யாசகி



இந்த இரவு என் வாழ்வில் அனுபவித்த மிக மோசமான இரவு. தூங்காத இரவு, மூச்சு விடுவதற்குக் கூட யோசித்த இரவு.
ஆண்ட்ராய்டு போனில் ஆயிரம் விஷயங்கள் இருந்தும் அதில் ஒரே ஒரு விஷயம் கூட இந்த இரவை செரிமானம் செய்யவில்லைவிடிவதற்கு பயப்படுகிறவன்தான் நான். ‘அய்யோ ஆறு மணி ஆயிருச்சா, விடிஞ்சிருச்சா’ன்னு கவலைப்படுகிறவன், பொணந் தூக்கம் தூங்குகிறவன், படுக்கையிலிருந்து எழுவதற்கு கஷ்டப்படுகிறவன்.

ஆனா, இன்னைக்கு மட்டும் சீக்கிரம் விடியணும், பூமி வேக வேகமா சுத்தணும்னு மனசுல கத்திட்டு இருக்கேன்.

வித்யா அழகாய் தூங்கிக் கொண்டிருந்தாள். ஒரு முறை முழித்துப் பார்த்தாள். “லூசாப்பா நீ... குழந்தை மாதிரி பண்ணிட்டு இருக்கே… தூங்கு...” என்றாள்.“தூக்கம் வரலை...”“வா வந்து கட்டிப் பிடிச்சுக்கோ. இல்லைன்னா பாப்பா பக்கத்துல படுத்து அவளைக் கட்டிப் பிடிச்சுக்கோ… வேணாம், அவ எழுந்துடப் போறா…” என்று சொல்லிக் கொண்டே தூங்கி விட்டாள்.

இரவின் ஒலிகள் பெண்கள் பேசும் ரகசியக்குரலாய் கேட்டன. கடிகார டிக் டிக், யார் வீட்டிலோ சுழல்கிற இலகுவற்ற மின்விசிறி யின் தொண்டைக் கரகரப்பு, தூரத்து ரயில் வண்டியின் தட தட, பஸ்ஸோ, லாரியோ வேகத்தடையைத் தாண்டுகிற தடால் தடால்.மெல்லிய ஜீரோ வாட்ஸ் ஒளியின் சாதுவான நிழல் சுவரில் விழுந்து, ஓவியங்கள் வரைந்த மாதிரி, சில முகங்களைக் காட்டியது. சில முகங்கள் அல்ல, ஒரே முகம். அந்த அம்மாவின் முகம்.
அந்த அம்மாவின் முகம்.

‘மன்னிச்சுடும்மா…’
‘மன்னிச்சுடும்மா…’ மனசு கிள்ளிற்று.

திடீர்னு வித்யா அந்தம்மா மாதிரியே இருக்காள், என் பொண்ணு அந்தம்மா மாதிரியே இருக்காள்... ஃபேனைப் பார்க்கிறேன். அந்தம்மாவின் முகம் மாதிரியே சுத்துது. சுவத்தைப் பார்க்கிறேன். மாட்டி வைச்சிருக்கிற ஒவ்வொரு படத்துலயும் அந்தம்மாவின் முகமே தெரியுது.

அந்தம்மா யாரு?அந்த வயசான அம்மாவுக்கு அப்பப்போ பிச்சை போட்டிருக்கேன்.இரயில்வே மேம்பாலத்தின் இறக்கத்தில் வலது புறம், லேடீஸ் காலேஜ் முன்னாடி அந்தப் பெரியம்மா உட்கார்ந்திருப்பாங்க… வட்டமான முகம், வெள்ளை நிறம், தெய்வீகக் கண்கள், எழுபது வயசுக்கும் மேலேதான் இருக்கும். மூணு மாசமாத்தான் பார்க்கிறேன்.

எத்தனை வருசமா பிச்சை எடுக்கிறாங்கனு தெரியல. ஆனா, பிச்சை எடுக்கிறவங்க மாதிரியே தெரியாது.
டிராஃபிக் ஜாம்ல நீண்ட நேரம் நின்னுட்டிருந்தப்பதான் அவங்களைப் பார்த்தேன். எங்க அம்மாவைப் பார்க்கிற மாதிரியே இருந்தது. அம்மா கொஞ்சம் மாநிறம், மற்றபடி அப்படியேதான் இருந்தாங்க…

இந்தம்மா ஏன் பிச்சை எடுக்கிறாங்க? இவங்க பிச்சை எடுக்க யார் காரணமா இருக்கும்… புருஷனா, பிள்ளைகளா? மருமகள்களா? இவங்க யாரும் இல்லையா? இவங்களுக்கு யாருமே இல்லையா? கடவுளை காரணம் சொல்லலாமா?

