ரத்த மகுடம்-85
‘‘கரிகாலனா..?’’ அலட்சியமாகக் கேட்டார் பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன்.‘‘பல்லவர்கள் போட்ட பிச்சையில் விட்ட குறை தொட்ட குறையாக நான்கைந்து தெருக்களைப் பெற்று, அதையே ‘தங்கள் நிலப்பரப்பாகப் பாவித்து’, குறுநில மன்னர்கள் என்ற அதிகாரத்துடன் வலம் வரும் சோழர்களின் வருங்கால மன்னனைக் குறிப்பிடுகிறீர்களா..?’’
 கடகடவெனச் சிரித்தார் மாறவர்மன்: ‘‘அந்தப் பொடிப் பயலால் சாளுக்கியர்களுக்கு அப்படியென்ன இடையூறு ஏற்பட்டு விடும்..?’’
‘‘அதானே...’’ சாளுக்கிய உப சேனாதிபதி ஆமோதித்தார்: ‘‘குறைந்தபட்சம் நாட்டை மீட்பதற்காக படை திரட்டி வரும் பல்லவ மன்னர் பரமேஸ்வர வர்மரோ அல்லது அவரது மைந்தனும் பல்லவ இளவரசருமான இராஜசிம்மனோ இடையூறாக வருவார்கள் என்று நீங்கள் சொன்னால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கும்.
ஏனெனில் தங்கள் ஜென்மப் பகைவர்களான சாளுக்கியர்களை வீழ்த்தும் வெறியும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. எனவே சாளுக்கியர்களின் கனவு நிறைவேறாமல் தடுக்க அவர்களே முற்படுவார்கள். ஆனால், கரிகாலன்..?’’ நிறுத்திவிட்டு தன் புருவத்தை உயர்த்தி உதட்டைப் பிதுக்கினார் சாளுக்கிய உப சேனாதிபதி: ‘‘நம்பும்படியாக இல்லை. அளவுக்கு மீறி அவனை மதிப்பிடுகிறீர்களோ என்று தோன்றுகிறது...’’‘‘இந்த எண்ணத்தை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் வெளிப்படுத்தினீர்களா..?’’ உதட்டில் பூத்த முறுவலுடன் சிவகாமி கேட்டாள்.
‘‘சாளுக்கியர்களின் கனவுக்கு இடையூறாக நிற்கும் மனிதன் கரிகாலன்தான் என நீங்கள்தானே இப்பொழுது குறிப்பிட்டீர்கள்..?’’ படபடத்தார் சாளுக்கிய உப சேனாதிபதி.‘‘ஆம்... இப்பொழுதும் அதைத்தான் சொல்கிறேன்...’’ நகைப்பதை தொடர்ந்தாள் சிவகாமி. ‘‘அப்படியானால் உங்களிடம்தானே என் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்..? ஏனெனில் உங்கள் முன்தானே நான் நின்று கொண்டிருக்கிறேன்...’’ ‘‘இக்கணத்தில் நிற்கிறாய்... அக்கணத்தில் என்ன செய்தாய்..?’’ புன்னகைப்பதை நிறுத்திவிட்டு சாளுக்கிய உப சேனாதிபதியை கூர்மையாகப் பார்த்தாள் சிவகாமி.
‘‘அக்கணமா..? எக்கணம்..?’’ ‘‘மந்திராலோசனையில்!’’ சட்டென பதில் சொன்னாள் சிவகாமி. என்ன மறுமொழி சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார் சாளுக்கிய உபசேனாபதி. ‘‘காஞ்சிக்கு கரிகாலர் வந்தபோது என்ன நடந்தது என்று நினைவில் இருக்கிறதா..?’’ சிவகாமியின் கேள்விக்கு பதில் சொல்ல சாளுக்கிய உப சேனாதிபதி திணறினார்.
அலட்சியத்துடன் சிவகாமியே தொடர்ந்தாள்: ‘‘அவரது பெரியம்மாவை சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் சிறைப் பிடித்தார். அந்த அம்மையாரைக் காட்டி கரிகாலரை நம் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக முன்பே சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோழ மன்னரின் நிலையையும் சுட்டிக் காட்டினார்... இவை எல்லாம் எதற்கு என்று நினைக்கிறீர்கள்..? சோழர்களை நம்பக்கம் இழுக்கத்தானே..?’’ இதற்கு பதில் சொல்ல முற்பட்டார் சாளுக்கிய உபசேனாதிபதி.
தன் கரங்களை உயர்த்தி அவரை அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு சிவகாமியே தொடர்ந்தாள்:‘‘இதுகுறித்து மந்திராலோசனையில் விவாதிக்கப்பட்டபோது நீயும் அங்கிருந்தாய்தானே..? சோழர்களை நம் பக்கம் இழுக்க வேண்டும் என்ற யோசனையை ராமபுண்ய வல்லபர் முன்வைத்தபோது நீ உட்பட அங்கிருந்த அனைவரும் அதை ஆதரித்தீர்கள்... ஒரேயொருவர் மட்டுமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நம் மன்னரும் சாளுக்கிய தேசத்தின் பேரரசருமான விக்கிரமாதித்தர்.
‘ராஜதந்திர அடிப்படையில் இந்த யோசனை சரி... ஆனால், இந்தப் போரில் சோழர்கள் பல்லவர்கள் பக்கமே நிற்க வேண்டும்... அப்படையையே நாம் வெற்றி கொள்ள வேண்டும்... அதுதான் என் தந்தையும் நம் மாமன்னருமான இரண்டாம் புலிகேசி அவர்களின் ஆன்மாவுக்கு நாம் செலுத்தும் மரியாதை...’ என்று சொன்னாரா இல்லையா..? உன்னிரு செவிகளாலும் அதைக் கேட்டாய்தானே..?
