இந்த மீனின் விலை ரூ.36 லட்சம்!
கடந்த வாரம் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் ஒரே நாளில் லட்சாதிபதியாகி, இணையத்தில் வைரலாகிவிட்டனர். ஆம்; சுந்தரவனக்காடுகளில் ஓடுகின்ற நதியில் மீன் பிடிப்பதற்காகச் சென்றபோது அவர்களது வலையில் ராட்சத மீன் ஒன்று மாட்டிவிட்டது. இவ்வளவு பெரிய மீன் வலையில் மாட்டியதும் துள்ளிக்கொண்டே இருந்திருக்கிறது.
என்ன செய்வதென்று தெரியாமல் ஐந்து மீனவர்களும் பதறிப்போய்விட்டனர். இறுதியில் ஐந்து பேரும் ஒன்றிணைந்து அந்த மீனைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அதன் நீளம் 7 அடி, எடை 78.4 கிலோ. தவிர, மீனின் வகை... விலை.... போன்ற எந்த விஷயங்களும் அந்த மீனவர்களுக்கு மட்டுமல்லாமல் சுற்றியிருப்பவர்களுக்கும் தெரியவில்லை. உடனே பெரிய அளவில் மீன் ஏலம் நடக்கும் ஒரு மீன் சந்தைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு சென்ற பிறகுதான் ‘டெலியா போலா’ வகையைச் சேர்ந்தது இந்த மீன்... விலை பல லட்சங்களில் என்று அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. இப்படி ஒரு மீன் விற்பனைக்கு இருக்கிறது என்று தெரிந்ததுமே மீன் வணிக நிறுவனம் ஒன்று 36 லட்ச ரூபாய்க்கு அந்த மீனைத் தன்வசமாக்கிவிட்டது.
த.சக்திவேல்
|