இது தமிழ்க் கோடு! பெருமிதத்துடன் சொல்கிறார் ஓவியர் நடேஷ்
விஜய் சேதுபதி, பசுபதி... என பல நடிகர்கள் உருவாகிய இடம் கூத்துப்பட்டறை. இதன் அடையாளமாகத் திகழ்ந்தவர் ந.முத்துசாமி. ஆனால், அவரது மகனான நடேஷின் அடையாளமோ கோட்டுச்சித்திரம். தந்தையின் வழிகாட்டுதலால் நாடக மேடை அமைப்பாக்கத்திலும் நடேஷின் கைவண்ணம் ஜொலிக்கும்.
இருந்தாலும் அவரது கோட்டுச்சித்திரங்களுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. பலப்பல வண்ணங்களில் பரிணமிக்கும் உலகளாவிய, இந்திய ஓவியங்கள் லட்சங்களில், கோடிகளில் விலைபோகும் காலம் இது. இப்படியான சூழலில் கருப்பு, வெள்ளை ஓவியங்களான கோட்டுச்சித்திரங்களின் இன்றைய நிலை குறித்து அவரிடம் உரையாடினோம். ‘‘5 வயதிலேயே ஓவியம் வரையத் தொடங்கிவிட்டேன். ஆரம்ப காலங்களில் பிகாசோ போல வெளிநாட்டு ஓவியங்களைத்தான் வரைந்துகொண்டு இருந்தேன். பிகாசோ வாழ்ந்த காலத்திலேயே தன் ஓவியங்கள் மூலம் நன்றாக சம்பாதித்தார். அவரும் வண்ண ஓவியங்கள், கோட்டுச்சித்திரம் போன்ற எல்லா வடிவங்களையும் முயன்றிருக்கிறார்.
ஆனால், பிகாசோவுக்குப் பிறகு அவரது பாணி ஓவியங்களை விமர்சகர்களும், ஓவியர்களும் எதிர்த்து பிரசாரம் செய்தனர். உதாரணத்துக்கு ‘பிகாசோ மனித நளினத்தைக் காவு கொடுத்துவிட்டார். வாழ்க்கையின் முப்பரிமாண பார்வைகளை மிகவும் தட்டையாக்கிவிட்டார்...’ என்று அவரைத் தீர்த்துக் கட்டினார்கள்...’’ என்று ஆரம்பித்த நடேஷின் கோட்டுச்சித்திரங்கள் அடங்கிய புத்தகம், ‘பார்வையிழத்தலுக்கு முன் (BEFORE BECOMING BLIND)’ எனும் தலைப்பில் சமீபத்தில் வெளியானது. இப்படி ஒரு தலைப்பு ஏன்..?
‘‘எனக்கு சர்க்கரை நோய் இருந்தது. அதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டேன். அதனால் கடந்த 3 வருடங்களாக கண்பார்வையில் பிரச்னை. டிவியைக் கூட தூரத்திலிருந்துதான் பார்க்கிறேன். பூதக்கண்ணாடி கொண்டுதான் படிக்கிறேன். காலில்கூட வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமல் போய்விட்டது. நான் பார்வை இழப்பதற்கு முன் இந்த ஓவியங்களை வரைந்ததால் புத்தகத்துக்கு இந்தப் பெயர்.
இந்த முடக்கம் வருவதற்கு முன் ‘நடை’ என்று எனக்கு ஒரு பெயர் இருந்தது. ஆம்; எல்லா இடத்துக்கும் நடந்தே செல்வேன். கோயம்பேட்டிலிருந்து ஈ.சி.ஆரில் உள்ள சோழ மண்டல ஓவியர் கண்காட்சிக் கூடத்துக்கு நடந்தே சென்றிருக்கிறேன். ஏழு மணிநேரம்கூட தொடர்ச்சியாக நடந்திருக்கிறேன். அந்த வேகத்தில் பிறந்த ஓவியங்கள் இவை. ஆகையால் இப்படி இரு பெயர் வைத்திருக்கிறேன்...’’ என்ற நடேஷிடம், ‘கோட்டுச்சித்திரம் மிக எளிமையாக இருப்பதால் இது ஒரு புவர்மேன் மீடியமா..?’ என்றோம்.‘‘அப்படியெல்லாம் கிடையாது. பிகாசோ கூட கோட்டுச்சித்திரம் தீட்டி நிறைய பணம் சம்பாதித்திருக்கிறார். ஆனால், பின் நவீனக் கோட்பாளர்கள் அவரை விமர்சித்ததால் பெரிதாக யாரும் கோட்டுச்சித்திரத்தில் கவனம் செலுத்துவதில்லை.
