e Blogger வந்தது...200க்கும் மேற்பட்ட தமிழ் பெண் எழுத்தாளர்கள் பிறந்திருக்கிறார்கள்!



சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள பெண் நாவலாசிரியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ரமணி சந்திரன், லஷ்மி, அனுராதா ரமணன், இந்துமதி, சிவசங்கரி... என வெகுசிலரே அப்போது பெண் வாசகிகளின் ஆதர்சமாக விளங்கினர்.

பின்னர் இவர்களுடன் முத்துலட்சுமி ராகவன், கலா உள்ளிட்டவர்கள் நீங்கா இடம்பிடித்தனர். ஆனால், இன்று இருநூறுக்கும் மேற்பட்ட பெண் நாவலாசிரியர்கள் வந்துவிட்டனர்! இதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் நூறு பெண் நாவலாசிரியர்களை அறிமுகப்படுத்தியுள்ளது ‘அருணோதயம்’ பதிப்பகம்.

‘‘ஆரம்பத்துல இருந்தே நிறைய பெண் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்திட்டு வர்றோம். ரமணி சந்திரனை முதன்முதலா அறிமுகப்படுத்தினது நாங்கதான். இப்ப நிறைய பெண்கள் இந்த ஃபீல்டுக்கு வந்திருக்காங்க. அதுவும் சின்னச் சின்னக் கிராமங்கள்ல இருந்தெல்லாம் பலர் சிறப்பா எழுதுறாங்க. அவங்கள தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்துறோம்...’’ என்கிற ‘அருணோதயம்’ பதிப்பகத்தின் வெங்கடாசலம் இப்போது பிரபலமாகியுள்ள பெண் நாவலாசிரியர்களின் நீண்ட பட்டியலை வாசித்தார். மலைப்பாக இருக்கிறது.

‘‘ரமணி சந்திரன் மாதிரி இவங்க ஃபேமஸ் இல்லதான். ஆனா, வாசகர்களிடையே நல்லா அறிமுகமாகிட்டாங்க. குறிப்பா, அருணா நந்தினி, என்.சீதாலெட்சுமி, பிரேமா, அமுதவல்லி கல்யாணசுந்தரம்னு சிலரின் நாவல்கள் நல்லா போகுது. தவிர, சியாமளா கோபு, திருமதி லாவண்யா, தமிழ் நிவேதா, ராஜேஸ்வரினு நிறைய பேர் இந்தப் பட்டியல்ல இருக்காங்க. இதுக்கெல்லாம் ப்ளாக் (Blog) - வலைத்தளம் ஒரு பெரிய வரப்பிரசாதமா இருக்கு.

எங்க வாசகர்கள் 99 சதவீதம் பெண்கள்தான். அவங்க செக்ஸியா, அசிங்கமா இருந்தா ஏத்துக்க மாட்டாங்க. நல்ல முடிவுள்ள பாசிட்டிவ் கதைகளா இருக்கணும். அதை இந்த எழுத்தாளர்கள் கொடுக்கறாங்க.

முன்னாடியெல்லாம் பெண் எழுத்தாளர்கள் நேர்லேயே வந்து நாவலைக் கொடுப்பாங்க. நாங்க அதை படிச்சு சொல்றதுக்கு நாலஞ்சு பேர் வச்சிருப்போம். நல்லா போகும்னு தெரிஞ்சா புத்தகமா போடுவோம். இப்ப பிளாக்ல எழுதறதால கண்டறிவது கஷ்டமா இருக்கு.

இவங்களோடது விற்குமா விற்காதானு குழப்பம் வருது. முன்னாடி ‘அருணோதய’த்துல வர்ற புத்தகம் நல்லாயிருக்கும்னு எல்லாத்தையும் வாங்கிட்டு இருந்தாங்க. இப்ப நிறைய பெண் எழுத்தாளர்கள் வந்ததால வாசகர்களும் தேர்ந்தெடுத்தே வாங்கிப் படிக்கிறாங்க.

அதேமாதிரி புது எழுத்தாளர்கள் பலரும் ரமணி சந்திரனையொட்டி படிக்க ஆரம்பிச்சவங்க. இப்ப எழுத ஆரம்பிச்சதும் அந்த சாயல் ஊடே வந்துடுது. அதனால வாசகர்கள்கிட்ட இதை வாங்கலாமா வேண்டாமாங்கிற யோசனையும் இருக்கு. அதைத் தாண்டி எழுதற எழுத்தாளர்கள் ஜெயிக்கறாங்க. நாங்க அறிமுகப்படுத்தின எல்லோரும் வெவ்வேறு தளங்கள்ல சிறப்பா எழுதக்கூடியவங்க...’’ என்கிறார் வெங்கடாசலம்.

