அணையா அடுப்பு 37



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அன்பெனும் பெருவலை…
ஆண்டவனே அகப்படுவான்!

மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் வள்ளலாரின் உபதேசங்களைக் கேட்க பெரும் கூட்டம் கூடும்.வள்ளலாரின் பார்வையோ கூட்டத்தின் ஓரமாக வேலிப் பக்கமாகவே நிலை நிற்கும்.அங்கே ஓர் ஆடு, அத்தனை கூட்டத்துக்கும் மத்தியில் அமைதியாக நின்று வள்ளலார் பேசுவதையே உற்றுக் கேட்டுக் கொண்டிருக்கும்.அனேகமாக அது ஒரு கைவிடப்பட்ட ஆடாக இருந்திருக்கக் கூடும்.

காலில் அடிபட்டு சரியாக நடக்க முடியாமல் தாங்கித் தாங்கித்தான் அந்த ஆடு மெதுவாக நடக்கும்.அன்பர்கள் சித்தி வளாகத்தைச் சுற்றி வரும்போது, அதுவும் அவர்களோடு வலம் வரும்.வள்ளலாரின் ஜீவகாருண்யத்தை முழுமையாக அனுபவித்த ஆடு அது.தனக்கு வரும் உணவை, எப்போதுமே அந்த ஆட்டுடன் அவர் பகிர்ந்து கொள்ளத் தவறியதில்லை.

ஒவ்வொரு நாளும் உணவு எடுத்துக் கொள்ளும் வேளையில், அந்த ஆட்டை வள்ளலாரின் கண்கள் தேடும்.அந்த ஆடும் வள்ளலாரிடம் அன்பு பாராட்ட அவர் தேடும் வேளைகளில் அவர் பார்வையில் படுமாறு வந்து நிற்கும்.வள்ளலாரும், ஆடும் மவுனமாக ஒருவரை ஒருவர் பார்த்து நிற்பார்கள்.

இருவருக்குமான மவுனமொழியின் பொருளை யார் அறிவார்?
பின்னாட்களில் வள்ளலாரை பல்வேறு ஓவியர்கள், பலவிதமாக வரைந்தார்கள்.பின்னணியில் தருமச்சாலையும், சித்திவளாகமும் இருக்க வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி யாகத் தோன்றும் ஓவியங்களில் எல்லாம் ஓரத்தில் அந்த ஆடும் வரையப்பட்டிருக்கும்.150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஆடு, இன்றும் வள்ளலாரின் ஓவியங்களில் ஜீவித்திருக்கிறது.வள்ளலாரின் சீடர்களுக்கே கூட கிடைக்காத அரிய பெருமை, அந்த ஆட்டுக்குக் கிடைத்திருப்பது ஆச்சரியம்தான்.

பிரதிபலன்பாரா அன்பு மட்டுமே அந்த ஆட்டுக்கு இத்தகைய அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறது.வள்ளலாரின் அன்பு ஆட்டுக்கு மட்டுமா?

மீன்களுக்கும்தான்.அப்போது மேட்டுக்குப்பம் அருகில் மீனவர்கள் இருவர் வசித்தனர்.இருவரும் தினமும் காலையில் வலைகளை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்க அருகிலிருக்கும் ஏரிக்குச் செல்வார்கள்.அவர்கள் தினமும் சித்தி வளாகத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்.வள்ளலாருக்கு ‘வணக்கம்’ சொல்லிவிட்டுச் செல்வது அவர்களது வழக்கம்.அவர்களின் கையில் வலைகளைக் கண்டதுமே தான் அஞ்சியதாக வள்ளலார் சொல்வார்.

“துண்ணெனக் கொடியோர் பிறஉயிர் கொல்லத்
தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற
உயிர் பதைக்கக்
கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தைநின் திருவுளம்
அறியும்”
 என்று பாடினார்.

ஜீவகாருண்யம் பேசிய வள்ளலார், மீன்பிடித் தொழிலை கொலைத்தொழிலாகப் பார்த்ததில் ஆச்சரியமேதுமில்லை.
இருப்பினும் அந்த மீனவர்கள் மீதும் வள்ளலாருக்கு கருணை இயல்பாகவே இருந்தது.

அந்த மீனவர்களோடு தொடர்ந்து உரையாட ஆரம்பித்தார்.
“மீன்கள் பாவமில்லையா?”
“நாங்களும் பாவம்தானே அய்யா?”
“உங்கள் தொழிலால் மீன்கள் இறக்கின்றன. வேறு தொழில் செய்யலாமே?”

“எங்களுக்குத் தெரிந்தது இத்தொழில் மட்டும்தான். வேறு தொழில் தெரிந்தால் செய்ய மாட்டோமா?”

