நியூஸ் சாண்ட்விச்
 வாம்மா வாமிகா! இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியருக்கு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அவர்கள், பிறந்த உடன் குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டவில்லை. தனிமனித உரிமை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மீடியாக்கள் அவர்களை பின்தொடரவில்லை.
‘என்னடா இது ஒரு பேச்சுக்கு சொன்னால் இப்படி நம்மை மீடியா இருட்டடிப்பு செய்கிறதே...’ என்று நினைத்தார்களோ என்னவோ, சில நாட்களுக்கு முன் அனுஷ்கா ஷர்மா தன் டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி, குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, மகளின் பெயர் வாமிகா என தெரிவித்துள்ளார்.
 போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்!
சேவை துறையில் இருப்பவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. ஒரு மருத்துவர், சுகாதாரப் பணியாளர், ஆஷா பணியாளர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு இந்தப் பணியை மேற்கொண்டது.
இதில் 5 வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் வழங்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது 12 குழந்தைகளும் பூரண நலமாக உள்ளனர்.
அதேவேளையில் கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவப் பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சரியாக இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்தபோது நடைபெற்றுள்ளது!
இந்தியர்களின் பிடியில் அமெரிக்கா!
வேறெப்படி தலைப்பு வைக்க?! அமெரிக்காவின் துணை அதிபராகியுள்ள கமலா ஹாரிஸ் உட்பட அந்நாட்டின் உயர் பொறுப்பில் நியமிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்களாக இப்பொழுது இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருப்பவர் பவ்யா லால். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் நாசாவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவர் நாசா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கு முன் வெள்ளை மாளிகையில் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை அலுவலகத்தில் பணிபுரிந்தார்.
காவலர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்!
ம்ஹும். இங்கல்ல. இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பவம் இது! கிழக்கு லண்டனில் உள்ள பெத்னல் க்ரீன் காவல் நிலைய அதிகாரிகள், தங்கள் காவல் நிலையத்தில் நிரந்தரமான ஒரு முடிதிருத்தும் நபரை பணிக்கு அமர்த்தியுள்ளனர். பிரச்னை இதுவல்ல. கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறி முடி திருத்துவதற்காக அப்பணியாளரை அழைத்து காவலர்கள், காவல் நிலையத்தில் முடி திருத்தம் செய்து கொண்டுள்ளனர். இதற்காக அக்காவல் நிலைய அதிகாரிகளுக்கு 200 யூரோ - அதாவது நம் ரூபாய்க்கு 20,000 - அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த முடி திருத்தும் நபர் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் ஒரு அதிகாரியின் தலைமுடியை வெட்ட 10 யூரோ வசூலித்துள்ளார். இப்படி யாக 31 அதிகாரிகள் அவரிடம் முடி வெட்டிக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
126 ஆண்டுகள் இந்து கோயில் பாகிஸ்தானில் திறப்பு!
யெஸ். பாகிஸ்தானில் சிந்து மாகாணம் ஐதராபாத் நகரில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில், புனரமைப்புக்குப்பின் பக்தர்கள் வழி பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.தவிர பாகிஸ்தான் முழுவதும் பல இந்து கோயில்கள் சமீபத்தில் புனரமைக்கப்பட்டுள்ளன. இப்போது பெஷாவரில் உள்ள இந்து கோயில்களையும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.அரசு புள்ளிவிவரத்தின்படி பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர்.
தொகுப்பு: காம்ஸ் பாப்பா
|