வேலை வாய்ப்பு அலுவலகத்தின் இன்றைய நிலை என்ன..?



தமிழ் நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் ஆண்டு தோறும் பத்தாவது, தொழிற் பழகுனர் ( I.T.I), பட்டயப் படிப்பு ( டிப்ளமோ), பன்னிரண்டாவது, கல்லூரிப் படிப்பு, இன்ஜினியரிங் படிப்பு, முதுகலை... என எந்த படிப்பை முடித்தாலும் உடனடியாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகிறோம். ஆனால், சமீப காலங்களில் அனைத்து துறைகளுக்கும் தனித் தனி தேர்வு மூலமாகவும்; தினக் கூலி, ஒப்பந்தக் கூலி ஆகிய கடைநிலைப் பணிகளுக்கு அந்தந்த அலுவல் நிர்வாகத்தின் கீழும் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

எனவே, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பணி இன்று என்னவாக இருக்கிறது... அதன் தேவை என்ன... போன்ற கேள்விகளை, சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் முன் வைத்தோம். ‘‘ஆரம்ப காலகட்டங்களில் வேலைவாய்ப்பு சம்பந்தமான விஷயங்கள் மற்றும் இந்தியா முழுவதும் பிளானிங் கமிஷன் செயல்பாடுகளில் ஏற்ற - இறக்கங்கள் இருந்தாலும் கூட மக்கள் நலன் சார்ந்து யோசித்தார்கள். ஆனால், நவீன தாராளமய கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு ‘எங்கு லாபம் கிடைக்கிறதோ அங்குதான் போவேனே தவிர நீ சொல்லும் இடங்களுக்கு போகமாட்டேன்’ என்று மூலதனம் போடுபவர்களுக்கு இசைவாக செயல்படும் சூழல் உருவானது.

இதனுடைய அடுத்த விளைவு, எல்லாவற்றையும் சந்தை அல்லது பொருளாதாரம் என்று பேச ஆரம்பித்தார்கள். இந்தியாவை முன்பு சொன்னது போல் ஒரு நாடு என்று பேசாமல், emerging economy, crowning economy, crown economy, developed economy என பேசியவர்கள், லேபரையும் மார்க்கெட்டிங் என்று பேச ஆரம்பித்தார்கள்.முன்பெல்லாம் படித்து வருபவர்களுக்கு அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாதபோது ஒழுங்குபடுத்தும் வேலையினை முன்னெடுத்தார்கள். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அவர்கள் கோரும் தகுதியுடையவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் குறிப்பிட்ட விகிதக் கணக்கின்படி பரிந்துரை செய்தனர்.

அதற்கு எதிரான வாதங்கள் எழுந்தபோது, எல்லோரும் குடிமகன்கள் என்கிற முறையில் ஒவ்வொருவருக்கான வாய்ப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. இதனால் வேலைவாய்ப்புகள் கொடுப்பதுடன், இட ஒதுக்கீட்டின் மூலம் எப்படி பங்கிடலாம் என்பதையும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உறுதிப்படுத்தின. ஆனால், இப்போது அதெல்லாம் இல்லாமல் போய்விட்டது.    

இந்த மாற்றம் என்னவாக மாறியுள்ளது என்றால் ஏதாவது குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்ந்தெடுப்பதாக இருக்கிறது. அதாவது வழக்கு ஏதும் வந்துவிடுமோ என்பதற்காகத்தான் இருக்கிறதே தவிர முறையான செயல்பாடுகள் இல்லை. அதையும் தாண்டி கடை நிலை ஊழியர்கள் வேலைக்கு அமர்த்துவது, தனியாரில் ஆட்கள் எடுக்கும்போது, ‘என்னிடம் இவ்வளவு ஆட்கள் இருக்கிறார்கள்’ என கொடுப்பதுமாக இருக்கிறது.

