நாங்கள் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் சென்று குடியேறியவர்கள் அல்ல. அந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்!



எல்லை காக்கும் தமிழர் கொழிஞ்சாம்பாறை பேச்சிமுத்துவுடன் ஓர் சந்திப்பு

கேரள - தமிழக எல்லை எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் எனக் காண்பதற்கு குளிர்ச்சியானது. ஆனால், அரசியல் காரணங்களால் எப்போதும் சூடாகவே இருப்பது. முல்லைப் பெரியாறு பிரச்னை தீவிரமாகும்போதெல்லாம் இங்கு பதற்ற நெருப்பு பற்றிக்கொள்ளும். ஆனால், எப்படிப்பட்ட சூழலிலும் இரு தரப்பினரோடும் உரையாடி எல்லையில் வசிக்கும் தமிழர் நலனைக் காத்துவருகிறார் ஒருவர். அவர், கொழிஞ்சாம்பாறை பேச்சிமுத்து.

கலைஞர் உள்ளிட்ட மூத்த அரசியல்வாதிகளால் பாராட்டப்பட்டவர். ‘கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பின் பொதுச்செயலாளர். கேரளத்தின் திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு உள்ளிட்ட எல்லையோரப் பகுதிகளில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு கேரள அரசு விடுமுறையை வாங்கித் தந்தவர். கேரளத்தின் அரசு அலுவலகங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைப்பதற்காகப் போராடி அதை நடைமுறைப்படுத்த வைத்தவர்.

இப்படி தமிழர் நலன் காக்கும் பல காரியங்களைச் சத்தமில்லாமல் சாதித்து வருபவர். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தவரை ஒரு மாலை நேரத்தில் பிடித்தோம். ‘‘ஒரு விஷயத்தை முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறேன். நாங்கள் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் சென்று குடியேறியவர்கள் அல்ல. அந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். அதன் பூர்வகுடிகள்.

திருவனந்தபுரம் தொடங்கி பந்தனம்திட்ட, இடுக்கி, பீர்மேடு, பாலக்காடு பகுதிகளில் 60 சதவிகிதத்துக்கும் மேல் தமிழர்களே இருக்கிறார்கள். இங்குள்ள அரசுப் பள்ளிகளில் மொழிப்பாடமாக தமிழ் உள்ளது. மொழிவாரி மாநிலங்களின் பிரிவினையின்போது ம.பொ.சி. போன்ற தலைவர்கள் எவ்வளவோ போராடியும் இந்தப் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க முடியவில்லை...’’ என்று ஆதங்கத்தோடு தொடங்கினார் பேச்சிமுத்து.

இந்த இயக்கம் உருவான பின்னணி என்ன?
1978-ல் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது மற்றவர்களுடன் இணைந்து தமிழ் மன்றம் ஒன்றையும் தொடங்கி நடத்தினேன். குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட தமிழறிஞர்களை அழைத்துவந்து மன்றத்தில் பேச வைத்துள்ளேன். வெறும் இலக்கிய மன்றமாக மட்டுமே இல்லாமல் கேரளத்தின் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் தமிழர் நலனுக்காகப் பேச வேண்டியதும் நமது கடமை என்பதை அங்கிருந்த உறுப்பினர்களிடம் வலியுறுத்தினேன். ‘இதையெல்லாம் கிளப்பினால் இனப் பிரச்னையும் மொழி பேதமும் வரும்’ என்று அங்கிருந்தவர்கள் பின்வாங்கினார்கள். ஆனால், நான் என் கருத்தில் உறுதியாக இருந்ததால் 1989ல் கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கினேன்.

உங்கள் போராட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள்..?
தமிழக - கேரள எல்லையில் உள்ள வடகரப்பதி புதுசேரி, கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட எட்டு பஞ்சாயத்துகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் 33 தமிழாசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய திடீர் முடிவெடுத்தது கேரள அரசு. தமிழாசிரியர்கள் மட்டும் அல்ல, மாணவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் எங்கள் இயக்கம் போராட்டத்தில் குதித்தது.

ஒரு மாநிலத்தில் மொழிச் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் தாய் மொழியில் கல்வி கற்க அவர்களுக்கு உரிமை உள்ளது என்கிறது 1956ம் ஆண்டு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டம். இதை எடுத்துச் சொல்லி, நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று, கேரள அரசின் ‘தமிழாசிரியர் பணியிட ரத்து’ உத்தரவைத் திரும்பப்பெற வைத்தோம். அதன்பிறகு இங்கே வசிக்கும் தமிழர்களுக்கு நிறைய பிரச்னைகள் வர ஆரம்பித்தன. அவற்றை எதிர்த்தும் களம் கண்டோம்.

பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம், பந்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு ஆகிய ஆறு ஜில்லாக்களில் தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினராக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டள்ளார்கள். இங்குள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் தமிழிலேயே விண்ணப்பம் கொடுக்கலாம். இங்கு, தமிழ் தெரிந்தவர்கள் அலுவலகச் சிப்பந்திகளாக இருக்க வேண்டும். அலுவலகப் பெயர்ப் பலகைகளில் தமிழும்  இடம்பெற வேண்டும்.

இவை எல்லாம் சரியாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய மாவட்ட ‘அட்வைசரி கமிட்டி’ நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்பன எல்லாம் விதிமுறைகள். ஆனால், இவற்றை முறையாகக் கடைப்பிடிக்காமல் தமிழோடு சேர்த்து தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டனர். இதை எதிர்த்து மற்ற தமிழ் அமைப்புகளுடன் இணைந்து போராடி, அரசு அலுவலகங்களில் தமிழுக்கான இடத்தைப் பெற்றுத் தந்தோம். முன்பு, இங்கு பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறை கிடையாது. இதற்காகவும் பல வருடங்களாகப் போராட்டங்களை நடத்தி, நீதி மன்றங்களில் முறையிட்டு 2011ல் இருந்து பொங்கலுக்கு அரசு விடுமுறையும் அறிவிக்கவைத்தோம்!

இப்போது அங்கு எப்படியான சூழல் உள்ளது?
உண்மையைச் சொன்னால், இங்கு தொடர்ந்து தமிழர்களை இரண்டாம் தரமாகவே நடத்திவருகிறார்கள். மூலத்தரா அணையிலிருந்து தமிழர்கள் வாழும் பகுதிக்கு வரவேண்டிய தண்ணீரை இப்போது கால்வாய் அமைத்து வேறு பக்கம் திருப்பி உள்ளனர். இதனால், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வறட்சி அதிகமாக உள்ளது.

இதற்காக இப்போது நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், கேரள அரசு இதைக் கண்டுகொள்வதே இல்லை. கடந்த வருடம் இங்கு உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளத்தைக் கட்டாயப் பாடமாக அறிவித்துள்ளது கேரள அரசு. இதனால், விருப்பம் இல்லாவிட்டாலும் தமிழ் மாணவர்களும் மலையாளம் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், தமிழ் மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கேரள அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீவிரமாகப் போராடிவருகிறோம். விரைவில் இதற்கு நீதி கிடைக்கும்!