75 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் ஜொலித்த பார்வையற்ற பாடகர்! ஒவ்வொரு பூக்களுமே



சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும்
போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே...
சொல்கிறதே
இரவானால் பகல்
ஒன்று வந்திடுமே...

‘ஆட்டோகிராஃப்’ படத்தில் நம்பிக்கையூட்டும் வகையில் பாடல் அமைந்தது. இந்த பாடலை எழுதிய கவிஞர் பா.விஜய்க்கு தேசிய விருது கிடைத்தது.
இந்தப் பாடலின் போது பார்வைற்ற கலைஞர்கள் இசைப்பது போன்று காட்சியமைக்கப்பட்டிருக்கும். இக்குழுவை வழி நடத்திய கோமகனும் சித்ராவுடன் இணைந்து உணர்வூபூர்வமாக பாடியிருப்பார்.பார்வையற்றவர்களைக் கொண்டு பல ஆண்டுகளாக இசைக்குழுவை வழி நடத்திய கோமகனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டம் வழங்கியது. இவரைப் போன்ற எண்ணற்ற பார்வையற்ற கலைஞர்கள் தமிழகம் முழுவதும் இசைக்குழுக்களை நடத்தி வருகின்றனர். சாலையோரம் நிற்கும் வேனில் இருந்து கசியும் பாடல்களை உற்றுக்கேட்டால், பார்வையற்ற குழுவினர் பாடிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், 75 ஆண்டுகளுக்கு முன்பே இரண்டு கண்களின் பார்வையும் பறிபோன நிலையிலும் தனது தன்னம்பிக்கை மிக்க குரலால் வெளிச்சம் பாய்ச்சிய மகாகலைஞன் ஒருவர் இருந்தார்.  
அவர் பெயர் வி.ஜே.வர்மா.‘உலகத்தில் உள்ள இருட்டு முழுவதும் நினைத்தாலும், ஒரு சிறிய மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அணைக்க முடியாது’ என்ற இத்தாலிய பழமொழிக்கு எடுத்துக்காட்டாக தென்னிந்திய திரையிசை வானில் அந்த கலைஞன் ஜொலித்தார்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியில் பிறந்த வி.ஜே.வர்மாவிற்கு அம்மை நோயால் இரண்டு கண் பார்வையும் பறிபோனது. அதற்காக அவர் முடங்கி விடவில்லை. அற்புதமாக புல்லாங்குழல் வாசிக்கும் திறமை இருந்தது. அத்துடன் மிகச்சிறந்த குரல் வளமும் துணை செய்தது. ‘விஜயா வாஹினி’ இசைக்குழுவில் பின்னணி கலைஞராக இருந்தார். இசையமைப்பாளர் அடப்பள்ளி ராமாராவின் குழுவில் புல்லாங்குழல் கலைஞராக இருந்த வி.ஜே.வர்மா, ராமாராவ் இசையமைத்த படங்களில் பின்னாளில் பாடகராக மாறினார்.

1949ம் ஆண்டு கிருஷ்ணன் - பஞ்சு ஆகியோரின் மேற்பார்வையில் டி.பாலாஜி சிங் இயக்கிய படம் ‘பூம்பாவை’. கே.ஆர்.ராமசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன்,என்.எஸ்.கிருஷ்ணன், கே.சாரங்கபாணி, யு.ஆர்.ஜீவரத்தினம், டி.ஏ.மதுரம், கே.ஆர்.செல்லம் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் இடம் பெற்ற 16 பாடல்களை  மதுரை மாரியப்ப சுவாமிகள், கம்பதாசன் ஆகியோர் எழுதினர். அடப்பள்ளி ராமாராவ் இசையமைத்தார். திருஞான சம்பந்தரின் சரிதத்தில் இடம்பெற்ற  ‘பூம்பாவை’ என்ற கதையே படமாக்கப்பட்டது. கே.ஆர்.ராமசாமி திருஞான சம்பந்தராக நடித்தார்.

