ஒல்லியான வீடு!
அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் சென்று ஒல்லியான வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூடவழி சொல்லும். அந்தளவுக்கு பாஸ்டன் நகரம் முழுவதும் பிரபலமான வீடு இது. இந்த வீடு அமைந்திருக்கும் நிலம் இரண்டு சகோதரர்களுக்குச் சொந்தமானது. ஒரு சகோதரர் இராணுவத்துக்குச் சென்றிருந்த போது இன்னொரு சகோதரர் நிலத்தை ஆக்கிரமித்து இந்த வீட்டைக் கட்டியதாக உள்ளூர்வாசிகள் சொல்கின்றனர். தவிர, உலகின் பழமையான வீடுகளில் இதுவும் ஒன்று.
ஆம்; 1862ல் கட்டப்பட்ட இந்த வீட்டின் மொத்த பரப்பளவு 1,165 சதுர அடிகள். ஆனால், வீட்டின் அகலம் 10 அடிதான். நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த வீட்டிற்கு முன்பக்க கதவுகள் இல்லை. வீட்டுக்குள் நுழைய வேண்டுமானால் வலப்பக்கத்தில் இருக்கும் கதவு வழியாகத்தான் வர வேண்டும். இரண்டு படுக்கையறைகள், ஒரு குளியலறை, பாஸ்டன் துறைமுகத்தை நோக்கிய தளம் என்று இந்த ஒல்லியான வீட்டுக்குள் ஏகப்பட்ட அம்சங்கள் அலங்கரிக்கின்றன. கடந்த 150 வருடங்களில் இந்த ஒல்லியான வீடு பலருக்குச் சொந்தமாகி இப்போது 9 கோடி ரூபாய்க்கு விலைபோயிருக்கிறது.
த.சக்திவேல்
|