ரத்த மகுடம்- 136
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
‘‘மன்னா...’’ அதிர்ச்சியுடன் அழைத்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ஆயிரம் இடிகள் ஒரு சேர இறங்குவதைக் காணும் மனிதன் எப்படி நிலைகுலைவானோ அப்படி அவர் நிலைகுலைந்திருந்தார். அவரது உடலும் உள்ளமும் எந்தளவுக்கு நடுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அடுத்து அவர் பேசிய வாக்கியங்கள் வெளிச்சமிட்டுக் காட்டின. ‘‘அப்படியானால் இதுநாள் வரை உங்கள் பணியாளராக... சாளுக்கிய தேசத்தின் போர் அமைச்சராக... நான் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரா..? அதனால் ஒரு பயனும் இல்லையா..?’’
 ‘‘ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் ஸ்ரீராமபுண்ய வல்லபரே..?’’ சாளுக்கிய மன்னரின் குரலில் பரிவு வழிந்தது. ‘‘ஒரு நாழிகைக்கு முன், மன்னனான எனக்கே பாடம் நடத்தினீர்கள்... சில கணங்களுக்கு முன் உற்சாகத்துடன் உங்களது திட்டங்கள் அனைத்தையும் விளக்கினீர்கள்... இப்பொழுது என்ன நடந்துவிட்டது என்று இப்படி விரக்தியின் உச்சியில் நிற்கிறீர்கள்..?’’
‘‘இன்னும் என்ன நடக்க வேண்டும் மன்னா...’’ சாளுக்கிய போர் அமைச்சரின் குரல் மட்டுமல்ல... உடலும் துவண்டுவிட்டதை அவரது உடல்மொழி பறைசாற்றியது. ‘‘வாழ்க்கையே நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையிலான ஊசலாட்டம்தானே? நம்பிக்கையுடன் ஒரு மனிதன் பேசுகிறான் என்றால் அடுத்த சில கணங்களிலேயே அவநம்பிக்கை அவனைச் சூழப் போகிறது என்பதுதானே விதி..?’’
‘‘இந்த விதி தட்சிண பாரதத்தின் மாபெரும் ராஜதந்திரியான தங்களுக்கும் பொருந்துமா..?’’ ‘‘இப்பிரபஞ்சத்திலுள்ள ஆறறிவு விலங்கான அனைத்து மனிதனுக்கும் பொருந்தும்...’’ ‘‘அப்படி பொருந்தும் விதிதான் இப்படி உங்களைப் பேச வைக்கிறதா..?’’ ‘‘ஆம் மன்னா...’’
‘‘விதியை மதியால் வெல்லலாம் என்பது உங்களுக்குத் தெரியாதா..?’’
‘‘தெரிந்ததால்தானே மதியான உங்கள் முன்னால் விதியான நான் மண்டியிட்டு இறைஞ்சுகிறேன்!’’
‘‘ராமா!’’ வாஞ்சையுடன் அழைத்தார் விக்கிரமாதித்தர்.அந்த ஒரு சொல்,ஸ்ரீராமபுண்ய வல்லபரை முழுமையாக நிமிர வைத்தது. அதுவரை அவரது அகத்தில் சூழ்ந்திருந்த பனி விலகியது. வெளிச்சம் பாய்ந்தது. அவரது கண்கள் ஒளிர்ந்தன.
பால்ய காலத்தில் தன் தோள் மீது கைபோட்டபடி விக்கிரமாதித்தர் நடந்த வாதாபியின் தெருக்கள் அனைத்தும் அவரது மனதில் நிழலாடின. அப்பொழுது வார்த்தைக்கு வார்த்தை ‘ராமா...’ என்றுதான் அழைப்பார். மாமாங்கத்துக்குப் பின்னர் இப்பொழுது அதே சொல்... சிலிர்த்தபடி நிமிர்ந்து தன் மன்னரைப் பார்த்தார்.‘‘விதியின் பிடியில் சிக்கி நான் மதிகெட்டிருந்தபோது என்னை நீ தேற்றினாய்... இப்பொழுது உன்னைத் தேற்ற என்னை அழைக்கிறாய்! கேள் ராமா! உனக்கு என்ன தெரிய வேண்டும்..?’’ ‘‘என் முயற்சிகள் அனைத்தும் வீணாகிறதா..?’’
