இந்திய சமையலறைகள் பெண்களுக்கு சிறையாக இருக்கின்றன! ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ இயக்குநர் Open Talk



சமீபத்தில் ‘நீ ஸ்ட்ரீம்’ என்கிற ஓடிடி தளத்தில் வெளியான மலையாளத் திரைப்படம், ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தில் உள்ள எந்த கதாபாத்திரத்துக்கும் பெயர் கிடையாது. மாமனார், கணவன், மனைவி... என படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் அந்தந்த கேரக்டர்களில் தங்களை அடையாளப்படுத்தும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஜியோ பேபி.

ஒவ்வொரு பெண்ணின் கனவும் அடையாளமும் எப்படி வீட்டின் சமையலறையால் சிதைக்கப்படுகின்றன என்பதுதான் இப்படத்தின் மையம்.சர்வதேச அளவில் பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ள இந்த ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ மட்டுமல்ல, ஜியோ பேபியின் குறும்படங்களும் கூட பெண்களின் பிரச்னைகளைப் பேசும் காவியங்கள்தான்.    

‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ எப்படி உருவானது..?

திருமணத்திற்குப் பிறகு சமத்துவத்தின் அடிப்படையில் நிறைய வேலைகளை சமையல் அறையில் மேற்கொண்டேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படத்தின் நாயகி போல் என் வாழ்விலும் விரக்தியை உணர்ந்தேன். அந்த அனுபவத்திற்குப் பிறகு, நம் பெண்களுடைய வாழ்க்கையில் சமையல் அறை என்பது ஒரு சிறை போல்தான் இருக்கிறது என்ற குற்ற உணர்வுக்கு ஆளானேன்.

அந்தச் சிறையில் குற்றவாளி யார்... என்று எனக்குள் எழுந்த கேள்வியோடு, வீட்டுச் சிறையில் இருக்கும் பெண்கள் என்னவாக இருக்கிறார்கள் என்று கொஞ்சம் பாருங்கள் என்ற நோக்கில் இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தேன். திருமணத்திற்கு முன் சமையல் அறைக்கு விருப்பத்தினாலும், எப்போதெல்லாம் சமைக்க வேண்டும் என்ற யோசனை  ஆசை வருகிறதோ அப்போதெல்லாம் சென்றிருப்போம். அது எப்போது வேண்டுமானாலும் நிற்கலாம்.

ஆனால், வீட்டில் கண்டிப்பாக சமைத்தே ஆக வேண்டும் என்பது பெண்களுக்கான வேலையாக மட்டுமே நம் நாட்டில் இருக்கிறது.ஆண், பெண் என இருவரும் படித்து வேலைக்குச் செல்லும் இன்றைய காலகட்டத்திலும் இப்படித்தான் இருக்கிறதா..?

ஆம். அதனால்தான் இந்தப் படம் வந்திருக்கிறது. அந்த மாதிரி இல்லை என்றால் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் இப்படம் பேசு பொருள் ஆகியிருக்காதே! ஒரு சில இடங்களில் வந்திருக்கும் மாற்றங்கள் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இது பாயிண்ட் ஜீரோ சதவிகிதம் கூட இல்லை என்பதுதான் நிஜம்.

பிரபல ஓடிடி தளங்களில் உங்கள் படம் வெளியாகாததற்கு என்ன காரணம்..?

தெரியவில்லை. ஆனால், ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ அங்கு புறக்கணிக்கப்பட்டது என்பது மட்டும் உண்மை. சபரிமலை ஐயப்பன் வழக்கில் வந்த தீர்ப்பு பெண்கள் வாழ்வில் முக்கியமான ஒன்று. அந்தத் தீர்ப்பினை நம் சமூகம் எப்படி பார்த்தது அல்லது சில அரசியல் கட்சிகள் எவ்வாறு அதைக் கையாண்டன என்பதை கண்கூடாகக் கண்டோம்.

அந்த நேரத்தில் அர்த்தமற்ற நிறையப் போராட்டங்கள் நடந்தன. அதில் பெண்கள் அங்கு போகக் கூடாது, வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். இந்தப் படத்தின் கருவோடு அதற்கும் தொடர்பு இருந்ததால் படத்தில் அதையும் பயன்படுத்தி னோம். ஒருவேளை பிரபல ஓடிடி தளங்கள் இப்படத்தை புறக்கணித்ததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.

