ஜோ பைடன்:உலகமும் இந்தியாவும் எதிர்பார்ப்பது என்ன?



அமெரிக்காவின் 46வது அதிபராகப் பதவியேற்றிருக்கிறார் ஜோ பைடன். ‘அமெரிக்கா யுனைட்டட்’ (அமெரிக்கா ஒருங்கிணைந்துவிட்டது) எனக் கொண்டாடுகிறார்கள் பைடனின் ஆதரவாளர்கள்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும் இருக்கும் அமெரிக்காவின் ஆட்சி மாற்றம் ஒட்டு மொத்த உலகை எப்படிப் பாதிக்கும் எனக் கட்டுரைகள் எழுதப்படத் தொடங்கியாயிற்று, குறிப்பாக, இந்தியாவை எப்படி பாதிக்கும்; நாம் ஜோ பைடனிடம் எதிர்பார்ப்பது என்னென்ன என்பது பற்றியும் பலவிதமான சலசலப்புகள்.

*உலகம் எதிர்பார்ப்பது என்ன?

உலகமயமாக்கம், சர்வதேச உறவுகள்குறிப்பாக சீனாவுடனான உறவு, வளரும் பொருளாதார சூழ்நிலைகள் ஆகியவற்றின் மீதான அமெரிக்காவின் பார்வை மேலும் விஸ்தீரமானதாக ஒட்டுமொத்த உலகுக்கும் நன்மை பயப்பதாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலக மக்களிடம் உள்ளது.

இந்த கோவிட் தொற்று காலத்திலும் அமெரிக்கா அதற்கான மீட்புப் பணிகளை முடுக்கிவிடு வதைவிட தனது இராணுவத்துக்குச் செலவு செய்வதையே பெரிதாக நினைக்கிறது என்பது கவலையளிக்கும் விஷயம்.

அதிபர் பைடன் பதவியேற்றதுமே 1.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை கொரோனா கால பொருளாதார செயலூக்கியாக அறிவித்திருக்கிறார். இதில் ஒரு ட்ரில்லியன் டாலர்கள் நேரடியாக வீடுகளுக்கும், எஞ்சியவை சிறுதொழில் நிறுவனங்களுக்கும் செலவிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இதெல்லாம் கொஞ்சம் நல்ல விஷயங்கள்தான். இதேபோல் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடுவது அது ஒரு ஜனநாயக நாடு என்பதை நிலைநிறுத்த உதவும்.

தொடர்ச்சியான பெருமுதலாளிகள் சார்பு பொருளாதாரக் கொள்கைகளால் அதன் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் புதிய அதிபரின் கொரோனா கால பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் அமெரிக்கா ஒரு மக்கள் நல அரசுதான் என்ற நம்பிக்கையை விதைத்திருப்பது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு நல்ல முன்மாதிரி.

*இந்தியா எதிர்பார்ப்பது என்ன?

இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவரை ஒருவர் பக்கபலமான சக்திகளாகவே பார்த்துவருகின்றன. பாகிஸ்தான் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும்கூட இப்போதும் சீனா போன்ற பொது போட்டி யாளரை எதிர்கொள்வதற்கு இருவருக்குமே ஒருவர் உதவி ஒருவருக்குத் தேவை.

தவிர இந்தியாவும் அமெரிக்காவும் மேலும் பிணைப்போடு இயங்கினால்தான் ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற பிற பசிபிக் நாடுகளுடனான இருநாட்டு வெளியுறவுக்கொள்கைகளும் வலுவாகவும் இருக்கும். மென்பொருட்கள் ஏற்றுமதி, ஹெச்1 விசா கொள்கை அனுசரணை, டிரம்ப்பால் மிரட்டப்பட்ட அமெரிக்கவாழ் இந்தியப் பொறியியலாளர்களுக்கான குறைந்தபட்ச இழப்பீடு போன்ற வற்றை இந்தியா அமெரிக்காவிடம் எதிர்பார்க்கிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். மறுபுறம், விவசாயிகளுக்கான மானியம் மீதான கொள்கையை இந்தியா காலச் சுழலுக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

2019ம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தை அமெரிக்காதான். மொத்த ஏற்று மதியில் 16.94% அமெரிக்காவுடையதுதான். அதேபோல் இறக்குமதி பங்களிப்பு 7.57% அமெரிக்காவுடையது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அவர்களின் மூன்றாவது பெரிய வணிகக் கூட்டாளிகள் நாம்தான். நம்மோடுதான் அவர்களுக்கு பொருளாதாரப் பரிவர்த்தனைகள் அதிகம்.

