சிறுகதை! - வல்லமை தாராயோ!



லட்சுமி குளித்து முடித்து விட்டு நெற்றியில் குங்குமம் வைக்கையில், காயத்ரி உள்ளே வந்தாள்.‘‘அம்மா! இதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்காம்மா? எதுக்குமா உனக்கு இந்த சுமங்கலி வேஷம்? என்னோட சின்ன வயசுலயே, நம்ம ரெண்டு பேரையும் தவிக்க விட்டுட்டு, எவளோடயோ ஓடிப்போன அந்த ஆளு, உயிரோட இருக்காரா இல்லையானு கூட தெரியாது!’’ என்று காயத்ரி சொல்லி முடிப்பதற்குள், அவள் கன்னத்தில் பளாரென்று அறை விழுந்தது.

‘‘என்னை எதுக்கு அடிக்கறே? நான் உண்மையைத்தானே சொன்னேன்? என்னோட 12 வயசுல அவர் நம்மை விட்டுட்டு போயாச்சு. நீதானேமா அடுப்படில வெந்து என்னை படிக்க வெச்சு ஆளாக்கி, இப்போ வேலைக்குப் போற நிலைக்கு கொண்டு வந்திருக்கே!’’‘‘அப்படி சொல்லாதே காயத்ரி! ஆயிரமிருந்தாலும், அவர் உன் அப்பா..! என்னைத் தவிக்க விட்டுட்டு போயிருக்கலாம். ஆனால், அவர் எங்கே இருந்தாலும் நீண்ட ஆயுளோட இருக்கணும். அதுதான் என்னோட ஆசை!’’‘‘போதும் நிறுத்தும்மா! உன்னை மாதிரி பெண்களோட அளவுக்கு மீறின பதிபக்திதான் பெண்களை தலைதூக்க விடாம செய்யுது. நல்ல புருஷனோட கால்ல விழு.

அதுல தப்பே இல்லை! ஆனா, பொறுப்பில்லாத, பொறம்போக்கு யாரா இருந்தாலும் அவங்களை மன்னிக்கவே கூடாது. அது பெண் குலத்துக்கே அசிங்கம். புரியுதா?’’‘‘சரி விடு! உன்கிட்ட இந்த விஷயத்துல பேசி ஜெயிக்க முடியாது!’’‘‘டிபன் எடுத்து வை. ஆஃபீசுக்கு கிளம்பணும்!’’சமையல் அறைக்குள் நுழைந்த அம்மா,  திடீரென்று தலை சுற்றி கீழே விழுந்தாள்.‘‘அய்யோ அம்மா! என்ன ஆச்சு? ஹாஸ்பிட்டலுக்கு போகலாம். நான் போய் ஆட்டோ கூட்டிட்டு வரேன்!’’ஆஃபீசின் டீம் லீடர் லாவண்யாவுக்கு ஃபோன் செய்தாள் காயத்ரி.

‘‘சொல்லுங்க காயத்ரி! என்ன விஷயம்?’’
‘‘லாவண்யா! அம்மா மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாங்க. ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும். இன்னைக்கு ஒரு நாள் லீவு வேணும்!’’
‘‘என்ன பேசறீங்க காயத்ரி? லீவெல்லாம் கொடுக்க முடியாது. ஏகப்பட்ட பெண்டிங் புராஜக்ட்ஸ் இருக்கு. நீங்க வந்துதான் ஆகணும்!’’
‘‘சாரி லாவண்யா! என்னால இன்னைக்கு வரமுடியாது!’’ என்று ஃபோனை கட் செய்துவிட்டாள் காயத்ரி.

ஹாஸ்பிட்டலி–்ல் இருந்து அம்மாவுடன் காயத்ரி வீடு திரும்பினாள்‘‘முழுநேர கண்காணிப்பில் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி டாக்டர் சொல்லிருக்கார்மா. ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணி, ரெண்டு வாரம் லீவ் சொல்லிடறேன்...’’
‘‘வேண்டாம்மா காயு. ஏற்கனவே பிரச்னை பண்ற ஆஃபீசாச்சேம்மா. லீவெல்லாம்
குடுப்பாங்களா?’’

‘‘நான் பாத்துக்குறேன் விடும்மா!’’
மீண்டும் ஆஃபீசுக்கு டயல் செய்து லீவ் கேட்க, அதை லாவண்யா திட்டவட்டமாக எதிர்க்க, காயத்ரி, மேல் அதிகாரி யிடம் கேட்டு லீவ் சேங்ஷன் வாங்கி விட்டாள்.இரண்டு வாரம் லீவ் கேட்டதில், ஒரு வாரத்திலேயே அம்மாவின் உடல்நிலை சற்று  நலமடைந்ததால், ஆஃபீஸ் திரும்பினாள் காயத்ரி.
அரைநாள் கழிவதற்குள் மீண்டும் பக்கத்து வீட்டிலிருந்து ஃபோன்.‘‘காயத்ரி! அம்மா மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாங்கம்மா. பக்கத்துல, ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம். நீ கொஞ்சம் வந்துடுறியாம்மா! உன்னத்தான் பாக்கணும்னு சொல்லிட்டு இருக்காங்க!’’
மீண்டும் லாவண்யாவிடம் வந்து காயத்ரி நின்றாள்.

