இளையராஜாவின் குருநாதர்!
சித்தப்பா அடிக்கடி விரும்பிக் கேட்கும், ‘கட்டிக்கரும்பே கண்ணான ராணி...’ பாடல், இந்தியின் பிரபல இசையமைப்பாளரான நௌஷாத் அலி இசையமைத்த ‘தீதார்’ படத்தின் மெட்டைத் தழுவி 1952ம் ஆண்டு தமிழில் எடுக்கப்பட்ட ‘புயல்’ படத்தில் இடம் பெற்றது. இப்படத்திற்கு இசையமைத்த இரட்டையர்களில் ஒருவர், இசைஞானி இளையராஜாவின் குருநாதர். அவர் பெயர் பி.எஸ்.திவாகர்.
1948ம் ஆண்டு வெளியான ‘நிர்மலா’ மலையாளப் படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளரானார். மலையாளத்தில் பின்னணிக் குரல்கள் மூலம் பாடல்கள் ஒலித்த முதல் படம் என்ற பெருமை ‘நிர்மலா’விற்கு உண்டு. மலையாள சூப்பர் ஸ்டார் பிரேம்நசீர் மலையாளத்தில் 1952ம் ஆண்டு முதல் முதலாக நடித்த ‘மருமகள்’ படத்தின் இசையமைப்பாளரும் பி.எஸ்.திவாகர்தான்.
பியானோ மட்டுமின்றி மிகச்சிறந்த சாக்ஸபோன் கலைஞராகத் திகழ்ந்த பி.எஸ்.திவாகரிடம் இளையராஜா மட்டுமின்றி தமிழகத்தின் பல இசையமைப்பாளர்களும் இசை பயின்றிருக்கிறார்கள்.திருவனந்தபுரத்தில் பிறந்த பி.எஸ்.திவாகர், நாடகங்களின் மூலம் முதலில் நடிகராகத்தான் அறிமுகமானார். பின்பு நாடகங்களில் பாடகராக மாறினார். இதன்பின் திரையுலகில் நுழைந்தார்.
மலையாளத்தில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்த பி.எஸ்.திவாகர் தமிழ், கன்னடம் மற்றும் சிங்கள மொழி படங்களில் இசையமைத்துள்ளார். தமிழில் நாம் கேட்டு ரசித்த பல பல சூப்பர்ஹிட் பாடல்களுக்கு இசை வழங்கியவர் பி.எஸ்.திவாகர் என்றால் ஆச்சரியமடைவீர்கள்.
1952ம் ஆண்டு பிரேம் நசீர், பி.எஸ்.சரோஜா நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘அச்சன்’, தமிழில் 1953ம் ஆண்டு ‘தந்தை’ என்ற பெயரில் எம்.ஆர்.எஸ். மணி இயக்கத்தில் வெளியானது. இதிலும் பிரேம் நசீரும், சரோஜாவும்தான் நடித்தனர். இப்படத்தில் கம்பதாசன் எழுதிய புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றது.
இளவேனில் சந்திரிகையாய் இன்றும் என்றும் எந்தன் முன்னில் ஒளியாது ஒளி வீசும் கண்மணி...ஏ.எம்.ராஜா, பி.லீலா குரல்களில் ஒலித்த இந்த அற்புதமான பாடலுக்கு இசையூட்டியவர் பி.எஸ்.திவாகர்தான். இப்படத்தில் பி.லீலா தனித்துப் பாடிய, ‘பாராய் கலைமானின் கண்ணில் தாரையே...’ பாடல் பல இசைத் தளங்களில் ஜிக்கி பாடியதாகவே பதிவாகியுள்ளது. பி.லீலாவின் குரலில் வழிந்தோடும் இனிய சங்கீதம், 68 ஆண்டுகளுக்குப் பின்னும் ரசிக்கும் வகையில் உள்ளது. காரணம், பி.எஸ்.திவாகரின் இசை.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆரால் ‘முதலாளி’ என அழைக்கப்பட்ட சாண்டோ சின்னப்பா தேவர், தனது படங்களுக்கு கே.வி.மகாதேவனைத்தான் பெரும்பாலும் இசையமைக்க வைத்தார். எம்ஜிஆர் நடிக்காத படங்களை ‘தண்டாயுதபாணி பிலிம்ஸ்’ என்ற பெயரில் தேவர் தயாரித்தார். அவர் தயாரித்த பல படங்களுக்கு பி.எஸ்.திவாகர்தான் இசையமைத்தார்.