‘‘இல்லை நண்பா!’’ விக்கிரமாதித்தரின் கருவிழிகளில் சிந்தனையின் ரேகைகள் படர்ந்தன. ‘‘என்னை ஆற்றுப்படுத்த இப்படிச் சொல்கிறீர்கள்... ஆனால், நடப்பவை அனைத்தும் என் கூற்றுக்குத்தானே வலு சேர்க்கிறது..?’’‘‘நடப்பவற்றை நாம் அனைவருமே அவரவர் கோணத்தில் இருந்துதானே அணுகுகிறோம்... புரிந்து கொள்கிறோம்..?’’
தலையசைத்து அதை ஆமோதித்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர். ‘‘அப்படி கரிகாலன் ஒன்றைப் புரிந்துகொள்கிறான்... நீங்கள் வேறொன்றைப் புரிந்துகொள்கிறீர்கள்... ஆனால், நடப்பவை மட்டும் நிகழ்வுகளாக மட்டுமே அரங்கேறி கரைகின்றன...’’ ‘‘...’’ ‘‘எந்த வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு... வினை ஏற்படுத்தும் தாக்கத்துக்கு ஏற்ப எதிர்வினை இருக்கும்... எப்படி நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் மனிதன் ஊசலாடியபடியே தன் வாழ்வைக் கழிக்கிறானோ அப்படி நிகழ்வின் தாக்கத்தால் பிறக்கும் வினைக்கும்... அந்த வினையின் விளைவால் ஏற்படும் எதிர்வினைக்கும் இடையில் மனிதனின் நடமாட்டம் இருக்கிறது. சொல்லப்போனால் அவனது அடுத்த கட்ட நகர்வை முடிவு செய்வதே இந்த வினைக்கும் எதிர்வினைக்கும் இடையிலான அல்லாட்டம்தான்...’’
விக்கிரமாதித்தரையே உற்றுப் பார்த்தார் ஸ்ரீராமபுண்ய வல்லபர்.‘‘நம்பிக்கையையும் அவநம்பிக்கையையும் கணித்து, அவை உதிர்ந்து விழும் இலைதான் என்று உணர்ந்து, தன்மீது அவற்றின் தாக்கம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்பவன் ஸ்படிகம் போல் மின்னி ஞானியாகிறான் அல்லவா..? அதைப்போலவே வினையையும் எதிர்வினையையும் கணித்து, அவற்றின் தாக்கம் தன்மீது படராதபடி பார்த்துக் கொள்பவனும்; நடப்பதில் இருந்து நடக்கப் போவதை ஊகிப்பவனும் ராஜதந்திரியாகிறான்!’’ ‘‘மன்னா...’’
‘‘இதுவரை கரிகாலன் வினையாற்றினான்... நீங்களும் நானும் அதற்கு எதிர்வினையாற்றினோம்... இனி நாம் வினை ஆற்றுவோம்... கரிகாலனை அதற்கு ஏற்ப எதிர்வினை புரிய வைப்போம்... அவனது எதிர்வினை எப்படியிருக்கும் என்று யோசிக்காமல் அவனது எதிர்வினை இப்படித்தான் இருக்க வேண்டும் என நாமே தீர்மானிப்போம்!’’ ‘‘...’’ ‘‘அனுபவங்கள் எப்பொழுதும் வீணாவதில்லை ஸ்ரீராமபுண்ய வல்லபரே...’’ முழுப்பெயருடன் தன்னை மன்னர் அழைத்ததும், சாளுக்கிய போர் அமைச்சர் புன்னகைத்தார். நட்பின் வாஞ்சையில் இருந்து மீண்டுவிட்டார். தன்னையும் மீட்கும் பொருட்டு ‘ராமா...’ என்று அழைப்பதைத் தவிர்த்துவிட்டார்... இனி இரு நண்பர்களுக்கு இடையிலான உரையாடல் நடைபெறப் போவதில்லை. மாறாக, ஒரு மன்னருக்கும் ஒரு போர் அமைச்சருக்கும் இடையிலான மந்திராலோசனையே அரங்கேறப் போகிறது... அதற்கு ஏற்ப தன்னை தயார்படுத்துகிறார்...
‘‘தண்ணீர் வரும் என்று நம்பி தோண்டுகிறோம்...’’ விக்கிரமாதித்தர் தொடர்ந்தார். ‘‘அங்கு நீருக்கு பதில் பாறைகள் இருந்தால் என்ன செய்வோம்..? நீருள்ள இடத்தைத் தேடி மறுபடியும் தோண்டுவோம். அதேநேரம் தோண்டிய இடத்தில் இருந்த பாறைகளை எடுத்து வீடு கட்ட பயன்படுத்துவோம் அல்லது கோட்டைச் சுவரை வலுப்படுத்துவோம்! மதியால் விதியை வெல்ல முற்படுபவனுக்கு விழலுக்கு இறைத்த நீர் என்று எதுவுமில்லை!
