கார்ப்பரேட் வேலையை உதறிட்டு இயக்குநரானேன்! காளிதாஸ் ஸ்ரீசெந்தில்



சமீபத்தில் வெளியான ஒரு டஜன் படங்களில் திரைக்கதையில் ‘சபாஷ்’ சொல்ல வைத்த படம், ‘காளிதாஸ்’.யூகிக்க முடியாத காட்சிகள், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட், சண்டைக்காட்சிகளே இல்லாத ஒரு போலீஸ் ஸ்டோரி... என கவர்ந்திழுக்கிறான் ‘காளிதாஸ்’.பரத், சுரேஷ்மேனன், ஆதவ் கண்ணதாசன் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் ஸ்ரீசெந்தில்.

‘‘இந்த படத்தை மக்கள்கிட்ட கொண்டு சேர்த்ததே, பத்திரிகையாளர்கள்தான். அவங்களுக்கு மிகப்பெரிய நன்றி. படம் முடிஞ்சதும், ஆடியன்ஸ் எழுந்து நின்னு கைத்தட்டி மகிழறாங்க. சந்தோஷமா இருந்தது.என்னை சுத்தி இருக்கறவங்க, இந்த இண்டஸ்ட்ரில இருக்கறவங்கனு கிடைச்ச பாராட்டுக்களை விட, மக்களோட க்ளாப்ஸை பெருசா நினைக்கறேன். கன்டன்ட் நல்லா இருந்தா, நாங்க ஜெயிக்க வைப்போம்னு மக்கள் மறுபடியும் நிரூபிச்சிருக்காங்க...’’ திருப்தியாக மகிழ்கிறார் செந்தில்.

‘‘பூர்வீகம் சிவகங்கை பக்கம் தேவகோட்டை. சின்ன வயசுல இருந்தே படங்களை விரும்பிப் பார்ப்பேன். என்ஜினியரிங் முடிச்சுட்டு எம்பிஏ பண்ணினேன். அங்கிருந்து கார்ப்பரேட் கம்பெனில வேலை.எனக்குள் இருந்த சினிமா கனவு துரத்திக்கிட்டே இருந்தது. ஒரு சேனல் நடத்தின மியூசிக் ஆல்பம் போட்டில பங்கேற்று பரிசும் வாங்கியிருக்கேன். ஹாரீஸ் ஜெயராஜ், கௌதம் மேனன், விஜய் ஆண்டனினு பலரும் அந்த ஃபங்ஷனுக்கு வந்திருந்தாங்க. அதில் பூஸ்ட் அப் ஆனேன்.

அடுத்து குறும்படங்கள் பண்ண ஆரம்பிச்சேன். பாரதியாரை பத்தி ‘சுப்ரமணி’ அப்புறம் ‘சீலக்காரி’, ‘சுனாமி ஒரு காதல்’னு 12 ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணியிருக்கேன். ‘நாளைய இயக்குநர்’ சீஸன் 3ல என் குறும்படமும் கவனம் ஈர்த்தது.இதுக்குள்ள என் வேலையை உதறியிருந்தேன். தெம்போட சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் பண்ண ஆரம்பிச்சேன். கதை ரெடியானதும், தயாரிப்பாளர் தேடல். அந்த டைம்ல ‘நாளைய இயக்குநர்’ கிரியேட்டிவ் ஹெட் சிவனேசனை சந்திச்சேன். அவரே தயாரிப்பாளர் ஆனார். கூடவே பைரவி, மணி தினகரன் இணைஞ்சாங்க.

இந்த படத்து மேல எங்க எல்லாருக்கும் நம்பிக்கை வரக் காரணம் பரத். அவர்கிட்ட இந்தக் கதையைச் சொன்னதும் ‘எப்ப ஷூட்’னு கேட்டார்.
அப்பவே எங்களுக்கு உற்சாகம் வந்துடுச்சு.இது சண்டைக் காட்சிகளே இல்லாத ஒரு நிஜ போலீஸ் கதை. சில போலீஸ் அதிகாரிகளை சந்திச்சு பரத் ஹோம் ஒர்க் பண்ணினார். ஜிம்முக்கு போய் ஃபிட்டானார். முக்கியமா இயக்குநரான என்னை நம்பினார்.

ஆதவ் கண்ணதாசனும் வில்லனா பிச்சு உதறினார். முழுக்கவே சென்னைல ஷூட். அதனால எளிதா முடிச்சுட்டோம். ஆனா, வியாபாரம் ஆரம்பிக்கும் போதுதான் எதார்த்தம் புரிஞ்சுது. கொஞ்சம் போராட்டமாகத்தான் இருந்தது.இப்ப மீடியாவால படம் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. முதல் படத்துலயே நல்ல டீம் அமைஞ்சது வரம்தான்...’’ மகிழ்கிறார் செந்தில்.

மை.பாரதிராஜா