2 குழந்தைகளின் தாய்...கெத்து காட்டுகிறார் பத்மஸ்ரீ அனிதா பால்துரை



2 குழந்தைகளின் தாய்...

13 ஆண்டுகள் இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டன்...

தேசிய, மாநில அளவில் 30க்கும் மேற்பட்ட பதக்கங்கள்...


சர்வதேச அளவில் 4 தங்கப் பதக்கங்கள் + 2 வெள்ளிப் பதக்கங்கள்...

கெத்து காட்டுகிறார் பத்மஸ்ரீ அனிதா பால்துரை


பொதுவாக இந்தியாவில் எந்த ஒரு விளையாட்டிலும் பெண்கள் அணி பற்றி ரசிகர்கள் அவ்வளவாக அறிந்திருக்கமாட்டார்கள். இதில், பெண்கள் கூடைப்பந்து அணியும் விதிவிலக்கல்ல. சுமார் 13 ஆண்டுகள் இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டனாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த அனிதா பால்துரை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆனால், இந்தாண்டு பத்மஸ்ரீ விருது மூலம் இந்திய ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார் அனிதா. ‘‘நீண்டகாலமா இந்த அங்கீ காரத்துக்காகத்தான் காத்திருந்தேன். இப்ப கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

சரியான நேரத்துல வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கலைனா, அடுத்த லெவலுக்குப் போக முடியாது. ஏன்னா, என்னைப் பார்த்தே நிறைய குழந்தைங்க, ‘இவ்வளவு விளையாடியும் அக்காவுக்கே எதுவும் கிடைக்கல. நாம் ஏன் பேஸ்கட்பால் விளையாட்டை தேர்ந்தெடுக்கணும்’னு கேட்டிருக்காங்க.

அதனால, தகுந்த நேரத்துல அங்கீகாரம் கிடைச்சா அந்தந்த விளையாட்டுகள் நல்லா வளரும். இதுக்காகவே நான் வைராக்கியமா விளையாடினேன். அப்பதான் கூடைப்பந்து விளையாட்டுக்கு நிறைய பெண் குழந்தைங்க வருவாங்கனு நினைச்சேன். இனி, இன்னும் உத்வேகமா என்னால செயல்பட முடியும்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் அனிதா பால்துரை.

‘‘பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைலதான். பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பக்கத்துல யாக்கோப்புரம்னு ஒரு கிராமம். அப்பா பால்துரை சென்னையில் தலைமை காவலரா வேலை பார்த்தார். அதனால, நாங்க இங்கே செட்டிலாகிட்டோம். ஆறாம் வகுப்பு வரை சாந்தோம் செயிண்ட் ஆன்டனி பள்ளியில் படிச்சேன்.

எனக்கு சின்ன வயசுல இருந்தே விளையாட்டுல ஆர்வம். அதெலடிக்கா இருந்தேன். உயரம் தாண்டுதல் நல்லா பண்ணுவேன். அப்ப பள்ளியில் பி.டி ஆசிரியரா சம்பத் சார் இருந்தார். அவர் கூடைப்பந்து விளையாட்டுக்கான பயிற்சியாளரும் கூட. நான் ஏற்கனவே மற்ற விளையாட்டுல இருந்ததால கூடைப்பந்துல சேரச் சொன்னார். அப்படிதான் கூடைப்பந்து மைதானம் பக்கம் போனேன். அப்புறம், ஆர்வமாகி தொடர்ந்து விளையாட ஆரம்பிச்சேன்.

எங்க குடும்பத்துல நான்தான் முதல் ஸ்போர்ட்ஸ்வுமன். அப்ப உறவுக்காரங்களும், சுற்றியுள்ளவங்களும் ‘விளையாடினா கருப்பாகிடுவா... ஆம்பளத்தனம் வந்திடும்’னு சொன்னாங்க. ஆனா, அப்பா என்னை விளையாட அனுமதிச்சார். அம்மாவும் உன் விருப்பப்படி செய்னு ஊக்கப்படுத்தினாங்க. எனக்கு ஒரு தங்கச்சி. அவளுக்கு விளையாட்டுல ஆர்வம் கிடையாது.

சம்பத் சார் தொடர்ந்து பயிற்சி கொடுத்தார். எங்க டீம் பள்ளி அளவுல சிறப்பா வந்துச்சு. நிறைய ஜெயிச்சோம். பதிமூணு வயசுல மினி நேஷனல்ஸ் ஆரம்பிச்சது. அப்படியே நான் மினி யூத், ஜூனியர், சீனியர் டீம்னு விளையாட ஆரம்பிச்சேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது சம்பத் சார் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றலாகிப் போனார். அப்ப நான் உட்பட எங்க டீம் மொத்தமும் அப்படியே அந்தப் பள்ளிக்கு மாறினோம். பயிற்சியும் தொடர்ந்துச்சு.

