கொரோனாவும் ஊட்டச்சத்து குறைபாடும்!
கொரோனா பிரச்னையால் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு சுகாதார வசதிகளும், ஊட்டச்சத்து உணவும் கிடைக்காமல் போயிருக்கிறது என்கிறது புள்ளிவிபரம். கடந்த மாதம் 14ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 33 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பாதிப்பேர், அதாவது 17 லட்சத்து 76 ஆயிரம்பேர், கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் சிரமப்படுகின்றனர். இவர்கள் ஒன்று முதல் 6 வயதுவரை உள்ள குழந்தைகள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, 9 லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்டனர். அதனுடன் ஒப்பிடுகையில் இது ஓராண்டில் 91 சதவீத உயர்வு.மாநில வாரியாக பார்த்தால், மராட்டிய மாநிலம் 6 லட்சத்து 16 ஆயிரம் ஊட்டச்சத்து பற்றாக்குறை குழந்தைகளுடன் முதலிடத்தில் உள்ளது. பீகார், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஊட்டச்சத்து பற்றாக்குறை கொண்ட 1 லட்சத்து 78 ஆயிரம் குழந்தைகளுடன் தமிழ்நாடு 7வது இடத்தில் இருக்கிறது.
கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை நிறுத்தப்பட்டதுதான், ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு காரணம் என்கிறார்கள்.
த.சக்திவேல்
|