இந்த வழியாப் போகும் போதெல்லாம், இடது பக்க ஓரமா பைக்கை நிறுத்திட்டு, ரோட்டை கிராஸ் பண்ணிப் போய் அவங்க கையில பத்து ரூபாய தருவேன். பதிலுக்கு ஒரு புன்னகை காட்டுவாங்க. என் முகத்தைப் பார்த்து கண்களைப் பார்த்து அவங்க காட்டின புன்னகையில மனசு நிறைஞ்சி போகும்.

எங்க அம்மாவோட புன்னகையும் அப்படித்தான் இருக்கும். அம்மா இறந்து ஏழு வருஷம் ஆகுது. இந்தம்மாவைப் பார்க்கும்போது அம்மாவோட ஞாபகம் வரும். அம்மா, துளியூண்டு கஷ்டத்தையும் வெளியே காட்டிக்க மாட்டாங்க. கோபத்துல நான் திட்டினாலோ, அப்பா
திட்டினாலோ, தம்பிகள் திட்டினாலோ பதிலுக்கு திட்ட மாட்டாங்க, அதே புன்னகைதான் காட்டுவாங்க.

பிச்சையை தொழிலா செய்றவங்களோட குணம் வேற மாதிரியா இருக்கும். பிச்சை கேட்கிறதுக்கு முன்னே பெரிசா கும்பிடுவாங்க, பிச்சை வாங்கின பிறகு இன்னும் பெரிசா கும்பிடுவாங்க. காசு போடாம நகர்ந்தா சாபம் கொடுக்கிற மாதிரி பார்ப்பாங்க.ஆனா, இந்தம்மாவுக்கு புன்னகையைத் தவிர எதுவும் தெரியல… ஒரு அரசியல்வாதியின் தேர்ந்த குணம் தொழில் முறை பிச்சைக்காரனிடம் இருக்கும்… இந்தம்மாவுக்கு தொழில் தெரியல, காசு வாங்கறதுக்கு முன்னே ஒரு புன்னகை, வாங்கின பிறகு ஒரு புன்னகை, அவ்ளோதான்.

ரிட்டயர்மென்ட்டான நல்ல டீச்சரைப் பார்த்த மாதிரியும் இருக்கும். ஒண்ணாம் வகுப்புலயோ, ரெண்டாம் வகுப்புலயோ பார்த்த டீச்சரை நாற்பது வருஷம் கழிச்சிப் பார்த்தா எப்படி இருப்பாங்களோ, அப்படியும் இருந்தாங்க.இரயில்வே மேம்பாலம் வழியா தினமும் போகிற வேலை இல்லை. எப்போதோ ஒரு முறை போவேன். இந்த மூணு மாசத்துல அஞ்சு முறையோ, ஆறு முறையோ போயிருக்கேன். ஒவ்வொரு முறையும் அந்தம்மா கையில் பத்து ரூபா தந்துட்டு வந்திருக்கேன். வீட்டுக்கு வந்த பிறகும் அவங்க முகம் நினைவுல இருக்கும்.

நேத்தும் அப்படித்தான், பைக்கை லெஃப்ட் சைட்ல ஓரமா நிறுத்திட்டு, ரோட்டை கிராஸ் பண்ணி போனேன். அந்தம்மாவும் என்னைப் பார்த்துட்டாங்க. அந்த விலைமதிப்பில்லா புன்னகையோட பார்த்தாங்க. நான் பாக்கெட்டுல இருந்து பர்ஸை எடுத்த போதே அவங்க கையை நீட்ட ஆரம்பிச்சாங்க, அவங்க கிட்ட போய் நின்னு பர்ஸை பார்த்தா, பத்து ரூபா நோட்டோ, இருபது ரூபா நோட்டோ சுத்தமா இல்லை. பர்ஸ்ல இருந்ததெல்லாம் நூறு, ஐநூறு ரூபா நோட்டுகள்தான். பர்ஸை தடவித் தடவிப் பார்க்கிறேன்.

