திருமணத்துக்கு வந்த அப்பா சிலை!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கலாவதி. தொழில் அதிபரான செல்வம், 2012ம் ஆண்டு தன் 61வது வயதில் இறந்து விட்டார்.காலமாவதற்கு முன்பே தன் 3 மகள்களில் இருவருக்கு செல்வம் திருமணம் செய்துவிட்டார்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு செல்வத்தின் கடைசி மகளான லெட்சுமிபிரபாவுக்கும், கிஷோருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. தன் திருமணத்தின்போது தந்தை இல்லையே என லெட்சுமிபிரபா வருத்தப்பட்டார்.
லண்டனில் டாக்டராக இருக்கும் லெட்சுமி பிரபாவின் மூத்த சகோதரியான புவனேஸ்வரி, தன் தங்கையின் வருத்தத்தை அறிந்தார். அதைப் போக்க தன் கணவர் கார்த்திக்குடன் இணைந்து ஒரு காரியத்தைச் செய்தார்.அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. யெஸ். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் தன் தந்தை செல்வத்தின் உருவத்தை சிலையாகச் செய்யும்படி புவனேஸ்வரி ஆர்டர் கொடுத்தார்.
ரூ.6 லட்சம் செலவில் சிலிக்கான் மற்றும் ரப்பரால் உருவான செல்வத்தின் சிலை, பட்டுக்கோட்டையில் நடந்த லெட்சுமிபிரபாவின் திருமணத்துக்கு சர்ப்ரைசாக வந்து சேர்ந்தது!திருமண வரவேற்பு விழாவின்போது மணமக்கள் முன்பாக தன் தந்தையின் முழு உருவச் சிலையை புவனேஸ்வரி திடீரென்று மேடைக்குக் கொண்டு வந்து தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்!நெகிழ்ச்சியான இந்த சம்பவம்தான் டாக் ஆஃப் த டவுன்!
நிரஞ்சனா
|