இது போக தொழில் நெறிகாட்டும் மையங்களாக வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாறியுள்ளன.எல்லா துறைகளுக்கும் தனித் தனி வாரியம் அமைத்து தேர்வு நடத்தப்படுவதால், இது வெறும் கணக்குக்கான துறையாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அலுவலகம் யார்க்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

கிராமப்புறங்களில் இருந்தவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருந்தது. இதன் செயல்பாடு குறைந்திருப்பதால் அவர்களில் பெரும்பாலானோர் கூலி வேலைக்காக நகர்ப் புறங்களுக்கு துரத்தப்பட்டுள்ளனர். அரசாங்க வேலைகளில் பல துறைகளுக்கு தனியார் முகாம்களும் அமைக்கின்றனர்.எனவே, எனக்கும் அதே கேள்விதான், வேலை வாய்ப்பு அலுவலகங்களின் செயல்பாடு என்னவாக மாறியுள்ளது... அது மீண்டும் பலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அலுவலகமாக மாறுமா...’’ என்கிற கேள்வியை முன்வைக்கும் கனகராஜ், இன்றைய சூழலில் வேலைகளின் தன்மை என்னவாக இருக்கிறது என்பது பற்றி விவரித்தார்.

‘‘ஆரம்ப காலகட்டங்களில் தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று சொல்வார்கள். இதனால் ஜி.டி.பி வளர்ச்சியும் எம்ப்லாய்மெண்ட் க்ரோத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. நவீன தாராளமய கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு இவ்விரண்டுக்கும் சம்பந்தமில்லா நிலையில் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவுக்குள் வருவதற்கு முன் ஜாப் செக்யூரிட்டியில் பென்சன் ஒரு விஷயமாக இருந்தது. எல்லோரும் அதை நோக்கி போனார்கள். இப்போது அரசே பென்சன் இல்லை என்று சொல்லிவிட்டது. இதற்கான போராட்டமும் குறைந்துவிட்டது. எனவே அரசு ஊதியத்தை விட தனியாரில் ஊதியம் அதிகமாக இருக்கும் போது அங்கு நகர ஆரம்பித்துவிட்டனர்.

அதே நேரத்தில் தொழிற்சாலை; தொழிற்சங்கம்; ஊதியம்... என அனைத்துக்கும் சட்டங்கள் இருந்தாலும், இது எதையும் வரக்கூடிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குத்தான் இருக்கிறது. அந்நிறுவனங்கள் இந்திய சட்டங்கள் எதையும் மதிப்பதில்லை. எனவே, சட்டங்களை எல்லாம் லேபர் போர்டாக மாற்றிவிட்டது அரசாங்கம். 

இது எல்லாம் சேர்ந்துதான் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அதிகாரமற்றதாகவும், அது துவங்கப்பட்ட நோக்கம் நிறைவேற்ற வாய்ப்பில்லாததாகவும் மாற்றப்பட்டிருக்கிறது...” என்றவரிடம், தொடர்ந்து வேலையின்றி இருந்து வருபவர்களுக்கு அவர்கள் பதிவுமூப்பு மற்றும் அவர்கள் குடும்ப வருவாய் அடிப்படையில் அரசு வழங்கி வரும் உதவித்தொகை போதுமானதா... இது தேவைதானா... என்ற கேள்வியை முன் வைத்தோம்.

‘‘சமீபத்தில் அமெரிக்கா 1.9 ட்ரில்லியன் டாலரும், ஐரோப்பிய யூனியன் 2.1 ட்ரில்லியன் டாலரும் வேலையில்லா கால நிவாரணத்திற்காக ஒதுக்கினார்கள். அமெரிக்காவில் வேலை இல்லாமல் இருந்தாலோ, ஏற்கனவே வேலை பார்த்து அந்த வேலையை இழந்திருந்தாலோ ஒரு வாரத்திற்கு 300 டாலர் என்று இன்றைக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சீனாவில் வேலை இழந்துவிட்டால் அந்த வேலைக்கான ஒட்டு மொத்த சம்பளத்தை, ஆறு மாத காலத்திற்கு கொடுக்கிறது. அந்த காலத்தில் வேறு வேலைக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.   
எனவே, ஒரு குடிமகன் எந்த வகையிலும் பசியால் அல்லது உணவுக்கு வாய்ப்பற்ற முறையில் இறப்பதை அனுமதிக்கக் கூடாது. அதனால்தான் சி.பி.எம் எப்போதும், அரசியல் அமைப்பில் ‘வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்கு’ என்று சொல்கிறது.  

வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கொடுக்கப்படும் தொகை சொற்பமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அமெரிக்காவை கை காட்டுகிறார்கள். ஆனால், அங்கு கொடுக்கிற அளவிற்கு ஏன் இந்தியாவில் கொடுக்க முன் வருவதில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை நீண்ட நாள் போராடிப் பெற்ற உரிமை இது. இருந்தாலும், இதை பதிவு செய்து வாங்குபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்...” என்றவர், சிறு குறு தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசினார்.     

‘‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ‘யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சென்னை ரிலீஸ்’ என்று விளம்பரங்கள் வந்திருந்தது. அதில், பத்துலட்சம் முதல் ஒரு கோடி வரை proprietorship இருக்கக் கூடிய நிறுவனங்கள்தான் அதிகம். சிறு குறு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களோ, ‘ஸ்டாக்கை எல்லாம் அடமானம் வைத்துதான் வங்கியில் கடன் வாங்கி இருக்கிறோம். ஸ்டாக் போகவில்லை. கொரோனா நேரத்தில் immovable propertyயை அடகு வைத்தோம். எங்களால் வட்டி கட்ட முடியவில்லை’ என்கிறார்கள்.  

இதில் வேலை பார்த்த ஆள் எங்கே..? இது ஏதும் அட்ரஸ் ஆகவில்லை. சமூகத்தில் இதற்கு ஒரு விழிப்பு தேவை இருக்கிறது. குறித்து வச்சுக்கோங்க. இது நீண்டால் மூன்று மாதம் கழித்து சிறு குறு உற்பத்தியாளர்கள் தற்கொலை என்பது அநேகமாக நடக்கப் போகிறது. சமீபத்தில் கோவையில் உள்ள சிறு குறு தொழில் கூட்டமைப்பினர் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் ஜி.எஸ்.டி பிரச்னை, ரா மெட்டீரியல் காஸ்ட், வங்கிக் கடன், பயிற்சி பெற்ற ஆட்கள் கிடைப்பதில்லை, எனக்கு போதுமான இன்ஃப்ரா ஸ்ட்ரக்ச்சர் இல்லை... என பேசுகிறார்கள். தமிழ் நாட்டில் 57 லட்சம் சிறு குறு தொழில் யூனிட்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதில் இருக்கக் கூடிய தொழிலாளிகள் எங்கு போனார்கள் என்கிற டேட்டா இருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில்.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டர் பதிவு ஒன்றில், ‘அசாமில் 5,20,000 சிறு குறு தொழிலுக்கு ரூ.2,430 கோடி உதவி செய்ததாக’ குறிப்பிட்டிருந்தார்.  

இங்கு ரூ.2,430 கோடி என்பது பெரிய தொகை என எல்லோர் சிந்தையிலும் இருக்கும். ஆனால், அதை 5,20,000 பேருக்கு வகுத்துப் பார்த்தால் ரூ.50,000தான் சராசரியாகக் கிடைக்கும். இதை வைத்து என்ன செய்ய முடியும்... ஒரு மாத சம்பளத்திற்கு வருமா..?வேலையில்லாத் திண்டாட்டம் என்பது தேர்தல் நேரங்களில் மட்டும் பேசுவதாக மாறியுள்ளது. மற்ற நேரங்களில் பேசினாலும் அது வெளியே வருவதில்லை. எனவே, இங்கிருக்கக் கூடிய அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள் இதை ஒரு பெரும் பிரச்னையாக எடுத்துக் கொண்டு அதற்கான தீர்வை நோக்கி நகரவேண்டும்...” என்கிறார் கனகராஜ்.

அன்னம் அரசு