படைப்பாளிகளுக்கான சுதந்திரம் நம் நாட்டில் எப்படி இருக்கிறது..?

பிரச்னையில்தான் இருக்கிறது... நிறைய படங்களுக்கு சென்சார் தாண்டி நீதிமன்றம் வரை செல்ல வேண்டியுள்ளது. எங்கள் படத்திற்கு அந்த மாதிரி இல்லையென்றாலும், இந்தியா முழுவதும் ஒரு படைப்பாளி தன் கருத்தின் மூலம் பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்கு சில சிக்கல்கள் இருப்பதை மறுக்க முடியாது. ஒரு கலைஞனுக்கு கிரியேட்டிவ் சுதந்திரம் ரொம்ப ரொம்ப முக்கியம். அதேவேளையில் அதை தவறாகவும் பயன்படுத்தக் கூடாது.

உங்கள் படைப்புகளில் பெண்களுக்கான குரல் அதிகம் ஒலிக்கிறதே…

பெண் நண்பர்கள் கொஞ்சம் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் என்னிடம் பகிர்கிறார்கள். வீட்டிற்கு உள்ளேயும்  வெளியேயும், வேலை செய்கிற இடங்கள் என எல்லா இடங்களிலும் பெண்களின் வாழ்க்கை கடினமாக இருக்கிறது.

நான் சமையல் அறையில் வேலை பார்த்தபின் இந்திய பெண்களின் வாழ்க்கை பற்றி எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. நிறைய பிரச்னைகள் அவர்களுக்கு இருக்கின்றன. அதில் ஒரு துளிதான் ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’. இதைவிட ஆழமான சில பகுதிகளும் அவர்கள் வாழ்வில் இருக்கின்றன.

திரைப்படங்கள் மூலம் சமூக மாற்றம் சாத்தியமாகுமா..?

படம் இந்திய அளவில் பேசும் பொருளாகியிருக்கிறது. ‘பெண்கள் நலன் சார்ந்து அரசும் இன்னும் பல விஷயங்களை முன்னெடுக்க வேண்டும்’ என்ற குரல் படம் பார்த்தபின் ஒலித்திருப்பது, ஒரு படைப்பாளியாக எனக்கு மகிழ்ச்சியே! அதேபோல் பெண்களைத் தாண்டி ஆண்களும் இதைக் கொண்டாடுவது பெரும் வெற்றி தானே! தனி நபரிடம் ஒரு மாற்றம் வருமா என்பது தெரியாது.

ஆனால், அரசு பல அறிவிப்புகளை பெண்கள் சார்ந்து அறிவித்திருந்தாலும் அவர்கள் வாழ்க்கை அப்படியேதான் இருக்கிறது. முதலில் வீட்டில் உள்ள ஆண்களிடத்தில் பெண்கள் பற்றிய ஒரு புரிதல் வரவேண்டும். அதன்பின் பள்ளி, சமூகம்… என சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் ஒரு மாற்றம் நிகழ வேண்டும்.

உங்களைப் பற்றி…

எட்டாம் வகுப்பு படிக்கும் போதே திரைப்படத் துறையின் மீது ஆசை வந்தது. சின்ன வயதிலிருந்தே நிறைய படங்கள் பார்ப்பேன். அதுதான் என்னை திரைப்படம் மீது அளவு கடந்த அன்பு செய்யத் தூண்டியதாக நினைக்கிறேன். ஆசை மட்டும் இருந்தது. எப்படி இந்தத் துறைக்கு வருவதென்று தெரியவில்லை. கல்லூரி படிக்கும்போது குறும்படம் இயக்கினேன். அது சில திரைப்பட விழாக்களுக்கு போகும் போது இன்னும் சினிமா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. ஃபிலிம் ஸ்டடிஸ் பண்ணினேன்.

அதன்பின் உதவி இயக்குநராக நான்கு படங்கள் வேலை பார்த்தபிறகு, இண்டிபெண்டன்ட் மூவியாக ‘2 பெண்குட்டிகள்’ படத்தினை என் முதல் படமாக இயக்கினேன். இதனைத் தொடர்ந்து ‘குஞ்சு தெய்வம்’, ‘கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்’க்கு அடுத்து ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ இயக்கியுள்ளேன். அடுத்த படம் குறித்து இனிமேல்தான் யோசிக்கவேண்டும்.

அன்னம் அரசு