வர்மாவின் குரலில் வழிந்தோடும் துயர் நிறைந்த சாகித்யம், இப்படத்தில் அவருக்கு அப்படியான பாடல்களைப் பெற்றுத்தந்து. ஆனால், அவர் குரலில் காட்டியுள்ள வித்தியாசத்தை உணர முடியும்.

உண்மை காண்பாயே
என் நெஞ்சே  
மண்ணிலே நீ
வந்து பிறந்தாய்...

எனத் துவங்கும் இப்பாடல் மட்டுமின்றி, ‘குளிர்ந்ததுதான் நிஜமானால் உடலா உளமா...’ என்ற கேள்வி எழுப்பும் பாடலும் சங்கீத தென்றல்தான். இரண்டாவது பாடலை எழுதியவர் கம்பதாசன்.
அன்றைய காலக்கட்டத்தில் தெலுங்கிலிருந்து  நிறைய படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் சக்கைப்போடு போட்டன. மாயாஜாலம் நிறைந்த ஃபேன்டஸி கதை அமைப்புடன் உருவான அப்படியான படங்களுக்கு கிராக்கியும் இருந்தது.

அப்படி 1949ம் ஆண்டு வெளியான படம் ‘மாயக்குதிரை’. நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவி, ஏ.வி.சுப்பாராவ் உள்பட பலர் நடித்த இப்படத்திற்கு கண்டசாலா இசையமைத்தார். மந்திரவாதி ஒரு பெண்ணை பலி கொடுக்கும் போது காப்பாற்றி குதிரையில் ஏற்றி வானில் பறக்கும் போது பாடுவது போன்று காட்சியமைக்கப்பட்டிருக்கும். வி.ஜே.வர்மா, பி.லீலா பாடிய அந்தப் பாடல் -நூதனமான இவ்விளம் காற்றில் இசையின் இன்பம் நிலவிடுமே...

ஜோடிப்பாடலாக இந்த பாடல் அவருக்கு அமைந்தது. ‘மாயக்குதிரை’ படம் தெலுங்கில் ‘கேலு குர்ரம்’ என்ற பெயரில் வெளியானது.இதன் தொடர்ச்சியாக மந்திர தந்திர படங்கள் நிறைய  வந்தன. அப்படியொரு படம்தான், ‘பாதாள பைரவி’. 1951ம் ஆண்டு விஜயா - வாஹினி தயாரிப்பில்   தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக ‘பாதாள பைரவி’ எடுக்கப்பட்டது. 175 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் தெலுங்கு படம் என்ற பெயர் ‘பாதாள பைரவி’க்கு கிடைத்தது.

என்.டி.ராமாராவ், எஸ்.வி.ரங்காராவ், பத்மநாபம், ரேலங்கி, மாலதி, கிரிஜா, கிருஷ்ணகுமாரி, சாவித்திரி என பலர் நடித்தனர். இப்படத்தில் எஸ்.வி.ரங்காராவ் பேசும், ‘பலே சிம்பகா...’ வசனம் ரொம்ப ஃபேமஸ். இப்படத்திற்கு இசையமைத்தவர் மிகச்சிறந்த பாடகரான கண்டசாலா. தெலுங்கு, தமிழில் அவர்  இசையில் வர்மா பாடிய இந்த பாடல் -

பிரேம பாசத்தால்
வலையில் விழுந்தான்
அறியாதவன் அன்றோ
பாவம் அறியாதவன்
அன்றோ...

