மழைக்கால நோய்கள்! எதிர்கொள்ளும் வழிகள்!



பருவமழை தொடங்கிவிட்டது. மாநிலம் முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கன மழையால் சென்னை வெள்ளக்காடாகிவிட்டது. அரசு இயந்திரம் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டாலும், தேங்கும் தண்ணீரில் பலதரப்பட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் சில தொற்றுக்கிருமிகள் வளர்ச்சி அடைந்து நம் மீது படையெடுப்பது இயற்கையான நிகழ்வு. அப்போது பல தொற்றுநோய்கள் நமக்குப் பரவுவதும் உண்டு. அவற்றை எப்படி நாம் எதிர்கொள்வது?

ஃபுளூ காய்ச்சல்

மழையில் நனையும்போது ஃபுளூ காய்ச்சல் பரவும். இது வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் நோயாளி தும்மும்போது, இருமும்போது, மூக்கைச் சிந்தும்போது சளியோடு வெளியேறி, அடுத்தவர்களுக்கும் பரவும். கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை கால் வலி. தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகள்.
இந்தக் காய்ச்சலுக்கு எந்த ஒரு சிறப்பு சிகிச்சையும் இல்லை. காய்ச்சலைக் குறைக்க ‘பாராசிட்டமால்’ மாத்திரை உதவும். தும்மல், மூக்கு ஒழுகுதலைக் கட்டுப்படுத்த ஜலதோஷ மருந்துகள் பலன் தரும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக இருந்தால், ஒரு வாரத்தில் இது தானாகவே குணமாகிவிடும். அடுத்தவர்களுக்கு இது பரவாமல் இருக்க சுற்றுப்புறச் சுத்தம் அவசியம்.

நிமோனியா காய்ச்சல்

கடுமையான நுரையீரல் தொற்று இது; பெரும்பாலும் குழந்தைகளையும் முதியவர்களையும்தான் பாதிக்கும். இந்த நோயுள்ள குழந்தை சாப்பிடாது. கடுமையான காய்ச்சல், இருமல், சளி, சோர்வு, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகள் அடுத்தடுத்து தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால், குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்.

நிமோனியாவுக்கு இரண்டு வகை சிகிச்சை உண்டு. ஆரம்பத்திலேயே இதைக் கவனித்துவிட்டால், ஒரு வார சிகிச்சையில் வீட்டிலிருந்தே குணமாக்கிவிடலாம்.
அடுத்தகட்டம்தான் ஆபத்தானது. இந்த நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து, தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள், குளுக்கோஸ், ஆக்ஸிஜன் போன்றவை செலுத்தப்பட வேண்டும். நிமோனியா வராமல் தடுக்க தடுப்பூசி உள்ளது. அதை குழந்தைகளும் முதியோரும் காலத்தோடு போட்டுக்கொண்டால் நல்லது.

வயிற்றுப்போக்கு

பாக்டீரியா மற்றும் ரோட்டா வைரஸ் கிருமிகள் மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் நமக்குப் பரவுவதால் வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகின்றன. ஈக்களும் எறும்புகளும் இந்தக் கிருமிகளை நமக்கு பரப்புகின்றன. சாதாரண வயிற்றுப்போக்கு 3 நாட்களுக்குத்தான் பாதிக்கும். அதற்கு மேல் நோய் நீடித்தால் உடலில் நீரிழப்பு ஏற்படலாம். அப்போது, பாதிக்கப்பட்ட நபருக்கு சுத்தமான குடிநீரை அடிக்கடி குடிக்கத் தரலாம்.

உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீரைத் தரலாம். ‘எலெக்ட்ரால்’ பவுடர்களில் ஒன்றைத் தரலாம். இதில் நோய் கட்டுப்படவில்லை என்றால் மருத்துவ சிகிச்சை அவசியம். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்க தடுப்புச் சொட்டு மருந்து உள்ளது.

மஞ்சள்காமாலை

மாசடைந்த குடிநீர் மற்றும் உணவு மூலம் ‘ஹெபடைட்டிஸ் - ஏ’ வைரஸ் கிருமிகள் நம்மைத் தாக்கும்போது மஞ்சள்காமாலை வரும். பசி குறைவது, காய்ச்சல், குளிர் நடுக்கம், வயிற்றுவலி, வாந்தி,  சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது, கண்கள் மஞ்சள் நிறத்துக்கு மாறுவது போன்றவை இதற்குரிய அறிகுறிகள்.

சுத்தமான குடிநீரைப் பருகுவது, மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகமாக உண்பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவை இந்த நோயைக் குணப்படுத்த  உதவும் எளிய வழிகள். இந்த நோய்க்கும் தடுப்பூசி உள்ளது. குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் ஒரு முறை, அடுத்து ஆறு மாதம் கழித்து ஒரு முறை என இரண்டு முறை இதைப் போட்டுக்கொள்ள வேண்டும். பெரியவர்களும் இதைப் போட்டுக்கொள்ளலாம்.

