நாடு முழுவதும் பற்றி எரிய அதிமுகதான் காரணம்!



மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் அமித்ஷா கடந்த 9ம் தேதி தாக்கல் செய்தார். பாஜகவுக்கு இருக்கும் பெரும்பான்மை காரணமாக அங்கு எளிதில் நிறைவேறியது.
மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் குறைவு என்பதால் அங்கு நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், கடந்த 11ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.

ராஜ்யசபாவில் அதிமுகவின் 11 உறுப்பினர்கள் ஆதரவு இல்லையென்றால் குடியுரிமை மசோதா தோல்வியடைந்திருக்கும். ராஜ்யசபாவில் தோல்வி அடைந்திருந்தால் அது சட்டமாக ஆகியிருக்காது. சட்டமாக ஆகவில்லையென்றால் இவ்வளவு போராட்டங்கள் இந்தியா முழுவதும் வெடித்திருக்காது.

சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவை ஆதரித்ததன் பின்னால் மத்திய அரசின் அழுத்தம் இருந்ததாக அதிமுகவின் ராஜ்யசபா உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“பாஜக கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். ஆனால், மசோதாவின் குறைபாடுகளை நான் அவையில் பேசும்போது சுட்டிக்காட்டியுள்ளேன். ‘முஸ்லிம்கள்’ என்ற சொல் அந்த மசோதாவில் இல்லாதது தவறுதான்...

கட்சி அலுவலகத்தில் நாங்கள் இந்த விவகாரம் பற்றி விவாதித்தபோது, தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த துணைச் செயலாளர் என்னிடம் தொலைபேசியில் பேசி, குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நான் எனது கருத்துக்களை வெளிப்படுத்துவேன் என்று தெளிவுபடுத்தினேன். உங்கள் கருத்தை பதிவு செய்ய நிச்சயமாக உரிமை உண்டு என்று அவர் கூறினார்...

பாஜகவின் நோக்கம் இந்து ராஷ்டிராவை (இந்து தேசத்தை) உருவாக்குவதே. ஆனால், இந்த வார்த்தையை வெளிப்படையாகப் பயன்படுத்தாமல் பல்வேறு வார்த்தைகளின் மூலமாக சொல்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், பாஜக தலைவர்கள், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தை வழிநடத்தும் திரு. அமித்ஷா, தனது நிலைப்பாட்டை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்...” என்று கூறியுள்ளார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்.

குடியுரிமை சீர்திருத்தச் சட்டம்மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா, இதுவரை அமலில் இருந்த குடியுரிமை சட்ட மசோதா 1955க்கு மாற்றாக அமைகிறது. துயர்மிக்க பிரிவினை மற்றும் பெருமளவிலான மக்கள் இந்தியாவுக்கு வந்து குடியேறிய பின்னணியில் அப்போது அந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.

உலகெங்கும் உள்ள யூதர்கள் இஸ்ரேலில் குடியேறுவது ‘திரும்பி வருதல்’ என்றுதான் அழைக்கப்படும். அதுபோல மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சீர்திருத்தச் சட்டமும் இந்துக்கள் ‘திரும்பி வருவதைப்’ பற்றிப் பேசுகிறது.

ஆனால், உடனடியாக இந்துக்களுக்கு பூர்வீக பூமியில் உள்ள உரிமை என்றெல்லாம் பேசாமல், மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் அடக்குமுறைக்கு ஆளான ஆறு சிறுபான்மை மதத்தவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று சொல்கிறது. இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள்... இந்த ஆறில் இஸ்லாமியர்கள் கிடையாது. கேட்டால் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்கள் எதனால் அடக்குமுறைக்கு ஆளாகப்போகிறார்கள் என்று கேட்கிறது.

இந்தக் கேள்வி அடிப்படையிலேயே குடியுரிமையையும், மதத்தையும் பிணைக்கிறது. பல்வேறு அரசியல் காரணங்களால் அடக்குமுறைக்கு ஆளாகுபவர்கள் குடியுரிமை கோரி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவது சகஜம்.

அகதியாக தஞ்சம் கோரி வருபவர்களை அங்கீகரிப்பது, குடியுரிமை வழங்குவது போன்றவை ஒவ்வொரு நபரின் பின்னணி என்ன, அவர் உண்மையிலேயே அடக்குமுறையை, உயிராபத்தைச் சந்தித்துள்ளாரா, அவர் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதையெல்லாம் பரிசீலித்துதான் வழங்க வேண்டும்.

யாருக்காக இச்சட்டம்?

பிறகு ஏன் இப்படி ஒரு சட்டம் என்றால், அசாம்தான் காரணம். அசாமில் வெகுநாட்களாகப் பிற மாநிலத்தவர் அதிக எண்ணிக்கையில் இருப்பதும், வருவாயில் பெரும் பங்கினை அவர்கள் பெறுவதும் சிக்கலாக இருந்துள்ளது. இதில் பிற இந்தியக் குடிமக்களும் அடங்குவர்.
ஆனால், பங்களாதேஷிலிருந்து வந்த அகதிகள் குறித்த பிரச்னையாக இது வடிவம் கொண்டபோது, தேசிய குடியுரிமை பதிவேடு என்ற ஒரு முயற்சியினை பாஜக ஆட்சி மேற்கொண்டது.