என்று பாடிக்கொண்டே ‘ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஓஓஓ...’  என்ற சோகம் சிந்தும் ஹம்மிங்கை  கொடுத்திருப்பார். மந்திரவாதியான ரங்காராவை காடு, மலையில் பின் தொடரும் என்.டி.ராமாராவிற்கு பின்னணியில் இப்பாடல் ஒலிக்கும். ஆனால், இந்த பாடல் கண்டசாலா பாடியதாகவே பல இசைத்தளங்களில் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இப்படத்தின் வசனம், பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். மிக அழகிய மெட்டும், இசையும் கொண்ட இப்பாடல் மெல்லிசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தமிழ்த் திரையிசையில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் பாடல்கள் திரைப்படங்களில் கருப்பு, வெள்ளை காலத்தில் இருந்து இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்கள் இருவரின் பாடல்களும் ஒரே படத்தில் இடம் பெற்ற வரலாறும் உண்டு. அறிஞர் அண்ணா கதை, வசனம் எழுதி புகழ் பெற்ற ‘ஓர் இரவு’ நாடகம், அதே பெயரில் 1951ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தால் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது.

இப்படத்தில்தான் பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் இரண்டும் பயன்படுத்தப்பட்டன. ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, டி.கே.சண்முகம், டி.எஸ்.பாலையா, ஏ.நாகேஸ்வர ராவ், டி.எஸ்.துரைராஜ், லலிதா, பி.எஸ்.சரோஜா, முத்துலட்சுமி உள்ளிட்டோர் நடித்தனர்.இப்படத்தில் ஆர்.சுதர்சனம் இசையில் பாடல்கள் புகழ்பெற்றன. பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்கு சுதர்சனம் அமைத்த இசை அவரின் திறமைக்கு மிகச்சிறந்த சான்றெனலாம். எம்.எஸ்.ராஜேஸ்வரி, வர்மா பாடிய அந்தப் பாடலின் மெட்டு வித்தியாசமானது.

‘பாடுங்கள்... சேர்ந்து பாடுங்கள்... எப்படிப்பட்ட மனத்துயரையும் மாற்றும் மருந்தல்லவா உங்கள் பாட்டு..? கடைசி முறையாக கேட்கிறேன். பாடுங்கள்...’ என்ற வசனத்துடன் பாடல் துவங்கும்.
அந்தக் காலத்துப் படங்களில் பாடலுக்கு முன் இப்படி உரையாடல் துவங்குவது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. நாகேஸ்வரராவ், லலிதா ஜோடியாக பாடும் அந்த பாடல் என்ன தெரியுமா?

துன்பம் நேர்கையில்
யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க
மாட்டாயா? - எமக்கு
இன்பம் சேர்க்க
மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில்
தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க
மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?

குழந்தைக் குரலில் பாடல் பாடிக்கொண்டிருந்த எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு சுதர்சனம் வழங்கிய அழகிய டூயட் பாடலிது. அவருடன் வர்மாவின் அழகிய குரலும் பாடலை மேலும் மெருகூட்டியது.
இதே படத்தில் மகாகவி பாரதியாரின் சமதர்ம கருத்து ஓங்கி ஒலிக்கும் பாடலை நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, வர்மா ஆகியோர் இணைந்து பாடினர்.

கொட்டு முரசே  
கொட்டு முரசே
அன்பென்று
கொட்டு முரசே - மக்கள்
அத்தனை
பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும்
பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று
 கொண்டால்...

ஒருவரின் பின் ஒருவராக பாடும் இந்த பாடல் ராக மாலிகையாக அமைந்தது. கவிதையின் அழகிற்கு இசை எவ்வளவு பொருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு ‘கொட்டுமுரசே...’ நல்ல சான்று. ‘ஓர் இரவு’ படத்தில் லலிதா, பத்மினி ஜிப்ஸி நடனத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பாடல் உண்டு. அவர்களுடன் நாகேஸ்வரராவும் இணைந்து கொள்வார். கே.பி.காமாட்சிசுந்தரம் எழுதிய இந்த பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரி, வர்மா, டி.எஸ்.பகவதி ஆகியோர் பாடினர். பெண்களைக் கிண்டல் செய்யும் டி.எஸ்.துரைராஜைப் பார்த்து அறிவுரை கூறுவது போல பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்

அரும்பு போல்
மீசை வைத்து
அரக்கை
கோட்டு மாட்டி
குறும்பான
வாலிபத்தின்
கோளாறால் - தன்னை
விரும்பாத
பெண்டுகளை
நடு வீதியில்...

