ஹாலிவுட் படம் தயாரிக்கும் தமிழர்!



தமிழில் ஒரு படத்தை எடுத்து முடித்து அதை ரிலீஸ் செய்வதற்குள் தயாரிப்பாளர்களின் முதுகெலும்பே உடைந்து விடுகிறது.
இந்நிலையில் சத்தமே இல்லாமல் ஹாலிவுட் நடிகர்களையும், ஹாலிவுட் டெக்னீஷியன்களையும் வைத்து ஒரு ஹாலிவுட் படத்தை தயாரித்துள்ளார் ஒரு தமிழர்!அவர்தான் டெல் கே.கணேசன்.

சில நாட்களுக்கு முன் நம் தமிழ் நடிகர் நெப்போலியன் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக செய்தி வந்ததே... அது இந்தப் படம்தான்!
‘டெவில்ஸ் நைட்’ என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்த த்ரில்லர், பேய் படம், மேற்கத்தியர்கள் அதிகம் பயப்படும் செவ்விந்தியர்கள் சார்ந்த சிவப்புப்
பேய்கள் பற்றிய கதையைக் கொண்டது.

இப்படத்தை சாம் லோகன் கலெகி (Sam Logan Khaleghi) என்னும் ஆங்கிலேயர் இயக்கியிருக்கிறார். ‘கைபா பிலிம்ஸ்’ சார்பில் டெல் கே.கணேசன்,  பிரமாண்டமாகத் தயாரித்திருக்கும் இப்படம் விரைவில் உலகெங்கும் ரிலீஸாகப் போகிறது. இப்படத்தை தமிழிலும் இந்தியிலும் கூட டப் செய்யப் போகிறார்.

“திருச்சி பக்கம் லால்குடிதான் பூர்வீகம். திருச்சிலதான் படிச்சேன். சாதாரண மிடில் க்ளாஸ் குடும்பம்.

அண்ணா பல்கலைக்கழகத்துல மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சுட்டு 30 வருஷங்களுக்கு முன்னாடி வேலை தேடி வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டேன். அமெரிக்காவுல கணிப்பொறியியல் துறைல வேலை கிடைச்சது. வேலை பார்த்தேன். தனியா ஒரு நிறுவனம் ஆரம்பிக்கற அளவுக்கு வளர்ந்தேன்...’’ என்று சொல்லும் டெல் கே.கணேசன், தமிழ்ப் படங்களை விரும்பிப் பார்ப்பாராம்.

‘‘அமெரிக்காவுல என் வீட்ல இருந்து ஹாலிவுட், 30 கிமீ தூரத்துலதான் இருக்கு. தினமும் அந்த வழியாதான் என் கம்பெனிக்கு போவேன். ஒருநாள் நாமும் ஒரு படம் தயாரிச்சா என்னனு தோணிச்சு. ‘உன் பொழப்பு நல்லாதானே போகுது... ஏன் இந்த வேண்டாத வேலை’னு நண்பர்கள் சொன்னாங்க. அதோட என்னால ‘முடியாது’ என்பது மாதிரியும் கிண்டல் செய்தாங்க.

இந்தக் கிண்டலே, இறங்கிப் பார்த்தா என்னனு முடிவு பண்ண வைச்சது. இறங்கினேன். படமும் தயாரிச்சு முடிச்சுட்டேன்!
நண்பர்கள் எல்லாம் ஷாக் ஆகிட்டாங்க. ஏன்னா, அவங்க தமிழ்ப் படம் தயாரிப்பேன்னு நினைச்சாங்க. ஹாலிவுட்ல படம் தயாரிப்பேன்னு யாரும் நினைச்சுக் கூடப் பார்க்கலை!’’ சிரிக்கும் டெல் கே.கணேசன், விருப்பப்பட்டே ஹாலிவுட் படம் தயாரித்திருக்கிறாராம்.

‘‘தமிழ்ல உச்ச நட்சத்திரங்களை வைச்சு பிரமாண்டமா படம் எடுக்கற செலவுல தரமான ஒரு ஹாலிவுட் படத்தை தயாரிக்கலாம். தவிர உலகம் முழுக்க விநியோகிக்கவும் முடியும். லாபம் பார்க்கவும் நூறு சதவிகிதம் வாய்ப்பிருக்கு.