1965ம் ஆண்டு சின்னப்பா தேவர் கதை எழுதி தயாரித்த படம் ‘காட்டுராணி’. ஆரூர்தாஸ் வசனம் எழுத, தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம் இயக்கினார். கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதினார். எஸ்.ஏ.அசோகன் கதாநாயனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. கே.ஆர்.விஜயா, ஆர்.ஷீலா, கே.பாலாஜி, ஆர்.எஸ்.மனோகர், சி.எல்.ஆனந்தன் உள்பட பலர் நடித்தனர்.
இப்படத்தில் பி.எஸ்.திவாகர் இசையூட்டிய பாடல்கள் புகழ்பெற்றவை. கவிச்சக்கரவர்த்தி கம்பரால் புகழப்பட்ட ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே...’ என்ற வரிகளைக் கொண்டு கவியரசர் உவமை பொங்க எழுதிய இப்பாடலை பி.சுசீலா பாடினார்.
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே தோளுடன் தோள் சேர்த்து நிதமும் சுகம் பெறும் மரங்களிலே வாயுடன் வாய் சேர்த்து கொஞ்சி வாழ்ந்திடும் பறவைகளே ...
இயற்கை அழகை கே.ஆர்.விஜயா ரசித்துப் பாடுவது போன்று அமைக்கப்பட்ட இப்பாடலில் புல்லாங்குழல், வயலின், சாக்ஸபோன் கருவிகளின் இசை ஊர்வலத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அசோகன், கே.ஆர்.விஜயாவிற்கு புகழ்பெற்ற டூயட்டான ‘காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி...’ பாடலுக்கு பி.எஸ்.திவாகர் வழங்கிய ஜாஸ் இசை, பின்பு பல படங்களில் சுடப்பட்டது. இப்படத்தில் அக்கார்டியன், ஆர்கன், பியானோ போட்டி போட்டு இசையமைக்கப்பட்ட ‘சொல்லாத கதையொன்று சொன்னானடி...’ பாடல் பி.சுசீலாவின் குரலில் குற்றாலத்தில் குளித்த சுகத்தைத் தரும்.
1965ம் ஆண்டு தேவர் கதை எழுதி தயாரித்த படம் ‘தாயும் மகளும்’. எம்.ஏ. திருமுகம் இயக்கத்தில் எஸ்.ஏ. அசோகன், ஆதித்தன், கே. ஆர். விஜயா நடித்த இப்படத்தின் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுதினார். பி.எஸ்.திவாகர் இசையில் இந்தப் படத்தில்தான் முதன் முதலாக கே.ஜே.ஜேசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடினர்.
‘கையிலே ஒரு டை காலிலே ஒரு டை தலையிலே ஒரு டை மனசிலே ஒரு டை...’ என்று கேள்வி பதில் பாணி பாடலே, ‘மாத்தாடு மாத்தாடு மல்லிகே...’ பாடலுக்கு மூல ஊற்றாக இருந்திருக்கும்! ஏ.எல்.ராகவனை நினைவூட்டும் குரலுக்குச் சொந்தக்காரரான ஆதம் ஷா இப்படத்தில் ‘வெட்டட்டா தட்டட்டா...’ என்ற பாடலில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடியுள்ளார். ‘ம் ம் ம்...’ என்ற சொல்லைக் கொண்டு அவரை திவாகர் பாடகராகப் பயன்படுத்திய விதம் அபாரம்.
டிஎம்எஸ், பி.சுசீலா பாடிய புகழ்பெற்ற பாடலான - சித்திரையில் நிலவெடுத்து தேனாற்றில் ஊறவைத்து - என்ற காதல் கீதம் இப்படத்தில்தான் இடம் பெற்றது.