இனி வருவது புதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் சில பெண் எழுத்தாளர்களின் ப்ரொஃபைல். ரேண்டமாகதான் தேர்வு செய்திருக்கிறோம். இது முழுமையான பட்டியலும் அல்ல; விற்பனை அடிப்படையிலான வரிசையும் அல்ல.

என்.சீதாலெட்சுமி

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் ஊரைச் சேர்ந்த என்.சீதாலட்சுமி இப்போது சிங்கப்பூரில் வசிக்கிறார். பி.டெக்.,எம்.எஸ். முடித்துள்ள இவர் அங்குள்ள அமெரிக்க வங்கியில் உதவி துணைத் தலைவராக இருக்கிறார்.‘‘2009லிருந்து எழுதிட்டு இருக்கேன். எனக்கு கல்கி ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுலயிருந்தே வாசிக்கிற ஆர்வம் உண்டு. எங்க அப்பத்தாதான் தமிழ்ல வாசிக்கவும் படிக்கவும் சொல்லிக் கொடுத்தாங்க. கதைகளும் நிறைய சொல்வாங்க. பள்ளிகள்ல அதிகம் பேசுவேன்.

மத்தவங்களை விட கவனிக்கும் திறன் எனக்கு அதிகம் இருந்துச்சு. அதை அப்படியே எழுத்தா மாத்தினேன். ஆரம்பத்துல ப்ளாக்தான் என்னுடைய ஃபேவரைட். பிறகு, அதில் எழுதியவை புத்தகமா வெளியானது. ‘நிலவே மலர்ந்திடு’, ‘தொடுவானம்’, ‘பூச்சரம்’னு இதுவரை 33 நாவல்கள் புத்தகமா வந்திருக்கு. மூணு நாவல்கள் கையெழுத்துவடிவில் அப்படியே இருக்கு. அதாவது 36 வயசுல 36 நாவல்கள் எழுதியிருக்கேன்!

இரண்டாவது பையன் பிறந்த பிறகு கொஞ்சம் எழுதுறதை நிறுத்தியிருந்தேன். அப்புறம், அலுவலகப் பணியும் அதிகமாயிடுச்சு. கடந்த வாரம்தான் புது நாவல் எழுதத் தொடங்கியிருக்கேன். 2020 நல்ல ஆண்டாக இருக்கும்!’’  

அருணா நந்தினி

இப்போது பெங்களூரில் வசித்துவரும் அருணா நந்தினியின் நிஜப்பெயர் ராஜேஸ்வரி. சொந்த ஊர் திண்டுக்கல். ‘‘ஆரம்பத்துல ராஜேஸ்வரி பெயர்ல ‘மங்கையர் மலர்’ல எழுதிட்டிருந்தேன். பிறகு, மதுமதினு எழுதினேன். அப்புறம், லஷ்மி ஸ்லோகத்துல வர்ற அருணா நந்தினி பெயர் அழகாக இருந்துச்சு. அதனால, அந்தப் பெயரை வச்சிக்கிட்டேன். மதுமதி பெயர்ல ‘முற்பகல் செய்யின்’னு நான் எழுதிய சிறுகதை சிங்கப்பூர் பல்கலைக்கழகத்துல பாடமா வச்சிருக்காங்க.

எட்டாம் வகுப்புல இருந்தே வாசிப்புப் பழக்கம் இருக்கு. எங்கப்பா வீட்டுலயே ஒரு நூலகம் மாதிரி புத்தகங்களை அலமாரியில அடுக்கி வச்சிருப்பார். அதிலிருந்து நிறைய படிப்பேன். பிறகு, எழுதி பார்க்கணும்னு ஆசை வந்துச்சு. பதினெட்டு வயசுல ஒரு சிறுகதை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். திரும்ப வந்துடுச்சு. ஆரம்பத்துல சிறுகதைகளா எழுதினேன். 1979ல் ‘அழகை ஆராதித்து’னு முதல் சிறுகதை, ‘தேவி’ பத்திரிகையில் வந்துச்சு. தொடர்ந்து ‘கலைமகள்’ பத்திரிகையில குறுநாவல் போட்டி நடத்தினாங்க. அதுல ரெண்டாவதாக என்னோட நாவல் தேர்வாச்சு.

