சூடு



அடுப்பில் காயப்போட்டிருந்த கரண்டிக் காம்பை துணியில் சுற்றி எடுத்தபடி வாசலுக்கு விரைந்து வந்தாள் அம்மு. கரண்டியின் வெப்பம் அவள் நாசியில்
இடறியது.“மணி... எங்கடா போனே..? கொஞ்சநேரத்துல ஆத்தாவுக்கு கோபம் கொறஞ்சிடும். உன்னைத் தூக்கி மடியில் வெச்சுக் கொஞ்சுவேன்னு நெனக்கிறியா... மவனே... ஒழுங்கா எம்முன்னால வா...” கத்தியபடி கையில் கரண்டிக்காம்புடன் ஒரு சுற்று சுழன்று அவனைத் தேடினாள். இன்றைக்கு அவள் தேடிக் கொண்டிருப்பது இது மூன்றாவது முறை.

சற்று தூரத்தில், செம்மண் ரோட்டில் புழுதிபறக்க ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை உற்று நோக்கினாள். அங்கு அவன் இல்லை.‘வேறெங்கு போயிருப்பான்?’ என்று யோசித்தாள் அம்மு.அடுத்த தெருவில் அவனது மாமன் வீடு இருக்கிறது. அங்கு போயிருப்பானோ? வீட்டின் உள்ளிருந்து மொபைல் போன் எடுத்து தம்பிக்கு போன் போட்டாள். ஆங்கிலத்திலும், இந்தியிலுமாக போனில் வந்த செய்தி என்றாலும் அவள் புரிந்து கொண்டாள். கையில் காசு இல்லாதவர்களுக்கு எல்லா மொழிகளும் புரியும்.

போனில் ஒரு பத்து ரூபாய் போட்டால் போதும். தம்பியிடம் பேசிவிடலாம். பணத்தைத் தேடித்தானே எல்லா ஓட்டமும் பாட்டமும். இதெல்லாம் அந்த மணிப்பயலுக்கு தெரியுமா..?

அவளுக்கே தெரியாமல் ஐம்பது ரூபாயைத் திருடி அவனது அப்பன் மாணிக்கம் கையில் கொடுத்திருக்கிறான்.

அம்மா வைத்திருந்த பணத்தை எடுத்து அப்பாவிடம் கொடுப்பது திருட்டு என்று ஆறு வயதே நிரம்பிய மணிக்கு  தெரிய நியாயமில்லை.என்றைக்குமில்லாமல் அன்றைக்கு மாணிக்கம்  மணியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சியபடி பேசிக்கொண்டிருந்தபோது மணிக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒன்று, அப்படியே சுவர் ஓரமாகத் தூக்கிப் போடுவான் அல்லது பின்பக்கத்தில் சொளேரென்று அடிப்பான்.‘‘எதுக்கு நயினா தூக்கறே...” என்று அலறிக்கொண்டே திமிறினான்.

அதிசயமாய், மாணிக்கம் அவனை உற்று நோக்கியபடி கொஞ்சினான். “சோக்காத்தான் இருக்கிற மணி... பயப்படாதே. இன்னிக்கு மட்டுமில்ல. எப்பவுமே அடிக்கமாட்டேன்...’’ என்று தன் தலையில் சத்தியம் செய்து காட்டினான்.இந்தக் கூத்தை எத்தனை தடவை பார்த்திருப்பாள் அம்மு. வாசல்படியில் சாய்ந்து நின்றுகொண்டு புருஷனை நோட்டம் விட்டாள். அழுக்கு  லுங்கி, பத்து நாட்களாக சவரம் செய்யாத மூஞ்சி. சிவந்து கிடக்கிற கண்கள். புளிச்சென்று வாயிலிருந்த எச்சிலை வெளியில் துப்பினாள்.

“என்னய்யா... புள்ளையப் போட்டு நோண்டிக்கிட்டிருக்க... போதை ஏறிடுச்சுன்னா இவன் உனக்கு பொறக்கவேயில்லைன்னு சொல்லுவியே?” என்றாள்.“இல்ல அம்மு...” என்று பல் தெரிய இளித்தான்.“இதப்பாரு... நீ என்னதான் இளிச்சாலும் நானும் கிடையாது... எங்கிட்ட பைசாவும் கிடையாது... எழுந்து போய் வேறெதாவது செய்...” மணியை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போனாள்.சமையலுக்கு, வாடிய நிலையில் கத்திரிக்காய்கள் மூங்கில் கூடையில் கிடந்தன. சந்தைக்கு போனால் வாடிய காய்களை தனியாகக் கூறு போட்டு விற்பார்கள். அவற்றுக்கு எடையும் கிடையாது. நல்லது கெட்டது பார்த்து பொறுக்கவும் கூடாது. அவளுக்கு அப்போது சிரிப்புதான் வரும். சமுதாயமே அவளைப் போன்றவர்களைக் கூறுகட்டி ஊரில் ஓரமாகத்தானே வைத்திருக்கிறது?