அதுவரை தேவர் படங்களில் டிஎம்எஸ், பி.சுசீலா மட்டுமே பாடி வந்தனர். அந்த டிரெண்டை தகர்த்த படம் ‘தாயும் மகளும்’தான். கே.ஜே.ஜேசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, ஆதம் ஷா போன்றோர் இப்படத்தில் பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.1967ம் ஆண்டு கதை எழுதி தயாரித்த ‘தெய்வத்திருமகள்’ படத்தை சின்னப்பா தேவரே இயக்கினார். எஸ்.ஏ.அசோகன், முத்துராமன், சந்திரகாந்தா, நளினி, நாகேஷ், மனோரமா உள்பட பலர் நடித்தனர். படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுதினார்.
அறுபடை வீடுகளைக் குறிக்கும் வகையில் கவியரசரால் எழுதப்பட்ட புகழ்பெற்ற பாடல், ‘அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா... உந்தன் அருள் வடிவைக் காண்பதுதான் எப்பையா...’ பி.எஸ்.திவாகர் இசையில் சொக்க வைக்கும் பக்தி கானம். சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘தட்டுக்கொண்டை போட்டுக்கிட்டு...’ பாடலில் நாகேஷும், மனோரமாவும் போடும் ஆட்டம் துள்ளல் வகை. தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை பாடலிது.
தனது படத்தின் எடிட்டரான எம்.ஜி.பாலுவை 1968ம் ஆண்டு ‘நேர்வழி’ படத்தின் மூலம் சின்னப்பா தேவர் இயக்குநராக்கினார். ஜெய்சங்கர் - வாணி அப்போது பிரபலமான ஜோடி. சந்திரகாந்தா, மேஜர் சுந்தர்ராஜன், விஜயலலிதா, நாகேஷ், மனோரமா மற்றும் பலர் நடித்த இப்படத்திற்கு நவீன இசைக்கருவிகள் இல்லாத காலத்திலேயே மிரட்சியூட்டும் வகையில் இசை வழங்கியுள்ளார் பி.எஸ்.திவாகர்.
குறிப்பாக, விஜயலலிதா ஆடும் இரண்டு பாடல்களைக் கேட்டுப்பாருங்கள். ‘ஈரெட்டு வயது நீ தொட்ட மனது...’, ‘மண் பிறக்கும் முன் பிறந்தது பெண்மை...’ என்ற இரண்டு பாடல்களையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியுள்ளார். இரண்டிலும் அவர் பாடிய விதமும், அதற்கு திவாகர் அமைத்த இசையும் கிளப் டான்ஸ் பாடலுக்கு இவ்வளவு மெனக்கெடலா என யோசிக்க வைக்கும்.
இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய ‘வாய்மையே வெல்லுமடா...’ பாடல் பலருக்கு நம்பிக்கை டானிக். ‘மஞ்சள் குங்குமம் முகத்திலே...’, ‘பட்டப்பகலில் வட்ட நிலவு...’ என்ற இரண்டு டூயட் பாடல்களும் சூப்பர் ஹிட் ரகங்கள். மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற பி.எஸ்.திவாகர் தமிழில் இசையமைத்த படங்களின் பாடல்கள் அத்தனையுமே புகழ்பெற்றவை.
ஆனால், இன்றளவும் ரேடியோவிலோ, தொலைக்காட்சியிலோ அவற்றைக் கேட்கும் போது பி.எஸ்.திவாகர்தான் அப்பாடல்களுக்கு இசையமைத்தார் என்பது எத்தனை இசை ரசிகர்களுக்குத் தெரியும்? கடைசியாக ‘புலி பெற்ற பிள்ளை’ படத்தில் பி.எஸ்.திவாகர் இசையமைத்தார். டிஎம்எஸ், பி.சுசீலா,எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் ஆகியோர் பாடிய அத்தனை பாடல்களும் ஹிட்.
இசையமைப்பாளர் பி.எஸ்.திவாகர் வேறு யாருமில்லை. நடிகரும், இயக்குநருமான ரமேஷ் கண்ணாவின் மாமனார்தான்! அவரது இரண்டாவது மகள் ஷோபாவைத்தான் ரமேஷ் கண்ணா திருமணம் செய்து கொண்டுள்ளார். ரமேஷ் கண்ணா தனது இரண்டாவது மகனுக்கு வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா? பிரஜீஸ் திவாகர்!
ப.கவிதா குமார்
|