பாத்துப் பாத்து
கண்ணு ரெண்டும்
பார்வை மங்கிப்
 போனதே
காத்து காத்து
நின்னு நின்னு
காலும்
ஓஞ்சிப் போனதே...

இந்தப் பாடலில், ‘ஓ டியாலோ டியோ டியோ டியோ...’ என்ற வகையில் வார்த்தைகளைப் போட்டு சுதர்சனம் ஆட்டம் போடும் வகையில் இசையமைத்திருப்பார்.
1952ம் ஆண்டு ‘பெல்லி சேசி சூடு’ என்ற தெலுங்குப் படம் ‘கல்யாணம் பண்ணிப்பார்’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. என்.டி.ராமாராவ், ஜி.வரலட்சுமி, சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு கண்டசாலா இசையமைத்தார். படத்தில் 17 பாடல்கள் இடம் பெற்றன. தஞ்சை ராமையா தாஸ் எழுதிய -
வாழ்வேது
சுக வாழ்வேது
வஞ்சக உலகில்
வாழ்வேது
தேடி வந்த உன்
யோக வாழ்விலே
கேடு வந்ததே
விதிதானா
கோர பாபமும்
கொடிய பாதகமும்
மாறிடாது
கெதிதானா...

சோக ரசம் பிழியும் இப்பாடலின் வரிகளை வர்மா பாடும் போது அந்த சோகம் கேட்போரையும் வசப்படுத்தும். தெலுங்கிலும் வர்மா இதே சிச்சுவேசன் பாடலை பாடியுள்ளார்.
1953ம் ஆண்டு பி.புல்லையா இயக்கத்தில் வெளிவந்த படம் ‘மனம்போல மாங்கல்யம்’. இப்படத்தில் ஜெமினிகணேசன், சாவித்திரி, டி.என்.சிவதாணு, ஃபிரெண்ட் ராமசாமி, கே.சாரங்கபாணி, எம்.ஆர்.சந்தான லட்சுமி, சுரபி பாலசரஸ்வதி நடித்தனர். ராமாராவ் இசையில் பாடல்களை கனகசுரபி இயற்றினார்.

‘ஆவதும் பெண்ணாலே உலகம் அழிவதும் பெண்ணாலே...’ என்ற பாடலை பி.சுசீலாவுடன் இணைந்து வர்மா பாடினார்.1953ம் ஆண்டு ‘நா இல்லு’ என்ற தெலுங்குப் படம் ‘என் வீடு’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. வி.நாகையா, டி.ஆர்.ராஜகுமாரி, வித்யாவதி, டி.எஸ்.பாலையா உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படத்திற்கு ஏ.ராமாராவுடன் இணைந்து வி.நாகையா இசையமைத்தார். இப்படத்தில் சுரபி எழுதிய இந்தப் பாடலை வி.ஜே.வர்மா பாடினார்.

காலமாம்
வெள்ளமதிலே
ஞாலந்தான்
சுழன்றிடுமே
கடலும் மலையாய்
மாறிடுமே
கண்ணீர் பன்னீர்
ஆயிடுமே...
காலந்தான்
பறந்திடுமே...

மிக அழகான மெல்லிசைப் பாடலிது. ஓங்கி ஒலிக்கும் அவரின் குரல் மணியோசையைப் போல மனதில் எதிரொலிக்கும்.1953ம் ஆண்டு ஜி.ஆர்.ராவ் இயக்கத்தில் ஜெமினிகணேசன், பத்மினி, சத்யன், டி.எஸ்.பாலையா, பி.ஆர்.பந்துலு, பி.எஸ்.சரோஜா நடிப்பில் வெளியான படம் ‘ஆசை மகன்’. வி.தட்சிணாமூர்த்தி இசையில் பி.லீலா மற்றும் குழுவினருடன் இணைந்து வர்மா பாடிய இந்தப் பாடலை குயிலன் எழுதினார்.

