கிராண்ட் லுக் துணிகள் வாடகைக்கு கிடைக்கும்!திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற விஷேங்களுக்கு நம் பெண்கள் துணி எடுக்கப்போவதே ஒரு வைபவம்தான். மணிக்கணக்காக துணிக்கடையில் செலவிட்டு ஆயிரமாயிரம் கொடுத்து ஆசை ஆசையாய் வாங்கி வருவார்கள். அப்படி பார்த்துப் பார்த்து வாங்கிய கிராண்ட் லுக் உடையை அந்தக் குறிப்பிட்ட விசேஷத்துக்கு பயன்படுத்துவதோடு சரி. பிறகு அது பீரோவுக்குள் வருடக்கணக்காகத் தூங்கிக் கொண்டிருக்கும்.

கிராண்ட் லுக் உடைகள் என்பதால் சாதாரண நாட்களில் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே ஒரு விசேஷத்துக்குப் பயன்படுத்திய உடை என்பதால் இன்னொரு பெரிய விசேஷத்துக்கும் இதையே பயன்படுத்துவதா என்று தயக்கமாகவும் இருக்கும். ‘‘என் லெஹெங்கா 45 ஆயிரம் ரூபாய். ஒரு தடவை பயன்படுத்தியதோடு சரி. என்ன செய்யறதுனு தெரியாம முழிக்கிறேன்...” “உனக்காவது லெஹெங்கா. என்னுடையது வரவேற்பு கவுன். 52 ஆயிரம் ரூபாய். அந்த ஃபங்க்ஷனுக்காகவே ஸ்பெஷலா டிசைன் செய்து வாங்கியது. இப்ப சும்மா கிடக்குது...”
நான்கு பெண்கள் சேர்ந்தால் இப்படியான புலம்பல்களை நிச்சயமாகக் கேட்க முடியும்.

கிட்டத்தட்ட எல்லோரிடமுமே இப்படியான காஸ்ட்லியான துணிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும். இதற்கு என்ன செய்யலாம் என யோசித்து ஒரு ஐடியாவைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் மூன்று தோழிகள். ஸ்வேதா ரவிச்சந்திரன், பிரியா மற்றும் சிந்து. “நானும் என் தோழிகளும் ஒரு நாள் ஜாலியா இப்படிப் பேசிக்கொண்டு இருக்கும் போதுதான் இந்த ஐடியா தோன்றியது...’’ என எனர்ஜியாகத் துவங்கினார் ஸ்வேதா.

‘‘அடடே! எத்தனை பெண்கள் இப்படி ஆயிரக்கணக்கில் செலவு செய்துவிட்டு தவிக்கிறாங்க..? நாம் ஏன் இதற்கு ஒரு தீர்வை உருவாக்கக் கூடாது என்று நினைத்தோம். எங்களிடமே கவுன்கள், லெஹெங்காக்கள் என பத்துக்கும் மேற்பட்ட கிராண்ட் லுக் உடைகள் உள்ளன. ஆனால், ஒருமுறை பயன்படுத்தினால் அதை அடுத்தமுறை உடுத்த தயக்கமாக இருக்கும். அதே உடையை எத்தனை விசேஷங்களுக்கு அணிவது என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம்.

‘இதைத் தவிர உன்னிடம் வேறு உடைகளே இல்லையா...’ என்றோ, ‘நீதான் கல்யாணப் பெண்ணைவிட கிராண்டா இருக்க...’ என்றோ கலாய்ப்பார்கள். இன்னொரு முக்கியமான விஷயம். கிராண்டான உடைகளையும், பட்டுச் சேலைகளையும் நீண்ட நாட்கள் அப்படியே மடித்து வைத்திருந்தால் மடித்த இடங்கள் அப்படியே கிழிந்துபோகும்; விலையுயர்ந்த வேலைப்பாடுகள் கருத்துப் போகும்.

சும்மா பீரோவில் தூங்கிக் கொண்டிருக்கும் உடைகளை வாடகைக்குக் கொடுத்தாலோ, தேவையானவர்களுக்கு விற்றாலோ என்ன என்று நினைத்தோம். அதுதான் இந்த வாடகை, விற்பனை கான்செப்ட். நான் இந்த முடிவை எடுத்ததும் 15க்கும் மேற்பட்ட நண்பர்கள் முன்வந்தார்கள். இதோ வாட்ஸ் அப் மெசேஜ் கிடைத்து நீங்களும் வந்துட்டீங்க. இதில் இருந்தே இந்த கான்செப்ட் எவ்வளவு தேவையானது எனத் தெரிகிறது.

விரைவில் கொஞ்சம் கிராண்ட் லுக் பட்டுப் புடவைகளையும் இந்தக் கான்செப்ட்டில் கொண்டுவரலாம் என இருக்கிறோம். எங்களிடம் வாடகைக்கு உடைகள் வாங்க சில விதிமுறைகள் உள்ளன. ரேஷன் கார்டு, அட்வான்ஸாக முன்பணத்துடன் ஓர் அக்ரிமென்ட் காகிதத்தில் கையெழுத்து ஆகியவை வேண்டும். அதாவது, உடையில் கறைகள் ஏற்பட்டாலோ அல்லது டேமேஜ் ஆனாலோ அதற்கு உரிய செலவை வாடகைக்கு வாங்கிச் செல்பவர்கள்தான் ஏற்கவேண்டும்.

அதேபோல் சிலர் உடைகளைத் திருப்பித் தராமல் போகவும் வாய்ப்புகள் இருப்பதால் முன்பணம் வாங்குகிறோம். இந்த விதிகளுக்குச் சம்மதிப்பவர்களுக்கே வாடகைக்குக் கொடுப்போம். ஏனெனில், கிராண்ட் உடைகள் ஒவ்வொன்றுக்கும் இனிமையான நினைவுகள் இருக்கும். உடைக்குச் சொந்தக்காரர் எந்தவிதத்திலும் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கு. விரைவில் ஆண்களின் கோட் சூட், ஜோத்பூர் சூட், ஷெர்வானி போன்றவற்றையும் வாடகைக்கு விடும் திட்டம் இருக்கிறது...” எனக் கண்சிமிட்டுகிறார் ஸ்வேதா ரவிச்சந்திரன். ஆமாம் என ஆமோதிக்கிறார்கள் அவரின் தோழிகளான பிரியா மற்றும் சிந்து.             

- ஷாலினி நியூட்டன்