இவ்வாறாக தினம் தினம் சந்திக்கும் போதெல்லாம் அவர்களோடு உரையாடத் தவறியதில்லை வள்ளலார்.

ஒருமுறை கேட்டார்.“நீங்கள் வீசுவது சிறுவலையா? பெருவலையா?”“சிறுவலைதான் அய்யா. பெருவலை வீசும் மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பார்கள். நம் ஏரிகளில் அவ்வளவு பெரிய மீன்கள் இருப்பதில்லை...”தொடர்ந்து தங்கள் தொழில் குறித்து வள்ளலார் விசாரித்துக் கொண்டே இருந்ததால் தங்களுக்கு வேலைக்கு நேரமாகிறது; மேலும் அவரது ஜீவகாருண்ய கருத்துகள் தங்கள் தொழிலுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாலும் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தார்கள்.வள்ளலாரின் பார்வையில் படுவதைத் தவிர்க்க சித்தி வளாகத்தைச் சுற்றிக் கொண்டு
செல்லலானார்கள்.

இல்லையேல் வள்ளலார் சித்திவளாக முகப்பில் இல்லாத சமயமாகப் பார்த்து அப்பகுதியைக் கடந்தார்கள்.இவ்வாறாக சில நாட்கள் கடந்தன.திடீரென்று அவர்களது வலையில் மீன்கள் சிக்குவது குறையத் தொடங்கியது.போதாக்குறைக்கு அடிக்கடி வலைகளும் அறுபட்டு பெரும் நஷ்டத்துக்கு உள்ளானார்கள்.‘சாமி ஏதாவது மந்திரம் போட்டுட்டாரோ…’ என்று பாமர மீனவர்கள் கலங்கிப் போனார்கள்.
வள்ளலாரிடம் ஓடினார்கள்.

“அய்யா… எங்கள் வலையில் இப்போதெல்லாம் மீன்களே மாட்டுவதில்லை… போதாக்குறைக்கு வலைகளும் அறுந்து செலவு வைக்கிறது…”
“பெருவலை வீசுங்கள்…” என்றார் வள்ளலார்.

“பெருவலைக்கு செல
வாகுமே? நீங்கள்தான் தந்து உதவ வேண்டும்…”
வள்ளலார் புன்னகைத்தவாறே அவர்களுக்கு விளக்கினார்.

“நான் சொல்லும் பெருவலை என்பது மீன்களைப் பிடிப்பதற்கான வலை அல்ல. மீன்களை விட பெரிய விஷயங்களும் உலகினில் உள்ளன… உதாரணமாக அன்பு…”
மீனவர்களுக்குப் புரியவில்லை.

அன்பை வலைகளில் சிறைப்படுத்த முடியுமா?

அவ்வாறு ஒருவேளை பிடிக்க முடிந்தாலும், அதை கடைகளில் வைத்து மனிதர்களிடம் விற்று பொருள் ஈட்ட முடியுமா?
வள்ளலார், அவர்களுக்குப் புரியும் வகையில் பதிலளிக்கத் தொடங்கினார்.“நான் சொல்லும் பெருவலை என்பது, கயிறுகளாலும் நார்களாலும் நீங்கள் தயாரித்து நீர்நிலைகளில் வீசும் வலைகள் அல்ல.

அன்பால் நெய்த மனித மனமே நான் சொல்லும் பெருவலை. அதை வீசினால், அதற்குள் நீங்கள் வழிபடும் ஆண்டவனே கூட மாட்டுவான்…”

“சாமி… நீங்க பெரிய விஷயமெல்லாம் சொல்லுறீங்க… எங்களுக்குப் புரிபடலை… ஆனா, நாங்க பொழைக்க எதுவாவது வழி சொல்லுங்க…” என்றார்கள் மீனவர்கள்.அவர்களுக்கு வேறு வேலைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தார் வள்ளலார்.

அதன்பின்னர் மீன்பிடித் தொழிலை விட்டு, வள்ளலார் தமக்குப் பணித்த பணிகளைச் செய்தார்கள்.வள்ளலாரின் இந்த செயற்பாட்டில் நமக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து.ஆனால் வள்ளலார், தான் நம்பியதையே செய்தார் என்பது மட்டும் நூறு சதவிகிதம் உறுதி.

ஏனெனில் “என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும் அவனுக்கு நல்ல வார்த்தை சொல்வேன்.

மிரட்டியும் சொல்வேன். தெண்டனிட்டும் சொல்வேன். அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன். அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச்செய்து விடுவேன்” என்று அவரே சொல்லியிருக்கிறார்.

(அடுப்பு எரியும்)  

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்