வாதாபியில் இருந்து நாம் புறப்பட்டது முதல் காஞ்சியை போரின்றி கைப்பற்றி ஆட்சி செய்யும் இக்கணம் வரை அள்ள அள்ளக் குறையாத அளவுக்கு அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம்... கரிகாலனால் நெய்யப்பட்ட நாம் பெற்ற அனுபவங்களை இழை இழையாகப் பிரித்து அதை வலுவான கயிறாக்குவோம்... அக்கயிற்றில் கரிகாலனைத் தொங்க விடுவோம்!’’ ‘‘மன்னா...’’
‘‘அப்படி நான் பிரித்து சில இழைகளை எடுத்திருக்கிறேன்!’’ ராமபுண்ய வல்லபர் கண்கள் விரிய விக்கிரமாதித்தரை ஏறிட்டார்.‘‘அடுத்து நடக்கப் போவதை நம்மிடம் முன்பே கரிகாலன் அறிவிக்கிறான்!’’ ‘‘அதாவது, இதைத்தான் நான் செய்யப் போகிறேன் என்பதை நம்மிடம் சொல்லிவிட்டே அவன் செய்கிறான் என்கிறீர்கள்!’’ ‘‘அதேதான் போர் அமைச்சரே! அந்த வகையில் சாளுக்கியர்களின் பொக்கிஷங்களை, தான் களவாடப் போவதாக இப்பெண் வழியாக நமக்கு அவன் செய்தி அனுப்பியிருக்கிறான்!’’
‘‘மன்னா... இப்பொழுது வந்திருப்பவள்...’’ ‘‘சிவகாமி அல்ல! அதை ஊர்ஜிதப்படுத்தவே நம் தலைமை மருத்துவரை மறைந்திருக்கச் சொன்னேன்...’’ ‘‘அப்படியானால், இப்படி நடக்கும் என கணித்தீர்களா..?’’ இமைகளைச் சிமிட்டினார் விக்கிரமாதித்தர்.
‘‘நீங்கள் பிரித்த மற்றொரு இழை!’’ சாளுக்கிய மன்னர் நகைத்தார். சாளுக்கிய போர் அமைச்சர் அந்தச் சிரிப்பில் கலந்துகொண்டார்.சரியாக அப்பொழுதுதான் திரைமறைவில் இருந்து தலைமை மருத்துவர் வெளிப்பட்டார்.‘‘மன்னா! நீங்கள் சந்தேகப்பட்டது சரி... தங்களைக் காண இந்த அறைக்கு இப்பொழுது வந்தவள் நம் ஒற்றர் படைத்தலைவியான சிவகாமி அல்ல! மூலிகைத் தைலத்தால் தன் முகத்தை சிவகாமி போலவே மாற்றிக்கொண்ட பல்லவ ஒற்றர் படையைச் சேர்ந்த நங்கை!’’விக்கிரமாதித்தரும் ராமபுண்ய வல்லபரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘உறுதியாகத் தெரியுமா..?’’ மன்னர் கேட்டார்.‘‘தெளிவுபடுத்திய பிறகே அறிவிக்கிறேன் மன்னா! வந்த பெண்ணுக்கு முதலில் மயக்க மருந்து கலந்த கஷாயத்தைக் கொடுத்தேன். அதைப் பருகியதும் அவள் சாய்ந்தாள். பொறுமையாகப் பரிசோதித்தேன்...’’‘‘அவளுக்கு நினைவு..?’’ ராமபுண்ய வல்லபர் இடைமறித்தார்.
‘‘திரும்ப இன்னும் ஐந்து நாழிகைகளாகும்...’’‘‘மருத்துவரே...’’ விக்கிரமாதித்தர் அழைத்தார். ‘‘மீண்டும் மூலிகைத் தைலத்தால் அவளை சிவகாமியாகவே மாற்றுங்கள்... கண் விழித்ததும் சிவகாமியிடம் உரையாடுவது போலவே அவளிடம் பேசுங்கள். மன்னருக்கு உன் மீது எந்த வருத்தமும் கோபமும் இல்லை... அவர் உன்னை ஒருபோதும் சந்தேகப்படவே இல்லை என்று சொல்லி அனுப்பி விடுங்கள்!’’‘‘உத்தரவு மன்னா...’’ தலைவணங்கிவிட்டு பழையபடி திரைமறைவுக்கு மருத்துவர் சென்றார்.