கத்திரிக்காய்களை நறுக்க ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் பின்னால் வந்து நின்றான் மாணிக்கம். அவனது உடல் நாற்றமும், எப்போதோ குடித்ததின் வாடையும் அவனது உரசலைவிட அதிமாகக் குமட்டியது. காசுக்காகத்தான் என்று தெரியும் அவளுக்கு.“சீ தள்ளிப்போ... புள்ளக்கி என்ன சமைச்சுப் போடறதுன்னு இருக்கேன். நாளைக்கி அரிசிப்பானையைக் கவுத்துப் போட்டு சமைக்கவேண்டியதுதான். நீ என்னடான்னா...”அதை அவன் கவனிக்கவேயில்லை. “அம்மு... ஒரு அம்பது ரூபாயாவது குடேன்... இந்த வாரக்கூலி வந்ததும் குடுத்திடறேன்...” என்றான் அவளது கைகளைப் பிடித்தபடி.

“யோவ்... கையை விடுய்யா... நீ வேலைக்கு சரியாகப் போறதில்லை. வாங்கற கூலிக்கு மேலே கைமாத்தா கடன் வாங்கற ஆளு நீ... போவியா எங்கிட்டாவது! உனக்குத்தான் புகையிலையை தண்ணில ஊறவெச்சு அதையும் விக்கற ஆளுங்களைத் தெரியுமே... அவங்ககிட்டே கடனுக்கு வாங்கிக் குடிச்சிக்கோ...” என்றாள்.அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் அப்படி ஒரு போதைக்கு அடிமைப்பட்ட கூட்டமும் இருந்தது. காசு உள்ளவர்களுக்கு டாஸ்மாக். மத்தவங்களுக்கு இந்த ‘ஆஞ்சி’ எனும் போதை நீர்.பேசாமல் அப்படியே நின்று கொண்டிருந்தவன் சமையல் மும்முரத்தில் எப்போது அங்கிருந்து போனான் என்பதைக்கூட கவனிக்கவில்லை.

அதற்கப்புறந்தான் அவள் அடுப்பின் அருகிலேயே டப்பாவிற்குள் ஒளித்து வைத்திருந்த ஒரேயொரு ஐம்பது ரூபாய் நோட்டைக் காணவில்லை என்று தெரிந்தது. அவள் ஒளித்து வைக்கிற இடமெல்லாம் மாணிக்கத்திற்கு தெரிய வாய்ப்பே இல்லை. வீட்டில் நாள் பூரா அடைந்து கிடப்பது அவளும் மணிப்பயலும்தான். அவன் ஒருத்தன் மட்டுமே அவளுடைய போக்குவரத்தெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறவன். கொஞ்ச நேரத்திற்கு முன்னால், மண்பானையில் தண்ணீர் குடிக்க உள்ளே வந்தவனும் அவன்தான். அப்படியானால் மணிதான்...

“அடேய் திருட்டுப் பயலே...” என்று கத்திக்கொண்டே வெளிவந்தவளைக் கண்டதும், மணிப்பயல் ஓடியே போய்விட்டான். பயந்து ஓடுகிறானென்றால் மாணிக்கம்தான் மணியை வைத்து திருடச் செய்திருக்கிறான்!“மணி... இந்த வயசுல திருட்டுத்தனமா..? திருடிட்டு ஓடறகால்ல நல்லா சூடு வைக்கிறேன்... வா... நீ எங்க போகமுடியும்... நானும் பாக்கறேன்...” என்று கையில் கிடைத்ததை விட்டு எறிந்தாள்.அப்போது கரண்டிக்காம்பை எடுத்து அடுப்புக்குள் சொருகி வைத்ததுதான். மதிய உணவிற்கு சாப்பிடவும் மணி வரவில்லை.

இதற்கிடையில், தம்பி வீட்டிலாவது மணி இருக்கிறானா என்று பார்க்க ஒரு நடை போயே வந்துவிட்டாள்.“அக்கா... சின்னப்பய... விவரம் தெரியாத பிள்ளை. இப்படி விரட்டி விட்டா எப்படி? மாமாதான் அவன்கிட்ட என்னத்தையோ பேசி அவனை எடுத்துக்கிட்டு வரச் சொல்லியிருக்காரு. அதுக்கு போய் சூடு போடறேன்னு சொல்லியிருக்கீங்க..?” என்று தம்பியும் சமாதானப்படுத்தினான்.