பிறகு, நாவல் எழுதத் தொடங்கினேன். முதல் நாவல் ‘விண்ணைத் தேடும் வெண்புறா’ ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் வெளியாச்சு. எனக்கு ஆதர்சம் லஷ்மிதான். அவங்க நாவலும் எழுத்து நடையும் ரொம்பப் பிடிக்கும். ஆனா, இந்தக் குடும்ப நாவல்களைத் தாண்டி ஜெயகாந்தன், அம்பை உள்ளிட்ட நிறைய பேர்களின் நாவல்களையும் வாசிச்சிருக்கேன்.

2000ம் ஆண்டில் இருந்து புத்தகங்களா என் நாவல் வந்துட்டு இருக்கு. இதுவரை 45 நாவல்கள் எழுதியிருக்கேன். என்னுடைய, ‘ராதா காதல் வராதா’ நாவலைப் படிச்சிட்டு ஒரு பொண்ணு, ‘உங்கக் கதைல வர்ற மாதிரி எனக்கு கணவர் அமையணும் மேடம்’னு சொன்னாங்க. இன்னும் சிலர், ‘அந்த நாவலைப் படிச்சிட்டு, மனசு மாறினேன். பிரச்னைகள் தீர்ந்துச்சு’னு சொல்லியிருக்காங்க.

இதையெல்லாம் கேட்கறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். என்னுடைய கதைகள்ல நான் எதையும் நெகட்டிவ்வா சொன்னதில்ல. அதுல ஒரு செய்தி இருக்கணும்னு மட்டும் நினைப்பேன். அவ்வளவுதான். பயணம் செய்யும்போதும், வெளியே போகும்போதும் உன்னிப்பா கவனிப்பேன். இதுல இருந்து என் கதைக்கான கரு கிடைக்குது.

சில கதைகள் எல்லாம் இருபது வருஷங்கள் வரை மனசுல வச்சிருந்து அதை எழுத்தா மாத்தியிருக்கேன். சிலது வேலை செஞ்சிட்டு இருக்குறப்ப ப்ளாஷ் ஆகும். ஆனா, இப்படித்தான் எழுதணும்னு தீர்மானம் செய்றதில்ல.  இந்த வருஷம் ‘சொந்தமடி நீ எனக்கு’ நாவல் பிரசுரமாகியிருக்கு. இந்த மாசம் கொடுக்குறதுக்காக இப்ப ஒரு கதை எழுதிட்டு யிருக்கிறேன்...’’ என்கிறவருக்கு 67 வயதாகிறது.

அமுதவல்லி கல்யாணசுந்தரம்

கடந்த 2007ம் ஆண்டு ‘வானம் வசப்படும்’ என்ற தன்னுடைய முதல் நாவல் வழியே வாசகர்களை வசப்படுத்தியவர் அமுதவல்லி கல்யாணசுந்தரம். இதுவரை 51 நாவல்கள் எழுதியிருக்கிறார். ஐஏஎஸ் அதிகாரியான இவர் இப்போது சுற்றுலாத்துறையின் இயக்குநராக உள்ளார்.
‘‘எனக்கு மதுரை பக்கம் திருப்பரங்குன்றம். எம்.எஸ்சி வேளாண்மை படிச்சேன். அடுத்து எம்பிஏ பண்ணினேன். சின்ன வயசுலயிருந்து வாசிக்கிற பழக்கம் இருந்துச்சு. என் ஆதர்சமா ரமணி சந்திரன் இருந்தாங்க. அவங்க நாவல்கள் எல்லாம் படிச்சுடுவேன்.

போட்டித் தேர்வுல வெற்றிபெற்று ஊரக வளர்ச்சித் துறைல மூணு வருஷம் பணியாற்றினேன். அப்புறம், தமிழ்நாடு தேர்வாணையத்தின் வழியா தேர்வெழுதி பணிக்கு வந்தேன். 2005ல் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வானேன்.

