லவ் இல்லாம உலகம் இல்ல!நிக்கி கல்ராணி வாலண்டைன்ஸ் டே டாக்!



‘‘இந்த வருஷ நியூ இயர்தான் மங்களகரமா தொடங்கியிருக்கு. என்பர்த் டேவும் வந்துச்சு. பெங்களூருவில் உள்ள எங்க வீட்ல ஃபேமிலியோட ரெண்டையும் ஹேப்பியா கொண்டாடினேன். ஏன்னா, பேண்டமிக் டைம்ல சென்னைலதான் இருந்தேன். ஊரடங்குனால தனியா மாட்டிக்கிட்டேன். வீட்டுக்கும் போக முடியல. சமையல், டான்ஸ், ஒர்க் அவுட்னு தனியாவே பொழுது போச்சு. ஓடிடியில் படங்கள், வெப் சீரீஸ்னு இல்ல. டிவியும் போரடிச்சிடுச்சு.

வீட்ல தனியா கவனமா இருந்தும், எனக்கும் கொரோனா வந்து, சரியாகிடுச்சு...’’ குலுங்கிச் சிரித்து குதூகலமாக ஆரம்பிக்கிறார் நிக்கி கல்ராணி.

ஆசியாவில் டாப்பில் உள்ள 500 செலவாக்குமிக்க நபர்களில் நிக்கியும் ஒருவர் என்கிறது நியூயார்க் பத்திரிகை. இப்போது சசிகுமாரின் ‘ராஜவம்சம்’, ‘தமிழ்ப்படம்’ சிவாவின் ‘இடியட்’, தெலுங்கில் ஆதியுடன் ‘சிவிடு’ என நிக்கி பிசி டால்ஃபின்.

புத்தாண்டுக்கு என்ன தீர்மானங்கள் போட்டிருக்கீங்க..?

எந்த ரெசல்யூஷனும் எடுக்கல. ஏன்னா, பத்து வருஷங்களுக்கு முன்னாடியே இனிமே தீர்மானம் எதுவும் பண்ணக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்.

ஒவ்வொரு வருஷமும் நான் அதை பண்ணப் போறேன்... இதை தவிர்க்கப் போறேன்னு வருஷம் பொறந்த அன்னிக்கு லிஸ்ட் போட்டு தீர்மானிக்கறோம். அப்புறம், அதை எல்லாம் எப்படி பாசிபிள் ஆக்கறதுனு யோசிப்போம். அப்புறம் அதெல்லாம் சாத்தியம்தானானு நமக்குள்ளேயே குழப்பம் வரும்.

இப்படி தீர்மானம் போட்ட எதையும் செயல்படுத்த முடியாமல் அந்த வருஷம் ஓடிடும். அதனாலேயே இனி ரெசல்யூஷன் பக்கம் போகக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்.

‘வாலண்டைன்ஸ் டே’க்கு என்ன பிளான்?

என்னாது... வாலண்டைன்ஸ் டே பிளானா? நான் என்ன காலேஜ் படிக்கறேன்னு நினைச்சுட்டீங்களா? ஸ்கூல், காலேஜ்லதான் அன்னிக்கு நமக்கு யாராவது ரோஸ் குடுப்பாங்களா... லவ் பிரபோஸ் பண்ணுவாங்களானு எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்ப, நிறைய லவ்வை சேர்த்து வச்சிருக்கேன்.
ஆனா, ரியல் லைஃப்ல லவ்வர்ஸை சேர்த்து வச்சு, மேரேஜ் வரை கொண்டு போன ரிஸ்க் எதுவும் பண்ணினதில்ல.

ஆக்ட்ரஸ் ஆனதுல இருந்து யாராவது நமக்கு ரோஸ் கொடுப்பாங்களானு எதிர்பார்க்கறதை விட்டுட்டேன். நமக்கும் அப்படி எந்த ஐடியாவும் இல்ல. ஆனா, காதல்ல நம்பிக்கை இருக்கு. லவ் இல்லாம உலகம் இல்ல.

காதல்னா டூயட் காதலை சொல்லல. அம்மா, அப்பானு சுத்தி இருக்கறவங்க அத்தனை பேரையும் லவ் பண்றோம். இது பாசக் காதல். அப்படி ஒரு லவ்வால்தான் நாம ஃப்ரெஷ்ஷா இயங்கறோம். ‘மொட்ட சிவா’வுலதான் கிளாமரா அசத்தினீங்க. அப்புறம் ஹோம்லிக்கு மாறிட்டீங்களா?

கிளாமர்னு எதைச் சொல்றீங்க? சின்னச் சின்ன டிரெஸ் போட்டுக்கறது தான் கிளாமரா..? முழுக்க முழுக்க கவர்டான காஸ்ட்யூம்ல கூட கிளாமர் இருக்கு. சேலைல கூட செம கிளாமர் இருக்கு. கதையும், கேரக்டரும்தான் காஸ்ட்யூமை தீர்மானிக்கும். இப்ப நடிக்கற படங்களுக்கு என்ன தேவையோ அதை அணியறேன்... நடிக்கறேன்.  

‘மாஸ்டர்’ பாத்துட்டீங்களா?

பாத்தாச்சு. ஃப்ர்ஸ்ட் டே, ஃப்ர்ஸ்ட் ஷோ! கொரோனானால வீட்லேயே அடைபட்டு கிடந்து, எப்ப ஷூட் போவோம், எப்ப ஒர்க் ஸ்டார்ட் பண்ணுவோம்கிற நினைப்பிலேயே நாட்கள் ஓடியிருக்கு. வீட்லேயே இருந்ததுல மன அழுத்தமும் ஆனது. மறுபடியும் ஷூட் ஆரம்பிச்சு படப்பிடிப்புல கலந்துகிட்டதும்தான் பழையபடி மைண்ட் ரெஃப்ரெஷ் ஆச்சு.

மறுபடியும் தியேட்டர் போய் படம் பார்க்கற டைம் திரும்பி வந்ததே, பெரிய ரிலீஃபா சந்தோஷமா இருக்கு. ‘மாஸ்டர்’ செம மாஸ். அடுத்து ‘வலிமை’யும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கணும்!   

மை.பாரதிராஜா