நீரின்றி அமையாது உலகு...
13. காவேரியை கலங்கச் செய்யும் கழிவுகள்
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...
என்ற கடுவெளிச் சித்தர் பாடல் வரிகள் போலத்தான் இந்த மனித சமூகம் நமக்கு கிடைத்திருக்கின்ற தண்ணீர் வளத்தை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து தண்ணீர் வளம் குறைந்து வரும் நேரத்தில் இருக்கின்ற நீரை பாதுகாத்து சேமிக்காமல் அதை பாழ்படுத்தி வருகிறோம்.
நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க நடந்தாய் வாழி காவேரி...
என்ற பாடல் வரிகள் காவேரி ஆற்றைப் பற்றி நினைக்கும்போது நம் நினைவுக்கு வரும். கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சித் தொடரில் பிரம்மகிரி என்ற மலைப் பகுதியில் உள்ள தலைக்காவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகிறது காவேரி நதி. இந்த இடம் கடல் மட்டத்திற்கு மேல் 1340 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலையில் ஒரு சிறு ஊற்றாக உருவாகி சுமார் 800 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்து கடைசியில் பூம்புகார் அருகே கடலில் கலக்கிறது. காவேரி - தென்னிந்தியாவின் மிக முக்கியமான நதிகளில் ஒன்று. கடலில் கலப்பதற்கு முன்பாக பல உயிர்களையும் உயிர்ப்பித்து, விவசாயத்தை வளர்த்து, தொழில் வளத்தை பெருக்கிச் செல்கிறது காவேரி.
சில நாட்களுக்கு முன்பு காவேரி ஆற்றில் ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியானது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நீர் தொழில்நுட்ப முன்னெடுப்புகள், இங்கிலாந்து சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிதி உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், காவேரி ஆற்றில் பல வகை மாசுகள் கலப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் மருந்து தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்கள், பிளாஸ்டிக், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள் அடங்கும் என்று கண்டறிந்துள்ளனர்.
டாக்டர் லீஜி பிலிப், நிதா மற்றும் ஐஐடி மெட்ராஸ் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும் நிறுவனத் தலைவருமான கே.ஜி.கணபதி தலைமையிலான ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சியாளர்கள் குழு காவேரி ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டது.
காவேரி ஆற்றில் பருவகாலத்திற்கு முன்பும் அதன் பின்னரும் மாசுப்பொருட்கள் பரவும் அளவு பற்றிய ஆய்வை செய்தனர். நதிநீரின் தரத்தை மதிப்பிடுவதால் மாசுபாடு பரவலுக்கான காரணத்தையும் சுற்றுச்சூழலுக்கு அவை ஏற்படுத்தும் தாக்கத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்று இந்தக் குழு தெரிவித்துள்ளது.
காவேரி ஆற்றில் 22 இடங்களில் இருந்து ஆய்வுக் குழு தண்ணீரைச் சேகரித்தது. ஓரளவு சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் இடங்களுக்கு அருகில் 11 மாதிரி நிலையங்களையும், நீர் விநியோக அமைப்புகள் கலக்கும் இடங்களுக்கு அருகில் 11 நீர்ப்பிடிப்புத் தளங்களில் உள்ள நீரின் தரமும் கண்காணிக்கப்பட்டது.
காவிரி நீரின் தரத்திலும் மருத்துவக் கழிவுகளின் அளவிலும் மழைக்காலமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை ஆராய்ச்சிக் குழு கண்டறிந்தது. மழைக்காலம் முடிந்த பிறகு நதியின் ஓட்டம் குறைகிறது. அத்துடன் பல்வேறு இடங்களிலிருந்து தொடர்ச்சியாக கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.
இவற்றின் காரணமாக மருந்துகள் உட்பட பலவகையான மாசுபாடுகள் அதிகரிப்பதை ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மருந்துகள் மிகச்சிறிய அளவில் நீர்நிலைகளில் கலக்கப்பட்டாலும் நீண்டகால அடிப்படையில் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பவை.
இந்த ஆய்வில், இந்த மருத்துவ கழிவுப் பொருட்கள் நுண்ணுயிரிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த நுண்ணுயிர்கள் நமது உடலில் நுழைந்த பின்னர் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சொல்கின்றனர். இந்த நுண்ணுயிர்களைச் சமாளிக்க நாம் எடுத்துக்கொள்ளும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துக்கு டிமிக்கி கொடுத்து தப்பித்துவிடும் என்று கண்டறிந்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்புகள் நிச்சயம் அச்சத்தை ஏற்படுத்துபவை. மருந்துக் கழிவுகள் மனித ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி இன்னும் அதிகம் அறியப்படவில்லை. நீர்நிலைகளில் வாழக்கூடிய குறிப்பிட்ட உயிரினங்களுக்கு மருத்துவக் கழிவுகள் மிதமான முதல் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.ஆர்சனிக், துத்தநாகம், குரோமியம், ஈயம் மற்றும் நிக்கல் போன்ற உலோகங்களால் குறிப்பிடத்தக்க மாசு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர். நன்னீர் உள்வாங்கும் இடங்களில்கூட அதிகளவு மருத்துவ மாசுகள் நிறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் காவேரியின் நீரை ஏதோ ஒரு வகையில் சார்ந்திருக்கும் மாவட்டங்கள். ஆனால், ஈரோடு மாவட்டத்தை காவேரி கடந்து செல்லும்போது பெரிய அளவில் மாசுபடுத்தப்படுகிறது. இந்த மாசுபடுத்தப்பட்ட நீரே திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்குச் செல்கிறது. ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவேரியுடன் கொடுமுடி அருகே நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆறுகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரிய விதத்தில் உள்ளது. பெருந்துறையில் சுமார் 2700 ஏக்கர் பரப்பளவில் இயங்கிவரும் சிப்காட், ஆசியாவின் மிகப் பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்று. இங்குள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் சாயப்பட்டறைகளும் தோல் தொழிற்சாலைகளும் அடக்கம்.பெருந்துறை சிப்காட்டைச் சுற்றியுள்ள சுமார் 5 கிமீ சுற்றளவில் நிலத்தடி நீர் பயன்படுத்தவே முடியாத அளவுக்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி ஏற்றுமதி ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இருந்து வந்தது. காவேரி, பவானி நதிகள்தான் இந்த தொழிற்சாலைகளுக்கு உயிர்நாடி.