கடந்த ஆண்டு மட்டும் 88.75 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய வணிகம் இரு நாடுகளிடையே நிகழ்ந்துள்ளது.  மறுபுறம் சீனாவுடனான அமெரிக்காவின் உறவு கடும் முரண்களோடு உள்ளது. முன்னாள் அதிபர் டிரம்ப் காலத்தில் சீனாவோடு கிட்டத்தட்ட ஒரு வணிகப் போரே நிகழ்ந்துள்ளது. புதிய அதிபர் இந்த விவகாரத்தை மிக லாவகமாகக் கையாள்கிறார் என்றும் சொல்ல முடியவில்லை. அதற்காக செயல்
படவே இல்லை என்றும் சொல்ல முடியாது.

அவர் இவ்விஷயத்தில் உலகின் நலன் என்பதைவிட அமெரிக்காவின் நலனுக்காகச் செயல்பட முயலும் ஒரு அதிபராகவே இருக்கிறார். சீனா 2025 என்ற திட்டத்தை அவர் முடக்கவும் இல்லை; அதே சமயம் அதற்கு பெரிய அளவு முக்கியத்துவம் தரவும் இல்லை என்பதைக்கொண்டே இதனைப் புரிந்துகொள்ளலாம்.

சீனாவுடனான பிணக்குகளுக்குப் பிறகு அமெரிக்க முதலீடுகள் இந்தியாவை நோக்கித் திரும்பும் என்று எதிர்பார்க்கலாம்தான். ஆனால், இதனைச் சாத்தியமாக்குவது புதிய அதிபரின் அணுகுமுறையில்தான் இருக்கிறது.

ஒபாமா அதிபராக இருந்த போது திட்டமிடப்பட்ட ட்ரான்ஸ் பசிபிக் பாட்னர்ஷிப் (TPP) என்ற பொருளாதாரக் கோட்பாடு இனி பைடன் காலத்தில் மீண்டும் நடைமுறைக்கு வரக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இது நடைமுறைக்கு வந்தாலுமே டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவுக்கு கடும் போட்டியாக பாகிஸ்தான் இருக்கும் என்பதால் இந்தியாவுக்கான அமெரிக்க அணுகுமுறையில் மாற்றம் வந்தால் மட்டுமே இந்தத் திட்டம் நமக்குப் பலன் தருவதாய் இருக்கும்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கான பாதுகாப்பு என்பது கடந்த ஆட்சியில் கேள்விக்குரியதாக இருந்தது. அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற மண்ணின் மைந்தன் கோஷம் அங்கு வேலை செய்யும் பல வெளிநாட்டு வாழ் குடிமக்களுக்கு கடும் மன நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஜோ பைடன் போன்ற ஒரு ஜனநாயகவாதி தலைமையில் அப்படியான உளவியல் நெருக்கடிகள் இருக்காது என்பதே மகத்தான ஆறுதல். ஆனாலும் மென்பொருள் துறையில் இந்தியாவுக்கான வணிகரீதியான தொடர்புகளை புதிய அதிபர் சிறப்பு அந்தஸ்து கொடுத்து நோக்க வேண்டும் என்பதும் இந்தியர்களின் எதிர்பார்ப்பு.

உலக நாடுகளுக்கு இடையே பகையை மூட்டி, எண்ணெய் வளங்களை அபகரித்து, தனது பொருளாதார நலன்களுக்காக உலகைச் சுரண்டி, அமெரிக்கா வழக்கமாகச் செய்யும் எல்லா பெரியண்ணன் மனநிலைகளையும் கைவிட்டு, உண்மையான ஜனநாயக வழியில் நடக்க வேண்டும் என்பதே பெரும்பாலான உலக மக்களின் ஆசை.

ஆனால், எந்த அமெரிக்க அதிபராக இருந்தாலும் அவர் அமெரிக்காவின் அதிபர்தான். அவரது நாட்டின் நலனுக்கே அவரால் முன்னுரிமை தர இயலும் என்பதால், நாம் ஓர் எல்லைக்கு மேல் எந்த அதிபரிடமும் எதிர்பார்க்க இயலாது.

பைடன் ஒரு ஜனநாயகவாதி. வீழ்ந்துகொண்டிருக்கும் சிவில் சமூக விழுமியங்களை சற்றேனும் தூக்கி நிறுத்துவார் என்று உலகமே எதிர்பார்க்கிறது.
பைடன் அதைச் செய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இளங்கோ கிருஷ்ணன்