இப்படி தரமான படங்களா எடுத்து முக்கியமான நிறுவனமா கூட ஹாலிவுட்ல காலூன்ற முடியும்.இதையெல்லாம் யோசிச்சுதான் ஹாலிவுட்ல படம் தயாரிக்க முற்பட்டேன். ‘டெவில்ஸ் நைட்’ படத்தை தயாரிச்சு முடிச்சுட்டு இப்ப ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’னு அடுத்த ஆங்கிலப் படத்தை தயாரிக்கவும் தொடங்கிட்டேன்...’’ என்ற டெல் கே.கணேசன், சென்னையில் படிக்கும் காலத்தில் நிறைய ஹாலிவுட் படங்களைப் பார்த்திருக்கிறார்.

‘‘ஆனா, தொழில்நுட்பத்தை எல்லாம் கவனிச்சதில்ல. சாதாரண ரசிகனா என்ஜாய் பண்ணுவேன். 80களோட இறுதில சென்னைல இருந்தப்ப வார்டனுக்கு தெரியாம ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து படம் பார்ப்போம். சஃபையர், அண்ணா, அலங்கார், சாந்தி தியேட்டர்கள்ல படம் பார்த்துட்டு கொத்தவால்சாவடில இருந்து ரிட்டர்ன் ஆகற லாரில ஏறி ஹாஸ்டலுக்கு வருவோம். கமுக்கமா ரூம்ல படுத்துடுவோம்.

எல்லா படங்களையும் பார்ப்போம். அதேநேரம் படிப்பையும் விடல. அந்த காலேஜ் காலம்தான் இப்போதைய என் தயாரிப்பு முகத்துக்கு காரணம்னு நினைக்கறேன். ஏன்னா என் குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் துளிக்கூட சம்பந்தமில்ல...’’ என்றவர் ஹாலிவுட் சூழல் குறித்து விளக்க ஆரம்பித்தார்.

‘‘அங்க எல்லாமே ப்ரொஃபஷனல்தான். ஐடி கம்பெனி மாதிரிதான் படங்களை தயாரிக்கறாங்க. இயக்குநரை விட ஸ்கிரிப்ட்தான் அங்க ஸ்டார். கதாசிரியர் செட்டுக்கு வர்றப்ப இயக்குநர், நடிகர்னு எல்லாருமே பரபரப்பாகிடுவாங்க.

கதையையும் ஸ்கிரிப்ட்டையும் ஓகே பண்ணின பிறகுதான் நடிகர்கள், இயக்குநர்கள்னு செலக்ட் பண்ணுவாங்க. எங்க ‘டெவில்ஸ் நைட்’ படத்தோட இயக்குநர் சாம் லோகன் கலெகியேதான் ஸ்கிரிப்ட்டும் எழுதியிருக்கார். ‘சிவப்பு பிசாசு’னு அமெரிக்கர்கள் சொல்ற விஷயம்தான் எங்க படத்தோட மெயின்.

பூர்வகுடியான செவ்விந்தியர்களை அடிச்சு விரட்டிட்டுதான் பிரிட்டீஷாரும், பிரெஞ்சுக்காரர்களும், ஸ்பானியர்களும் அமெரிக்காவுல குடியேறினாங்க.
அமெரிக்காவின் வடக்குல இருக்கற மாகாணம், டெட்ராய்ட். அங்கிருந்த பூர்வகுடிகளை விரட்டிட்டு பிரெஞ்சு மக்கள் குடியேறினாங்க. அதனாலயே அந்த மக்களுக்கு இப்பவும் செவ்விந்தியர்கள் மேல ஒரு பயம் இருக்கு. விரட்டப்பட்டவங்க பேயா வாழ்ந்துட்டு இருக்கறதா நம்பறாங்க; அச்சப்படறாங்க.

இதைத்தான் எங்க படத்தோட ஒன்லைனா வைச்சிருக்கோம். ஸ்கிரிப்ட் பக்காவா இருந்ததால ஆறே மாசத்துல முழு ஷூட்டிங்கும் முடிச்சுட்டோம்...’’ என்ற டெல் கே.கணேசன், இந்தப் படத்தில் நெப்போலியன் எப்படி வந்தார் என்பதையும் சொன்னார்:‘‘அமெரிக்காவுலயே நெப்போலியன் சார் செட்டிலாகிட்டார்னு எல்லாருக்கும் தெரியும்.

