பும், எண்ணெயும் இல்லாமல் ஆரோக்கியமான இயற்கை உணவைச் சமைத்து அசத்துகிறார் சிவக்குமார். இந்த உணவுக்காகவே பிரத்யேகமாக ‘படையல்’ என்ற உணவகத்தை நடத்தி வருகின்றார். கோவையில் இயங்கிவரும் இந்த உணவகத்தில், உணவுகளைச் சமைக்காமல் அதன் இயற்கைத்தன்மை, குணம், சுவை குன்றாமல் அப்படியே வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறி வருகிறார்.

‘‘சொந்த ஊர் கோவை. அப்பாவும், அண்ணனும் நகைத்தொழில் செய்துவந்தனர். நான் பிளஸ் 2 வரைதான் ரெகுலரில் படித்தேன். பிறகு கிடைத்த சின்னச்சின்ன வேலைகளைச் செய்துகொண்டே தொலைத்தொடர்பு முறையில் பி.காம் முடித்தேன். சின்ன வயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம்.
அதனால் வேதாத்ரி மகரிஷி அவர்களின் யோக பயிற்சி முறைகளைக் கற்றுக்கொண்டேன். பயிற்சி எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல், அந்த அமைப்பில் பத்து வருடங்கள் ஆசிரியராகவும் இருந்தேன். அங்கே யோகாசனம் மற்றும் ஆரோக்கிய உணவு முறைகள் குறித்த புரிதல் கிடைத்தது. இதுதான் என்னை ‘படையல்’ வரைக்கும் அழைத்து வந்திருக்கிறது...’’ என்று உற்சாகமாக ஆரம்பித்தார் சிவக்குமார்.

‘‘யோகப் பயிற்சியில் இருந்தவர்களுக்கு சிறுதானியம் மற்றும் மூலிகை உணவுகளைத்தான் கொடுப்பார்கள். அந்த உணவைச் சாப்பிட்ட பிறகு உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தோம். சிலர் தங்களின் உடலில் இருந்த சில பிரச்னைகள் சரியாவதாக சொன்னதைக் கேட்டேன். இயற்கை உணவு குறித்த தேடல் அதிகமானது.

அப்போது நம்மாழ்வார் அவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அவரிடம் நேரடியாக பயிற்சி எடுக்கலாம் என்று நினைத்தபோது அவர் மறைந்துவிட்டார். அவரது நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டேன். அங்குதான் அடுப்பில்லாமல், எண்ணெயில்லாத உணவைச் சுவைத்தேன். அவலில் சாதம் செய்து கொடுத்தார்கள். அது எனக்குள் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அவர்கள் அளித்த உணவைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினேன்.

அப்போது கும்பகோணம் ஆடுதுறையில் இயற்கை உணவு குறித்து எட்டு நாள் பயிற்சி வகுப்பு நடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கேயே தங்கி அவர்கள் கொடுக்கும் உணவினைச் சாப்பிட்டு பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ராமலிங்கம் என்பவர் 55 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். மூலிகைச் சாறு, அவல் சாதம், பழங்கள்தான் உணவு.
பயிற்சி முடிந்தபிறகு எல்லோரும் ஒரு டீக்கடையில் தஞ்சமடைந்தோம்.

எட்டு நாட்கள் கட்டுப்பாட்டோடு இருந்தவர்கள், அடுத்த நிமிடமே மாற என்ன காரணம் என்று சிந்தித்தோம். இவ்வளவு காலம் சுவையான உணவுக்குப் பழகிய நம்முடைய நாக்கு, கட்டுப்பாட்டோடு இருந்தாலும், ஒரு கட்டத்தில் பழைய சுவையை நாடித்தான் செல்லும் என்பதை உணர்ந்தோம். இயற்கை உணவையே சுவையோடு கொடுத்தால் யாரும் ஆரோக்கியமற்ற உணவை நாடிச் செல்லமாட்டார்கள் என்று தோன்றியது. மேலும் நாம் வழக்கமாகச் சாப்பிடும் உணவில் அறுசுவையே இல்லை.

உதாரணத்துக்கு, வாழைக்காயில் துவர்ப்புச் சுவையுண்டு. அதை எண்ணெயில் போட்டு பஜ்ஜியாக பொரித்துச் சாப்பிடும்போது எண்ணெய் மற்றும் கடலை மாவின் சுவையைத்தான் நாம் உணர்கிறோமே தவிர வாழைக்காயின் துவர்ப்பினை அல்ல. இதேதான் எல்லா உணவிலும். குறிப்பாக காய்களை நாம் சமைத்துச் சாப்பிடுவதால் அதன் குணத்தினை முற்றிலுமாக இழக்கிறோம்.

இந்த விஷயங்கள் எல்லாம் என்னை பெரிய அளவில் பாதித்தது. அதனால் இயற்கை உணவையே சுவையோடு கொடுத்தால் மக்கள் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள் என்று புரிந்தது. ‘படையல்’ உருவானது...’’ என்றவர் ஒரு வருடத்தில் 20 வகையான உணவினைத் தயாரித்துள்ளார்.

‘‘பயிற்சியில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு அடுப்பும், எண்ணெயும் இல்லாமல் சுவையான உணவைச் சமைத்துப்பார்த்தேன். முதலில் ஒரு சில உணவு வகைகளைச் சமைத்தேன். பிறகு ஐந்து, பத்தானது. பத்து முப்பதாக வளர்ந்தது. நான் கண்டறிந்த ஒவ்வொரு உணவும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் சமைத்துக்கொடுக்க ஆரம்பித்தேன்.