‘‘என்ன நினைச்சுட்டு இருங்கீங்க காயத்ரி? போனவாட்டி, லீவ் அப்ரூவ் பண்ணமாட்டேன்னு சொல்லியும், நீங்க மேலதிகாரி கிட்ட கேட்டு வாங்கிட்டு போயிட்டீங்க. இந்த வாட்டி கண்டிப்பா உங்களுக்கு கொடுக்கவே முடியாது. ஒண்ணு, போய் வேலையை பாருங்க! இல்லாட்டி நீங்களே ராஜினாமா பண்ணிட்டு போயிடுங்க!’’

மறுபடியும் அம்மா உடல்நிலை குறித்து காயத்ரிக்கு ஃபோன் வர... ‘‘நான் கண்டிப்பா போய்தான் ஆகணும் லாவண்யா. நீங்க என்னை அனுமதிக்கலேன்னாலும், என் அம்மாதான் எனக்கு முக்கியம். நான் ஒண்ணும் சும்மா வெளியில சுத்த லீவ் கேட்கலயே. நான் கேட்கற லீவ் எவ்வளவு நியாயமானதுனு உங்களுக்குத் தெரியும். இப்போ நீங்க எனக்கு லீவ் தராட்டி, நான் மேலதிகாரிகளை சந்திக்க வேண்டியிருக்கும்!’’

‘‘என்னைத் தாண்டி நீங்க யாரையும் சந்திக்க முடியாது காயத்ரி!’’லாவண்யா உள்ளே சென்றுவிட்டாள்.‘‘இந்தம்மா என்ன சொல்றது? நான் கண்டிப்பா எம்டியை பார்க்கதான் போறேன்! இந்த அம்மாவும் இங்கே எல்லார மாதிரியும் வேலை செய்யறவங்கதானே? என்ன பிரச்னை அவங்களுக்கு? பெத்த அம்மா உயிருக்கு போராடும்போது ஒரு பொண்ணு போகாம இருக்க முடியுமா? எம்டியும் ஒரு அம்மாவுக்கு பிள்ளைதானே? இவ ராட்சஸியா? ஒரு பொம்பளையா இருந்து இதயமே இல்லாம இருக்காளே! அப்படியென்ன செல்வாக்கு இவளுக்கு இங்கே? நான் இதை விடப்போறதில்லை! கண்டிப்பா எம்டியைப் பார்த்து என்னுடைய பிரச்னையை முறையிடத்தான் போறேன்!’’ அருகிலிருந்த மேனேஜரிடம் காயத்ரி ஆவேசமாகக் கூறினாள்.

‘‘அவங்களைத் தாண்டி எம்டி கிட்ட நீ எதுவும் பேச முடியாதும்மா...’’ என்று அந்த மேனேஜர் கூறினார். வேகமாக, வெறியுடன் நாற்காலியை விட்டு எழுந்த காயத்ரி, அதைவிட வேகமாக நடந்து, படாரென்று எம்டி ரூம் கதவைத் திறந்தவள் அதிர்ந்து போனாள். உள்ளே பார்க்கையில் எம்டியின் மடியில் லாவண்யா. காயத்ரி நிலைகுலைந்தாள். கதவின் ஓசையில், இருவரும் திரும்பினார்கள். காயத்ரியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. முகங்கள் வெளிறிப்போயின.

‘‘ச்சீ... தூ! இதனாலதான் என்னை, எம்டியை பார்க்கக் கூடாதுனு சொன்னியா? இப்படி எல்லாம்தான் உன் செல்வாக்கு இங்கே நடக்குதா? உனக்கு வெக்கமால்ல? நீயெல்லாம் ஒரு பொம்பளதானா? ஒடம்பை வச்சுத்தான் அதிகாரத்தை தக்க வச்சுக்கணும்னா, அதைவிட சாகலாம். அவர் மடியில உட்கார்ந்துதான் நான் லீவு வாங்கணும்னா, அப்படிப்பட்ட ஒரு மானங்கெட்ட லீவு எனக்குத் தேவையே இல்லை! எங்களை விட்டுட்டு ஓடிப்போன அப்பாவை இப்பகூட நான் மன்னிக்கத் தயாரா இல்லை.

பெத்தவரையே தூக்கி எறிஞ்ச எனக்கு நீ யாருடீ?’’

காயத்ரி, ராஜினாமா கடிதத்தை லாவண்யாவின் முகத்தில் விட்டெறிந்துவிட்டு, வேகமாக வெளியே வந்தாள்.‘‘ஏம்மா அவசரப்பட்டுட்டே?’’  மேனேஜர் கேட்டார்.‘‘இன்னொருத்தி மடியில இப்படி விழுந்து கிடந்துதான் என் அம்மாவையும், என்னையும் தவிக்க விட்டுட்டு எங்கப்பா போயிட்டாரு! இப்படிப்பட்ட  ஒரு கேவலமான செல்வாக்கும், மானங்கெட்ட வேலையும் எனக்கு தேவையே இல்லை! பால்ய பருவத்திலேயே பாரதியை சுவாசிச்சு வளர்ந்தவ நான். அந்த வல்லமையை எங்கம்மா எனக்கு தாய்ப்பாலோட சேர்த்து ஊட்டி வளர்த்திருக்காங்க!’’கம்பீரமாக வெளியேறிக் கொண்டிருக்கிறாள் பாரதியின் புதுமைப் பெண்ணாக, காயத்ரி!  

-  ஸ்ருதி பிரகாஷ்