மணல் கொள்ளைக்காகத்தான் தாமிரபரணியில் அணை கட்டப்படுகிறதா..?



எடப்பாடிக்கு வேண்டப்பட்டவர்தான் இதில் ஈடுபடுகிறாரா..?

இயற்கையோடு இணைந்த வகையில் நீரைச் சேமித்து வைக்கத்தான் அணைகள் கட்டப்படுகின்றன. ஆனால், தாமிரபரணி ஆற்றை ஒட்டிய கிராமங்களில் கட்டப்பட்டிருக்கும் ஓர் அணை, மணல் மாஃபி யாக்களுக்காகவே கட்டப்பட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு மதுரை நீதிமன்றத்தைச் சுற்றி வருகிறது.வழக்கு தொடுத்தவர் தாமிரபரணி ஆற்றை ஒட்டிய அகரம் கிராமத் தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் எனும் விவசாயி.

இந்தக் குற்றச்சாட்டை ஆராய தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் முன்னாள் இணை இயக்குனரான கலைவாணனை அட்வகேட் கமிஷனராக நியமித்தது உயர்நீதிமன்றம்.தாமிரபரணி ஆற்றைச் சுற்றிய பகுதிகளில் அரிய வகை தாது மணலும் அணுசக்தியை உருவாக்கும் மணலும் கிடைப்பதாக சொல்லியிருக்கிறார் கலைவாணன். தவிர, அகரம் கிராமத்தில் அணை கட்டுவதற்காக தோண்டிய மணலைவிட மிதமாகவே மணல் அள்ளப்பட்டிருப்பதாக ஓர் அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார்.

இந்தக் கண்டுபிடிப்புக்கான பதிலை தமிழக அரசுத் துறைகள் மற்றும் மத்திய அரசின் அணுசக்தித் துறையிடம் கேட்டிருந்தது உயர்நீதிமன்றம்.வரலாறு காணாத புத்தாண்டு மழையில் சென்னை மட்டுமல்லாமல் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் தாமிரபரணியில் கட்டப்பட்டு, முடியும் தருவாயில் இருக்கும் புதிய அணையால் என்னென்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும், தாமிரபரணியில் கொள்ளை போன மணல் கட்டுமான மணலையும் தாண்டி தாது மணலாக இருந்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று இது தொடர்பான நபர்களிடம் பேசினோம்.

‘‘நான் ஒரு ஏழை விவசாயிங்க. ரொம்ப நாளா தாமிரபரணியில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இரவு நேரங்களில்தான் லாரி லாரியாக மணல் அள்ளுவார்கள். நீர்ப்பிடிப்புக்காகத்தான் இந்த அணையைக் கட்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், புதிய அணைக்கு 500 மீட்டர் தூரத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட ஓர் அணை இருக்கிறது. அந்த அணையால் ஒரு பயனும் இல்லை.

அப்படியிருக்க புதிய அணை எதற்கு? புதிய அணைக்கு மணல் வேண்டுமென்றால் அந்த மணல் இங்கேயே பயன்படவேண்டுமே. மணலை வெளியே கொண்டுபோனதால்தான் சந்தேகப்பட்டு இதுதொடர்பாக தனிப்பட்ட முறையில் வழக்கு தொடர்ந்தேன்...’’ என்று ஆரம்பித்த பாலகிருஷ்ணனுக்கு மணல் மாஃபியாக்களால் மிரட்டல் வந்திருக்கிறது.

‘‘வீட்டுக்கு வந்து எல்லாம் வழக்கை வாபஸ் வாங்க மிரட்டினாங்க. போலீஸ் பாதுகாப்பு கொடுக்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், பெயருக்கு போலீஸ் வந்துபோனார்கள். இதை கோர்ட்டில் சொன்னேன். இப்போது துப்பாக்கி ஏந்திய ஒரு போலீசைப் போட்டிருக்கிறார்கள்.
90 சதவீதம் முடிந்திருக்கும் புதிய அணையில் ஒரு மதகுகூட இல்லை.