டைபாய்டு காய்ச்சல்

டைபாய்டு பாக்டீரியாவால் இது ஏற்படுகிறது. அசுத்தமான குடிநீரும் உணவும்தான் இது பரவுவதற்குக் காரணம். முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரித்து இரவில் கடுமையாகும். பசி குறையும். குமட்டல், வாந்தி, வயிற்றுவலி எனப் பல தொல்லைகள் தரும். உடல் சோர்வடையும். இதைக் குணப்படுத்த நவீன மருந்துகள் பல உள்ளன. தொடக்கத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டால் நோய் விரைவில் குணமாகும்.

உணவுச் சுத்தமும், குடிநீர் சுத்தமும் இந்தக் காய்ச்சலைத் தடுக்கும் கவசங்கள் என்றால் டைபாய்டு தடுப்பூசி தலைக்கவசம் போன்றது. ஒருமுறை இதைப் போட்டுக்கொண்டால் 3 வருடங்களுக்கு டைபாய்டு காய்ச்சல் வராது.

எலிக் காய்ச்சல்

தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது, எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீரில் நடக்கும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா’ எனும் கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சலைப் (Leptospirosis) பரப்பும். கடுமையான தலைவலி, காய்ச்சல், தொட்டாலே தாங்கமுடியாத தசைவலி, உடல்வலி, மஞ்சள்காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள்.

இந்த நோய்க்கும் நவீன மருந்துகள் நிறைய உள்ளன. நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை அமையும். தெருக்களில் நடக்கும்போது கணுக்கால் மூடும்படி செருப்பு அணிந்து கொள்வதும், வீட்டுக்கு வந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களைக் கழுவுவதும் இந்த நோயைத் தவிர்க்க உதவும் அரண்கள். இதைவிட முக்கியம், குளத்து
நீரில் குளிப்பதைத் தவிர்ப்பது.

டெங்கு காய்ச்சல்

‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் உள்ள கொசுக்கள் நம்மைக் கடிக்கும்போது ஒரு வாரத்தில் டெங்கு ஆரம்பிக்கும். இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே. திடீரென்று கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, உடல்வலி, தசைவலி, மூட்டுவலி, களைப்பு ஆகிய அறிகுறிகளோடு இது ஆரம்பிக்கும். கண்ணுக்குப் பின்புறம் கடுமையாக வலிப்பதும் எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளும் வலிப்பதும் இந்த நோய்க்கே உரித்தான வில்லன் தொல்லைகள்.

அத்தோடு உடலில் அரிப்பும், சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். டெங்கு வைரஸ் தட்டணுக்களை அழித்துவிடுகின்றன. இதனால் பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டுகள் ஆகியவற்றில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

டெங்கு காய்ச்சலைக் குறைக்கவும், உடல்வலியைப் போக்கவும் மருந்துகள் தரப்படும். பாதிக்கப்பட்டவர் வீட்டில் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள  வேண்டும். தேவைக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்; உப்பும் சர்க்கரையும் கலந்த கரைசல், பால், மோர், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் குடிக்க வேண்டும். பாதிப்பு மோசமாகிறது என்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டும். தட்டணுக்கள் செலுத்த வேண்டி
வரும்.

இப்படிச் செய்யுங்கள்!

* குடை அல்லது மழைக்கோட்டுடன் வெளியில் செல்லுங்கள்.
* வீட்டுக்குள் நுழைந்ததும் வெது வெதுப்பான நீரில் கை கால்களைச் சோப்பு போட்டுக் கழுவுங்கள் அல்லது குளியுங்கள்.
* பத்து நிமிடங்களுக்கு கொதிக்கவைத்து ஆறவைத்து வடிகட்டிய தண்ணீரைக் குடியுங்கள்.
* திறந்து வைக்கப்பட்ட அல்லது ஈக்கள் மொய்த்த உணவுகளைத் தவிர்க்கவும்.
* சமைத்த உணவை உடனுக்குடன் சாப்பிடவும். மிச்சமானதைக் குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாத்துச் சாப்பிடுவது நல்லதல்ல.
* இருமல், தும்மல், சளி வரும்போது கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ளவும்.
* கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணியலாம்; கொசு வலை, கொசு விரட்டிகள், களிம்புகளைப் பயன்
படுத்தலாம்.
* வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* அவசியம் செருப்பு அணிந்துதான் தெருக்களில் நடக்க வேண்டும்.
* குழந்தைகளை அசுத்தமான இடங்களில் விளையாடவிடாதீர்கள்.
* எந்தவொரு காய்ச்சலும் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால், தேவையான பரிசோதனைகள் செய்து தக்க சிகிச்சை பெற வேண்டும்.

டாக்டர் கு.கணேசன்