CAA - NRC- NPR... இதெல்லாம் என்ன?



கடந்த வாரம் முழுதும் CAA - NRC - NPR என்ற சொற்கள்தான் வைரல். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் CAB எனப்படும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது, அது மசோதா அல்ல; சட்டம். எனவே, இனி அதன் பெயர் Citizenship Amendment Act - CAA. அதாவது,

குடியுரிமை திருத்தச் சட்டம்.
இந்த மசோதா மீதான விவாதம் நடந்தபோதே காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல எதிர்க் கட்சிகள் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தன. மதச் சார்பற்ற இந்தியாவை மதரீதியாகப் பிளவுபடுத்தும் மோசமான சட்டம் இது என்பது எதிர்க் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

இந்த மசோதா, சட்டமாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, வட கிழக்கு மாநிலங்கள் கொந்தளித்தன. அசாம், திரிபுராவில் பெரும் போராட்டங்கள் நடந்தன. மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் தமிழகத்திலும்கூட போராட்டங்கள் தொடங்கின.

எல்லாவற்றுக்கும் உச்சமாக தில்லியின் ஜாமியா பல்கலைக் கழகத்தில் பெரிய கலவரம் வெடித்தது. போலீசார் மாணவர்களைத் தாக்கியதும் போலீசாருடன் சேர்ந்து சங்பரிவார் தொண்டர்கள் தாக்கியதுமான வீடியோக்கள் நாடு முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இப்படி போராட்டங்கள், அரசின் ஒடுக்குமுறை ஒரு பக்கம் என்றால் மக்களில் பலருக்கும் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.
சி.ஏ.ஏ என்பது என்ன? அதன் விளைவுகள் என்னென்னவாக இருக்கும்? வாங்க பார்க்கலாம்!

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)பாஜக அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்ற, முன்பே மசோதா தாக்கல் செய்தது. அப்போது வடகிழக்கு மாகாணங்களில் பிரச்னையாகவே மக்களவையில் நிறைவேறாமலேயே மசோதா காலாவதியாகிவிட்டது.

இப்போது, இதனை நிறைவேற்றியுள்ளது.இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து சுதந்திரத்துக்கு முன்பும் பின்புமாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக அந்தந்த நாட்டு மக்கள் அகதிகளாக வெளியேறி இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் குடியேறினர்; வசிக்கத் தொடங்கினர்; வசித்து வருகின்றனர்.

காஷ்மீர், அசாம், திரிபுரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு சமூக மக்கள் இப்படி வசிக்கின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை அகதிகள் பாதுகாப்புக்குத் தனித்துவமான சட்டங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் மனிதநேய அடிப்படையில் இப்படியானவர்கள் வசிப்பதை இதுவரையான அரசுகள் தடுக்கவில்லை.

அதே சமயம், ‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவுக்குள் நுழைந்த இந்தியர் அல்லாதவர்களை நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் வெளியேற்றுவோம்’ என்று பாஜக நீண்ட வருடங்களாகச் சொல்லி வருகிறது. இப்போது ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றி இருக்கிறது. இந்தப் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற இஸ்லாமிய நாடுகளிலிருந்து மத விவகாரங்களுக்காக இன்னல்பட்டு வெளியேறிய அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேற்கூறிய மூன்று நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் என்பதால் இஸ்லாம் தவிர, இந்து, கிறிஸ்துவம், பெளத்தம், சமணம், சீக்கியம் உள்ளிட்ட பதினொரு மதப் பிரிவினருக்கு குடியுரிமை வழங்க முன்வந்துள்ளது இந்தச் சட்டம்.இதுதான் பிரச்னையின் மையமானது. எல்லா மத அகதிகளையும் இந்தியராக்க அனுமதிக்கும்போது இஸ்லாமியர்களை மட்டும் ஏன் அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்? இந்தப் பாகுபாடு இந்தியாவின் இறையாண்மைக்கும் மதச்சார்பற்ற தன்மையைப் பேசும் சிவில் சட்டத்துக்கும் எதிரானது... என்று போராட்டங்கள் தொடங்கின.

தமிழகத்தில் ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை ஏன் வழங்க முடியாது என்றும் குரல்கள் எழுந்துள்ளன. சிஏஏ சட்டத்தைப் பொறுத்தவரை கடுமையாகப் பாதிக்கப்படுவது வட இந்தியாதான். குறிப்பாக, வட கிழக்கு மாநிலங்கள்தான். அதனால்தான் அசாம் போன்ற மாநிலங்கள் இதனைக் கடுமையாக எதிர்க்கின்றன.

அசாமில் என்னதான் பிரச்னை?
அசாமியர்களுக்கு இந்தப் பிரச்னை வெறுமனே மதரீதியானது மட்டுமல்ல; இனம் மற்றும் மொழி ரீதியானதும்கூட. இந்தியாவின் விடுதலைக்கு முன்பே ஆங்கிலேயர்கள் அசாமின் வளமார்ந்த மலைகளைத் தேயிலைத் தோட்டங்களாக்க இப்போதைய பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்க எல்லைகளிலிருந்து எண்ணற்ற வங்க இஸ்லாமியர்களையும், நிர்வாகக் காரணங்களுக்காக வங்க இந்துக்களையும் நிரப்பினர்.

இன்றைய தேதியில் அசாமில், இந்து மற்றும் இஸ்லாம் வங்காளிகள் முப்பது சதவீதம் உள்ளனர். மண்ணின் மைந்தர்களான பூர்வ அசாமியர்கள் வெறும் நாற்பத்தைந்து சதவீதம் பேர்தான். எஞ்சியவர்கள் சுற்றிலும் உள்ள ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேச மாநிலங்களிலிருந்து நுழைந்தவர்கள்.
இந்த அந்நியர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கூடாது என்பது அசாமியர்களின் நெடுநாள் கோரிக்கை.

