தடுப்பூசி குறித்து எதிர்மறையான கருத்து இருக்கிறதா..? அர்னால்டு சொல்வதைக் கேளுங்கள்!



தன் முகநூல் பக்கத்தில் அர்னால்டு ஸ்வார்ஸ்நெகர் எழுதியிருக்கும் நிலைத்தகவல் இது...

இது நான் யாரோ ஒருவரின் கமெண்ட்டில் சொன்னது. ஆனால், உங்களில் பலரும்கூட அறிய வேண்டியது என நினைக்கிறேன்.நான் எப்போதும் சொல்வது, நீங்கள் உங்கள் பலம் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். துறை சார்ந்த நிபுணர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

உங்களது புஜபலத்தை (Biceps) வலுவாக்க வேண்டும் என்றால் நான் சொல்வதை நீங்கள் கவனிக்கலாம். ஏனெனில் நான் இதை அறிவதற்காக என் மொத்த வாழ்வையுமே செலவிட்டிருக்கிறேன். அதனால்தான் எல்லா காலத்துக்குமான மிகச் சிறந்த பாடி பில்டர் என்று அழைக்கவும்படுகிறேன். இப்படி நாம் ஒவ்வொருவருமே வெவ்வேறு விதமான திறமையாளர்கள்தான்.

மருத்துவர் ஃபாசி, பிற வைரஸ் கிருமியியல் நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள் தங்கள் வாழ்வையே செலவழித்து நோய்கள் பற்றியும் தடுப்பூசிகள் பற்றியும் கற்றுக்கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் இது சார்ந்து என்ன சொல்கிறார்கள் என்றே நான் கேட்க விழைவேன். நீங்களும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துவேன்.

சில மணி நேரம் வீடியோக்களை பார்ப்பதால் நாம் யாருமே நிபுணர்களைவிட இதுசார்ந்து அறிந்துவிட இயலாது. இது மிக எளிமையானது: உங்கள் வீடு தீப்பிடித்தால் நீங்கள் யூ டியூப்பைத் தேடி ஓட மாட்டீர்கள். தீயணைப்புத் துறையைத்தான் நாடுவீர்கள். உங்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டால், உங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் க்ரூப்கள் என்ன சொல்கின்றனர் எனத் தேடிக் கொண்டிருக்க மாட்டீர்கள். ஆம்புலன்ஸை உடனடியாக அழைப்பீர்கள்.

ஒருவருக்குப் புற்றுநோய்; அதற்கான சிகிச்சை எடுக்காவிடில் இறக்க நேரிடும் என்று ஒன்பது மருத்துவர்கள் அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரே ஒரு மருத்துவர் மட்டும் புற்றுநோய் எல்லாம் எதுவும் செய்யாமலே போய்விடும் எனச் சொன்னால், பாதிக்கப்பட்டவர் எப்போதும் ஒன்பது மருத்துவர்கள் பக்கமே நிற்க முடிவெடுப்பார்.

உலகில் உள்ள எல்லா உண்மையான மருத்துவ நிபுணர்களும் தடுப்பூசி என்பது பாதுகாப்பானது என்கிறார்கள். மறுபுறம் மிகச் சிலர் ஃபேஸ்புக்கில் அது அப்படி அல்ல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.பொதுவாக, நீங்கள் நம்பும் மக்கள் வட்டம் சிறிதாக சிறிதாக நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். தவறான தகவல் என்னும் சிறிய துளையுள்ள முயல் வளைக்குள் நீங்கள் நுழைகிறீர்கள் என்பதன் எச்சரிக்கை அறிகுறி அது.

நிபுணர்களின் பேச்சைக் கேட்பது நம்மை பலவீனப்படுத்தும் என்று சிலர் சொல்கிறார்கள். அது பொய்யானது. நமக்கு எல்லாவற்றைப் பற்றியுமே தெரிந்திருக்காது என்ற எளிய உண்மையை ஏற்றுக்கொள்வது நம்மை வலுவாக்கவே செய்யும். நிபுணர்கள் அறிவுரை நமக்குத் தேவையில்லை; நாம் விரும்புகிறவற்றை உறுதி செய்யும் தகவல்களே முக்கியம் என நினைப்பதுதான் பலவீனமானது.

இளங்கோ கிருஷ்ணன்