இந்தியர்களான நாங்க அடிக்கடி சந்திப்போம். ரெண்டு பேருக்குமே திருச்சிதானே சொந்த ஊர்... நெருக்கமாகிட்டோம்! ஹாலிவுட் படம் தயாரிக்கறதுனு முடிவு செய்ததும் நெப்போலியன் சாரையும் அதுல நடிக்க வைக்கணும்னு விரும்பினேன். அதுக்கு ஏத்தா மாதிரி அவருக்கு கேரக்டரும் அமைஞ்சது.

செவ்விந்தியர்கள் சார்ந்த பழமையான அருங்காட்சியக பாதுகாவலரா நடிச்சிருக்கார். ஆக்சுவலா, ‘இந்த ரோலை இந்தியர்தான் செய்யணும்’னு கதாசிரியர் ஸ்கிரிப்ட்டுல குறிப்பிட்டிருந்தார். இந்தியானு நினைச்சுத்தானே கொலம்பஸ் அமெரிக்க மண்ணுல காலடி வைச்சார்... அதுக்கான குறியீடா இந்த கேரக்டர் வருது.

செவ்விந்தியர்களுக்கு சொந்தமான கத்தி ஒண்ணு அருங்காட்சியகத்துல இருந்து காணாமப் போகும். அதைக் கண்டுபிடிக்க பெண் போலீஸ் வருவாங்க. அவங்களுக்குத் துணையா நெப்போலியன் சாரும் இன்வெஸ்டிகேஷன்ஸ்ல ஈடுபடுவார்...’’ என்றவரிடம் ஷூட்டிங் சமயத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்து கேட்டோம்.

‘‘சிவப்பு பிசாசை இதுவரை யாரும் சினிமால காட்டினதில்ல. அதனால டெட்ராய்ட் முழுக்க சுத்தி அங்குள்ள மக்கள்கிட்ட பேசினோம். அவங்க மனசுல என்ன மாதிரி உருவம் கொடுத்திருக்காங்கனு கேட்டுத் தெரிஞ்சுகிட்டு அதுக்கு தகுந்தா மாதிரி சிவப்பு பிசாசை காட்டியிருக்கோம்.

அதிதீவிர தீ விபத்து நடக்கறா மாதிரி ஒரு காட்சி. அப்ப மக்களோடு மக்களா சிவப்பு பிசாசும் இருக்கும்! அதிக பொருட்செலவுல இந்தக் காட்சியை உருவாக்கி இருக்கோம்...’’ என்ற டெல் கே.கணேசன், ஹாலிவுட்டில் படம் ரிலீஸ் செய்வது சுலபம் என்கிறார் ‘‘ஆமா... இங்க தயாரிக்கறதுதான் சிரமம்.

வெளியிட ப்ரொஃபஷனலான பல நிறுவனங்கள் இருக்கு. சாதாரண ஒரு சோப்புக்கு எப்படி தயாரிப்பு, சேல்ஸ், மார்க்கெட்டிங், விளம்பரங்கள்னு பல துறைகள் இருக்கோ அப்படி சினிமாவையும் அணுகறாங்க. ஆங்கிலப் படங்களுக்கு பெரிய மார்க்கெட் இருக்கு. ஹாலிவுட் படத்தை பல மொழிகள்ல டப் செஞ்சு வெளியிட முடியும். இதுக்காகவே பல நாட்டு நிறுவனங்கள் இருக்கு.

தென்னிந்தியப் படங்களைவிட இந்திப் படங்கள் ஹாலிவுட்ல பிரபலம். அதேநேரம் தென்னிந்தியர்கள்தான் புத்திசாலினும் நினைக்கறாங்க! சுந்தர் பிச்சை, ரஜினி காந்த் மேல பெரிய மதிப்பு வைச்சிருக்காங்க.இப்ப என் ரெண்டாவது படமான ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஸ்டார்ட் ஆகியிருக்கு. இது ரிவென்ஜ் படம். இதை முடிச்சுட்டு தமிழ்ல படம் தயாரிக்கலாம்னு இருக்கேன்!’’ புன்னகைக்கும் டெல் கே.கணேசன், தொடர்ந்து ஹாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் படங்களைத் தயாரிப்பாராம்!

திலீபன் புகழ்