இது என்ன செய்யும் என்றால், தாமிரபரணி ஆற்றைச் சுற்றிய கிராமங்களை வெள்ளத்தின்போது சூழ்ந்துகொள்ளும். அண்மையில் பெய்த மழையில்கூட எங்கள் கிராமமான அகரம் வெள்ளத்தால் சூழ்ந்தது. பயிர்களுக்கும் கால்நடைகளுக்கும் பலத்த சேதம்.

அணைகட்டுவதால் பல கிராமங்களுக்குக் குடிநீர் கிடைக்கும் என்று அரசு சொல்கிறது. ஆனால், பலத்த மழைக்காலங்களில் தாமிரபரணியைச் சுற்றிய கிராமங்களும், குடிநீருக்காக உள்ள உறைகிணறுகளும் நீரால் மூழ்குவதைத்தான் பார்க்கிறோம்.அண்மையில் மின் பழுதான ஒரு உறைகிணற்றைப் பழுது பார்க்கச் சென்ற ஒரு எலக்ட்ரீ ஷியன் நீரில் மூழ்கி இறந்துபோனார்.

ஆகவே, அணைகள் கட்டவேண்டுமென்றால் அந்த அணைகளின் நிறைகுறைகளைக் கணக்கிட்டு கட்டவேண்டும். ஆனால், இந்தப் புதிய அணை வெறும் மணல் அள்ளுவதற்கான சாக்காகவே தெரிகிறது.ஏற்கனவே உள்ள அணை கூட இதற்காகத்தான் கட்டப்பட்டது என்று நினைக்கிறேன்.

அதிலும் இந்த அணையைக் கட்டும் காண்ட்ராக்டரான சண்முகவேல் என்பவர் முதலமைச்சர் எடப்பாடிக்கு வேண்டப்பட்டவர் என்ற பேச்சும் இருக்கிறது. ஆகவே, மணல் மாஃபியாக்களுடன் அரசுக்கும் ஒரு புரிதல் இருப்பதாகவே எங்களுக்குத் தெரிகிறது...’’ என்று பாலகிருஷ்ணன் முடிக்க, அட்வகேட் கமிஷனர் கலைவாணன் தொடர்ந்தார்.

‘‘நான் ஏற்கனவே மதுரை கிரானைட் கொள்ளை பற்றிய விசாரணைகளில் இருந்திருக்கிறேன். பாலகிருஷ்ணன் தொடுத்த வழக்குக்கு முன்பு சுடலைக்கண்ணு என்பவர் தொடர்ந்திருந்த ஒரு வழக்கில் இருந்தேன். இந்த வழக்கிற்கும் பாலகிருஷ்ணனின் வழக்கிற்கும் ஒரு தொடர்பு இருந்தது பிறகுதான் தெரிந்தது.

உதாரணமாக, சுடலைக்கண்ணு நெல்லை பஸ் ஸ்டேண்ட் கட்டும் இடத்தில் மணல் அள்ளும் முறைகேடுகள் இருந்ததாக வழக்கு தொடுத்திருந்தார். பஸ் ஸ்டேண்டை ஆய்வு செய்தபோது அந்த இடத்தில் கிடைத்த மணலில் 30 சதவீதம் வரை கனிம மணல் இருப்பதாகத் தெரிந்தது.
சுடலைக்கண்ணுவும் தன் வழக்கில், இந்த பஸ் ஸ்டேண்ட் இடத்தில்தான் தாமிரபரணி ஆறு இருந்ததாகவும், பிறகு அது திசை மாறிச் சென்றிருப்ப
தாகவும் குறித்திருந்தார்.

