இந்தக் கிராமத்தில் மதுவுக்கு தடா! சபாஷ் போட வைக்கும் மானாமதுரை



சிவகங்கை மாவட்டம் மானாமதுரையின் புறநகர் பகுதியான கன்னார்தெருவில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலையில் உள்ளது பனிக்கனேந்தல் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

விவசாயம், கால்நடை வளர்ப்பு என முக்கிய தொழிலில் ஈடுபட்டு வரும் இக்கிராமத்தினர், ‘ஊர் கட்டுப்பாடு’ என்னும் சமூக அக்கறை செயல்பாடுடையவர்களாக இருக்கின்றனர். விவசாயமே பிரதானமாக உள்ள இந்த கிராமத்தில் மது கொண்டாட்டங்கள், சண்டை சச்சரவுகள் அதிகம் இல்லாமல் அவரவர் குடும்பத் தேவைகளுக்காக அருகே உள்ள மானாமதுரைக்கு பல்வேறு வேலைகளுக்காகச் சென்று வருவது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக ஊர் எல்லையில் வெளியூர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் இப்பகுதியில் உள்ள கண்மாய், குளங்களில் அமர்ந்து மது அருந்துவது, சீட்டாடுவது என சமூக விரோதச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினர். கட்டுப்பாடான பனிக்கனேந்தல் கிராமத்துப் பெண்கள் மானாமதுரைக்குச் செல்லும் வழியில் ரோடுகளில் வெளியூர் நபர்கள் மது அருந்துவது குறித்து கிராமத்துப் பெரியவர்களிடம் கூடிப் பேசியுள்ளனர்.

வெளிநபர்கள் மது அருந்திவிட்டு வீசிச் செல்லும் காலி பாட்டில்களை கிராம இளைஞர்கள் அவ்வப்போது அகற்றியதுடன், இதுபோன்ற அத்துமீறும் இளைஞர்களை எச்சரித்தும் வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் கிராம இளைஞர்கள் ஒன்றுகூடி கிராமத்திற்குள், ஊர்எல்லையில் மது அருந்தும் இளைஞர்களைப் பிடித்து போலீசார் வசம் ஒப்படைப்பது என முடிவு செய்தனர்.

இதன்படி பகலிலும், மாலை நேரங்களிலும் கிராம இளைஞர்கள் டூவீலர்களில் ரோந்து செல்வது, மது அருந்த முயல்பவர்களை எச்சரிப்பது, மீறுபவர்களை போலீசாரிடம் பிடித்து ஒப்படைப்பது என்று தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.‘‘கிராமத்தின் எல்லையில் கடந்த சில மாதங்களாக ரோட்டோர மரநிழல்களில் வெளியூர் இளைஞர்கள் அதிகளவில் அமர்ந்து மது அருந்திவிட்டு ஆபாசமாகப் பேசுவது, தங்களுக்குள் சண்டையிடுவது என சேட்டைகளில் ஈடுபட்டு வந்தனர். பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை.

இவர்களைப் பார்த்து எங்கள் கிராம சிறுவர்களும் கெட்டுப்போக வாய்ப்புள்ளது என்பதால் கிராம இளைஞர்கள் முடிவு செய்து எச்சரிக்கைப் பலகை அமைத்துள்ளோம். மீறுபவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளோம்...’’ என்கிறார் பனிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலரான துரை.

‘‘எங்கள் கிராமத்தில் இருந்து சிவகங்கை, மானாமதுரை என வெளியூர்களுக்குச் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரியில் படிக்கும் வயதுவந்த பெண் குழந்தைகள் மாலை, இரவு நேரங்களில் ஊர் திரும்புகின்றனர். கடந்த சில மாதங்களாக ஊர் எல்லையில் இளைஞர்கள் மது அருந்துவது, வேறுபல போதைப் பழக்கங்களால் தங்களுக்குள் சண்டையிடுவது என பிரச்னை செய்து வந்தனர். பெண்கள் பாதுகாப்பைக் கருதியும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாலும் கிராமத்திற்குள்ளும், ஊர் எல்லையிலும் குடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

மீறுபவர்களைப் பிடித்து போலீசார் வசம் ஒப்படைக்கவும் முடிவு செய்து ஊர் எல்லையில் அறிவிப்பு செய்துள்ளோம். இந்த நடவடிக்கையால் இப்போது இப்பகுதியில் மது குடிப்பது குறைந்துள்ளது...’’ என்கிறார் பனிக்கனேந்தல் கிராமத்தின் முக்கிய பிரமுகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளருமான வீரபாண்டி.

மகேஷ்