‘‘போர் அமைச்சரே...’’‘‘மன்னா...’’ ‘‘வாருங்கள்... சிறைக்குச் செல்வோம்!’’ ‘‘காஞ்சி பாதாளச் சிறைக்கா மன்னா..?’’ ‘‘இல்லை! கரிகாலன் நடத்தி வரும் நாடகத்தின் தொடக்கம் எங்கு ஆரம்பித்ததோ அங்கு... அந்தச் சிறைக்கு!’’ ‘‘நன்றி மருத்துவரே...’’
திரைச்சீலையை விலக்கியபடியே நுழைந்த சாளுக்கிய தேசத்தின் தலைமை மருத்துவரைப் பார்த்து சிவகாமி கையெடுத்துக் கும்பிட்டாள். அவரது கால்களைத் தொட்டு வணங்கினாள்.‘‘நான் கேட்டுக் கொண்டபடியே, வந்திருப்பவள் எனது தோற்றத்தில் வந்த நங்கை என்று சாளுக்கிய மன்னரிடம் சொல்லிவிட்டீர்கள்... உங்களது இந்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டேன்...’’‘‘நங்கைக்கு ஆபத்து..?’’ மருத்துவர் இழுத்தார்.
‘‘வராது மருத்துவரே... புலவர் தண்டியிடம் பாடம் பயின்றவள்... பல்லவ ஒற்றர் படையில் அங்கம் வகிப்பவள்... இப்பொழுது அவள் இருக்கும் இடத்தை சாளுக்கியர்களால் கண்டுபிடிக்கவே முடியாது... ஒருவேளை அவளுக்கு ஆபத்து வந்தாலும் அவள் அதை எதிர்கொள்வாள்!’’சாளுக்கிய தேசத்தின் தலைமை மருத்துவர் தலையசைத்தார்.
‘‘வருகிறேன் மருத்துவரே...’’புறப்பட்ட சிவகாமி நின்றாள். திரும்பி மருத்துவரைப் பார்த்தாள். ‘‘விரைவில் ஆயனச் சிற்பியின் மகளான என் பாட்டியைச் சந்திப்பேன்... அப்பொழுது நீங்கள் செய்த இந்த உதவி குறித்து அவரிடம் தெரிவிக்கிறேன்...’’ வெளியேறினாள். கன்னங்களில் கண்ணீர் வழிய மருத்துவர் அப்படியே நின்றார்!
‘‘கொற்றவைத் தாயே! சிவகாமி உயிருடன் திரும்ப மாட்டாள் என்று தெரிந்தே கரிகாலர் அவளை அனுப்பியிருக்கிறார்... அவர் மீதுள்ள காதல் காரணமாக சிவகாமியும் அங்கு சென்றிருக்கிறாள்... அவளது உயிருக்கு எந்த ஆபத்தும் நேரக் கூடாது தாயே... நீதான் காப்பாற்ற வேண்டும்!’’ நங்கை மனமுருகி பிரார்த்தித்தாள்.தன் பூஜையறையில் இருந்த மகாமேருவுக்கு அர்ச்சனை செய்து முடித்ததும் புலவர் தண்டி தன் கண்களை மூடினார். கரிகாலனின் புன்னகை தவழும் முகம் அவர் அகத்தை வியாபித்தது.
‘‘கரிகாலா! வரலாறு உன்னை நினைவுகூராது... ஆனால், இனி எழுதப்படும் பல்லவ, பாண்டிய, சோழ, சாளுக்கிய சரித்திரத்தின் பிரதிகள் அனைத்திலும் உன் நாடகத்தின் தாக்கமே எதிரொலிக்கும்! வரலாற்றைத் திருத்தி எழுதும் உன்னை என் மாணவனாகப் பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன்...’’புரவி செல்லும் திசையைக் கண்டதுமே ராமபுண்ய வல்லபருக்கு தாங்கள் செல்லும் இடம் எதுவெனப் புரிந்துவிட்டது.அதற்கு ஏற்பவே மலையடிவாரத்தில் புரவி நின்றது.
எங்கிருந்தோ வந்த சாளுக்கிய வீரன், விக்கிரமாதித்தரையும் அவரையும் வணங்கினான்.இருவரும் மலைக் குகைக்குள் நுழைந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் பல்லவ இளவரசி அங்கு மயக்கத்தில் இல்லை.மாறாக, பாறையில் கால் மேல் கால் போட்டபடி கம்பீரமாக அமர்ந்திருந்தாள். அத்துடன் ‘‘வாருங்கள் சாளுக்கிய மன்னரே!’’ என வரவேற்கவும் செய்தாள்!
(தொடரும்) கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|