மனசு திக் திக்ன்னு எரியுது. அந்தம்மா கையை நீட்டிட்டே இருக்காங்க… என்ன சொல்றதுன்னே தெரியல, அவங்க முகத்தைப் பாக்க முடியல. “ஸாரிம்மா சேஞ்ச் இல்ல”ன்னு சொல்லி திரும்பிட்டேன். அவங்க முகத்தை திரும்பியே பார்க்கல. ரொம்ப ஏமாந்து இருப்பாங்களோ… காசு இல்லைன்னு தெரிஞ்சும் அவங்ககிட்ட அதே புன்னகை இருந்திருக்குமோ... அங்கிருந்த நாலஞ்சி கடைகள்ல நூறு ரூபாய்க்கு சில்லரை கேட்டேன். கிடைக்கல. அவசரமா ஒரு இடத்துக்கு போக வேண்டி இருந்ததால புறப்பட்டு வந்துட்டேன்.

ஆனா, எந்த வேலையும் ஓடல. ரொம்ப கஷ்டமா இருந்தது. நான் முதல்லயே பர்ஸை பார்த்திருக்கணும், பணம் கிடைக்கும்னு அந்தம்மா எவ்ளோ நம்பி இருப்பாங்க…அதுதான் தப்பா போச்சு. என் புத்தி கெட்டுப் போச்சு. நான் காசு போடுவேன்னு கையை நீட்டிய அந்தம்மாதான் கண்ணுக்கு முன்னாடி தெரியறாங்க… எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன், எவ்ளோ பெரிய ஏமாற்றம் அந்தம்மாவுக்கு.

மனசு சமாதானமே ஆகல… திரும்பவும் அந்த வழியா வரும்போது அவங்க இல்லை. தேடினேன். இரயில்வே கேட் பக்கத்துல இருந்த தெருவுக்குள்ளயும் சந்துக்குள்ளயும் நுழைஞ்சி நுழைஞ்சி தேடினேன். அந்தம்மாவை எங்கேயும் பார்க்க முடியல. என் வேதனைக்கு என்னாலயே சமாதானம் சொல்லிக்க முடியல. எல்லாருக்கும் இது ரொம்ப சின்ன விஷயமா தெரியும். எனக்கு பெரிய வேதனையா இருக்கு.

லைஃபுல கைக்கு எட்டி வாய்க்கு கிடைக்காத பல துக்கத்தை அனுபவிச்சிருக்கேன். ஒரு மார்க்குல டென்த் ஃபெயிலானது, விடிஞ்சா கல்யாணம்னா பொண்ணு ஓடிப் போனது, முதன் முதலா செல்ஃபோன் வாங்க எடுத்துட்டு போன பணத்தை பிக்பாக்கெட் திருடன்கிட்ட இழந்தது, ரெண்டு மணி நேரம் பேசிட்டே கார்ல வந்த அம்மா ஆஸ்பிட்டலுக்குள்ள நுழையும்போது செத்துப் போனது, அம்மாவின் சொத்தை தருவதாக அழைத்த மாமா கையெழுத்தெல்லாம் வாங்கினபிறகு, உங்கம்மாவுக்கு போட்ட நகைக்கு சரியா போச்சுன்னு கை விரிச்சதுன்னு என் லைஃப்லதான் எத்தனை ஏமாற்றம்...

ஏமாற்றம்னா எல்லாமே ஆசை வளர்த்து வளர்த்து கடைசி நிமிசத்துல ஏமாந்து போறதுதான். அதனாலதான் அந்தம்மாவை ஏமாத்தினதை என்னால தாங்க முடியல. கலங்கிட்டு இருக்கேன். தூக்கம் வராம தவிச்சிட்டிருக்கேன். பொழுது விடிஞ்சதும் முதல்ல போய் அந்தம்மாவுக்காக காலேஜ் முன்னால காத்திருந்து, அவங்க வந்ததும், கையில இருபது ரூபாயைத் தந்துட்டு வந்தாதான் மனசு ஆறும். அதுவரைக்கும் தூக்கம் வராது.