ஏற்கெனவே சொந்த நிலத்தில் சிறுபான்மையராக மாறியிருக்கும் தாங்கள், மேலும் வலுக்குன்றியவர்களாவோம் என அசாமியர்கள் அஞ்சுகிறார்கள். அதனால்தான் சிஏஏ-வை அவர்கள் தீவிரமாக எதிர்க்கிறார்கள். இதே பிரச்னைதான் திரிபுரா போன்ற மற்ற  வட கிழக்கு மாநிலங்களுக்கும் இருக்கின்றன. அசாமில் ஏற்கெனவே தேசிய மக்கள் தொகைப் பேரேடு (NRP) தயாரிக்கும் பணியும் தேசிய குடிமக்களுக்கான பேரேடும் (NRC) தொகுக்கப்பட்டு, அங்கு சுமார் பதினொரு லட்சம் பேர் இந்தியரல்லாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தேசிய மக்கள் தொகைப் பேரேடும், தேசிய குடிமக்களுக்கான பேரேடும் தயாரிக்கும் பணி இந்தியா முழுக்க மேற்கொள்ளப்பட்டு, எதிர்வரும் 2024க்குள் மொத்த பணிகளும் முடிவடையும் என்று அறிவித்துள்ளார்.
அது என்ன NPR மற்றும் NRC?

இந்தியர் என்று அழைக்கப்படும் ஒவ்வொருவரும் இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955ன் அடிப்படையிலேயே குடிமக்கள் என்று ங்கீகரிக்கப்படுகிறார்கள். இவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதை ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை சென்சஸ் கணக்கெடுப்பின் மூலம் பதிவு செய்யப்படுவர். இந்த சென்சஸ் கணக்கெடுப்பு என்பது சென்சஸ் சட்டம் 1948ன் அடிப்படையிலானது.

இந்த நிலையில் கடந்த 2003ம் ஆண்டு வாஜ்பாயி தலைமையிலான அரசு இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955ல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. இந்தியர் அல்லாதார்கள் யார் என்பதைப் பற்றிய திருத்தம் அது. அதன் அடிப்படையில் இந்திய மக்கள்தொகைப் பேரேடு மற்றும் தேசிய குடியுரிமைப் பேரேடு தயாரிப்பது முடிவானது.

முதல் கட்டமாக, தேசிய மக்கள் தொகைப் பேரேடு தயாரிக்கப்படும். இதில், ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு நியமித்த அலுவலர்கள் வந்து சென்சஸில்
கேட்பது போலவே, பெயர், வயது, பால், கல்வித் தகுதி உட்பட ஒவ்வொரு குடிமகன் சார்ந்த தகவல்களையும் கேட்பார்கள். அதனோடு ஆதார் கார்டு போன்ற அரசு ஆவணங்கள் உள்ளதா என்பதையும் விசாரிப்பார்கள். இத்துடன் ஒவ்வொரு குடிமகனின் தாய், தந்தையர்
பூர்வீகத்தையும் கேட்பார்கள்.

இப்படி திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு அடுத்த கட்டமாக தேசிய குடிமக்கள் பேரேடு தயாரிக்கப்படும்.தேசிய குடிமக்கள் பேரேடு (NRC)தேசிய குடிமக்கள் பேரேடு என்பது என்பிஆர் அடிப்படையில் வீடு வீடாக வந்து விசாரிக்கப்படும். இதில், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தாங்கள் இந்தியர்தான் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியதிருக்கும்.

தேசிய குடிமக்கள் பேரேடு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி அளவுகளில் தொடங்கி, மாவட்ட மற்றும் மாநில அளவில் திரட்டப்பட்டு, பிறகு தேசிய அளவில் முழுமையாகத் தொகுக்கப்பட்ட பின் இந்தியாவில் மொத்தம் எத்தனை பேர் அங்கீகரிக்கப்பட்ட குடிமக்கள் என்பது அறிவிக்கப்படும்.
உண்மையில் இதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

ஒருவர், தான் இந்த மண்ணின் பூர்வகுடிதான் என்பதை நிரூபிக்க தன்னுடைய சான்றிதழ்களை மட்டுமல்லாது, தன் தாய், தந்தையருக்கான ஆதாரங்களையும் காட்ட வேண்டியிருக்கும் என்கிறார்கள். இந்தியா போன்ற கல்வி அறிவில் பின்தங்கிய, அறியாமை நிறைந்த நாடொன்றில் இது எந்தளவு சாத்தியம் என்பது தெரியவில்லை.

சரி, அப்படி ஒரு கணக்கெடுப்பு நிகழ்ந்து அதில் சில கோடிப்பேர் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் தவறினால் அடுத்து என்ன? அவர்கள் அகதிகளாக அறிவிக்கப்படுவார்களா? குடியுரிமை பறிக்கப்பட்டு உள்ளூரியிலேயே தனிமைப்படுத்தப்படுவார்களா? முகாம்களில் கண்காணிக்கப்படுவார்களா? அவர்களின் நல்வாழ்வுக்கான செலவுகளை எல்லாம் இப்போது இருக்கும் பொருளாதாரச் சூழலில் எப்படி சமாளிக்க முடியும்? இப்படி எந்தக் கேள்விக்குமே யாரிடமும் பதில் இல்லை என்பதுதான் இந்தப் புதிய சட்டத்தின் அவலம்.

இளங்கோ கிருஷ்ணன்