நான் வரைந்த கோட்டுச்சித்திரம் ஒன்றை சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறேன். ஆனால், கோட்டுச்சித்திரம் மட்டுமே வரைந்து பணம் சம்பாதிக்க முடியாது என்பதால் இந்த வடிவத்தை பலரும் விரும்புவதில்லை என்று நினைக்கிறேன். நான் கூட பணம் சம்பாதிப்பதற்கான ஒரு மீடியமாக இதை நினைக்கவில்லை...’’ என்ற நடேஷிடம், ‘உங்கள் சித்திரத்துக்கும் பிகாசோ போன்ற ஓவியர்களின் கோட்டுச்சித்திரங்களுக்கும் என்ன வித்தியாசம்...’ என்றோம்.
‘‘ஒரு காலத்தில் பிகாசோவைப் பின்பற்றியிருக்கிறேன். ஆனால், பிறகு அவரைத் தூக்கி ஒரு ஓரத்தில் வைத்துவிட்டேன். பிகாசோவின் ஓவியத்தில் மேற்குலக கோடுகள் இருந்ததால் நான் தமிழ்க் கோடுகளைத் தேடி பயணமானேன். நம்ம ஊர் கோயில்களில் உள்ள சிற்பங்களிலிருந்து தமிழ்க் கோடுகளை உருவிக்கொண்டேன்.
இது மண்ணுக்கு ஏற்ற கோடுகள். கோட்டுச்சித்திரம் என்பது வெறும் கை விரல்களில் இருந்து வருவதில்லை. அது மனமும், விரல்களும் சங்கமிக்கும் இடத்திலிருந்து பிறப்பவை...’’ என்கிற நடேஷிடம், ‘பொதுவாக ஒவ்வொரு ஓவியத்துக்கும் அடியில் அந்த ஓவியத்துக்கான பெயர் இருக்குமே. உங்கள் ஓவியங்களில் அது இல்லையே...’ என்றோம். ‘‘ஒவ்வொரு ஓவியத்துக்கும் ஒரு கதை இருக்கிறது. அதை ஒரு வரியால் சொல்வது அந்த ஓவியத்துக்கு நாம் செய்யும் தீங்கு. ஓவியங்களைப் பார்வையாளர்கள்தான் ரசிக்க பழகிக்கொள்ளவேண்டும். நம்மிடையே பார்வைக் கல்வி ரொம்பக் குறைவு. இதை கோயில்களிலிருந்து, சிலைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்...’’ என்ற நடேஷிடம், ‘இந்தப் புத்தகத்தில் உள்ள சில ஓவியங்கள் ஆண் மையச் சமூகத்தை ஒரே சமயத்தில் விமர்சிப்பது போலவும், கொண்டாடுவது போலவும் இருக்கிறதே...’ என்றோம்.
‘‘அண்மையில் ஒரு நாயும், எலியும் விளையாடுவதை யூடியூப்பில் பார்த்தேன். பொதுவாக ஆண்கள் மிருகத்தனமாகத்தான் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் சம்போகமாகவே பார்க்கிறார்கள்.
நாயும், எலியும் விளையாடும் காட்சி என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. ஒன்று, விளையாட்டுக்குப் பிறகு நாய் எலியைக் கொன்றுவிடலாம் அல்லது நாயிடமிருந்து எலி தப்பித்து ஓடலாம். ஆனாலும் விளையாட்டு என்பது மிருகங்களுக்கும் நமக்கும் தேவையானதாகத்தானே இருக்கிறது. மனிதன் மிருகமாகலாம். ஆனால், நம்மை மற்ற மனிதர்களோடு ஒட்டவைக்கும் ஒரு ஃபெவிகால் அன்பு மட்டுமே. அந்த அன்பு விளையாட்டில் இருக்கிறது என்பதைத்தான் இந்த ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன...’’ என புன்னகைக்கிறார் நடேஷ்.
டி.ரஞ்சித்
|