ஆறு மணிக்கு அழைக்கச் சொல்லி உத்தரவிட்ட அலாரத்தை ஐந்தரைக்கே நிப்பாட்டினேன். வித்யாவும், குழந்தையும் விடிகாலையின் கனவுக்குள் தூங்கிட்டிருந்தாங்க. எனக்கும் அப்படித்தான். விடிகாலையிலதான் எழவே முடியாம தூக்கம் வரும். அலாரம் அடிச்சதுமே வித்யாதான் எழுந்துக்குவா. அவளை எழ விடாம இறுக்கிப் பிடிச்சுக்குவேன். ‘விடுங்க, விடுங்க, இன்னைக்கு சண்டே இல்லை’ன்னு தள்ளிட்டு போவாள். இன்னைக்கு அவ நல்லா தூங்கிட்டிருந்தா. புடவை நிறைய இடத்துல விலகி இருந்தது. என் மனசுதான் விலகல.

பாத்ரூம் போய் பச்சைத் தண்ணில குளிச்சேன். பால் காய வைச்சி காபி கலந்துட்டுவந்து வித்யாவை எழுப்பினேன். என்னை இழுத்து, இறுக்கிப்பிடிச்சிக்கிட்டா ‘இன்னிக்கு சண்டே ஆபீஸர், கொஞ்சம் தூங்குங்க’ன்னு சொல்லி கட்டிப் பிடிச்சிக்கிட்டா. வித்யாவையும், குழந்தையையும் டிஸ்டர்ப் பண்ண விரும்பல. பத்து நிமிஷம் அவளோட படுத்திருந்தேன்.

தூங்கிட்டா.எழுந்து பைக்கை மெதுவா தள்ளினேன். சத்தம் கேட்காத மாதிரி கொஞ்சம் தூரம் தள்ளிட்டு போய், ஸ்டார்ட் பண்ணிட்டு போனேன். ஞாபகமா பர்ஸ்ல பணம் இருக்கான்னு பார்த்தேன். காலேஜ் முன்னாடி போய் நின்னுட்டேன். அந்தம்மா இன்னும் வரல. அவங்களுக்காக காத்திருந்தேன்.

ராத்திரி முழுக்க தூங்காம தவிச்ச மாதிரி, இந்தப் பகலும் ஆகிப் போச்சு. ஒவ்வொரு நிமிசமும் நாகப்பாம்பு மாதிரி கொத்த ஆரம்பிச்சது. வெயிலும் சேர்ந்து வறுத்தது. ஒன்பது, ஒன்பதரை, பத்து, பத்தரை, பதினொண்ணு, பதினொண்ணரை, பனிரெண்டு... டைம்  நொண்டி விளையாடியது.
ரொம்ப வெயிலா இருக்கு, அதனால இப்போ வரமாட்டாங்க, சாயங்காலம் வரலாம்னு வீட்டுக்கு வந்துட்டேன்.

வித்யா கோபமா இருந்தா.. லீவு நாள், வீட்ல இருப்பேன்னு நினைச்சிருப்பா. அப்புறம்தான் போனைக் கூட வீட்ல வைச்சிட்டு போனது தெரிஞ்சது, சாப்பிடச் சொன்னாள். எனக்கான காலை டிபன் முட்டை தோசை, உருளக்கிழங்கு குருமா அப்படியே இருப்பதை முகத்துக்கு நேரே காட்டினாள்.
“பசிக்கல, காபி மட்டும் தாயேன்...” என்றேன்.

“காலையில காபி போட்டிருக்கீங்க. பூனைக்கு வைச்சீங்களா?”
“காபி எனக்கு போடல, உனக்கு. நீ தூங்கிட்ட…”“சரி கர்ண மகாராஜா! கடன் கழிஞ்சுதா, பத்து ரூபாய்க்கு இருபது ரூபாயா போட்டுட்டு வந்துட்டீங்களா?”“எந்த மனுஷனும் கர்ணனாக முடியாது வித்யா! நான் கர்ணனா இருந்தா பர்ஸ்ல பத்து ரூபா தேடி இருக்க மாட்டேன். நூறு ரூபாயை போட்டிருப்பேன்…”“உன் பொண்டாட்டி சரியில்லப்பா. சம்பளப் பணத்தை பிடுங்கி வைச்சிக்கிட்டு பெட்ரோலுக்கு மட்டும் காசு தந்து அனுப்பணும்...” கிண்டலடிச்சா.

