நியூஸ் சாண்ட்விச்



சாண்டா கிளாஸ் யானைகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு உடை அணிந்து பெரிய தொப்பையுடன் வெள்ளை தாடியுடன் சாண்டா கிளாஸ் தாத்தா குழந்தைகளுக்கு பரிசு தருவது வழக்கம். தாய்லாந்தின் ஒரு பள்ளியில், இந்த முறை வித்தியாசமாக கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி நான்கு யானைகளுக்கு சிவப்பு கம்பளமும் தொப்பியும் அணிவித்து, சாண்டா கிளாஸாக அந்த யானைகளை மாற்றினர். பின் யானைகளை தும்பிக்கையால் பரிசுகள் வழங்கச் செய்து, குழந்தைகளை மகிழ்வித்தனர்!.

கண்களாக மாறிய app

‘Be My Eyes’ என்ற இலவச செயலியை தரவிறக்கம் செய்தால், பார்வையற்றோருக்கு நாம் கண்களாக இருக்கலாம். இந்த செயலி மூலம், பார்வையற்றோர் தமக்கு உதவி தேவைப்படும்போது அதிலிருக்கும் வீடியோ காலிங் பட்டனை தட்டினால் போதும். உடனே, மறுமுனையில் தொண்டர்கள் தோன்றி, உணவுப் பண்டங்களில் காலாவதி தேதியை சரிபார்ப்பது முதல் புது இடத்திற்கு வழி சொல்வது வரை தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார்கள்!

பள்ளிக்கு போகமாட்டோம்

குழந்தைகள் நாளுக்கு நாள் பள்ளிக்கு போகாமல் பள்ளிப் படிப்பையே நிறுத்திவிடுகின்றனர். எங்கு தெரியுமா?
ஜப்பானில்!2017ல் மட்டும் சுமார் 26,000 தொடக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளியை புறக்கணித்துள்ளனர். 2018ல், 330 பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், கடுமையான விதிமுறைகளும் கடினமான பாடத்திட்டமும்தான் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

எனவே, பள்ளிக்குப் போக மறுக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பள்ளிகளை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. அதில், அடிப்படை கல்வியுடன் குழந்தைகளின் திறமையை அறிந்து, அதற்கான பயிற்சி மட்டும் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடையில் வரத் தேவையில்லை. எளிமையான வழியில் கல்வி கற்பிக்கப்படும். அவர்களுக்கான நூலகமும், விளையாட்டு இடமும் கூட அரசு உருவாக்கித் தந்திருக்கிறது!

மணமக்களின் புதுமையான போராட்டம்

இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் கேரளாவைச் சேர்ந்த மணமக்கள் வித்தியாசமான முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். திருமண புகைப்படங்கள், திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் என அனைத்திலும், இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலகையை ஏந்தி போஸ் கொடுத்துள்ளனர்.

மேயரான 7 மாதக் குழந்தை

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் வைட் ஹாலில் ஏழு மாத ஆண் குழந்தையான வில்லியம் சார்லஸ் மெக்மில்லியன், மேயராக பணியில் இணைந்தார்!பொதுவாக, இந்த மேயர் பதவி ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தில் விடப்படும். யார் இந்த பதவியை அதிக பணத்தில் வாங்குகிறார்களோ அவர்களே மேயராக தேர்ந்தெடுக்கப்படுவர்.

அதன்படி இந்தாண்டு அனைவராலும் ‘சார்லீ’ என்று அன்பாக அழைக்கப்படும் ஏழு மாதக் குழந்தையின் பெற்றோர், ஏலத்தில் வென்று மேயர் பதவியையும் வென்றிருக்கின்றனர்.

காவலன் செயலி - மூவர் கைது

காவலன் SOS செயலி 2018ல் தமிழ்நாடு காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக அறிமுகமாகி இப்போது அவசர உதவி தேவைப்படும் அனைவருமே பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். மருத்துவர் ப்ரியங்கா ரெட்டிக்கு நேர்ந்த பாலியல் கொடுமைக்குப் பின், மீண்டும் போலீசார் இச்செயலி குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து, சென்னை பிராட்வே - சென்ட்ரல் வழியாக பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு, மூன்று ஆண்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். காவலன் SOS செயலி மூலம் காவல்துறையை அணுகியுள்ளார் அப்பெண். உடனே செயல்பட்ட காவல்துறை, அந்த மூவரையும் கைது செய்துள்ளது.

தேநீர் கோப்பையையும் சாப்பிடலாம்

குவியும் குப்பையைத் தடுப்பதற்கான வழியைக் குறித்து உலக நிபுணர்கள் தினமும் யோசித்து வருகின்றனர்.அந்த வரிசையில் நியூசிலாந்து விமான சேவை ஒன்று, பயணிகளுக்கு சாப்பிடக்கூடிய கோப்பையில் தேநீர் நிரப்பித் தருகிறது. தேநீர் அருந்தியவுடன், கொடுக்கப்பட்ட கோப்பையையும் சேர்த்து சாப்பிடலாம்! வெனிலாசுவையுடன் ஏர்-நியூசிலாந்து விமான சேவையில் இவை கிடைக்கின்றன.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்