யாரெல்லாம் குடியுரிமைக்குத் தகுதியானவர் என்பதற்குப் பல வரையறைகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கான ஆதாரங்களைத் தருபவர்கள் குடிமக்கள், பிறர் அந்நியர் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதபடி, அதில் ஏராளமானோர் இந்துக்களாக இருந்தார்கள்.பாரதீய ஜனதா கட்சி குடியுரிமை ஆதாரம் இல்லாத பங்களாதேஷ் முஸ்லிம்களைத் தடுப்பு முகாம்களில் வைக்க விரும்புகிறது. அவர்களோடு சேர்ந்து இந்துக்களையும் வைக்க விரும்பவில்லை. அதற்காகத்தான் அவசரமாகக் குடியுரிமை சீர்திருத்தச் சட்டம்.

பங்களாதேஷ் அகதிகளை மத அடிப்படையில் வேறுபடுத்துவது என்பது, இந்துக்களுக்கு இந்தியாவின் மீது அதிக உரிமையும், இஸ்லாமியர்களுக்குக் குறைந்த உரிமையும் இருப்பதாகச் சொல்லுவதற்குச் சமம் என்பதால் இந்தச் சட்டம் குடியுரிமையின் அடிப்படைகளைக் குழிதோண்டிப் புதைக்கிறது.
மாநில அரசுகளின் எதிர்ப்புசட்டத் திருத்தத்திற்கு பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன.

மக்கள் குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிராகவுள்ளதாக தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர், இதனை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதேபோல பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச மாநில முதல்வர்களும் இதனை தங்கள் மாநிலங்களில் அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டனர்.

ஆனால், மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் மத்தியப் பட்டியலின் கீழ் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் மீது சட்டமியற்ற மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மத்திய அரசுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவகாரங்கள் தொடா்பாக இயற்றப்படும் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை, ரயில்வே துறை, குடியுரிமை சார்ந்த விஷயங்கள் மத்திய அரசின் பட்டியலின் கீழ் வருவன. இதுபோல் மொத்த 97 அம்சங்கள் நிறைந்த பட்டியலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது மத்திய அரசு. இதில் மாநில அரசுகள் கருத்துத் தெரிவிக்க முடியாது.மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் அரசுகளும் இச்சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறியுள்ளன.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட மசோதாவில் சாதகமாயிருக்கும் இந்து, சீக்கியர், ஜெயின், புத்தம், கிறிஸ்துவம் மற்றும் பார்சிகள் அதிகம் இருக்கும் பகுதிகளாக உள்ள மேற்குவங்கம், அசாம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்தான் கடுமையான எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

இலங்கைத் தமிழரின் நிலைபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வாழ் இலங்கை அகதிகளை குடியுரிமை பட்டியலில் சேர்க்காதது முகாம்
களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக போன்ற தமிழக கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

பலரது பிள்ளைகள் இங்கேயே பிறந்து, வளர்ந்து பட்டங்கள் பெற்றும் அவர்களால் சரியான வேலைக்குப் போகமுடியாமல், கூலி வேலைகளுக்குப்போக வேண்டிய நிலை இருக்கிறது, குடியுரிமை இல்லாததால் அவர்களால் மற்றவர்களைப் போல அரசாங்க வேலைக்குப்போகமுடியாத நிலை ஏற்படுகிறது.  

விடுதலைக்குப் பிந்திய சுமார் 70 ஆண்டுகாலத்தில் இலங்கையில் இந்துக்கள் மீது கொடுமை நடப்பதால்தான் 12 லட்சம் இந்துக்கள் உலகம் முழுவதும் 40 நாடுகளில் குடிபெயர்ந்து வாழ்கிறார்கள். அப்படிச் சென்ற நாடுகளில் இந்தியா தவிர பிற நாடுகளில் எல்லாம் இலங்கை இந்துக்களுக்கு குடியுரிமை கொடுத்திருக்கிறார்கள்.

1983க்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏறத்தாழ இரண்டரை லட்சம் இந்துக்கள் குடியுரிமை அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள்.“அண்டை நாடுகளில் இருந்து மதரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை தருவது என்றால், மியான்மரும் அண்டை நாடுதான், இலங்கையும் அண்டை நாடுதான்.

இலங்கையில் இந்தியாவின் கொள்கை காரணமாகவே தமிழர்கள் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். மியான்மரில் இருந்து மதரீதியிலான துன்புறுத்தலுக்கு இலக்காகி வந்த ரோஹிஞ்சா அகதிகள் இருக்கிறார்கள்.பாகிஸ்தானில்கூட துன்புறுத்தலுக்கு இலக்கான அகமதியா முஸ்லிம்கள் இருக்கிறார்கள். எனவே மதரீதியாக முஸ்லிம்களையும், இனரீதியாக தமிழர்களையும் விலக்கி வைக்கும் வகையிலேயே இந்த குடியுரிமை மசோதா அமைந்திருக்கிறது...’’ என்பதே தமிழக எதிர்க்கட்சிகளின் குரலாக இருக்கிறது.

மொத்தத்தில் நாடெங்கும் பற்றி எரிகிறது. இந்தச் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பாஜகவை விட, இச்சட்டம் நிறைவேறக் காரணமாக இருந்த அதிமுகவே முதல் குற்றவாளி என பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் ஒரே குரலில் குற்றம் சுமத்துகிறார்கள்!

அன்னம் அரசு