“இன்னைக்கு அந்தம்மா இல்லை. வருவாங்க, வருவாங்கன்னு காத்திருந்தேன், வரவேயில்ல… சாயங்காலம் மறுபடியும் போகணும்...”
“பாருப்பா, உன்னை செல்லமாத்தான் லூசுன்னு திட்டி இருக்கேன். கோவமா திட்ட வைச்சிறாதே… இன்னைக்கு சண்டே, காலேஜ் லீவு, அதனால வந்திருக்க மாட்டாங்க. நாளைக்கு வருவாங்க… அவங்களுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. நீ ஏன் ஃபீல் பண்ணிட்டு இருக்கே…”
“அப்போ இன்னைக்கு வரமாட்டாங்களா?”
“கண்டிப்பா வரமாட்டாங்க…”

எனக்கு நெஞ்சுல திக்குன்னு ஆச்சு. ஏன் மனசு அவ்ளோ கஷ்டமாகுதுன்னும் தெரியல. என்னை மாதிரியே அந்தம்மாவும் மனவேதனைல இருப்பாங்களா... பத்து ரூபா கிடைக்கும்னு ரொம்ப ஆசையா கையை நீட்டிட்டு, அது கிடைக்கலையேன்னு துக்கமா இருப்பாங்களா… அந்தம்மா பிச்சைக்காரியா இருந்தா நான் இவ்ளோ ஃபீல் பண்ண மாட்டேனோ…

மனசு திரும்பத் திரும்ப அதையே நினைச்சிட்டு, என்னைக் கொன்னுட்டு இருந்தது. அந்தக் காட்சி எனக்குள்ள ஓடிட்டே இருந்தது. நான் பர்ஸோட போறது, அந்தம்மா புன்னகையோட கையை நீட்டுறது, நான் ஏமாத்திட்டு திரும்பறது…

இன்னைக்கு இரவும் நத்தை மாதிரியே நகர்ந்துச்சு… பாவம் வித்யா. என்னைத் தூங்க வைக்கிறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு ஏமாந்து போனா. தூக்கம் வரல.திங்கக்கிழமையை விடிய வைக்க படாதபாடு பட்டேன். புத்தகம் படிக்கலாம்னு எடுத்தா, என்கிட்ட இருக்கிறதெல்லாம் ஓஷோ, பகவத்கீதை, மதர் தெரஸா, மகாத்மா காந்தி பற்றியதுதான். ஒருவேளை இந்தப் புத்தகம்தான் என் மனசை இப்படி குழந்தையா ஆக்கிருச்சா? அல்லது என் வாழ்க்கையா? புரியவே இல்லை.

ஆறு மணிக்கெல்லாம் எழுந்து ஓடினேன். அந்த காலேஜ் முன்னாடி நின்னுட்டேன். அந்தம்மா வந்ததும் ஒரு நூறு ரூபாயை கையில தந்துட்டு, வீட்டுக்கு ஓடணும், நல்லா சாப்பிடணும், ரெண்டு நாளைக்கு எழாம மலப்பாம்பு மாதிரி தூங்கணும்னு கணக்கு போட்டேன். ஒரு லாரி தூக்கம் கண்ணுக்குள்ள இருந்தது. நூறு ரூபாய் தரணும்னு இப்போ நினைக்கிறேன்...

அப்பவே தந்திருக்கலாம்.இன்னைக்கும் நேரம் நொண்டியாட்டம் போட்டது. பேட்டரி காலியானதும் கடிகார முள் ஒரே இடத்துல நொண்டுகிற மாதிரி நொண்டி யாட்டம் போட்டது.ஆயிரக்கணக்குல பெண் பிள்ளைகள் காலேஜுக்கு வந்தாங்க. ஒவ்வொருத்தர் முகத்திலயும் அந்தம்மாவைத் தேடினேன். இல்லை, அவங்க இல்லை. ரோட்ல எத்தனையோ ஆயிரம் ஜனங்கள்... பஸ்சும், காரும், ஆட்டோவும், பைக்கும் பறந்துட்டே இருந்தது. எல்லாத்திலும் ஜனங்கதான், ஜனங்களோட முகம்தான். அந்தம்மாவோட முகம்தான் இல்லை.