விவசாயத்தின் வளர்ச்சியும் இந்த ஆறுகளை அடிப்படையாக வைத்து அமைந்ததுதான். எந்த தண்ணீர் உயிர்நாடியாக இருக்கிறதோ, அதே நதிகளை தோல் தொழிற்சாலைகளில் இருந்தும் சாயப்பட்டறைகளில் இருந்தும் இரவு - பகல் பாராது வெளியேற்றப்பட்ட கழிவுநீர் முற்றிலுமாக நாசம் செய்திருக்கிறது.பொதுவாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் விவசாயிகள் போராடுவார்கள். ஆனால், நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஒரத்துப்பாளையம் அணையை திறக்கக்கூடாது என்று விவசாயிகள் போராடும் அளவுக்கு அந்த நதி மாசுபட்டிருந்தது.
பாப்பம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் அங்குள்ள காகித ஆலையிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில்தான் விவசாயம் செய்துவருகின்றனர் என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர். ஈரோட்டின் கிளை நதியான பவானி, நீலகிரியின் அமைதிப் பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி, கேரளாவிற்குள் சென்று 35 கிமீ பயணித்து பில்லூர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து பவானி சாகர் அணையை அடைந்து கீழ்பவானி பாசனம், கொடிவேரிப் பாசனம், காளிங்கராயன் கால்வாய் பாசனம் என மூன்று பாசனத் திட்டங்களின் கீழ் 2.5 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதியளிக்கிறது.
ஈரோடு நகரத்தைப் பொறுத்தவரை பவானியின் நீரை எடுத்து நேரடியாக பயன்படுத்த முடியாத நிலையில்தான் உள்ளது. தொழிற்சாலைகளால் மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் நேரடியாக பவானியோடு கலக்கிறது. அதனால், ஈரோட்டிற்கான குடிநீரை நகருக்குள் இருந்து எடுக்க முடியாமல் ஊராட்சிக்கோட்டை என்ற இடத்திலிருந்து எடுத்து வினியோகம் செய்கிறது ஈரோடு மாநகராட்சி.
நீலகிரி, தாளவாடி, பர்கூர் மலைப்பகுதிகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் மழைப் பொழிவு வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் நீலகிரியில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிமருந்தின் எச்சங்களும் பவானி நீரில் உள்ளதாகவும் சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
உலகளாவிய நன்னீரில் நதிகள் 0.006% பங்களிக்கின்றன. மேலும், பல்வேறு உள்நாட்டு மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஆதாரமாகவும் உள்ளன. உலகெங்கிலும், பல்வேறு மனித செயல்பாடுகளால் நதி அமைப்புகளின் நீர் தரம் மோசமடைந்து வருகிறது. தென்னிந்தியாவில் காவேரி நதிக்கு மனிதர்களின் நடவடிக்கையால் தொடர்ந்து ஆபத்து ஏற்பட்டு வருகிறது என்பதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. நதிகள் போன்ற நீர்நிலைகளில் மாசுபாட்டின் அளவைக் குறைக்க கழிவுநீர் சுத்திகரிப்பும் அவசியமாகிறது. மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மாசுபாடுகள் ஏற்படுத்தும் நீண்ட கால தாக்கத்தை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆராய்ச்சி அவசியம் என்பதையும் இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறதுஈரோடு மாவட்டம் மட்டுமல்ல, காவேரி பயணிக்கும் பல மாவட்டங்களில் வீட்டுக்கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள் ஆகியவை வந்து சேருகின்றன. இது நீரின் தன்மையை பாதிப்பதுடன் அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழலையும் மோசமடையச் செய்கிறது.
தவிர கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை உருவாக்கும் விதத்தில் காவேரியில் கழிவுநீர் மற்றும் பலதரப்பட்ட வேதியல் பொருட்கள் கலப்பது நீண்டகாலப் பாதிப்பை நமக்கு ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர வேண்டும். தொழிற்சாலைகள் வருவதால் அப்பகுதி வளம் பெறும் என்பது உண்மையே. அதேநேரத்தில் அந்தத் தொழிற்சாலை கழிவுகளைச் சுத்தப்படுத்தி அவற்றை கடலில் கொண்டு சேர்ப்பதற்கு அரசு உடனடியாக சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். பொதுமக்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும் கவனத்துடன் செயல்பட்டு காவேரி ஆற்றைக் காக்க வேண்டும்.
(தொடரும்)
பா.ஸ்ரீகுமார்
|