சீதாராம் பெனாய்



கன்னடத்திலிருந்து அசத்தலான திரில்லிங் திரைப்படமாக ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கிறது, ‘சீதாராம் பெனாய்: கேஸ் நம்பர் 18’.கர்நாடகா மாநிலத்திலுள்ள ஒரு மலைக்கிராமத்து காவல் நிலையத்துக்கு புது சப்-இன்ஸ்பெக்டராக வருகிறார் சீதாராம். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவரது வீட்டில் திருட்டு போகிறது. போலீஸ் வீட்டிலேயே திருட்டுப்போனதால் மக்களுக்கு சீதாராம் மேல் எந்த நம்பிக்கையும் வருவதில்லை.

இந்நிலையில் சீதாராமின் மனைவியும் மலைக்கிராமத்துக்கு வந்து சேர்கிறார். மனைவியைக் கவனிக்காமல் திருடர்களைப் பிடிப்பதில் மும்முரமாக இருக்கிறார் சீதாராம். மர்மமான முறையில் சீதாராமின் மனைவி கொலை செய்யப்படுகிறார்.

இந்த கிராமத்துக்கு வருவதற்கு முன்பு சீதாராமின் உயர் அதிகாரி ஒருவர், அவரிடம் ‘வழக்கு எண்: 18’ என்ற ஃபைலைக் கொடுக்கிறார். அந்த வழக்கு ஒரு சீரியல் கில்லரைப் பற்றியது. அதுவும் அவன் காவல் துறை அதிகாரிகளின் மனைவியரை மட்டுமே கொலை செய்யும் நூதன கொலையாளி. தன் மனைவியையும் அந்தக் கொலைகாரன்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று விசாரணைக் களத்தில் இறங்குகிறார் சீதாராம். அவர் தன் வீட்டைக் கொள்ளையடித்த திருடர்களையும், சீரியல் கில்லரையும் கண்டுபிடித்தாரா என்பதே திரைக்கதை.  படத்தின் இயக்குநர் தேவி பிரசாத் ஷெட்டி.