இன்னைக்கும் அவங்க வரலை.செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி... நாட்கள் ஓடிட்டே இருந்துச்சு. நானும் ஓடிட்டே இருந்தேன் அந்தம்மாவைத் தேடி.நான் நானாக இல்லை, மாறிட்டது தெரிந்தது. குழந்தை என்கிட்ட வரவே பயந்தாள்.எங்க பெரிய டாக்டரும் போன் பண்ணி, “என்னய்யா லீவ் போட்டுட்டு என்ன பண்ற..? உடம்புக்கு என்னாச்சு… ஹெல்த் இன்ஸ்பெக்டரா இருந்து ஹெல்த்தை கவனிச்சுக்க மாட்டியா”ன்னார்.
“கொதிக்க வைச்சு, ஆற வைச்ச தண்ணிதான் சார் குடிக்கிறேன். ஹெல்த்துக்கு எந்த பிரச்னையும் இல்லை சார், மனசுக்குதான் பிரச்னை. ஆற மாட்டேங்குது”னு சொன்னேன்.

தேவையில்லாம லீவ் போட்டதே இல்லை. அது டாக்டருக்கு தெரியும்.வித்யா என்னை நினைச்சி நினைச்சி அழுது புலம்பிட்டு இருந்தா. ‘‘ப்ளீஸ் வாப்பா... டாக்டரை பாக்கலாம். இல்லைன்னா மாத்திரை இருக்கு போட்டுக்க. தூங்கினா எல்லாம் சரியாயிடும்...’’“நான் சரியாகறதுக்கு அந்தம்மா வேணும்...”சவரம் பண்ணல, வேலைக்குப் போகல, குளிக்கல, தூங்கல, சாப்பிடல. அந்தம்மாவைத் தேடி அலைஞ்சேன். இடம் மாத்திட்டாங்களோன்னு கோயில், இரயில்வே ஸ்டேசன், வேற ஸ்கூல், காலேஜ் எல்லா இடத்துலயும் தேடினேன். அவங்க கிடைக்கல.

அந்தம்மா என்னை எதுக்கு ஏமாத்தறாங்க… எங்கம்மா திடீர்னு செத்துப் போன மாதிரி, இந்தம்மா ஏன் காணாம போயிட்டாங்க... இவங்களும் செத்துப் போயிட்டாங்களா? என்னை கடன்காரனாக்கிட்டு செத்துப் போயிட்டாங்களா?

தினமும் காலையில, காலையில மெஷின் மாதிரி தன்னால அந்த லேடீஸ் காலேஜுக்கு போயிடுவேன், அந்தம்மாவைத் தேடி.இன்னைக்கு ரோட்டைத் தாண்டும்போதே அந்தம்மா மாதிரி தெரிஞ்சாங்க. அந்தம்மாவேதான்னு நினைக்கிறேன். சந்தோசம் ஊத்தெடுத்துச்சு. ரெண்டு பக்கமும், என்ன வண்டி வருதுன்னே கவனிக்கல. வேகமா ஓடறேன். காதுல ஹாரன் சத்தம் மட்டும் கேட்குது.

பர்ஸ்ல இருந்து நூறு ரூபா எடுத்துட்டு ஓடறேன். இல்லை, ஐநூறுன்னு நினைக்கிறேன். அந்தம்மா கையேந்திட்டு உட்கார்ந்திருக்காங்க… எனக்கு கடவுள் பாவ விமோசனம் தர்றாருன்னு பூரிச்சிட்டு போறேன்.அந்தம்மாவோட முகத்தை மூடி இருந்த முந்தானை காத்துக்கு விலகுது. வித்யா முகம் தெரியுது. கண்ணைக் கசக்கிப் பார்க்கிறேன். அந்தம்மாவா? வித்யாவா?

“வித்யா…”வித்யா என் காலை கெட்டியா பிடிச்சிட்டு அழறா. “நான் பிச்சை கேட்கிறேங்க… மறுக்காம போடுங்க… நீங்க எனக்கு வேணும்... என் குழந்தைக்கு நீங்க வேணும்...உங்களுக்கே நீங்க வேணும்’’னு கதறி அழறா.என்னால அழுகையை நிப்பாட்ட முடியல.

நா.கோகிலன்