ஆரம்பத்துல ப்ளாக்ல எழுதிட்டு இருந்தேன். நிறைய கமெண்ட்கள் வரும். அது என்னுடைய எழுத்தாற்றலைச் செழுமையாக்குச்சு. நாலஞ்சு வருஷம் கழிச்சு பத்து நாவல்கள் எழுதின பிறகுதான் எல்லாம் புத்தகமாச்சு. நான் ஆர்.டி.ஓ.வாக இருக்கும்போது மக்கள் தங்கள் பிரச்னைகளை கோரிக்கை மனுக்களா கொண்டு வருவாங்க.

அது ஒவ்வொண்ணும் நூறு கதைகள் சொல்லும். இப்படி பிரச்னைகளைக் கருவாக வச்சிக்கிட்டு எழுதுவேன். குறிப்பா, ‘குடும்பம் ெராம்ப முக்கியம்… விட்டுக் கொடுத்து வாழணும்… கணவன் மனைவி தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள் வெளிப்படையா பேசித் தீர்க்கணும்’னு குடும்ப மதிப்பீடு பற்றியே என்னுடைய கதைகள் இருக்கும்!’’

பிரேமா

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பிரேமா, இன்ஜினியரிங் பட்டதாரி. இப்போது சென்னையில் வசித்து வருகிறார். ‘பிரேமா நாவல்ஸ்’ என்கிற இவரின் முகநூல் பக்கத்திற்கு பெரும் வாசகர் கூட்டமே இருக்கிறது. இதுவரை 24 நாவல்கள் எழுதியிருக்கிறார்.‘‘2013லதான் எழுத ஆரம்பிச்சேன். எழுத்தாளர் ஆவேன்னு கனவுலயும் நினைக்கல. சின்ன வயசுல யிருந்தே வாசிப்புப் பழக்கம் உண்டு. ப்ளஸ் டூ படிக்கும்போது குடும்ப நாவல்கள் படிக்கத் தொடங்கினேன். என் ஆதர்சம் சிவசங்கரி அம்மாதான். அவங்க நாவல்கள் நிறைய வாசிப்பேன்.

அப்புறம், க்ரைம் நாவல்கள், ‘பெண்மணி’, ‘கண்மணி’ல வர்ற நாவல்கள்னு எல்லாத்தையும் ஒண்ணு விடாமல் படிப்பேன். 1997ல் திருமணமாகி சென்னை வந்த பிறகு வாசிப்பு குறைஞ்சது. குடும்பம், குழந்தைகள்னு வாழ்க்கை நகர்ந்துச்சு. பிறகு, ப்ளாக்ல எழுதுறவங்கள ஃபாலோ பண்ணி அதுல வர்ற கதைகளைப் படிச்சேன். அதற்கு நிறைய கமெண்ட்டுகளும் போட்டேன்.

அந்தக் கமெண்ட்களை ரசிச்ச பலரும் நீங்களும் எழுதலாமேனு நம்பிக்கை கொடுத்தாங்க. அப்படித் தான் என்னோட முதல் நாவலான ‘காத்திருந்தேன் உனது காதலுக்காக’வை ப்ளாக்ல எழுதினேன். பாராட்டுகள் குவிஞ்சது.

தொடர்ந்து 24 நாவல்கள் எழுதினேன். இப்ப ஒன்றரை வருஷமா எழுதல. நான், இலக்கியத் தரமான நாவல்கள் எதுவும் வாசிச்சதில்ல. குடும்ப நாவல்கள் மட்டும்தான். எனக்கு எளிமையான நடையில இருக்கிற எழுத்துக்களை வாசிக்கப் பிடிச்சிருக்கு. என்னோட வாசகர்களும் அதையே விரும்பறாங்க.

கதைக்கான கரு எப்படி உருவாகுதுனு எனக்குத் தெரியல. அதுவா வருது. என்னோட கதைகள் வாசகர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கணும். அவ்வளவுதான். ஒரு வாசகர் என்னோட கமெண்ட் பாக்ஸ்ல ‘உங்க கதைகள் படிக்கிறப்ப மனஅழுத்தம் குறைஞ்சு சந்தோஷத்தைக் கொடுக்குது’னு எழுதியிருந்தார். இதுமாதிரி நிறைய வாசகர்கள் சொல்லியிருக்காங்க. அதுவே எனக்கான அங்கீகாரமா நினைக்கிறேன். இப்ப நீண்ட இடைவெளிக்குப் பிறகு 25வது நாவலை எழுதிட்டிருக்கேன்...’’                      

பேராச்சி கண்ணன்