COFFEE TABLE- குங்குமம் டீம்

நெகிழ்ந்த பூஜா
இந்தி, தெலுங்கில் பிஸியாக இருக்கும் ‘முகமூடி’ ஹீரோயின் பூஜா ஹெக்டே, ஹைதராபாத்தில் உள்ள ஹாஸ்பிட்டலுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்திருக்கிறார். ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவன், பூஜாவைக் கண்டதும் முகம் மலர்ந்து சிரித்து வரவேற்க, நெகிழ்ந்துவிட்டார் பூஜா. ‘‘என்னைப் பார்த்தவுடன் அவனோட அத்தனை வலிகளையும் மறைத்துக் கொண்டு சிரித்தான். அந்த நாளை சிறந்த நாளாக்கினான். குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது... ஓ... மைகாட்!’’ என புல்லரித்திருக்கிறார் பூஜா.

வெளிநாட்டுச் சிறையில் இந்தியர்கள்!
பல்வேறு குற்றங்களுக்காக வெளிநாட்டுச் சிறைகளில் கைதிகளாக இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் வரைக்கும் சுமார் 81 நாடுகளில், 7448 இந்தியர்கள் சிறைக்கைதிகளாக உள்ளனர். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாள், குவைத், பாகிஸ்தான், மலேசியா, அமெரிக்கா, சீனா, கத்தார் மற்றும் இலங்கையில்தான் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறைகளில் இருக்கும் 149 இந்தியக் கைதிகளை விடுவிக்க இருப்பதாகச் சொல்லியிருக்கிறது அந்த நாட்டின் நிர்வாகம். அந்த கைதிகளை நாட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் அவர்களுக்கு அங்கேயே வேலை வழங்கவும் முடிவெடுத்திருக்கிறார்கள்.

நோக்கியா 3310
நோக்கியா... பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல. தொழில்நுட்பங்கள் புதுசு புதுசாக வந்தாலும், சில நாட்களிலேயே அவை பழையதாகிவிடுகின்றன. சலிப்பையும் தருகின்றன. மக்கள் மறுபடியும் இயற்கைக்குத் திரும்புவதுபோல, ஸ்மார்ட்போன் பயனாளிகளும் கையடக்கமான, பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த ஆரம்ப கால செல்போன்களைத் தேடிச் செல்கின்றனர்.

இந்த நபர்களை குறி வைத்தே நோக்கியா மறுபடியும் களத்தில் இறங்கியுள்ளது. 3ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய நோக்கியா 3310 செல்போன் ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்குப்பிறகு மற்ற நாடுகளிலும் இந்த போன் கிடைக்கும். விலை. ரூ.4,600.

Wood Job!
ஜப்பானிய இயக்குநர் ஷினோபு யகுஷி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த படம் ‘Wood job’. நூற்றுக்கணக்கான வேலையாட்கள் சேர்ந்து உயரமான மலைப்பகுதியில் இருந்து ராட்சத மர உருளையை பள்ளத்தாக்கு நோக்கி உருட்டி விடுகின்றனர். அந்த மரத்துடன் இணைக்கப்பட்டுள்ள கயிற்றில் சிக்கிக்கொள்கிறான் கதாநாயகன். பள்ளத்தாக்கு நோக்கி வேகமாக சீறிப்பாய்ந்து வருகிற மரம் நாயகனையும் இழுத்துக்கொண்டு வருகிறது.

மரணத்தின் விளிம்பில் இருக்கும் நாயகனின் நிலைகண்டு கண்கலங்குகிறாள் அடிவாரத்தில் நின்று கொண்டிருக்கும் நாயகி. 2.41 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த கிளிப்பிங்ஸை ஃபேஸ்புக்கின் ‘desi thug life’ பக்கத்தில் ‘epic movie scene’ என்ற தலைப்பில் பதிவிட 16 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.

ஹூவர் போர்டு சாகசம்!
வித்தியாசமாக எதையாவது செய்து இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளுவதோடு, கொஞ்சம் காசு பார்ப்பதும் ஒரு வாடிக்கையாகிவிட்டது. இந்த பாகிஸ்தான் பெண்ணும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், இந்தப் பெண் செய்தது வித்தியாசத்திலும் வித்தியாசம். பொதுவாக ஸ்கேட்டிங் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஹூவர் போர்டில் சாகசம்தான் செய்வார்கள்.

ஆனால், இந்தப் பெண் ஹூவர் போர்டில் பயணித்துக் கொண்டே வீட்டின் முற்றத்தை துப்புரவு செய்திருக்கிறார்! இந்த ஆச்சர்ய நிகழ்வை வீடியோவாக்கி இணையத்தில் கசியவிட ஒரு மணிநேரத்தில் இரண்டு லட்சம்பேர் பார்த்து வைரலாக்கிவிட்டனர். ‘3017ம் ஆண்டைச் சேர்ந்த பெண்’ என்று கமெண்ட்டுகளும் வரிசை கட்டுகின்றன.