தொல்(லைக்) காப்பியம்
தருமி: சொக்கா, சொக்கா, ‘வந்து விளையாடி, வாங்கிக்கோ ஒரு கோடி’ நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்திருக்கு. ஒரு கோடிய ஜெயிச்சா, விக்கிற விலைவாசிக்கு ரெண்டு மாச மளிகை சாமான் வாங்கிடுவேன். குழந்தைங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டு மிச்சமிருக்கிற பணத்துல அரைக் கிலோ வெங்காயம் வாங்கி பேங்க் லாக்கரில் போட்டுடுவேன். எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா? ஐயோ, சொக்கா, சொக்கா... அருள் புரிய மாட்டாயா? என் சாப்பாட்டுக்கு ஒரு ஏற்பாடு செய்ய மாட்டாயா? சொக்கர்: புலவனே...
 தருமி: யாருய்யா அது? கட்டைக் குரல்ல கரகரப்பிரியா ராகம் பாடுற மாதிரி... சொக்கர்: அழைத்தது நான்தான்!தருமி: யாருங்க நீங்க? ஏன் அழைச்சீங்க? சொக்கர்: ஏர் எடுத்தால் நான் உழவன், ஏடு எடுத்தால் நான் புலவன்..!தருமி: எதுவுமே எடுக்க முடியாத கிழவன் சாமி நான். ஒரு கோடி ஜெயிக்கணும்னு தெருக்கோடில நின்னுக்கிட்டு இருக்கேன். டைமிங் தெரியாம என்கிட்டே வந்து ரைமிங்ல பேசுறீங்க... சொக்கர்: ஒரு கோடிக்கான எல்லா கேள்விகளும் தெரிந்துவிட்டால் நீ ஜெயித்துவிடுவாய் அல்லவா?
தருமி: ஆஹா... பருத்தி நூல் இருந்தாலே பட்டம் விடுவேன், பட்டு நூல் கிடைச்சா ஃபிளைட்டையே விடுவேன். ஆனா, உங்கள நம்பறமாதிரி இல்ல. சொக்கர்: ஆறுகிற புண் ஊரத்தான் செய்யும். என் திறமை மீது சந்தேகம் இருந்தால், என்னை டெஸ்ட் செய்து பாரேன், உனக்கு திறமையிருந்தால்... தருமி: கொய்யாலே... என்கிட்டயே லந்தா? நானெல்லாம் கரண்ட் கம்பியை எடுத்து காது குடையறவன். தென்னை மரத்தை புடுங்கி முதுகு சொறியறவன்.
சொக்கர்: கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா? தருமி: யோவ் இருய்யா... எட்டி தாவிக்கிட்டே இருந்தா வெட்டுக்கிளினாலும் முட்டி வலிக்கும். நானே கேட்கிறேன். எனக்குக் கேட்க மட்டும்தான் தெரியும்! சொக்கர்: கேளும்! தருமி: பிரிக்க முடியாதது எதுவோ? சொக்கர்: ஆளுங்கட்சியும் தேர்தல் ஆணையமும்! தருமி: பிரிந்தே இருப்பது? சொக்கர்: நல்லாட்சியும் நேர்மை, நாணயமும்! தருமி: சேர்ந்தே இருப்பது? சொக்கர்: மோடியும் அமித்ஷாவும்! தருமி: சேராமல் இருப்பது? சொக்கர்: ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும்! தருமி: மாறிக்கொண்டே இருப்பது? சொக்கர்: பாட்டாளி மக்கள் கட்சி!
தருமி: மாறாமல் இருப்பது? சொக்கர்: நாடாளும் மக்கள் கட்சி! தருமி : சொல்லக்கூடியது? சொக்கர்: ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்கிறோம்னு! தருமி: சொல்லக் கூடாதது? சொக்கர்: கூட்டணிக்கு எவ்வளவு கொடுக்கிறோம்னு! தருமி: செய்ய வேண்டியது? சொக்கர்: மக்கள் மனதைப் படிப்பது! தருமி: செய்து கொண்டிருப்பது? சொக்கர்: மக்களை மதத்தால் பிரிப்பது! தருமி: பார்க்கக் கூடாதது? சொக்கர்: ராஜேந்திர பாலாஜி பேட்டி!
தருமி: பார்த்து ரசிப்பது? சொக்கர்: செல்லூர் ராஜு பேட்டி! தருமி: தெரியாமல் ஏமாறுவது? சொக்கர்: பொதுத்தேர்தல்! தருமி: தெரிஞ்சே ஏமாறுவது? சொக்கர்: இடைத்தேர்தல்! தருமி: மறக்கக் கூடியது? சொக்கர்: 2000 ரூபா நோட்டுல ஜிபிஎஸ் இருக்குன்னு சொன்னதை!
தருமி: மறக்க முடியாதது? சொக்கர்: ஆளுக்கு 15 லட்சம் போடுறேன்னு சொன்னதை! தருமி: இந்தியாவில் அழிக்க முடியாதது? சொக்கர்: காதல்! தருமி: இந்தியாவில் ஒழிக்க முடியாதது? சொக்கர்: ஊழல்! தருமி: ஆட்சி செய்ய வேண்டியது? சொக்கர்: நாடு நல்லாயிருக்க..! தருமி: ஆட்சி செஞ்சுக்கிட்டு இருக்கிறது?
சொக்கர்: மாடு நல்லாயிருக்க..! தருமி: அய்யா... நீர் சிறகை வச்சே விறகைத் தூக்கும் ஆள். பாலிடிக்ஸ் போதும், எண்டர்டெயின்மெண்டுக்கு வாரும். எல்லோருக்கும் தெரிந்தது? சொக்கர்: ரஜினி பட ரிலீஸ் தேதி! தருமி: யாருக்குமே தெரியாதது? சொக்கர்: சிம்பு பட ரிலீஸ் தேதி! தருமி: ஹீரோன்னா? சொக்கர்: மாஸா இருக்கணும்! தருமி: ஹீரோயின்னா? சொக்கர்: லூசா இருக்கணும்! தருமி: இன்னைக்கும் இளமை? சொக்கர்: திரிஷா கிருஷ்ணன்! தருமி: என்னைக்கும் இளமை?
சொக்கர்: ரம்யா கிருஷ்ணன்! தருமி: இன்னைக்குடிரெண்ட்? சொக்கர்: திரில்லர் படம்! தருமி: என்னைக்குமே டிரெண்ட்? சொக்கர்: பேய் படம்! தருமி: நல்ல படம்? சொக்கர்: எப்படியும் ஓடும்! தருமி: மொக்க படம்? சொக்கர்: எப்படிடா ஓடும்?! தருமி: அய்யோ போதும் போதும்... ஆள விடுங்க! நீங்க கடலெண்ணெய் கூட கடன்ல வாங்கற ரேஞ்சுன்னு நினைச்சேன்... நீங்களெல்லாம் கடல்லயே எண்ணெய் எடுக்கிற ரேஞ்சுன்னு புரிஞ்சுக்கிட்டேன்!
- தோட்டா ஜெகன்
|