தம்பி



காணாமல் போன தம்பியாக நடிக்க வந்தவர், அந்தக் குடும்பத்தில் ஒருவராக நிலைபெற்றாரா என்பதே ‘தம்பி’.சத்யராஜ் - சீதாவின் மகளாக ஜோதிகா. தம்பி பதினைந்து வருடங்களுக்கு முன் காணாமல் போக, குடும்பமே அவன் பிரிவில் தத்தளிக்கிறது. அதையொட்டி ஜோதிகா கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

திடீரென்று கோவாவில் ஜோவின் தம்பி கிடைத்துவிட்டதாக தகவல் வர... அழைத்து வருகிறார்கள். அப்படி அழைத்து வந்த தம்பியை அந்தக் குடும்பம் ஏற்றுக்கொண்டதா, நிஜமாகவே அந்தக் குடும்பத்தில் ஒருவராக மனம் மாறினாரா! இவர்கள் மூவருக்கும் இடையிலான ஆடுகளம்தான் கதை.
‘பாபநாசம்’ சென்டிமென்ட் த்ரில்லரை அடுத்து புதிய கதையை சொல்லிய விதத்தில் கவர்கிறார் ஜீத்து ஜோசப்.

அப்பாவித்தனமும் குறும்பும் அடாவடியும் ஜாலியான கொண்டாட்டமுமான மனநிலையில் கார்த்தி நின்று விளையாடுகிறார். காணாமல் போன தம்பியைப் பற்றி அனைத்து தகவல்களையும் எல்லோரிடமும் போட்டு வாங்கித் தெரிந்துகொண்டு, மற்றவர்களை திகைப்பூட்டுவது கலகலப்பு. அடுத்தடுத்து நிலைமையைப் புரிந்துகொண்டு கொஞ்சமாக தன்னிலை மாறுவதும் இயல்பு. கிண்டல் செய்வதில் அசால்ட்டாக இருந்து பின் எமோஷனில் பெயர் வாங்குகிறார்.

எல்லா துக்கத்தையும் அடக்கிக் கொண்டு, மனதில் அன்பை இறுக்கிக்கொண்டு ஜோதிகா இறுக்கமாய் வருகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் பாசத்தை மீட்டுக் கொண்டு வருவதில் கார்த்தியின் இடமும் பளீச். மகன் கிடைத்த சந்தோஷம், வெளியில் உண்மை கசியாமல் இருக்கும் கடினமான விளையாட்டு... என இரண்டிலும் நிதானித்து நடிக்கிறார் சத்யராஜ். வழக்கமான அம்மா ஆகிவிடாமல் ஒரு பார்வையில் நிறைய உணர்த்துகிறார் சீதா.

ஊட்டியின் லொகேஷனுக்கு பொருத்தமான அழகு நிகிலா விமல். காதலித்துவிட்டுப் போய்விடாமல் கொஞ்சம் கதையிலும் இருக்கிறார். சௌகார் ஜானகியை சக்கர நாற்காலியில் உட்கார வைத்து வெறும் பார்வை பார்க்க வைக்கிறார்கள். இளவரசு, பாலா என இருவரும் கதைக்குத் தேவையானதை தந்துவிடுகிறார்கள்.  

கோவிந்த் வசந்தாவின் இசையில் சின்மயி பாடியிருக்கும் ‘தாலேலோ...’ பாடல் மட்டும் கேட்ச்சிங். டெரர் காட்டும் தீம் மியூசிக்கும் நன்று. ஆர்.டி.ராஜசேகரின் கேமரா அங்கிங்கெனாதபடி அருமையாகச் சுழல்கிறது. மலைப் பிரதேசத்தின் அத்தனை அழகையும் மொத்தமாகக் கொண்டுவர மெனக்கெட்டிருக்கிறார்.  

முதல் பாதியின் வேகம் குறைவதைக் கவனித்து இருக்கலாம். பதினைந்து வருடம் காணாமல் போயிருந்தால் எல்லாம் மறந்துவிடுமா! மாறிவிடுமா! கோவா இன்ஸ்பெக்டர் ஊட்டியிலேயே பழியாகக் கிடப்பது நடக்கிற காரியமா? சத்யராஜ் உள்ளூர் தலைவரா, நாட்டுக்கே தலைவரா என்ற சந்தேக மீறல்கள் ஏராளம் தாராளம். ஜோதிகா படம் முழுக்க இறுக்கமும் எரிச்சலோடும் உலவுவது ஏன்?இருந்தும் சென்டிமென்ட்டோடு த்ரில்லர் பார்க்க நமக்கு எப்பவும் பிடிக்கும்தானே!

குங்குமம் விமர்சனக் குழு