அங்கேயும் வரவில்லை. அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. பசியென்றாலே வயிற்றைக் குழைத்தபடி படுத்துக்கொள்கிற பயல். இவ்வளவு நேரம் ஆகியும்கூட சாப்பிட வராமல் எப்படி சமாளிக்கிறான் என்று ஆச்சரியமாக இருந்தது. அவனது வயதை ஒத்த நண்பர்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டானோ? திருட்டு, இப்போது பிச்சை வேறு.‘அதுக்கும் சேர்த்து இருக்கு அவனுக்கு’ என்று கருவிக்கொண்டாள்.

காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததினால் அவளுக்கு பசி வயிற்றைக் கிள்ளிற்று. வடித்த சோற்றிலிருந்து ஒரு கவளமாவது உருட்டி உள்ளே போட்டால்தான் வயிற்றினுள் உருளும் காலிப்பானைகளின் சப்தம் அடங்கும். ஆனால், மணி முதலில் வரட்டும்.

“மணிப்பயலே... நீ சாப்பிடாம எங்கே கிடக்கிறேன்னு தெரியல... எனக்கு மட்டும் சாப்பாடு எப்படி எறங்கும்...” என மனசு விம்மியது.மறுபடியும் வாசலில் போய் நின்றாள். பழைய சாமான்களுக்கு பேரீச்சம்பழம் என்றபடி வண்டி தள்ளிக்கொண்டு போகிறவரிடமும் குடிநீர் பீப்பாயை மாட்டுவண்டியில் எடுத்துக் கொண்டு வீடுவீடாக விற்கிற பாயிடமும் சொல்லி வைத்தாள்.

பசியில் கண்ணைச் சொருகியது தூக்கம். வாசல் நிலைப்படியைத் தலையணையாக வைத்தபடி படுத்தாள். யார் வந்தாலும் அவளைத் தாண்டாமல் உள்ளே நுழையமுடியாது. வந்தால், அப்போது பார்த்துக் கொள்ளலாம்.அவளது இமைகள் மெல்ல திறந்து மூடியபடி அரைத்தூக்கத்திலிருக்க, தலைமாட்டருகில் யாரோ நடக்கும் சப்தம்  கேட்டது. சூடான காற்றுடன் சாராய மணம் வேறு... சட்டென்று வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

மாணிக்கம்தான்... ஆனால், அவனது இடதுகையைப் பிடித்தபடி மணிப்பயல் வாயில் ஒரு சேமியா ஐஸ்குச்சியைச் சப்பியபடி நின்று கொண்டிருந்தான். அவளது பார்வையில் மீதி ஐசும் உருகிவிடும் போல இருந்தது.அவளது முகத்தையே பார்க்காமல் பேசினான் மாணிக்கம். “மூணாவது தெருவுல வீட்டுத் திண்ணையில படுத்து தூங்கிட்டு இருந்தான். பார்த்து கூட்டியாந்தேன்... மூஞ்சி வாடியிருந்துதா... வர்ற வழியில குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்தேன்...” என்றபடி மணியை இறுகப் பிடித்திருந்த கையை விடுவித்தான்.

சட்டென்று மணியைப் பறித்துச் செல்பவள் போல், அம்மு அவனைத் தன்னிடம் இழுத்தாள்.“இனிமே உங்கப்பன் கேட்டான்னு காசைத் திருடியெடுத்து குடுப்பியா?” அவன் முதுகில் சுளீரென்று அடித்தாள். மணிக்கு ஒரு கணம் மூச்சு நின்று மீண்டது. அடித்த அதிர்ச்சியில் கையிலிருந்த குச்சி ஐஸ் தரையில் விழுந்து கரைய ஆரம்பித்தது. அதற்கும் சேர்த்து ஓவென்று அழ ஆரம்பித்தான் மணி.“அவனை ஏண்டி அடிக்கிறே... நீ காசு குடுக்கமாட்டேன்னு சொல்லிட்ட... என் ராசாவைக் கேட்டேன்... நம்ம வீட்டு காசை எடுத்து ஒரு குடும்பத் தலைவர்கிட்ட கொடுக்கிறதை எப்படி நீ திருட்டுன்னு சொல்லுவே...” என்று சொல்லி மாணிக்கம் அவளை அசிங்கமாகத் திட்டினான்.