பாயும் கண்களால்
யாரையும்
வெல்லுவேனே
பாரில் ரம்பை நானே
பாடும் புள்ளி மானே
பாயும் கண்களால்
யாரையும்
வெல்லுவேனே...

தனித்துப் பாடி வந்த வி.ஜே.வர்மா குழுவினருடன் இணைந்து பாடி வித்தியாசம் காட்டிய பாடலிது. இப்படம் மலையாளத்தில் ‘ஆஷா தீபம்’ என்ற பெயரில் வந்தது.
1955ம் ஆண்டு ‘ஜெயசிம்மா’ என்ற பெயரில் தெலுங்குப் படம் வெளியானது. டி.யோகானந்த் இயக்கத்தில் என்.டி.ராமாராவ், அஞ்சலிதேவி, வஹிதா ரஹ்மான்,எஸ்.வி.ரங்காராவ் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு டி.வி.ராஜு இசையமைத்தார். படம் 11 சென்டர்களில் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. 13 பாடல்கள் கொண்ட இப்படம்,  அதே பெயரில் தமிழிலும் வெளியானது.
இதில் வி.ஜே.வர்மா ‘ஆவதும் அவனாலே உலகம் அழிவதும் அவனாலே...’ என்ற பாடலைப் பாடினார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும் வி.ஜே.வர்மா குரல் கொடுத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

1954ம் ஆண்டு ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளியான படம் ‘துளி விஷம்’. கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன், கிருஷ்ணகுமாரி, பி.கே.சரஸ்வதி நடிப்பில் வெளியான இப்படத்திற்கு கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை இசையமைத்தார்.

அறியாமல் பெருகுது
இன்பந்தான் - என்னை
அறியாமல் பெருகுது
இன்பந்தான்...
வசந்தமும் தென்றலும்
இசைந்தது போலே
என்னை
அறியாமல் பெருகுது
இன்பந்தான்...

என்ற இந்த பாடல்தான் சிவாஜிக்கு வர்மா பாடியது. அவருடன் இணைந்து பாடியவர் டி.வி.ரத்னம். இதே படத்தில் ‘மண் மீதிலே இளம் பெண் மாணிக்கம் வீணே மரணம் எய்திடலாமா வீணே...’ என்ற சோகப்பாடலையும் வர்மா பாடியுள்ளார்.1956ம் ஆண்டு தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற ‘எடி நிஜம்’, தமிழில் அதே ஆண்டு ‘எது நிஜம்’ என்ற பெயரில் வெளியானது. வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய இப்படத்தில் நாகபூஷணம், சௌகார் ஜானகி, கும்முடி வெங்கடேஸ்வர ராவ், ரமணா ரெட்டி உள்பட பலர் நடித்திருந்தனர்.
மாஸ்டர் வேணு இசையில் கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாடல்களை எழுதினர். இதில் குமாபா எழுதிய பாடலை வர்மா சோகம் ததும்ப பாடினார்.

ஏனோ தனிமையில்
விம்மி விம்மியே
ஏங்கி அழுகிறாய்
பெண்ணே
இன்பமும் துன்பமும்
நெடுநாள் வாழ்வில்
இருக்காதம்மா
 கண்ணே...

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களிலே வி.ஜே.வர்மா பாடியுள்ளார். ஆனால், அவர் பாடிய அத்தனை பாடல்களும் தனித்துவமானவை. பார்வையற்ற இந்த கலைஞனின் பாடல்கள் சமூகத்தில் ஒளி பாய்ச்சியவை என்றால் அது மிகையில்லை.

ப.கவிதா குமார்