2000ல் எனக்கு இந்திய ஜூனியர் டீமில் ஆட வாய்ப்பு கிடைச்சது. அடுத்த ஆண்டே இந்திய சீனியர் அணியில் இடம் பிடிச்சிட்டேன். அப்ப எனக்கு 15 வயசுதான். ஜூனியர் லெவல்ல விளையாட்டைப் பார்த்து, சீனியர் கேம்ப்ல போட்டாங்க. அங்க சீனியர் வீராங்கனைகளுடன் பொருந்திப் போனதால சீனியர் டீம்ல எடுத்துக்கிட்டாங்க. ஏன்னா, இளம் வீராங்கனைகளும், அனுபவமுள்ள வீராங்கனைகளும் சேரும்போதுதான் டீம் வலுப்ெபறும்.

இப்ப 2017ல் விளையாடும்போது நான் எல்லோரையும்விட பத்து வயது மூத்தவளா இருந்தேன். அனுபவமுள்ள வீராங்கனையா அணியை வழிநடத்திச் செல்லக்கூடிய பக்குவம் இருந்துச்சு...’’ என்கிறவர், 19 வயதில் இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டனாகி இருக்கிறார். ‘‘சின்ன வயசுலயே இந்திய அணியின் கேப்டனாகிட்ேடன். அதேமாதிரி ஒன்பது சீனியர் ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள்ல கலந்துக்கிட்ட முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையும் எனக்கு கிடைச்சது.

இந்திய அணிக்காக விளையாடியதால 2003லேயே ரயில்வேயில் பணி நியமனம் பெற்றேன். பிறகு, 2006ம் ஆண்டு காமன்வெல்த் கேம்ஸ், 2009ல் ஆசிய இன்டர் கேம்ஸ், 2010ம் ஆண்டு ஆசியன் கேம்ஸ், ஆசியா சாம்பியன்ஷிப்னு எல்லாம் ஆடினேன்.

இதுல 2009ல் ஆசிய இன்டர் கேம்ஸ்ல வெள்ளிப் பதக்கம் வாங்கினோம். 2011ல் ஆசிய பீச் கேம்ஸ்ல தங்கப் பதக்கம் பெற்றோம். இது 3க்கு 3னு விளையாடுற விளையாட்டு. டீமுக்கு மூணு பேர்தான் விளையாடணும். அதேபோல மைதானத்தின் ஒரு பகுதியிலே விளையாடணும்.

அப்ப சீனாவை ஜெயிச்சோம். 2013ல் 3க்கு 3 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் நாம் தங்கப்பதக்கம் வாங்கினோம். எனக்கு சர்வதேச அளவுல நாலு தங்கப் பதக்கம், ரெண்டு வெள்ளிப் பதக்கம் கிடைச்சது. தவிர தேசிய, மாநில அளவுல 30க்கும் மேற்பட்ட பதக்கங்கள் பெற்றிருக்கேன்.

இதுக்கிடையில் பி.காம், எம்பிஏ படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடிச்சேன். திருமணமும் ஆனது. காதல் திருமணம். கணவர் கார்த்திக் பிரபாகரன் தலைமை காவலரா இருக்கார். ஒரே போலீஸ் குவார்ட்டர்ஸ்ல இருந்ததால பழக்கம். அப்பாவுக்குப் பிறகு கணவர்தான் நிறைய சப்போர்ட். ஏன்னா, பெண்களுக்கு நிறைய ஸ்டேஜஸ் இருக்கு. ஒவ்வொன்றையும் கடந்து வரணும். கல்யாணமாகி மூணே நாள்ல
இந்திய கேம்ப்புக்கு போயிட்டேன். அதுக்கு கணவர் கார்த்திக் அளித்த ஊக்கம் முக்கியமானது.

2014ல் பையன் பிறந்தான். அந்நேரம், ‘உன்னுடைய கோல் இன்னும் முடியல. தொடர்ந்து விளையாடு’னு சொன்னதும் கணவர்தான். எல்லா இடங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவே இருந்தேன். 2017ல் சீனியர் டீம்ல இருந்து விலகினேன். அதை அதிகாரபூர்வமா அறிவிக்கல. எனக்கு அப்ப உதவி பயிற்சியாளரா இருக்க சான்ஸ் கொடுத்தாங்க. அடுத்த ஆண்டு எனக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால அந்த ஆண்டு எதுவும் பண்ணல.