அம்மு அவன் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. இன்றைக்கு மணிப்பயலுக்கு தண்டனை உறுதி. கெண்டைக்காலில் ஒரு சூடு இழுத்தால்தான் தெரியும்... எரிச்சல் உடனே மறக்காது... தழும்பும் மறையாது. அப்புறம் இனி எப்படி திருடத் தோன்றும்?கரகரவென்று அவனை இழுத்துக்கொண்டு  சமையல் அடுப்பு பக்கம் போனாள். மணி கால்களால் தரையில் தேய்த்தபடி அவளது வேகத்தை மட்டுப்படுத்தினான். “வேண்டாம்மா... வேண்டாம்மா...” என்றது அந்தப் பிஞ்சின் குரல்.கரண்டிக் காம்பு சொருகியபடி கிடக்க, அடுப்பு அப்போதும் கனன்று கொண்டிருந்தது. சுருணைத் துணியால் அதைச் சுற்றி கரண்டியைக் கையில் பிடித்தாள்.

மாணிக்கம் ஓடி வந்தான். “அடியே... அப்படி என்னடி அவன் மேல கோபம்? அம்பது ரூபாய்க்கு ஒரு சின்னப்புள்ளக்கி கொடுக்கிற தண்டனையா இது?” என்று அவளைத் தடுக்க வந்தான்.
“யோவ் நீ பேசாம இரு... திருட்டுத்தனமெல்லாம் இப்படித்தான் சில்லரையா ஆரம்பிக்கும்.

அப்புறம் வளர்ந்து வளர்ந்து இன்னொரு மாணிக்கமா, இன்னொரு அம்முவுக்குப் புருசனா போய் நிக்கும்... இதை இப்ப நிறுத்தலேன்னா எப்பவும் முடியாது...”மாணிக்கம் சட்டென்று மணியின் மற்றொரு கையைப் பிடித்து இழுத்தான். “அவனை விட்ரு... இனிமேல பண்ணமாட்டான். அவங்கிட்ட நானும் காசை எடுக்கச் சொல்ல மாட்டேன்...” “அதெல்லாம் கிடையாது. செஞ்ச தப்புக்கு இன்னிக்கு தண்டனை. நாளக்கி சாப்பாட்டுக்கு அரிசி வாங்க வெச்சிருந்த காசைத்தானே எடுத்து குடுத்திருக்கான்...’’ குனிந்து, கையில் இருந்த கரண்டிக் காம்பால்  மணியின் காலில் சூடு வைக்க முயன்றாள்.

மணி அழுதுகொண்டே அவள் பின்னாலே ஒடுங்கி நிற்க அவளால் எட்டி சூடு வைக்க இயலாது போனது. அவள் சுற்ற, அதே வேகத்தில் மணியும் பின்னாலேயே சுற்ற... மாணிக்கம் வேறு பிடித்து இழுக்க...அம்மு கையில் கரண்டியை உயர்த்திப் பிடித்தாள். ‘மாணிக்கம்தானே திருடச் சொன்னது. அவன்தானே வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு நாள் பூரா சும்மா கிடப்பது... அவளது வாழ்க்கையை நாசமாக்கியதும், இப்போது ஒன்றுமறியாத மகனைக் கெடுப்பதும் அவன்தானே...’ஒரு கணம்தான் யோசித்தாள். மறுகணம் அவளது கையிலிருந்த கரண்டியின் இலக்கு மாறியது.

ஆவென்று ஓலமிட்டபடி மாணிக்கம் பிடியை விடுவித்தான். அவனது கையில் அரை அடி நீளத்திற்கு தோல் வெந்திருந்தது. கையின் மேல் அடர்ந்திருந்த முடிகள் கருகிய நாற்றம் பரவியது.

“சண்டாளி... பாவி... கொலைகாரி... புருசனுக்கே சூடு வெக்கிறியா...’’ வலி தாங்கமாட்டாமல் அங்குமிங்குமாகப் பாய்ந்து கடைசியில் வாசலை நோக்கி ஓடினான்.பெற்ற பிள்ளைக்கு சூடு வைக்க இருந்தாளே... குழந்தையால் அதைத் தாங்கியிருக்கமுடியுமா? அம்மு அழுதுகொண்டே கரண்டியைத் தூக்கிப் போட்டாள்.பயத்தில் உறைந்து கிடந்த மணியைத் தன் பால் இழுத்தாள்.

“சரியான ஆளுக்குத்தான் சூடு விழுந்திருக்கு... சரிதானே மணி... சாப்பிடறயா செல்லம்... அம்மாவுக்கும் பசிக்குதுடா. வா சேர்ந்து சாப்பிடலாம். நாளக்கி உனக்கு குச்சி ஐஸ் நான் வாங்கித்தரேன்...” என்றபடி கேவிக் கேவி அழுது கொண்டிருந்த மணியைக் கட்டிக்கொண்டாள் அம்மு.

 - ஹெச்.என்.ஹரிஹரன்