என்றாலும் மந்திராலோசனையில் இருந்த அனைவரும் - நீ உட்பட - ராமபுண்ய வல்லபரின் யோசனையை ஏற்றதால் சோழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நம் மன்னர் விக்கிரமாதித்தர் ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்தே சாளுக்கிய போர் அமைச்சரும் கரிகாலருடன் பேசினார். இதற்கு கரிகாலர் ஒப்புக் கொள்ளவில்லை. இதன் பிறகு நடந்ததெல்லாம் இங்கு பேசிப் பயனில்லை... எல்லோருக்கும் தெரிந்ததுதான். எனவே விட்டுவிடலாம்.
எனது கேள்வி இதுதான்...’’ அரக்கை கையில் பிடித்தபடி சாளுக்கிய உபசேனாதிபதியின் கண்களை சிவகாமி உற்றுப் பார்த்தாள்: ‘‘அப்போது நம் பக்கம் சோழர்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்ன நீ... இப்போது கரிகாலரால் என்ன இடையூறு ஏற்பட்டு விடும் என்று கேட்பது சரியாக இல்லையே...’’
‘‘அம்மணி... இப்பொழுதும் சோழர்களின் பலத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை...’’ என்று சாளுக்கிய உபசேனாதிபதி ஆரம்பித்ததும் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக மாறவர்மன் உறுமினார்.‘‘இருங்கள் ஐயா... நீங்கள் வேறு... சோழர்களை விட பாண்டியர்களான நீங்கள் பலமிக்கவர்கள். போதுமா..?’’ சலித்துக் கொண்டார் சாளுக்கிய உபசேனாதிபதி.‘‘விஷயத்துக்கு வா... சோழர்களின் பலத்தை ஏற்கிறாய்... ஆனால், கரிகாலரின் பலத்தை ஏற்க மறுக்கிறாய்... அப்படித்தானே..?’’ சிவகாமியின் நாசி துடித்தது.
‘‘சோழர்கள் வேறு கரிகாலர் வேறா... சில கணங்களுக்கு முன் மாறவர்மர் சொன்னது நினைவில் இருக்கிறதா..? பெயருக்கு நான்கு தெருக்கள்... சில நூறு வீரர்கள்... இவைதான் சோழர்களின் படை... ஆனால், இப்படையைத்தான் தங்களுடன் இணைக்க சாளுக்கியர்கள் முற்பட்டார்கள்; பல்லவர்கள் அந்தப் படையைத்தான் மதித்து தங்களுடன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்... ஏன்..? காரணம், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப அப்படை பெரும் படைகளுக்கே அச்சம் ஏற்படுத்துவதுதான்...
அந்த நூறு பேரில் ஒவ்வொருவரும் ஆயிரம் பேருக்கு சமமாக இருக்கிறார்கள். அப்படி அவர்களை மாற்றியிருப்பதும் எப்போதும் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதும் ஒரேயொருவர்தான். கரிகாலர்..! சாளுக்கியர்களின் படையை எதிர்த்து களத்தில் நிற்கப் போகும் பல்லவ படைக்கு பல்லவ மன்னரோ அல்லது பல்லவ இளவரசரோ தலைமை ஏற்கலாம். ஆனால், அவர்களின் படை வியூகத்தை வகுக்கப் போகிறவர் சாட்சாத் கரிகாலர்தான்!
நம் படை மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைக்கிறாயோ அந்தளவுக்கு பல்லவ படை மீதும் நம்பிக்கை வை... அப்பொதுதான் நம்மால் வெற்றி பெற முடியும். எதிராளியை மதிப்பவனே படைகளை நடத்தும் தகுதி படைத்தவன்!’’ ஆவேசம் வந்ததுபோல் கர்ஜித்த சிவகாமி, சட்டென எழுந்தாள்: ‘‘பல்லவ ஒற்றர் படை லேசுப்பட்டதல்ல.
பல்லவ மன்னராக இருந்த மகேந்திரவர்மரே நம் சாளுக்கியப் படைக்குள் ஊடுருவி ஒற்று பார்த்திருக்கிறார். அஜந்தா குகைக்குள் மாறுவேடத்தில் நுழைந்திருக்கிறார். புரிகிறதல்லவா..? பல்லவ தேசத்தின் மன்னர்களாக இருப்பவர்களும் தேவை ஏற்பட்டால் ஒற்றர்களாக மாறக் கூடியவர்கள். அப்படியிருக்க மதுரை மாநகருக்குள் பல்லவர்களின் சார்பில் கரிகாலர் நுழைந்திருக்கிறார்... ஏன்..? இந்தக் கேள்விதான் என்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது.
சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் நடக்கவிருக்கும் போரில் பாண்டியர்கள் யார் பக்கம் நிற்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்த உண்மை சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தருக்கு புரிந்திருக்கிறது. எனவேதான் தன் சார்பில் தன் மகன் விநயாதித்தரை மதுரைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். சாளுக்கிய இளவரசரும் பாண்டியப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
இதே காரியத்தை பல்லவ இளவரசரான இராஜசிம்மரும் செய்யலாம். பாண்டியர்களிடம் உதவி கேட்டு பகிரங்கமாக வரலாம். சாளுக்கியர்களால் அதைத் தடுக்க முடியாது. ஆனால், பல்லவர்கள் அப்படிச் செய்யவில்லை. மாறாக மாறுவேடத்தில் கரிகாலரை மதுரைக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஏன்..? எந்தக் காரணத்துக்காக கரிகாலர் மதுரைக்கு வந்திருக்கிறார்..? யாரை சந்திக்கப் போகிறார்..?’’இருளில் மறைந்திருந்தபடி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த கரிகாலன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்!
(தொடரும்)
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|