இந்தக் கண்டுபிடிப்பைப் பார்த்த நீதிமன்றம் தாமிரபரணியையும் ஆய்வு செய்யச் சொன்னது.தாமிரபரணியில் உள்ள வண்ணாரப்பேட்டை என்னும் கிராமத்தில் என் புவியியல் சுரங்கத்துறை அனுபவத்தைக் கொண்டு ஆய்வு செய்தேன்.என்ன ஆச்சரியம்! தாமிரபரணியிலும் அதே பஸ் ஸ்டேண்டில் கிடைத்த முடிவே கிடைத்தது. அதனால், தாமிரபரணியில் எங்கு தோண்டினாலும் இதே நிலைதான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆனால், நான் கண்டுபிடித்த முடிவுகளில் அணுசக்திக்குத் தேவையான கனிமவளம் எவ்வளவு உள்ளது என்று சொல்லக்கூடிய வசதி மத்திய அரசின் அணுசக்தித் துறைக்குத்தான் உண்டு...’’ என்கிற கலைவாணன், தாமிரபரணி குறித்தும் அகரத்தில் மணல் முறைகேடாக அள்ளியது குறித்தும் விவரித்தார்.

‘‘தஞ்சை காவிரி டெல்டா பகுதிகளில் 20 முதல் 30 மீட்டர் உயரம் வரைக்கும் மணல் இருக்கும். ஆனால், தாமிரபரணி யில் வெறும் 4 அல்லது 5 மீட்டர் உயரத்துக்குத்தான் மணல் இருக்கும். இதுதான் கனிம வள மணலுக்கான அடிப்படை. இங்கிருக்கும் மணலைப் பார்த்தே அதில் என்ன உள்ளது என்று ஒரு நிபுணர் இலகுவாகச் சொல்லி விடலாம்.

அணை கட்டப்பட்டிருக்கும் பகுதியை அகரம் கிராமம் என்று சொல்கிறார்கள். அகரம் இந்த அணையின் ஒரு கரைதான். உண்மையில் அணை இருக்கும் பெரும்பாலான பகுதி மொறப்பநாடு கிராமம்.அணையில் பொக்லேன் போட்டு மண் அள்ளியதற்கான சான்றுகள் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. நீளம், அகலம், ஆழத்தை கணக்கிட்டால் சுமார் 1 லட்சம் கன மீட்டர் வரை மணல் அள்ளியிருப்பது தெரிகிறது.

ஆனால், பொதுப்பணித்துறை இதில் பாதிக்கும் குறைவாகவே கணக்குக் காட்டியிருக்கிறது. மணல் அள்ளுவதற்கு கலெக்டரின் அனுமதி வேண்டும். ஆனால், எந்த அனுமதியும் இல்லாமல் பொதுப்பணித்துறையின் கீழே இந்த மணல் கொள்ளை நடந்திருக்கிறது. மணல் அள்ள பல அரசு துறைகளிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும். ஆனால், அனுமதியில்லாமலே மணல் அள்ளியிருக்கிறார்கள்.

தாமிரபரணியில் நான் கண்டுபிடித்த மணலை திருவனந்தபுரத்தில் உள்ள அணுசக்தித் துறையினர் கொண்டு சென்றிருக்கிறார்கள். நான் கண்டுபிடித்த மணலில் கனிமவள தாதுக்கள் இருக்கிறது என அவர்களின் ஆய்வு முடிவுகள் வந்தால் இந்தப் பிரச்னைக்கு விடிவுகாலம் பிறக்கும்...’’ என்று கலைவாணன் முடிக்க, பாலகிருஷ்ணனின் வழக்குரைஞர் பேச்சிமுத்து நம்மிடம் பேசினார்.

