திருமணமானதும் ஜெய் பீம் ரிலீசாச்சு!
‘‘‘சிவப்பு மஞ்சள் பச்சை’ பார்த்துட்டு இயக்குநர் ஞானவேல் சார் கூப்பிட்டார். கதை கேட்டதுமே மிஸ் பண்ணக் கூடாதுனு முடிவு செய்துட்டேன்...’’ பூரிப்புடன் ஆரம்பித்தார் ‘ஜெய் பீம்’ பட செங்கேணி பாத்திரத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ். எப்படி இவ்வளவு தத்ரூபமா செங்கேணியை கண்முன் கொண்டு வந்தீங்க?
40 - 50 நாட்கள் நாங்க இருளர்கள் கூடவே வாழ்ந்தோம். நானும் மணிகண்டனும் அவங்க பேசுகிற மொழி, பாடி லாங்குவேஜை கத்துகிட்டோம். இதுக்கு பிறகு ஒரு மாசம் ஒர்க்ஷாப் நடந்தது. அப்புறம்தான் ஷூட் ஆரம்பமாச்சு. நிறைய தமிழ்ச் சொற்கள் எனக்கு வரலை. திரும்பத் திரும்ப மனப்பாடம் செய்து அந்த ஸ்லாங்கை கொண்டு வந்தேன். படத்துல நானே டப் பண்ற அளவுக்கு தேறினேன். டயட்ல எடையை குறைச்சேன். வெயில்லயே காலை டூ மாலை இருந்து கருப்பானேன். இதெல்லாம் சேர்ந்துதான் செங்கேணி திரையிலே கிடைச்சாங்க. பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிருக்கு. படம் பார்த்த எல்லாரும் செங்கேணி பத்தி பேசறாங்க. தேங்க்ஸ் டூ டைரக்டர். ‘செங்கேணி’ மூலம் நீங்க கத்துக்கிட்டது என்ன? டீம் ஒர்க். இதுக்கு முன்னாடி நடிச்ச படங்கள்ல என் சீன் முடிஞ்சதும் கேரவன் போயிடுவேன். பெருசா யார்கிட்டயும் பேசமாட்டேன். ஆனா, இந்த நடிப்பு ஒர்க் ஷாப், மக்கள் வாழ்க்கை பாடம்... இதெல்லாம் குழுவா வேலை செய்யறதோட ப்ளஸ்ஸை எனக்கு புரிய வைச்சது. சூர்யா சார், மணிகண்டன், பிரகாஷ் ராஜ் சார்னு மொத்தக் குழுவும் இறங்கி வேலை செய்ததை மறக்கவே முடியாது.
தமிழ் சினிமா கேரியர் எப்படி ஆரம்பிச்சிருக்கு?
‘மகேஷிண்டே பிரதிகாரம்’ மலையாளப் படத்துக்குப் பிறகு இடுக்கி கேர்ள் பாத்திரமாவே அமைஞ்சது. அதை உடைக்கதான் சில படங்கள் செய்தேன். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ வழியா தமிழ்ல அறிமுகம். ஆனா, தொடர்ந்து அக்கா, தங்கை கேரக்டராவே அமைஞ்சது. எல்லாத்துக்கும் நோ சொல்லிட்டு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ எனக்கு நல்ல பொண்ணுங்கற ஐடி கொடுத்துச்சு. ‘ஜெய் பீம்’ நல்ல நடிகைங்கற பெயரைக் கொடுத்திருக்கு. தொடர்ந்து நல்ல கதைகளா, கதாபாத்திரங்களா தேர்வு செய்து நடிக்கணும்.
செங்கேணிக்கு பின்னாடி இருக்கும் லிஜோமோல் யார்?
இடுக்கி மாவட்டம், கேரளா பொண்ணு. அப்பா ராஜீவ் பிஸினஸ்மேன். அம்மா லிசாம்மா ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஆபீசர். நான் லைப்ரரி சைன்ஸ்ல மாஸ்டர் டிகிரி படிச்சிருக்கேன். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தப்ப எனக்கு நிச்சயதார்த்தம் நடந்துச்சு. அக்டோபர் 5ம் தேதி திருமணம் முடிஞ்சது. அவர் பெயர் அருண் ஆண்டனி ஒனிசெரில். பாண்டிச்சேரி வாழ் மலையாளி. பிஸினஸ்மேன். திருமணம் முடிஞ்ச சந்தோஷம் கூடவே ‘ஜெய் பீம்’ ஹிட். டபுள் ஹேப்பி எனக்கு!
ஷாலினி நியூட்டன்
|