2019ல் விளையாடலாம்னு முடிவெடுத்து பயிற்சி எடுத்தேன். அப்ப ரயில்வே அணிக்காக மட்டும் விளையாடினேன். பிறகு, கொரோனா வந்ததால விளையாடல. நான் சேர்ந்தப்ப ஆசிய அளவுல இந்திய அணி 11வது இடத்துல இருந்தது. 2017ல் நான் வெளியே வரும்போது 5வது இடத்துக்கு முன்னேறியிருந்தோம். இது நல்ல வளர்ச்சி. சீனா, கொரியா, ஜப்பான்தான் முதல் மூணு இடங்கள்ல மாறி மாறி வரும்.

என் கேரியர் முடியிற நேரம் 5வது இடத்துக்கு வந்திட்டோம். என்னுடைய கனவு அரையிறுதிக்குப் போகணும்ங்கிறதுதான்...’’ என்கிற அனிதா இப்போது தென்னக ரயில்வேயின் விளையாட்டுப் பிரிவில் சீஃப் வெல்ஃபேர் இன்ஸ்பெக்டராக பணி செய்கிறார். ‘‘இந்தியாவுல ரயில்வேயில் மட்டுமே பெண்கள் கூடைப்பந்து அணி இருக்கு. தமிழகத்துல காவல்துறையில் பெண்கள் கூடைப்பந்து அணி வச்சிருக்காங்க. வங்கி, கஸ்டம்ஸ்னு மற்ற எந்தத் துறையிலும் பெண்களுக்கான கூடைப்பந்து அணி இல்ல.

இது ஒரு பிரச்னை. ஆனா, நீங்க போலீஸ் டீம்னு தேர்ந்தெடுத்தா உங்க விளையாட்டு தொடருமானு ெதரியாது. ஏன்னா, அவங்க பணி அப்படியானது. ரயில்வேஸ் மட்டும்தான் ஒரே வாய்ப்பு. நான், நிறைய முறை வங்கி உள்ளிட்ட இடங்கள்ல, ‘ஏன் கூடைப்பந்து விளையாட்டுக்கு பெண்களுக்கான அணி உருவாக்கல. ஸ்போர்ட்ஸ் கோட்டா வாய்ப்பு ஏன் இல்ல’னு கேட்டிருக்கேன். அவங்க, ‘லேடீஸ் நாலு வருஷத்துக்குப் பிறகு விளையாட மாட்டீங்க’னு சில காரணங்கள் சொன்னாங்க.

அதுக்கு, நான் திருமணம் முடிந்து, குழந்தை பிறந்த பிறகும் விளையாடுறேன்னு என்னை உதாரணமா சொன்னேன். ஆனாலும் எந்தத் துறையிலும் பெண்கள் அணி கொண்டு வரப்படல. நான் சீஃப் கெஸ்ட்டா போற இடங்களிலெல்லாம் கூடைப்பந்துல பெண்கள் அணி கொண்டு வரணும்னு வலியுறுத்தியிருக்கேன். அப்பதான் போட்டிகள் வரும். நிறைய வீராங்கனைகள் கிடைப்பாங்க.

இப்பதான் நம் அரசு விளையாட்டுக்காக அரசு மற்றும் பொதுத் துறையில் மூணு சதவீத வேலைவாய்ப்பு ஒதுக்கீடு கொடுத்திருக்கு. இனி வேறு துறைகளிலும் பெண்கள் கூடைப்பந்து அணி கொண்டு வர வாய்ப்புகள் இருக்கு...’’ என்கிறவரின் எதிர்கால லட்சியம் சிறந்த பயிற்சியாளராக வேண்டும் என்பது.  

‘‘பயிற்சியாளர் பதவி எளிதல்ல. வீராங்கனையா இருக்கிறதைவிட பயிற்சியாளரா இருக்குற பணி ரொம்ப கஷ்டமானது. அதுல கத்துக்கவும் தெரிஞ்சுக்கவும் வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. அனுபவம் நிறைய தேவை. அப்புறம்தான் பயிற்சியாளராக முடியும்.

என்னுடைய கேரியர் பின்புலத்தைப் பலப்படுத்திட்டு பயிற்சியாளர் பக்கம் போகலாம்னு நினைச்சேன். அதுக்காக கடந்த எட்டு ஆண்டுகளாக அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பிச்சேன். அது கிடைக்கல. பிறகு, வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 2018ல் தமிழக முதல்வர் கையால் வாங்கினேன்.

இப்ப கடவுள் அருளால் பத்மஸ்ரீ கிடைச்சிருக்கு. இனி என்னால் பயிற்சியாளருக்கு தயங்காமல் விண்ணப்பிக்க முடியும். நிச்சயம் சிறந்த பயிற்சியாளராகி இந்திய கூடைப்பந்து அணிைய ஆசியாவின் முதலிடத்திற்குக் கொண்டு வருவேன்...’’ என நம்பிக்கை விதைக்கிறார் அனிதா பால்துரை.