‘‘இந்த அணையால் தாமிரபரணி ஆறு குட்டையாகத் தேங்கி சாக்கடையாக மாறியதுதான் மிச்சம். இதிலிருந்தே இந்த அணையின் நோக்கம் நிறைவேறவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.தூத்துக்குடி, நெல்லை மற்றும் அருப்புக்கோட்டையில் உள்ள பல கிராமங்களுக்கு இந்த ஆற்றிலிருந்துதான் விவசாயத்துக்கான நீரும் குடிநீரும் சென்றது. ஆனால், பெருத்த மழை பெய்யும்போது இந்த கிராமங்கள் நீரால் மூழ்குவதைத்தான் பார்க்கிறோம். அண்மையில் பெய்த மழைகூட பல கிராமங்களை வெள்ளத்தால் சூழ்ந்தது. மற்ற கிராமத்தினரும் எங்களுக்கு இந்த அணை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

உண்மையில் இந்த அணை கட்டும் பிசினஸ் மூலம் மட்டும் பல கோடி ரூபாய்கள் காண்டிராக்டர்களுக்கு கைமாறியுள்ளது தெரிகிறது. தாமிரபரணியில் காண்டிராக்ட் எடுத்திருக்கும் சண்முகவேலுக்குத் தமிழகம் முழுவதும் அணை முதற்கொண்டு பல கட்டுமானப் பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஒப்பந்தம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்த அணை கட்டுவதற்குக்கூட முதலமைச்சர் எடப்பாடியின் கீழ் வரும் பொதுப்பணித்துறையின் கீழ்தான் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.இந்த தகவல்கள் முழுவதுமாக வரும்போது தமிழகத்தில் அணை கட்டும் பிசினஸில் எவ்வளவு முறைகேடு உள்ளது அல்லது அணை கட்டுவதால் மணல் எவ்வளவு கொள்ளை போகிறது என்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்...’’ என்று பேச்சிமுத்து சொல்ல, ‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன், அணைகளில் இருக்கும் வித்தியாசங்களைப் பற்றியும், கனிம மணல்கள் பற்றியும் பேசினார்.

‘‘தடுப்பணைகள் என்றால் சிறிய அணைகளைச் சொல்லலாம். ஆனால், தாமிரபரணியில் கட்டப்பட்டிருப்பது பெரிய அணை. இன்றைய காலத்தில் பெரிய அணைகளுக்கு வேலை இல்லை என்பதை பல சம்பவங்கள் சுட்டிக்காட்டுகிறது.

உதாரணமாக, கேரளாவில் சில வருடங்களுக்கு முன்பு வெள்ளம் சூழ்ந்தது பெரிய அணைகளால்தான் என்று சுற்றுச்சூழல்வாதிகள் சொன்னார்கள். அதேபோல சிறிய தடுப்பணைகள் கட்டும்போது நமக்கு வேண்டியது மாதிரி நீரோட்டத்தை திருப்பி விட்டுக்கொள்ளலாம். பெரிய அணைகளால் இது முடியாது. பெரிய அணைகளால் நீரானது சில இடங்களை மூழ்கச் செய்வது போல மேலும் சில இடங்களை வறட்சிக்கு உட்படுத்திவிடும்.

அரிய மணல் என்னும்போது அது கேன்சர் போன்ற நோய்களுக்குக் காரணமாகிவிடும். ஒருவேளை தாமிரபரணியில் இருக்கும் மணலில் 1 சதவீதம் கதிர்வீச்சு உடைய மணல் என்று தெரிந்தாலே அந்த மணலை அள்ளுவதற்கான உரிமை அரசிடம்தான் இருக்கவேண்டும். இதை தனியார் போன்ற காண்டிராக்டர்களிடம் கொடுப்பது மணல் அள்ளுபவர்களுக்கும் அதைச் சுற்றிய பகுதியினருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

உதாரணமாக கதிர்வீச்சு உடைய மணல் நிலத்தில் இருக்கும் வரையில்தான் ஆபத்து இல்லாத மணலாக இருக்கும். ஒருவேளை அதை அள்ளுவதற்கான வேலைகளில் இறங்கினால் அந்தக் கதிர்வீச்சு உடைய மணல் தன் வேலையைக் காண்பிக்கும்...’’ என்று எச்சரிக்கையுடன் முடித்தார் வெற்றிச்செல்வன்.

டி.ரஞ்சித்