என்னைப்பற்றி கேள்விப்பட்ட இயற்கை ஆர்வலர் ஒருவர், நான் சமைத்த உணவை உலகம் முழுவதும் கொண்டுபோக வேண்டும் என்று விரும்பினார். அவரே அதற்கான பாதையையும் வழிவகுத்துக் கொடுத்தார். அவர் மூலம் இந்திய விமானக் கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த விவேகானந்தன் அறிமுகமானார்.

நான் சமைத்த உணவை அவர் சாப்பிட்டுப்பார்த்தார். ஆச்சர்யமடைந்த விவேகானந்தன் 2019ம் ஆண்டில் உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சிக்காக 30 ரெசிப்பிக்களை 300 ஆக உயர்த்தினேன். இதனை 3.30 நிமிடத்தில் சமைத்து சாதனை படைத்தோம்.

இந்த உணவினை சமைப்பதற்காக ஒரு கேட்டரிங் கல்லூரியில் இருந்து 2000 மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களில் 300 பேரை தேர்வு செய்து, பயிற்சிகொடுத்து சமைக்க வைத்தோம். இந்த சாதனை ‘கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ’ மற்றும் ‘யுனிவர்சல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸி’ல் இடம் பிடித்தது.

இப்போது ‘படையல்’ உணவகத்தில் 2000 வகையான உணவுகளை வழங்கி வருகிறோம். அத்துடன் அந்த உணவு வகைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பயிற்சியும் கொடுக்கிறோம். லாக்டவுன் காலத்தில் ஆன்லைனில் பயிற்சி கொடுத்தோம். பல நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் கலந்துகொண்டார்கள்.

எங்களுடைய உணவகத்தில் மாதத்தில் ஒரு நாள் நம்முடைய பாரம்பரிய முறையில் கீழே அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தினைக் கடைப்பிடித்து வருகிறோம். இதனால் அடிவயிறு மற்றும் முதுகுத்தண்டு பலப்படும்...’’ என்றவர், தான் சமைக்கும் முறை பற்றியும் பகிர்ந்தார்.‘‘உப்புத் தண்ணீர் அல்லது எலுமிச்சை சாற்றில் காய்கறிகளை ஊறவைத்து, அதில் மிளகுத்தூள், உப்பு, தேங்காய், சீரகம் சேர்த்து பொரியலாகக் கொடுக்கிறோம். காய்கறிகளை அவ்வாறு ஊறவைத்தால் மிருதுவாகிவிடும். சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

உதாரணத்திற்கு, வாழைக்காய் கடினமாக இருக்கும். அதில் துவர்ப்பு அதிகம். அப்படியே சாப்பிட முடியாது. அதை உப்புத் தண்ணீரில் ஊற வைத்தால் மிருதுவாகும். பாவக்காயில் கசப்பு அதிகம் என்பதால் அதை எலுமிச்சை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். கத்தரிக்காயை எலுமிச்சை மற்றும் உப்புத் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு காய்கறிகளுக்கு ஏற்ப ஊற வைக்கும் விதம் மாறுபடும். வாழைப்பூ, முருங்கைப்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, கரிசலாங்கண்ணி என ஏழு நாட்களுக்கு ஏழு வகையான வடைகளைக் கொடுக்கிறோம்.

வடைகளில் பருப்புக்கு பதில் வேர்க்கடலை, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை பயன்படுத்துகிறோம். ஊறவைத்த வாழைப்பூவை பொடியாக நறுக்கி அதனுடன் தேங்காய், பொடித்த வேர்க்கடலை சேர்த்து நன்கு பிசையும்போது, நம்முடைய கைகளில் உள்ள சூட்டிலேயே வாழைப்பூ மிருதுவாகும். தேங்காயில் உள்ள ஈரத்தன்மையும், வேர்க்கடலையில் இருக்கும் எண்ணெய்த் தன்மையும் உணவுக்கு மேலும் சுவை கூட்டும். அவலைப பொடி செய்து அதில் தேங்காய்ப் பால், மிளகு, சீரகம் சேர்த்து இட்லித் தட்டில் ஊற்றினால் மிருதுவான இட்லி தயார். தேங்காய்ப்பாலும் அவலும் சேரும்போது அது இறுகிடும்.

பாரம்பரிய அரிசி வகைகளை அவல் வடிவத்தில் செய்து வைத்திருப்பதால் அந்தந்த சாதத்திற்கு ஏற்ப அதனை ஊறவைத்துத் தருகிறோம். தயிர் சாதம் என்றால் குழைந்திருக்க வேண்டும். ஃபிரைட் ரைசுக்கு உதிரி உதிரியாக இருக்க வேண்டும். தக்காளி சாதத்திற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.

இந்த முறையைத் தெரிந்துகொண்டால் நம் வீட்டிலேயே இயற்கை உணவினை சமைக்காமல் சாப்பிடலாம். வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பிறகுதான் உணவினைத் தயார் செய்து தருகிறோம். அப்படி தயார் செய்துகொடுத்தால்தான் சுவையும் குணமும் மாறாமல் இருக்கும். காய்கறிகளை ஊறவைப்பது முதல் அனைத்து வேலைகளும் காலையில் இருந்தே துவங்கி விடும். இயற்கை உணவினை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு ஆர்வமாக இருப்பவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்...’’ என்று முடித்தார் படையல் சிவக்குமார்.

செய்தி: ப்ரியா

படங்கள்: சதீஷ்